Tag Archive for ஷேக் அப்துல்லா

Nehru’s rule

நேருவின் ஆட்சி – பதியம் போட்ட 18 ஆண்டுகள்

விஎஸ்வி ரமணன் எழுதி சுவாசம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் நூல்.

நேருவைப் பற்றி இன்று பலருக்கும் இருக்கும் பிம்பம், நேரு இந்திய எதிரி என்பது. நேருவால்தான் இந்தியா இன்று இத்தனை பாடு படுகிறது என்பது பலரும் சொல்வது. ஆனால் இது உண்மையல்ல.

நேரு நிஜமான ஜனநாயகவாதி. நிச்சயம் இந்தியாவின் மீது பற்று கொண்டிருந்தவர். எந்நிலையிலும் இந்தியாவுக்கு எதிராகச் சிந்திக்கவே சிந்திக்காதவர்.

நேருவின் சில நம்பிக்கைகள் தகர்ந்து போயிருக்கலாம். நேரு ஏமாற்றப்பட்டிருக்கலாம். அவையெல்லாம் நேரு உண்மை என்று நம்பி ஏமாந்தவையே ஒழிய, இந்தியாவுக்கு எதிராக நேரு சிந்தித்தவை அல்ல.

இந்தியா மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருந்தபோது நேரு பிரதமரானவர். இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்குப் பல வழிகளில் நேரு விதை ஊன்றியவர். அதே சமயம் அவர் ஓர் அரசியல்வாதியும் கூட. எனவே நேரு தன் கட்சியையும், தன் பதவியையும் காப்பாற்ற வேண்டிய தேவை இருந்தது. தனக்குப் போட்டியாளர்களை அடக்கித் தான் முன்னேற வேண்டி இருந்தது. அதையும் செய்தவர் நேரு. இதுவும் ஜனநாயகத்தில் ஒரு அங்கமே. இதில் முக்கியமான விஷயம், இதைச் செய்வதற்காக ஒரு தலைவர் அநியாயமான வழிகளைக் கை கொள்கிறார்களா என்பதுதான்.

இந்தப் புத்தகம் நேரு எப்படிப்பட்ட ஜனநாயகவாதி என்பதைப் பறை சாற்றுகிறது. அதே சமயம் நேரு மேல் எந்தத் தவறும் இல்லை என்று பூசி மெழுகவும் இல்லை. நேர் நம்பி ஏமாந்து போனவற்றையும் பதிவு செய்கிறது. நேருவின் அந்தத் தோல்விகள் கூட, நேருவின் ஜனநாயகத் தன்மையால் விளைந்தவையே என்று பறைசாற்றுகிறது.

இந்தியாவின் சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பட்ட போது, நேரு ராணுவ நடவடிக்கைகளை முதலில் ஆதரிக்கவில்லை. ஆனால் படேல் உறுதியாக இருக்கிறார். அதை நேரு ஏற்கவில்லை என்றாலும், ஹைதராபாத்தில் நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து, படேலின் நிலைப்பாடே சரி என்று நேரு புரிந்துகொள்கிறார். ராணுவ நடவடிக்கைகளை ஏற்கிறார். தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நேரு தயங்கவில்லை.

உண்மையான செக்யூலராக இருக்க நேரு முயன்றிருக்கிறார். காந்தியைப் போலவே இவரும் மற்றவர்களால் ஏமாற்றப்படுகிறார். அது ஹிந்துக்களுக்கு எதிராகப் போய் நிற்கிறது. முக்கியமாக இவர் ஷேக் அப்துல்லாவை நம்புகிறார். நேருவின் நட்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஷேக் அப்துல்லா காஷ்மிர் விவகாரத்தில் நேருவின் நம்பிக்கை தவறு என்று அவருக்கே பாடம் கற்பிக்கிறார்.

ஜின்னாவைப் போன்ற அரசியல் ஆட்டத்தை நேருவுக்கு எதிராக, மதத்தை மையமாக வைத்து அரங்கேற்றுகிறார் ஷேக் அப்துல்லா. சிறப்புச் சட்டப்பிரிவு 370 காஷ்மிருக்குத் தரப்பட்டும் ஷேக் அப்துல்லாவின் இரட்டை வேடம் நேருவை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஹரி சிங்கிற்கு எதிராக களம் இறங்கிய ஷேக் அப்துல்லாவை, ஹரி சிங்கிடம் இருந்து பெற்ற அதே காஷ்மீருக்கு தலைவராக்கிய நேருவுக்கு ஷேக் அப்துல்லா அளிக்கும் அதிர்ச்சி வைத்தியம் இந்த நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுவேதான் நேருவின் சீனா மீதான பாசத்திலும் நிகழ்கிறது. நேரு கம்யூனிஸ்ட் அல்ல. அதே சமயம் ஒரு ஜனநாயக சோஷியலிஸம் நம் நாட்டுக்குத் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறார். கம்யூனிஸம் உலகம் முழுக்கத் தேவை என்பதை நேரு உணர்ந்துகொண்டுதான் இப்படி நடிக்கிறார் என்று கம்யூனிஸ்ட்டுகள் நேருவை சாதாரண அரசியல்வாதி என்று குற்றம் சாட்டுகிறார்கள். அண்ணாதுரையும் நேருவை ‘காங்கிரஸின் சோஷலிஸம் இனிக்காது’ என்று விமர்சிக்கிறார்.

நேரு சோஷலிசத்தை ஆதரித்தாலும், கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸுக்கு சமமாக வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒரு காங்கிரஸ்காரராகவும் இருக்கிறார். இதுவும் அவர் இந்தியாவுக்குச் செய்த முக்கியமான பங்களிப்பு என்றால் மிகையில்லை!

சீனா மீது நேருவுக்கு வந்த பாசம் வரலாற்றுப் பிழை. ஆனால் நேரு அதை உணரவில்லை. திபெத் விஷயத்தில் சீனாவுக்கும் நேருக்கும் எழும் கருத்து மாறுபாடு பெரியதாகிறது. ஆரம்பம் முதலே படேலும் ராஜாஜியும் இதைப் பற்றி எச்சரித்தும், நேரு தான் நம்பியது சரி என்று தீவிரமாக நினைக்கிறார். ஆனால் இந்தியா தயாராக இல்லாத ஒரு சமயத்தில் சீனாவின் படைகள் இந்தியாவை ஆக்கிரமிக்கும்போது நேருவுக்குத் தன் நம்பிக்கை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் பிரச்சினையின் தீவிரம் புரிகிறது. அதற்குள் நிலைமை கைவிட்டுப் போய்விடுகிறது.

இப்படிப் பல விஷயங்கள் இந்த நூல் முழுக்கக் கொட்டிக் கிடக்கின்றன. ஜனசங்க எதிர்ப்பு, காந்தி படுகொலை, ஆர் எஸ் எஸ் தடை, பெண்களுக்கான சொத்துரிமை, இந்துச் சட்ட மசோதாக்களும் நேரு மீதான அம்பேத்கரின் வருத்தமும் எனப் பல விஷயங்கள் இந்த நூலில் உள்ளன.

நேருவைப் பற்றி மட்டுமின்றி, அந்தக் கால அரசியல் சூழலையும், மாபெரும் அரசியல் ஆளுமைகளின் நிலைப்பாடுகளையும் பதிவு செய்கிறது இந்த நூல்.

அதே சமயம், வரலாற்று நோக்கில் நேருவின் அரசியல் சறுக்கல்கள் குறித்து விரிவாகப் பேச வேண்டிய வரலாற்று அவசியம் இருப்பதையும் நினைவூட்டுகிறது.

நூலை வாங்க https://www.swasambookart.com/books/9788198341419

ஃபோன் மூலம் வாங்க 81480 66645

Share