நேற்று என் நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே யூனோ என்றொரு விளையாட்டுக்குரிய சீட்டுக்கள் இருந்தன. எனக்கு இதை விளையாடவே தெரியாது. ஆனால் என் மகனோ இதன் விதிகளையெல்லாம் அப்படியே ஒப்பித்துக்கொண்டிருந்தான். என் நண்பனுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவனது மகன் இதன் எல்லா விதிகளையும் சொல்லிவிட்டான். என் மகனும் என் நண்பனின் மகனும் ஆடத் துவங்கினார்கள்.
என் மகன் எனக்குச் சொல்லிக்கொடுத்தான். முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு ஒருவாறாகப் பிடித்துக்கொண்டேன். உண்மையில் மிக சுவாரஸ்யமான விளையாட்டுத்தான்.
சில சமயம் 2 மணி நேரம்கூட இந்த விளையாட்டு இழுக்கிறது. குழந்தைகளுடன் விளையாட நல்ல விளையாட்டு. இன்றுடன் அபிராமுக்கு பரிட்சைகள் நிறைவடைகின்றன. இந்த சீட்டை இன்று வாங்கி இருக்கிறேன். இனி வீட்டில் விளையாடவேண்டும்.
சீட்டில் ரம்மி ஒரு வெறிகொள்ள வைக்கும் விளையாட்டு. சின்ன வயதில் ஆஸ் விளையாடுவோம். வெட்டு மேல் வெட்டு விழும்; பின்பு உறவினர்களுக்குள் பணம் வைத்து ரம்மி ஆடத் தொடங்கவும் அது ஒரு வெறிபிடித்த விளையாட்டாக இருந்தது. கால மாற்றத்தில் ரம்மி விளையாடுவதை நிறுத்திவிட்டோம்.
ஆன்லைனில் பணம் வைத்து ரம்மி விளையாடும் விளம்பரத்தைப் பார்த்து 50 ரூ மட்டும் கட்டி இரண்டு நாள் விளையாடிப் பார்த்தேன். எளிதில் வெறிகொள்ள வைக்கும்படியான கச்சிதமாக அட்டகாசமாக உருவாக்கப்பட்ட மென்பொருள். வண்ணமயமாக வசீகரிக்கக்கூடியதாக இருந்த அந்த விளையாட்டு எனக்கு ஏனோ ஒரே வாரத்தில் வெறுத்துப் போனது.
ஃபேஸ்புக் டச் ஸ்கிரீன் மொபைல் எல்லாம் இந்த சீட்டு விளையாட்டுக்களை ஓரம்கட்டிவிட்டன என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் கல்யாண வீட்டில் ஒரு ஓரத்தில் எப்போதும் சீட்டுக் கச்சேரி இருந்துகொண்டே இருக்கும். நானும் பலதடவை ஆடியிருக்கிறேன்.
இன்று யூனோ வாங்கி இருக்கிறேன். வீட்டில் குழந்தைகளுடன் விளையாடவேண்டும். யூனோ எப்படி விளையாடுவது என்று உங்களுக்குத் தெரியவில்லையா, உங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்லித் தருவார்கள். தெரியவில்லை என்றால் UNO என்று இணையத்தில் தேடுங்கள். இதன் விதிகளுக்கென்றே தனியான தளம் ஒன்று உள்ளது.
என் நண்பனின் மகன் எப்போது இதை விளையாடினான், யாருடன் விளையாடினான், எப்படி இந்த விதிகளெல்லாம் அவனுக்குத் தெரிந்தன என்று என் நண்பனுக்குப் புரியவே இல்லை. அவன் நண்பனான எனக்கும் என் மகனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது என்றும் புரியவே இல்லை. வயதாவது இப்படி எதிர்பாராத உருவத்தில் வரும்போது ஒரு சின்ன ஜெர்க் ஏற்படத்தான் செய்கிறது.
ஜெய் யூனோ.