இது ஒரு பதிப்பாளரின் (பதிப்பகத்தில் பொறுப்பில் இருப்பவரின்) புலம்பல் மட்டுமே. எனவே படிக்காமல் கடந்துவிடுங்கள்.
தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்துக்கு இன்று ஒரு பக்கம் விளம்பரம் வந்துள்ளது. இதை விளம்பரம் என்பதா என்றெல்லாம் கேட்காதீர்கள். உண்மையில் விளம்பரமே நோக்கம்.
ஒரு பதிப்பகத்துக்கு, தமிழ் தி ஹிந்து, தினமலர், தினமணி போன்ற ஒரு பத்திரிகையில் ஒரு புத்தகத்துக்கு முழுப்பக்க விளம்பரம் தரவேண்டும் என்பது நிச்சயம் கனவாகவே இருக்கும். இந்த விளம்பரத்துக்கான விலையை ஒரு பதிப்பகத்தால்கற்பனை கூடச் செய்து பார்க்கமுடியாது.
ஒரு பக்க விளம்பரம் என்றல்ல, அரைப்பக்க கால்பக்க விளம்பரச் செலவைக்கூட, முன்னணிப் பதிப்பகங்களால்கூடச் செய்யமுடியாது.
அதுவே ஒரு பத்திரிகை அதுவும் முன்னணிப் பத்திரிகை ஒரு பதிப்பகத்தின் கையில் இருந்தால் ‘நின்னு ஆடலாம்.’ ஆனால் நிலைமை எப்படி இருக்கிறதென்றால் பெரிய பதிப்பகங்கள் கைவசம் பத்திரிகை இல்லை. பத்திரிகை கைவசம் இருந்தாலோ பெரிய பதிப்பகமோ அல்லது புத்தகங்களை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்ற திட்டமோ அதைச் செயல்படுத்தும் தொலைநோக்கோ இல்லை. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதைதான். என்றாவது இந்த இரண்டும் ஒன்றாகும்போது அப்பதிப்பகம் உச்சத்துக்குச் செல்லும்.
கிழக்கு பதிப்பகம் முன்னணி பத்திரிகைகள் அனைத்திலும் ஒரு புத்தகத்தை வாரத்துக்கு ஒன்றென நான்கு வாரங்களுக்கு விளம்பரம் கொடுத்தால் அப்புத்தகத்தின் விற்பனை நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கும். ஆனால் லாபம் என்று எதுவும் இருக்காது என்பதுமட்டுமல்ல, பெரிய அளவில் நஷ்டம் இருக்கும். அதனால்தான் கிழக்கு போன்ற பெரிய பதிப்பகங்கள்கூட தினசரிகளில் விளம்பரம் கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.
எதாவது ஒரு பத்திரிகை புத்தகங்களின் தேவையைக் கணக்கில் கொண்டு புத்தக விளம்பரங்களை குறைந்த மிகக் குறைந்த விலையில் வெளியிட்டால்தான் இதுவெல்லாம் சாத்தியம். ஆனால் ஒரு பத்திரிகை நடத்த ஆகும் செலவோடு அவர்கள் ஒப்பிடும்போது அவர்களால் இது இயலாத ஒன்றாகவே இருக்கும்.
புத்தகங்கள் மக்களைச் சென்றடைய தினசரிகள் ஒரு வழி. இன்னொரு வழி, தொலைக்காட்சி ஊடகங்கள். தினசரிகளையாவது நினைத்துப் பார்த்து ஏங்கலாம். தொலைக்காட்சி ஊடகங்கள் – வாய்ப்பே இல்லை.
எனவே ஃபேஸ்புக் இடுகைகளைப் பார்த்து புத்தகங்களை வாங்கி மகிழுங்கள்.
கிழக்கு பதிப்பகத்தின் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க… வாங்க.
பின்குறிப்பு: சில ஆண்டுகள் முன்பு தினமலர் சில பதிப்பகங்களுக்கு இலவச விளம்பரம் தந்தது. நண்பர்கள் என்ற அடிப்படையில்தான் இவ்விளம்பரங்கள் செய்யப்பட்டன. இப்படிச் செய்வதற்கும் ஒரு மனம் வேண்டும். தினமலர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை இதற்காகப் பாராட்டவேண்டியது கடமை. இப்போதும் அவரைப் பார்த்துக் கோரிக்கை வைத்தால், அவருக்கு அந்தப் புத்தகமோ வெளியிடுபவர்களோ பிடித்திருந்தால், அவரது கொள்கைகளுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தால் இந்த உதவியைச் செய்வார் என்றே நினைக்கிறேன். அவரைச் சந்திக்க இயலும் என்கிறவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற பத்திரிகைகளும் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களுக்கு இது மாதிரி விளம்பரம் கொடுத்து உதவுங்கள்.