Tag Archive for வானொலி

சென்னை வானொலி 81

சென்னை ரேடியோ 81
 
நாங்களெல்லாம் சின்ன வயசில் வானொலி வெறியர்கள். கையில் ஒரு ரேடியோவை வைத்துக்கொண்டு அதன் பட்டனைத் திருகு திருகென்று திருகி திரைப்படப்பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். என் அம்மா தன் இளம் வயதில் இரவு விழித்திருந்து ஃப்ளாஸ்க்கில் காப்பி போட்டு வைத்துக் குடித்துக்கொண்டு விழித்திருந்து பாட்டு கேட்டவர்கள். கர்நாடக சங்கீதம் என்னவென்றே என் அப்பாவுக்குத் தெரியாது என்றாலும் ரேடியோவில் எங்காவது காதில் விழும் ஆலாபனைகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியாகத் தலையை ஆட்டி, கையைத் தட்டித் தாளம் போட்டவர்.
 
எத்தனை கஷ்டத்திலும் என் வீட்டில் எப்போதும் ரேடியோவும் டேப் ரிக்கார்டரும் இல்லாமல் இருந்ததில்லை. சங்கராபரணம் வீட்டில் ஓடிய ஓட்டத்தில் கன்னடம் பேசும் குடும்பத்தில் பிறந்த தமிழர்கள் தெலுங்கர்களாகிவிடுவோமோ என்ற அச்சமெல்லாம் வந்ததுண்டு. திருவிளையாடல் சரஸ்வதி சபதம் வசனம் தமிழ்நாட்டைவிட எங்கள் வீட்டில் அதிகம் ஒலித்திருக்கும்.
 
இப்பேர்க்கொத்த பரம்பரையில் வந்த ரேடியோ சோழன் எம்எல்ஏவாகிய நானும் இதே ரேஞ்சில் ரேடியோ பைத்தியமாக இருந்தேன். கேசட் வாங்க காசில்லாததால் ரேடியோவே சரணம். திருநெல்வேலியில் இருந்து சென்னை ரேடியோ கேட்க அல்லல்பட்டதெல்லாம் இன்னும் நினைவிருக்கிறது. இலங்கை ஒலிபரப்புதான் எங்களைக் காப்பாற்றி உயிருடன் இருக்க வைத்தது. இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலைதான். மதுரைக்குக் குடி பெயர்ந்ததும் கொஞ்சம் சென்னை ரேடியோ கேட்கக் கிடைத்தது. டொய்ங் ட்யூயூ சத்தத்துக்கு நடுவில் சென்னை ஒலிபரப்பின் திரைப்பாடல்களைக் கொஞ்சூண்டு கேட்டோம். என்னவோ சாதித்த மிதப்பு ஒன்று வரும். காலை 8 மணிக்கு, இரவு பத்து மணிக்கு ரேடியோவில் சரியான அலைவரிசை கிடைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். ரேடியோவை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்பி, சரியாக 750 பக்கத்தில் ஒரு அலைவரிசையில் அந்த சிவப்புக் கோட்டு ட்யூனரை நிறுத்தி வைத்து… இதில் சில ட்யூனர்கள் 700ல் நிற்கும், ஆனால் 600க்கான அலைவரிசையை ஒலிபரப்பும். எனவே குத்துமதிப்பாக ஒரு கரெக்‌ஷன் போட்டு அந்த ட்யூனரைத் திருகி, ரேடியோ தலைகீழாக ஓரமாக நிற்க வைத்து – என்னவெல்லாமோ செய்திருக்கிறோம்.
 
ஒரு படப்பாடல், ஒரு பாடல் முடிவின் வார்த்தையில் தொடங்கும் அடுத்த பாடல் என்று என்னவெல்லாமோ மாயாஜாலம் செய்வார்கள். திரைப்படங்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லி, ஒரு பொருள் வருமாறு சொல்வார்கள். காரில் போகும் பாடல்களாகப் போடுவார்கள். ஆனால் திருநெல்வேலி ரேடியோ ரொம்ப சுத்தபத்தம். இதையெல்லாம் செய்யாது. கடுப்பாக வரும். 85களின் பிற்பகுதியில் மதுரை ரேடியோ வந்ததும், தெளிவாகப் பாடல்கள் கேட்க ஆரம்பித்தோம். சென்னையின் அனைத்து நூதனங்களையும் மதுரை வானொலி செய்தது. காலை 8.20க்குத் துவங்கி 9 மணி வரை திரைப்படப் பாடல்கள். வீட்டில் இருந்து 8.45க்குக் கிளம்பி 9 மணிக்குப் பள்ளி அடையும்வரை தொடர்ச்சியாக எல்லார் வீட்டிலும் பாடல்கள் கேட்கும். கேட்டுக்கொண்டே நடக்கலாம். அற்புதமான உணர்வு அது.
 
சென்னை ஏ எம்-ஐ, சிற்றலையில் கேட்கலாம் என்று கேள்விப்பட்டபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சிற்றலை என்ற ஒன்றை அதுவரை பயன்படுத்தியது கூட இல்லை. சென்னை ஏ எம்மை சிற்றலையில் கேட்டோம். இதை எப்படிச் சரியாகச் சொல்வது என்று தெரியவில்லை. பேண்ட் 2 என்ற நினைவு. பாடல்கள் தெளிவாக இருக்கும். ஆனால் ஆனால் ஆனால், ஐயோ, கொஞ்சம் குறைந்தும் பின்னர் அதிகமாகவும் பின்னர் குறைந்தும் ஒலி கேட்கும். ஒரு மலைமீது நின்றுகொண்டு, ஊருக்குள் ஒலிக்கும் ஸ்பீக்கர் ஒலி காற்றில் உயர்ந்தும் தாழ்ந்தும் கேட்பது போல. கண்ணீர் வரும். அதிலும் சென்னையின் கிரிக்கெட் வர்ணனையைக் கேட்கும்போது அவுட் ஆகும்போதோ அல்லது சிக்ஸ் அடிக்கும்போதோ ஒலி உள்ளே போய்விடும். அப்புறம் அந்த ஹிந்திக்காரன் எழவெடுப்பான், என்ன சொல்கிறான் என்பது புரிந்தும் தொலையாது. ஹேண்ட்ஸ்ஃப்ரியும் கிடையாது. பெரிய ரேடியோவை காதுக்குள் திணித்து திணித்து, என்ன கடவுள் இவனெல்லாம், காதைக் கொஞ்சம் பெரியதாகப் படைத்துத் தொலைத்தால்தான் என்ன என்ற விரக்திக்குள் நுழையும்போது டெண்டுல்கர் அவுட் ஆனது புரிந்திருக்கும்.
 
நாஸ்டால்ஜியா கொட்டமிடும் நேரத்தில் இப்போதும் தஞ்சம் புகுவது ரேடியோவிடத்தில்தான். எல்லா ஏ எம் சானல்களும் இணையத்தில் கிடைப்பதில்லை. சென்னை மட்டும் கிடைக்கிறது. (சிம்பிள் ரேடியோ ஆப்.) திருநெல்வேலி மதுரை வானொலி ஏ எம் சானல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். முன்பு திருநெல்வேலியில் இருக்கும்போது திருநெல்வேலியைவிட திருவனந்தபுரம் ஏ எம் துல்லியமாகக் கேட்கும். கடும் கோபமாக வரும். இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வைத்துத்தான் நேரம் தெரிந்துகொள்வோம். மதுரையில் பாட்டு போட்டால் 8.20. பொங்கும் பூம்புனல் என்றால் 7 என நினைவு. இலங்கை ஒலிபரப்பை நிறுத்தினால் 10. பின்னர் எதோ நேர கரெக்‌ஷன் போட்டு 10.30 என்றான நினைவு. வானொலியுடனேயே வளர்ந்தோம். அயர்ன் கடைக்காரர் வானொலியில் என்ன வருகிறதோ அதைக் கேட்டுக்கொண்டு அயர்ன் செய்வார். தெருவில் கட்டில் போட்டுப் படுத்துக்கொள்பவரின் தலைக்குப் பக்கத்தில் ரேடியோ இருக்கும். ரேடியோவின் அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு குரலுக்கும் பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள். ராஜிவ்காந்தி கொலையை அறிவித்த செல்வராஜின் (பெயர் சரியா?) குரல் இன்னும் நினைவிருக்கிறது. என்னென்ன நினைவுகள்.
 
இன்று சென்னை வானொலி 81ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறதாம். அனைத்து ஏ எம் சானல்களையும் இணையத்தில், ஆப்பில் கிடைக்க வைக்காவிட்டால் சீக்கிரம் மூடுவிழாதான். அப்படி மூடு விழா நடக்காமல் 100ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க வாழ்த்துகள்.
Share