Tag Archive for வலம் மாதப் பத்திரிகை

நீட்

நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்கச் சொல்லி உயர்நீதி மன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அஹம்த் அடங்கிய பென்ச், தற்போது நடக்க இருக்கும் கலந்தாய்வையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ இரண்டு வாரங்களுக்குள் இந்த புதிய மதிப்பெண்களிடன்படி தரவரிசையை உருவாக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றம் செல்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல கேள்விகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது.

தமிழில் தேர்வு நடந்த உடனேயே, பல கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. டெக் ஃபார் ஆல் என்னும் அமைப்பு, இக்கேள்விகளில் உள்ள தவறுகளைப் பட்டியலிட்டு, குறைந்தது 196 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன என்றது. சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன் இதை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார். இதை ஒட்டிய தீர்ப்பே இப்போது வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே மாணவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தீர்ப்பின்படி தேர்வுபெற்ற புதிய மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டால், ஏற்கெனவே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் நிலை என்ன? அவர்களை அப்படியே வைத்துக்கொண்டு, கூடுதலாக புதிய மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளப் போகிறார்கள் என்றால், கூடுதல் இடங்களை அரசு உருவாக்குமா? இப்படியான சிக்கலை உருவாக்கி இருக்கிறது இத்தீர்ப்பு.

இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் சிபிஎஸ்இயின் பொறுப்பற்ற தன்மைதான். நீட் பிரச்சினையில் தொடக்கம் முதலே சிபிஎஸ்இ அலட்சியமாகவே நடந்துகொண்டுள்ளது. நீட் தேர்வுக்கான மையம் ஒதுக்குதலில் சிபிஎஸ்இயின் எதிர்பாராத பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் கேள்வித் தாள் பிரச்சினையில் சிபிஎஸ்இ நடந்துகொண்ட விதம் நிச்சயம் பொறுப்பற்றதனமே. நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ, தாங்கள் சிறப்பான மொழிபெயர்ப்பாளர்களையே நியமனம் செய்ததாகவும், அதற்குமேல் அதில் பிரச்சினை இருந்தால் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறி இருக்கிறது. இது இத்தனை எளிதாகக் கடந்து செல்லவேண்டிய விஷயம் அல்ல.

சிபிஎஸ்இயின் பாடத்திட்டப்படியான புத்தகங்கள் தமிழில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் வார்த்தைகள் தொடர்ச்சியாகத் தமிழ்ப்பாடத்திட்டப்படியான அரசுப் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் தமிழக அரசுகள் தொடர்ச்சியாகப் பல காலங்களாக மிகக் கவனமாகவே செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதப்போவதில்லை என்னும் நிலையில், தமிழில் தேர்வை எதிர்கொள்ளப் போகிறவர்கள் அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்னும் நிலையில், மொழிபெயர்ப்புக்கான சரியான அறிவியல் வார்த்தைகளை அரசுப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை ஒப்புநோக்கித் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். மிகச் சிறிய விஷயம் இது. இதைச் செய்திருந்தால் இந்தியா முழுமைக்குமான தலைக்குனிவை சிபிஎஸ்இ சந்திக்க நேர்ந்திருக்காது.

ஆங்கிலம் மற்றும் மண்டல மொழிகளில் கேள்விகள் தரப்பட்டிருக்கின்றன என்றாலும் இறுதியான முடிவு ஆங்கிலக் கேள்வியே என்ற ஒரு பொறுப்புத் துறப்பை ((Disclaimer) சிபிஎஸ்இ செய்திருக்கிறது. “மொழிபெயர்ப்பில் சந்தேகமான வார்த்தைகள் இருப்பின், அந்தக் கேள்விகளின் பதில்களை ஏற்பதில் ஆங்கில வினாக்களின் பொருள்தான் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும். தமிழில் தேர்வை எழுதும் மாணவர்கள், இதை உணர்ந்துகொள்ள வேண்டும்” என்கிறது `பொறுப்புத்துறப்பு!’ இதையும் ஏற்பதற்கில்லை. ஒன்றிரண்டு கேள்விகள் என்றால் சமாதானம் கொள்ளலாம். 49 கேள்விகள் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது. மொத்தம் 180 கேள்விகள், 720 மதிப்பெண்கள். இதில் 49 கேள்விகள், 196 மதிப்பெண்களில் குழப்பம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.

49 கேள்விகளில் என்ன என்ன தவறுகள் நேர்ந்தன என்பதைச் சரியாக அறியமுடியவில்லை. டெக் ஃபார் ஆல் இக்கேள்விகளின் பட்டியலை வெளியிட்டதாகச் செய்திகளில் பார்க்கமுடிந்தது. ஆனால் ஒட்டுமொத்த கேள்விகளின் பட்டியலும் கைக்குக் கிடைக்கவில்லை. டெக் ஃபார் ஆல் அமைப்புக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். மடல் அனுப்பினேன். என்ன தேவைக்காக என்றும் என்னைப் பற்றிச் சொல்லுமாறும் கேட்டார்கள். என் ஜாதகத்தைத் தவிர அனைத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இதை அறிந்துகொள்ளவேண்டும் ஒரு முனைப்பில் கேட்பதாகச் சொன்னேன். ஆனால் அவர்களிடம் இருந்து பதிலே இல்லை.

49 கேள்விகள் அனைத்துக்குமே ஏன் மதிப்பெண் தரவேண்டும் என்பதும் கேட்கப்படவேண்டிய கேள்வியே. இந்த 49 கேள்விகளில் எவையெல்லாம் மாணவர்களைக் குழப்பும் கேள்விகள் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தின் நோக்கம், இது போன்ற ஒரு பொறுப்பற்ற செயலைச் செய்த சிபிஎஸ்இஐப் பதற வைப்பது என்றே தெரிகிறது. அப்படி ஒன்று நடந்தால்தான் இனி எல்லாம் சரியாகச் செயல்படும் என்று நீதிமன்றம் யோசித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் சிபிஎஸ்இ இத்தேர்வுகளை நடத்தாது என்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

49 கேள்விகளின் பட்டியலில் உள்ள சில கேள்விகள் மட்டும் எனக்குக் கிடைத்தன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்னர், என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பது, மேலதிகப் புரிதலைத் தர உதவலாம். நான் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவன். அரசுப் பள்ளியில் படித்தவன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் கனவில் தேர்வில் பங்கெடுத்தேன். உயிரியல் தேர்வின் கேள்வித் தாளின் முதல் பக்கத்திலேயே ம்யூட்டேஷன் என்றால் என்ன என்றொரு கேள்வி இருந்தது. நான் உயிரியலில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க நினைத்திருந்தவன். இந்தக் கேள்வி எனக்குப் பெரிய பதற்றத்தைத் தந்தது. ஏனென்றால் ம்யூட்டேஷன் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. மரபணு மாற்றம் என்றோ மரபணுப் பிறழ்வு என்றோ தூண்டப்பட்ட மரபணு மாற்றம் என்றோ படித்தேன். (இப்போது நினைவில்லை.) இன்னும் சில கேள்விகள் இப்படி இருந்த நினைவு. தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் பேசிகொண்டது, தவறாக இருந்த கேள்விகளைப் பற்றிய வருத்தத்தைத்தான். இதில் நீட் தேர்வில் பங்குகொள்ளும் மாணவர்களின் வருத்தமும் பதற்றமும் எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லாருமே தேர்வு பெறப்போவதில்லை என்றாலும், இக்கேள்விகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாணவர்களை நாம் புறக்கணிக்கமுடியாது.

இதன் அடிப்படையில் 49 கேள்விகளின் மொழிமாற்றப் பிரச்சினையை அணுகவேண்டும். கொஞ்சம் மாற்றி மொழிபெயர்த்திருந்தாலும் ஏன் மாணவர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பது, நம் பாடத்திட்டம் உருவாக்கும் மாணவர்களைப் பற்றிய வேறொரு பிரச்சினை. ஏன் சிபிஎஸ்இ சரியான மொழிபெயர்ப்பை உருவாக்க முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

தமிழ் அல்லாமல் பிறமொழிகளில் எப்படி இக்கேள்விகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, அங்குள்ள மாணவர்கள் எப்படி இதை எதிர்கொண்டார்கள், அங்குள்ளவர்கள் சார்பாக ஏன் வழக்குகள் பதிவாகவில்லை என்பதெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியவையே.

என் பார்வைக்குக் கிடைத்த தவறான தமிழ்க் கேள்விகளை மட்டும் இப்போது பார்க்கலாம். இவை இணையத்தில் கிடைத்த செய்திகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை.

செங்குத்து என்பது நேர்குத்து என்று கேட்கப்பட்டுள்ளது. செங்குத்து என்றே நான் பள்ளிகளில் படிக்கும் காலம் தொட்டு 25 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதை நேர்குத்து என்று சொன்னால் மாணவர்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கமுடியாது. சிறுத்தை என்பதற்குப் பதிலாக அதன் ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழில் சீத்தா என்று எழுதி இருக்கிறார்கள். சிறுநீர் நாளம் என்று கேட்காமல் யூரேட்டர் என்று கேட்கப்பட்டிருக்கிறதாம். இயல்பு மாற்றம் என்பது இயல் மாற்றம் என்றும், தாவரங்கள் என்பது ப்ளாண்டே என்றும் கேட்கப்பட்டுள்ளன. இறுதி நிலை என்பது கடை நிலை என்றாகியுள்ளது. புதிய அரிசி ரகம் என்பது புதிய அரிசி நகம் என்று கேட்கப்பட்டுள்ளது. வவ்வால் என்பது வவ்னவால் என்று அச்சிடப்பட்டுள்ளது. பலகூட்டு அல்லீல்கள் என்பது பல குட்டு அல்லீல்கள் என்றாகி உள்ளது. ஆக்டோபஸ் ஆதடபஸ் என்றாகி இருக்கிறது. நீள  பரிமாணங்கள் என்பது நீள  அலகுகள் என்று வந்திருக்கிறது. விதை வங்கி வதை வங்கி ஆகி இருக்கிறது.

இப்படியாகப் பல கேள்விகள் தவறாகவே கேட்கப்பட்டுள்ளன. டெக் ஃபார் ஆல் 49 கேள்விகள் தவறு என்று பட்டியலிட்டாலும், 18 கேள்விகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் சிலர். ஆனால் உயர்நீதிமன்றம் கேள்விகளின் தவறுகள் எத்தகையவை என்பதற்குள் போகவே இல்லை. உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியான ஒன்றே.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் பங்கேற்ற கோகுல ஸ்ரீனிவாஸ் இது தொடர்பான முக்கியான கருத்து ஒன்றை வெளியிட்டார். “இத்தீர்ப்பு சரியான ஒன்றே. ஆனால் ஏன் நீதிமன்றம் இத்தீர்ப்பை முன்பே வெளியிட்டிருக்கக்கூடாது” என்பதுதான் அவரது நிலைப்பாடு. உண்மையில் இத்தீர்ப்பு முன்பே வந்திருக்குமானால் பல குழப்பங்களைத் தவிர்க்க அது உதவியிருக்கக்கூடும். ஆனால் ஏன் சிபிஎஸ்இ உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் காத்திருக்கக்கூடாது என்னும் கேள்வியும் நியாயமானதுதான். சிபிஎஸ்இ தான் தவறு செய்ததாகவே நினைக்கவில்லை என்பதுதான் இதற்கான வருத்தத்துக்குரிய பதில்.

நீட் தொடர்பாக ஏற்கெனவே பல பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில் இப்பிரச்சினை இன்னும் சிக்கலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சேர்க்கை குறைந்து சிபிஎஸ்இ செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எல்லாமே தங்கள் வசம் சிபிஎஸ்இ பள்ளிகள் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து அவற்றைத் துவங்கத் தேவையான முயற்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டன. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலான புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தமிழில் கேள்விகள் இப்படித்தான் இருக்கும் என்பது நீட் எதிர்ப்பாளர்களுக்கும், மத்திய அரசின் எதிர்ப்பாளர்களுக்கும் பெரிய வசதியாகப் போயிருக்கிறது.

நீட் தேர்வின் குழப்படிகளைக் களைவதில் ஆர்வம் காட்டுவதைவிடக் கூடுதலாக, நீட் தேர்வு ஒழிப்பில் காட்டுகிறார்கள். இனி அது சாத்தியமில்லை என்னும் நிலையையும் அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே வஞ்சனை செய்கிறது என்கிற பிரசாரத்தைத் துவங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுத மாணவர்களுக்கு வேறு மாநிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற பிரச்சினையிலும் இவர்கள் இதையே முன்வைத்தார்கள். தமிழ்நாட்டை ஒழிக்க ஏன் மத்திய அரசு நீட் தேர்வில் பங்குபெறும் ஆயிரம் மாணவர்களை மட்டும் குறி வைக்கவேண்டும் என்று இவர்கள் யோசிக்கவே இல்லை. இதன்மூலம் தமிழ்நாட்டை என்ன செய்துவிடமுடியும்? தமிழில் தேர்வுக்கேள்விகள் இப்படி வந்திருப்பது பெரிய துரதிர்ஷ்டம், அநியாயம். ஆனால் இதன் பின்னணியில் அலட்சியம் மட்டுமே இருக்கிறதே ஒழிய தமிழ்நாட்டை ஒழிக்கவேண்டும் என்கிற எந்த ஒரு எண்ணமும் இருக்க வாய்ப்பில்லை.

மற்ற அரசுகளுக்கும் தற்போதைய மத்திய அரசுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், தவறுகள் நேரும்போது அதைத் திருத்திக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைதான். இதைப் பற்றி ஏன் மத்திய அரசு பேசுவதில்லை என்ற கேள்விகள் பொருளற்றவை. பேச்சைக் காட்டிலும் செயல்பாடும் தீர்வுமே முக்கியம். இனி சிபிஎஸ்இ நடத்தப்போவதில்லை, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸிதான் நடத்தும் என்பது, இப்பிரச்சினைகளை ஒட்டி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ஒரு முன்னகர்வு. அது எப்படி இயங்கும், அது சிபிஎஸ்இயில் இருந்து எப்படி வேறுபட்டிருக்கும் என்பதெல்லாம் இனிதான் நாம் பார்க்கவேண்டியது. ஆனால் நிச்சயம் காங்கிரஸ் அரசைப் போல ஒரு கண் துடைப்பு அறிவிப்பாக இது இருக்காது என்று நம்பலாம். சிபிஎஸ்இ எதிர்ப்பு மற்றும் மத்திய அரசு எதிர்ப்பு இரண்டையும் ஒன்றாக்கி, வெகுஜன மக்கள் மத்தியில் மத்திய அரசு எதிர்ப்புக்கான விதையை ஊன்றுவதுதான் சிலரின் நோக்கம். இதிலிருந்து விடுபட்டு தமிழக மாணவர்களுக்கு எது தேவை என்பதை மட்டும் யோசிப்பதுதான் சரியான நிலைப்பாடு.

உச்சநீதி மன்றத்தில் வரும் தீர்ப்பு இவ்விஷயத்தில் ஒரு முடிவைக் கொண்டு வரலாம். அதை ஒட்டி இன்னும் குழப்பங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறலாம். ஆனால் இனி வரும் தேர்வுகளில் இப்படியான ஒரு அலட்சியத்தை எந்த அமைப்பும் கைக்கொள்ளாது என்பதை இப்பிரச்சினை உறுதி செய்திருக்கிறது என்றே நம்புகிறேன்.

நன்றி: வலம் ஆகஸ்ட் 2018

Share