சூய் தாகா (ஹிந்தி) – 1970களில் வந்து அனைவரையும் கதற வைத்து, புல்லரிக்க வைத்து நனைந்த கைக்குட்டையும் சிரிப்புமாக வெளியே அனுப்பி இருக்கவேண்டிய படம், கொஞ்சம் தவறி, வருண், அனுஷ்கா ஷர்மாவுடன் 2019ல் வெளியாக, நான் சிக்கிக்கொண்டேன் – வழக்கம்போல. என்ன ஆனாலும் அனுஷ்கா ஷர்மாவின் மீது விரல் நகம் கூடப் பட்டுவிடக்கூடாது என்று கோஹ்லி சொன்னாரோ என்னவோ, வருண் அத்தனை மரியாதையாக தம்பி போல தள்ளி நின்று மனைவியுடன் பேசுகிறார், நடிக்கிறார், சிரிக்கிறார். நல்ல வசனங்கள். அனுஷ்கா ஷர்மாவின் வாழ்நாள் படமாக இருக்கலாம். அத்தனை அழகு, பாந்தம், கண்களிலேயே நடிக்கிறார், அட்டகாசமான முகபாவங்கள். மேக் இன் இண்டியாவை பிரசாரப்படுத்தும் பிரசாரப்படம் போல. வருண் அழகான அம்மாஞ்சி போல இருக்கிறார், நன்றாகவே நடிக்கிறார். படம் மொத்தமும் அநியாய க்ளிஷே. ஆனாலும் பார்க்கலாம்.
நான் சொல்ல வந்தது வேறு விஷயம்.
நான் அமேஸான் ப்ரைமில் தமிழ் சப்-டைட்டிலுடன் பார்த்தேன். இந்தப் படத்துக்கு ‘மொழிபெயர்ப்பு’ செய்தவரைக் கண்டுபிடித்துப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். 2100களில் தமிழ் தேயும்போது அதை மேலே எடுத்துச் செல்ல இவர் தேவைப்படுவார். தமிழ் ஆய்வாளர் போல.
ராம் ராம் என்பதை வணக்கம் என்று சொல்லத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் சீதாராம் என்று சாதாரணமாக வீட்டில் சொல்வதற்குக் கூட, எல்லாம் வல்ல சீதா தேவி வாழ்க, எல்லாம் வல்ல ராமர் வாழ்க என்றெல்லாம் ‘வார்த்தைக்கு வார்த்தை’ இறங்கி அடித்துவிட்டார். பில்குல் என்ற வார்த்தைக்கு சமய சந்தர்ப்பமில்லாமல் முற்றிலும் என்கிறார். அப்பாவும் மகனும் பேசும்போது என்ன ஆச்சு என்பதைக்கூட என்ன கெடுதி உங்களுக்கு வந்துவிட்டது என்றெல்லாம் எழுதி தமிழை ஒரு படி மேலே உயர்த்திவிட்டார். இன்னும் இதுபோன்ற சேவைகள் பல இந்தப் படத்தில் இருக்கின்றன. தூய தமிழில் கலக்கி எடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். பஸ்ஸில் போனேன் என்பதை பஸ் எடுத்தேன் என்றெல்லாம் அட்டகாசம் செய்திருக்கிறார்.
இனி தமிழில் சப்டைட்டில் கிடைக்கும் படங்களை மட்டுமே பார்த்து இதில் ஒரு டாக்டரேட் செய்யலாம் என்றிருக்கிறேன். ராமா ராமா. (ராம் ராம் என்பதின் மொழிபெயர்ப்பு என்றறிக.)