Tag Archive for வடிவேலு

வடிவேலு: திராவிட அரசியலின் உரைகல்

‘கிழவன் இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ தொடரில் கலாப்ரியாவும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தேர்த் திருவிழா’ திரைப்படத்தின் மேக்கப்பில் இருக்கும்போது இப்படி நாகேஷ் கேட்டது எம்.ஜி.ஆரின் காதுக்குப் போகவும், அதற்குப் பிறகு சில காலங்களுக்கு எம்.ஜி.ஆரின் படங்களில் நாகேஷ் நடிக்கவே இல்லை. பின்னர் சமாதானமானார்கள். 1968ல் நடந்தது இது. இதற்கு முன்னரே சந்திரபாபு என்ற ஒரு நடிகரைக் காலி செய்தது எம்.ஜி.ஆரே என்ற பேச்சும் உள்ளது. இப்போது 2012. நாற்பது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. திராவிட இயக்கம் தந்த இந்தப் பழக்கம் இன்னும் ‘மெருகேறியிருக்கிறது.’

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராகப் பரிமளித்தவர் வடிவேலு. அவரது கலைப்பயணம் முடிந்துவிட்டது என்ற அர்த்தம் தொனிக்க, ‘பரிமளித்தவர்’ என்று சொல்வதே கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. 2011ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் மூன்று மட்டுமே என நினைக்கிறேன். 2011ல் காமெடியின் உச்ச நடிகர் இவரே. ஓர் உச்ச நடிகருக்கு நேர்ந்த கதி இது. தமிழில் இதுவரை வந்த காமெடி நடிகர்களில் உச்ச நடிகர் வடிவேலுவே என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பாலானவர்கள் இத்துடன் ஒத்துப் போவார்கள் என்றே நினைக்கிறேன். ஓர் உச்ச நடிகரை ஒரே தினத்தில் அதள பாதாளத்தில் வீழ்த்தி வைக்க நம் அரசியலால் முடியும் என்ற கேடுக்கெட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.

விஜய்காந்த் அரசியலுக்கு வந்ததிலிருந்தே வடிவேலுவுக்கு வினை ஆரம்பித்தது. ஏதோ ஒரு திரைப்படத்தில் விஜய்காந்தின் அரசியல் வருகையைப் பாராட்டிப் பேசவேண்டும் என்பது போன்ற ஒரு வசனத்தை (எங்கள் அண்ணா திரைப்படமாக இருக்கலாம்) பேச மறுத்துவிட்டார் வடிவேலு. இதற்கு முன்னர் பல படங்களில் வடிவேலுவும் விஜய்காந்தும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிலெல்லாம் வடிவேலு தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வழியே விஜய்காந்தைப் பாராட்டிப் பல தடவை பேசியிருக்கிறார். ஏனோ இந்தப் படத்தில் மறுத்துவிட்டார். அது அவரது உரிமை. தொடங்கியது பிரச்சினை. எப்படித் தன்னைப் பாராட்டிப் பேசுவதை போயும் போயும் ஒரு காமெடி நடிகன் மறுப்பது என்று கதாநாயகனுக்கு வந்துவிட்டது கோபம்.

ஆனால் நாகேஷ் போல வடிவேலு அமைதியாக இல்லை. தன்னை எதிர்ப்பது எம்.ஜி.ஆர் இல்லை என்னும் தைரியமாக இருந்திருக்கலாம். விஜய்காந்தின் மிரட்டல் அரசியலுக்கு இணையான அரசியலில் இறங்கினார் வடிவேலுவும். இரண்டு பக்கமும் பற்றிக்கொண்டது. இதற்கிடையில் வடிவேலுவின் மேனேஜர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்றளவும் வடிவேலுக்குப் பிரச்சினையாக இருப்பது இந்தத் தற்கொலை. தொடர்ந்து நிகழ்ந்த மனவேறுபாடுகளின் உச்சத்தில், விஜய்காந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் தான் எதிர்த்துப் போட்டிப் போடப்போவதாக அறிவித்தார் வடிவேலு.

2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டணி ஏற்பட்டது. 67க்குப் பிறகு கழகங்கள் உருவாக்கி வைத்திருந்த அரசியல் நாகரிகக் கணக்கின்படி, தேமுதிகவுக்கு வேண்டாதவர்கள் எல்லாருமே அதிமுகவுக்கும் வேண்டாதவர்களே என்று அதுவாகவே ஆகிப்போனது. இதனை வடிவேலுவும் நம்பினார். எப்படியும் விஜய்காந்தை வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்ட வடிவேலு அழகிரியின் கரத்தை வலுப்படுத்தி திமுகவுக்குப் பிரசாரத்துக்குப் போனார். பிடித்துக்கொண்டது சன்னும் சனியும்.

சன் டிவி இதனை பயன்படுத்திக்கொண்டது. விஜய்காந்தின் தனிப்பட்ட பிம்ப அழிப்பில் வடிவேலுவும் சன் டிவியும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டார்கள். இது மக்களிடையே எடுபடவும் செய்தது. தன் பேச்சுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு மதி மயங்கிப் போன வடிவேலு தான் என்ன பேசுகிறோம் என்ற விவஸ்தையின்றி வாய்க்கு வந்தது எல்லாவற்றையும் பேசினார். ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்கி எதுவும் பேசவில்லை என்றாலும், கருணாநிதியை வானளாவப் புகழ்ந்ததையும், கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக அவர் பட்டியலிட்டதையும், தனக்கு எதிரானதாகவே அதிமுக தலைமை பார்த்திருக்கும். ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஒருவகையில் ஜெயலலிதா தன்னைத் தாக்குவதைக் கூடப் பொறுத்துக்கொள்வார். ஆனால் தன்னை ஒப்பிட்டுக் கருணாநிதியைப் புகழ்வதைப் பொறுத்துக்கொள்ளவே மாட்டார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வடிவேலுவுக்கு எதிராக அமைந்தன. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்றே வடிவேலுவின் வீடு, தோட்டம் ஆகியவை தேமுதிக குண்டர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தான் விரித்துக்கொண்டு தானே விழுந்த வலை மெல்ல இறுகுவதை அவர் அன்றுதான் உணர்ந்திருக்கவேண்டும்.

வடிவேலு செய்த தவறுகள் என்ன? பெருச்சாளிக்குப் பயந்து பாம்பிடம் அடைக்கலம் சென்றது. அரசியல் என்பது வேறு, திராவிட அரசியல் வேறு என்பதைப் புரிந்துகொள்ளாதது. ஆனால் இவையெல்லாம் மிகச் சிறிய தவறுகளே. ஓர் அரசியல் தலைவரைக் குடிகாரர் என்று சொல்வது, நாகரிகக் குறைவே என்றாலும், அதில் உண்மை இருக்குமானால் அது மாபெரும் தவறல்ல. வடிவேலுவும் அவர் பிரசாரம் செய்யும் கட்சித் தலைவர்களும் உத்தமர்களா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்தக் கேள்வியுடன் சேர்த்துப் பார்த்தால், வடிவேலு சொல்வதெல்லாம் தனிப்பட்ட வெறுப்பின் உச்சத்தால் மட்டுமே என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். உண்மையில் இதனை எல்லாரும் அறிந்தே இருந்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்பு நடப்பதுதான் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது.

ஒருவர் அதிமுகவுக்கு எதிராக – இல்லை, திமுகவுக்கு ஆதரவாக – பேசினார் என்ற ஒரே காரணத்தினாலாயே அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்பது எப்பேற்பட்ட அராஜகம்? இதனை ஜெயலலிதா முன்னின்று நடத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, எதற்கு நமக்கு வம்பு என்றுதான் பலரும் ஒதுங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் ஜெயலலிதாவே வடிவேலுவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க உள்வட்டங்களின் வழியே இயக்குநர்களுக்குக் கட்டளை இட்டிருக்கவேண்டும். வடிவேலுவின் பிரசாரம் வேறு, அவரது நடிப்பு வேறு என்று தெளிவாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் ஜெயலலிதா ரஜினி அல்ல என்பதுதான் உண்மை. ஜெயலலிதா இதனை வெகுவாக ரசித்திருப்பார் என்றே தோன்றுகிறது. முன்னின்று நடத்துவதற்கும், ரசிப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதுவும் உண்மையே.

இப்படி நடப்பது ஏதோ ஒரு சாதாரண நடிகருக்கல்ல. ஓர் உன்னதக் கலைஞனுக்கு இது நேர்ந்திருக்கிறது. தேர்தல் முடிவு ஓர் நடிகனைக் காணாமல் ஆக்கிவிட்டதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வடிவேலுவை தன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

எந்த அளவுக்கு என்றால் – கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு வெளியானது. சுந்தர் சி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக. நான் அன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னதான் வடிவேலு நாகரிகக் குறைவாகப் பேசியிருந்தாலும், நடிப்பு என்ற வகையில் வடிவேலு ஒப்பற்ற கலைஞன். இன்றும் நகைச்சுவை சானல்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது. எனவே அவர் நடிக்க வரவேண்டியதுதான் தர்மம். அந்த வகையில் சுந்தர் சி பாராட்டுக்குரியவர் என நினைத்துக்கொண்டேன். மறுநாளே மறுப்பு வந்தது. அப்படி ஓர் எண்ணம் தனக்கில்லை என்று சுந்தர் சி சொன்னதாக அறிந்தேன். அதேபோல் ரஜினி படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு செய்தியும், அதனை கே.எஸ். ரவிகுமார் மறுத்ததாகவும் அறிந்தேன். இதெல்லாம் உண்மையா என்று தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்றுவரை வடிவேலு நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது, இதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லவைக்கிறது.

திராவிட இயக்கக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் இந்த வகையான அரசியலுக்குக் காரணம். தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். ஏதேனும் ஒரு நடிகரோ எழுத்தாளரோ தன்னைப் பற்றி எதிராக எழுதினால், அவரை எதிரியாக நினைப்பதும், தேவைப்படும்போது ‘அரவணைப்பது’ போல பேசி அவரை அடிமையாக்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலையே. அதைக்கூட தானே பார்த்துச் செய்ததாகச் சொல்வார்கள். இழவு வீட்டில் பிணமாகக்கூடத் தாங்களே இருக்க நினைக்கும் மனநிலை.

யாருக்கு வேண்டும் உங்கள் அரவணைப்பு என்று எதிர்த்துப் பேசி உண்மை நெஞ்சுரத்துடன் ஒருவர் இங்கே குப்பை கொட்டிவிடமுடியாது. மேடையில் பகிரங்கமாக, தைரியமாகப் பேசிய அஜித், மறுநாளே கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்துவதைப் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவின் முன்னிலையில் கண்டித்துப் பேசிய ரஜினி பட்ட தொல்லைகளுக்கு அளவே இல்லை. அஜித்தும் ரஜினியும் மீண்டும் சமரசம் ஆகியிருக்கலாம். அதற்கான கேவலம்கூட நம்மை இப்படி வைத்திருக்கும் கட்சிகளுக்கு உரியதே அன்றி, அவர்களுக்கு உரியன அல்ல. இப்படி நடக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அப்படிப் பேசியதே சாதனைதான்.

வடிவேலு போன்ற ஒரு நடிகருக்கு வாய்ப்பில்லாமல் இருப்பது இப்படியான நம் அரசியல் கேவலத்தின் உரைகல்லாகவே விளங்குகிறது. அதே கேவலத்தின் வழியாகவே வடிவேலு வெளிவரவேண்டியிருக்கும். இன்று விஜய்காந்தும் ஜெயலலிதாவும் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு பொன்னாடையை வடிவேலு ஜெயலலிதாவுக்குப் போர்த்தினால் போதும். மீண்டும் வடிவேலு என்ற கலைஞனின் பல வெற்றிகளை நம்மால் திரையில் காணமுடியும். கேவலங்களைப் பட்டியலிட்டுவிட்டு, அதே கேவலத்தின் வழியேதான் நாம் வெளியேற வேண்டுமா என்றால், இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நல்ல நடிகன் என்ற பெரிய அந்தஸ்தின் முன்பு, இந்த சமரசம் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. கொஞ்சம் அசிங்கத்துடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சந்திரபாபு, என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா போன்ற நடிகர்களுக்கு வாழ்க்கையில் ஓர் பெரிய அடி விழுந்து, அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடித்தபோது அவர்களால் முன்பு போல வெற்றி பெற முடியவில்லை. வடிவேலுவுக்கும் இது நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் மனம் வேண்டிக்கொள்கிறது. இனி மீண்டும் நடிக்கவந்தால், தான் எப்படி அரசியல் கட்சிகளாலும் டிவிக்களாலும் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வது வடிவேலுவுக்கு நல்லது. இங்கே நிலவுவது அரசியல் விஷச் சூழல். அதை மெல்ல மெல்லத்தான் மாற்றமுடியும். அந்த மாற்றத்துக்கு வடிவேலு பலியாகவேண்டியதில்லை.

Share