மதுரையில் ஜெய்ஹிந்த்புரத்தில் ரீட்டா காம்பவுண்டில் நாங்கள் குடியிருந்தோம். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னால். அந்த இடத்தைத் தேடி இப்போது சென்றபோது, அந்தத் தெரு அப்படியே இருந்தது. அந்த காம்பவுண்டும் கூட அப்படியேதான் இருந்தது.
அதற்கு எதிரே இருந்த ஒரு வீட்டின் முகப்பு பால்கனியில் ஓவல் சைசில் ஒரு பெரிய துளை இருக்கும். அங்கே அமர்ந்துதான் அன்றைய இளைஞரான அண்ணன் ஒருவர் — எம்எஸ்வியின் தீவிர ரசிகர் — மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி என்ற பாடலைப் போட்டுக் கொண்டே இருப்பார். போதும் போதும் என்று இரண்டு குரலில் யேசுதாஸ் பாடுவது மனப்பாடமாகிவிட்டது. அவர் வீட்டில் எப்போதும் எம்எஸ்வியின் பாடல்கள்தான் ஒலிக்கும். ஒன்றிரண்டு தடவை அவரது ஸ்கூட்டரில் என்னை குருகுலம் பள்ளியிலும் அவர் ட்ராப் செய்திருக்கிறார்.
அந்த ஓவல்சைஸ் பால்கனி வீட்டைக் கண்டுபிடித்து அதற்கு எதிரே இருந்த ரீட்டா காம்பவுண்டைப் பார்த்தபோது, காம்பவுண்டு என்ற பெயரிலான அந்தச் சிறிய முடுக்கு போன்ற சந்தில் அம்மிக்கல்லும் குழவியும் தோன்றி, அம்மா அரைத்துக்கொண்டு இருப்பது போன்ற பிம்பமும், பத்துக்கு பத்து ஒரே அறை மட்டுமே கொண்ட வீட்டுக்குள் அப்பா அமர்ந்து ரேடியோவில் சிந்து பைரவியின் பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற பிரமையும் பரவ, ஒரு கணம் விக்கித்து நின்றேன். கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளியைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். இப்போது எழுதும் போது கூட அதே உணர்வு.
அந்தத் தெருவில் இருந்த சிறிய முருகன் கோவில் வாசலில் நின்றுதான் கந்த சஷ்டிக் கவசத்தை விடாமல் பாடுவேன். சஷ்டிக்கு 36 முறை பாடினால் நல்லது என்று ஒருதடவை அம்மா சொல்ல, ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு கோவில் முன்னால் நின்று 36 தடவை பாடினேன்.
கார்த்திகை அன்று சகோதரிகளுக்கு ஆனை அடை செய்து கொடுப்பது நல்லது என்று அம்மா ஸ்டவ்வில் ஆனை அடை சுட்டுத் தந்து, பக்கத்தில் இருந்த ரமணி அத்தை விட்டுக்குக் கொடுத்துவிட்டு வரச்சொன்னது, மதியமானால் அம்மாவுக்கு அடிகுழாயில் நீர் அடித்துக் கொடுக்க சுரேஷ் பாவா வருவது, முருகன் தியேட்டரில் செங்கமலைத் தீவு, அன்னை பூமி போன்ற கணக்கற்ற படங்கள் பார்க்க ஓடியது எல்லாம் என் நினைவில் வந்து போயின.
இன்று அந்த ரீட்டா காம்பண்டு இல்லை. முருகன் தியேட்டர் இல்லை. அன்று இருந்தவர்கள் யாருமே இல்லை. அப்பாவும் பக்கத்து வீட்டு மாமாக்களும் அமர்ந்து அரட்டை அடித்த அந்த ஒற்றைச் சந்து மட்டும் அப்படியே இருக்கிறது.
எதிர்வீட்டில் பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்த ஓர் இளைஞரும் யுவதியும், நாங்க இங்கதான் பிறந்து வளந்தோம், ரீட்டா காம்பவுண்டுன்ற பேரையே கேள்விப்பட்டது இல்லை என்றார்கள். அவர்களுக்கு வயது அதிகபட்சம் 30 இருக்கலாம். நீங்கள் பிறப்பதற்கு 10 வருடங்களுக்கு முன்னாலேயே நான் இங்கே இருந்தேன் என்று சொல்லவும், அவரது அம்மா வந்து எட்டிப் பார்த்து, ஆமாம் அந்த பெண் பெயர் ரீட்டா, அவர் பெயரில்தான் அந்த காம்பவுண்டு இருந்தது, இப்போது அவர்கள் பக்கத்து தெருவில் இருக்கிறார்கள், இந்த இடத்தை விற்றுவிட்டார்கள் என்றார்.
எத்தனை எத்தனையோ மாற்றங்கள். அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை, அந்த காம்பவுண்டு மட்டும் அப்படியே இருப்பதில் என்னவோ ஒரு மகிழ்ச்சி.






