ஒருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சொல்வது நல்ல விஷயமே. ஆனால் யார் யாரிடம் எப்போது எப்படிச் சொல்கிறார்கள் என்பது முக்கியமானது. அதேசமயம் யார் சொல்லவில்லை என்பதுவும் அதன் பின்னணியோடு பார்க்கப்படவேண்டியதே. ராகுல் தன்னை ராகுல் என்று அழைக்கச் சொன்னது மாணவிகளிடம். இதே உரிமை அவரது கட்சிக்காரர்களுக்கு உண்டா என்பதைக் கேட்டால் போதும், பதில் கிடைக்கும். குறைந்தபட்சம் மாணவிகளிடமாவது சொல்கிறாரே என்று பாராட்டுவதும் சரிதான். ஆனால் இதன் எதிர்ப்புள்ளியில் அப்படிச் சொல்லாதவர்களையெல்லாம் திட்டுவது சரியானதல்ல.
ஒருவகையில் எவ்வளவு வயதானவர் என்றாலும் அவர்களைப் பெயர் சொல்லி அழை என்பது மேற்கத்திய மனோபாவம். அதே மனோபாவத்தில் நாம் இந்தியாவிலும் அதை அப்படியே கடைப்பிடிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம், அப்படி அழைக்காதவர்களைத் திட்டவாவது தேவையில்லை. நம் தெருவில் இருக்கும் 50 வயதான ஒருவரை 40 வயதான நாம் பெயர் சொல்லி அழைப்போமா? சம வயதே என்றாலும் அழைப்போமா? பெண்களை அழைப்போமா? அது நம் மரபல்ல. அதை வலிந்து நாம் பயன்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. அண்ணன், மாமா, சித்தப்பா, அத்தை என்று உறவு சொல்லி அழைப்பதே நம் வழக்கம். மறைந்துவரும் இப்பழக்கத்தைக் கைவிடுவது வருத்தம் தரும் என்பது ஒரு பக்கம், இப்படி அழைப்பவர்களையெல்லாம் பழமைவாதிகள் என்னும் போலி மனப்பான்மை இன்னொரு பக்கம். இதில் அமெரிக்காவைப் பார் ஐரோப்பாவைப் பார் என்று சொல்லிக் கிண்டலும் செய்துகொள்வார்கள்.
இன்று ராகுல் என்று தன்னை அழைக்கச் சொன்னதைக் கொண்டாடுபவர்கள் யார் என்பது இன்னுமொரு நகைமுரண். ஒரு மேடையில் நடிகை மீனா கருணாநிதி ஜி என்று சொன்னதற்கு உடன்பிறப்புகள் கொந்தளித்து அவரைக் கலைஞர் என்று அழைக்கச் சொல்லி கருணாநிதி முன்பே பாடம் எடுத்தார்கள். இவர்கள்தான் இன்று ராகுலை ராகுல் என்றழைப்பது குறித்துப் புளகாங்கிதப்படுகிறார்கள்.
கருணாநிதி பலமுறை தன்னைக் கலைஞர் என்று அழைக்காதது குறித்து வருந்தி இருக்கிறார். நேரடியாகவும் மறைமுகமாவும். அவர் ஜெயலலிதாவை அம்மையார் என்று சொல்வது அவர் விருப்பம். அதேபோல் ஜெயலலிதா அவரைக் கலைஞர் என்று சொல்லாமல் இருப்பது அவரது தேர்வு. ஆனால் இந்த வேற்றுமைகளை கருணாநிதியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதே நேரம் திமுகவினர் கருணாநிதியைக் கலைஞர் என்று அழைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. அவர்கள் உரிமை அது, அன்பைச் சொல்லும் விதம் அது. கலைஞர் என்று அழைக்காதவர்களைக் குறிவைக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது.
நேரில் பேசும்போது பெயர் சொல்லி அழைப்பது தவறல்ல. ஆனால் அப்படி அழைக்காதவர்கள், அழைக்கச் சொல்லாதவர்கள் எல்லாம் அடிப்படைவாதிகளும் அல்ல. அதேபோல் ஒரு கட்டுரையிலோ பேட்டியிலோ பெயரை மட்டும் சொன்னால் போதும். அம்மா, சூப்பர் ஸ்டார், கலைஞர் என்ற விளிகள் எல்லாம் தேவையற்றவை. அக்கட்சியினராக விரும்பிப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் அடிமைத்தனத்தை அல்லது விசுவாசத்தைக் காட்டிக்கொள்வது இதில் வராது.
எனவே ராகுல், நீங்கள் அழைக்கச் சொன்னது உங்கள் அளவில், உங்கள் மேல்நாட்டுச் சிந்தனையின்படி, சரி. அதேபோல் மற்ற இந்தியத் தலைவர்கள் அப்படி அழைக்கச் சொல்லாமல் இருப்பது எங்கள் பண்பாட்டின் படி சரி.
நன்றி ராகுல் ஜி!