Tag Archive for யூ டி எஸ் ஆப்

UTS App

எலக்ட்ரிக் ட்ரைனில் செல்லும்போது டிக்கெட்டை யூ டி எஸ் ஆப் மூலம் வாங்குவேன். இன்று வேளச்சேரியில் ட்ரைனில் ஏறி உட்கார்ந்த பின்பு டிக்கெட் வாங்க முயன்றேன். பொதுவாக தொடர்வண்டி நிலையத்துக்கு வருவதற்கு முன்பாகவே வாங்கிவிடுவேன். இன்று எதோ ஒரு எண்ணத்தில் வண்டியில் உட்கார்ந்ததும் வாங்கலாம் என்று நினைத்து ஏறிவிட்டேன். முதன்முதலாக இந்த ஆப்பில் டிக்கெட் வாங்கியபோது, வண்டியில் வைத்துத்தான் வாங்கினேன் என்ற நினைப்பு தந்த தைரியத்தில் ஏறிவிட்டேன்.
 
எத்தனை முயன்றாலும் டிக்கெட் எடுக்க முடியவில்லை. ஜிபிஎஸ் சிக்னல் லோ என்றது. ஜிபிஎஸ் நன்றாக இருந்தால், நீங்கள் 12 மீட்டருக்கு அருகில் இருக்கிறீர்கள், ட்ராக்/ட்ரைனில் இருந்து ஆறுமீட்டர் தொலைவுக்குச் செல்லுங்கள் என்றது. பின்பு 24 மீட்டர் என்றது. ஓடும் வண்டியில் இருந்து எப்படி குதித்து ட்ராக்குக்கு ஆறு மீட்டர் தூரம் செல்வது என்று பிடிபடவில்லை. பின்பு மீண்டும் ஜிபிஎஸ் சிக்னல் லோ என்றது. ஸ்டேஷனுக்குள் வந்துவிட்டால் ஜிபிஎஸ் லோ. ஸ்டெஷனை விட்டு வெளியே போனால் ஆறு மீ தூரம் போகவேண்டும். இல்லையென்றால் ’இட்ஸ் டேகிங் டைம் தேன் யூஷுவல்’.
 
எனக்கா பயம். பரிசோதகர் வந்துவிட்டால் மானம் போய்விடுமே என்று. வண்டி நிற்கும் அனைத்து நிலையங்களிலும் பரிசோதகர் டிக்கெட்டை பரிசோதனை செய்துகொண்டிருந்தார் என்பது கூடுதல் பயத்தைக் கொடுத்தது. 45 நிமிடப் போராட்டம் முடிவுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தது.
 
நான் இறங்கவேண்டிய பீச் ஸ்டேஷனே வந்துவிட்டது. இறங்கி வெளியில் வந்தேன். யாரும் டிக்கெட் கேட்கவில்லை. வெளியே நின்று மீண்டும் டிக்கெட் வாங்க முயன்றேன். அப்போதும் அதே பதில். ஜிபிஎஸ் லோ. ஒழியட்டும் சனி என்று விட்டுவிட்டேன். ஆனாலும் மன உறுத்தல் தாளவில்லை. பத்து ரூபாயை பிள்ளையாருக்குப் போடப்போகிறேன். அவர் அந்த பத்து ரூபாயை ஐ ஆர் சி டி சிக்குச் சேர்த்துவிடவேண்டும். அது அவர் பொறுப்பு.
 
யூ டி எஸ் ஆப்பில் இனி டிக்கெட் புக் செய்யவேண்டும் என்றால், ஒரு கிமீ தூரத்தில் ஐந்து கிமீட்டருக்குள்ளாக, ஓரிடத்தில், வெளியே வானம் தெரியும் இடத்தில், ஜிபிஎஸ்ஸும் 4ஜியும் தெளிவாகக் கிடைக்கும் இடத்தில் எடுக்கவேண்டும் என்று தெரிந்துகொண்ட நாள் – இன்று.
 
மெல்ல டிஜிடலைஸ் ஆவோம். ஆகியே தீர்வோம்.
Share