Tag Archive for மெட்ரிகுலேஷன்

அரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்

* தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கல்வித் தரம் நன்றாக இருப்பதற்கு, ஒருவேளை அங்கு பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் இருப்பதால்தானோ என்ற ரீதியில் மகாதேவன் சொல்லி இருக்கும் கருத்து எவ்வித அடிப்படையும் அற்றது. அநியாயமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்கள் அதிகம் பிராமணர்களாக அல்லது உயர்சாதி மாணவர்களாக இருப்பதற்கும் அங்கே பாடம் நன்றாக நடத்தப்படுவதற்குமான தொடர்பு கொஞ்சம் கூட விவாதத்திற்கு உரியதல்ல என்று நான் நினைப்பதால் அதை விட்டுவிட்டு மற்ற ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.

* நான் ஏற்கெனவே பலமுறை சொன்னதுபோல், மகாதேவன் சுயமான சிந்தனை உடையவர். இதன் எதிர்த்திசையில், யாராவது ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காகவேகூட தீவிரமான சிந்தனை செய்பவரும்கூட என்பது என் அனுமானம். இப்படிச் சிந்திப்பவர்களால் சில சமயங்களில் தீவிரமான கருத்துப் பிரதிவாதங்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே கருத்தின் அடிப்படையில் மட்டுமே மகாதேவன் போன்றவர்களை அணுகுதல் நலம். இந்த இடுகையில் நான் சொல்லும் கருத்து, மகாதேவனின் அனைத்துக் கருத்துகளுக்குமான கருத்தல்ல.

* சிபிஎஸ்இ பள்ளிகளில் பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதையே நான் முதலில் ஏற்கவில்லை. பிராமணர்கள் உள்ளிட்ட மற்ற உயர்சாதி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அதனால்தான் அவர்கள் நன்றாக நடத்துகிறார்கள் என்பது அடிப்படையற்றது. இதேபோன்ற தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள ஹிந்து அல்லாத மற்ற மத ஆசிரியர்களும் இதேபோன்ற அர்ப்பணிப்புடன் நடத்துவது கண்கூடு. எனவே தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளால்தான் இது சாத்தியமாகிறதே ஒழிய ஜாதியாலோ மதத்தாலோ அல்ல.

* சாதி மற்றும் மதத்தால் ஆசிரியர்களை பொதுப்படுத்துவது என்பது சரியானதல்ல. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதில் ஆயிரம் உதாரணங்கள் இருக்கும். நேரிடையாக அனுபவப்பட்டதாகவும் இருக்கலாம், ஐயத்துக்கு இடமின்றி நடந்த ஒன்றைக் கேள்விப்பட்டதாகவும் இருக்கலாம்.

* 3ம் வகுப்பு முதல் கல்லூரி நான் படித்தவை அனைத்தும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளே. நான் படித்து முடித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றெல்லாம் கல்வி நன்றாக இருந்தது என்பது முதல் பொய். நான் படித்தபோதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் லட்சணம் மிகக் கேவலமாக இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் இன்று பல மடங்கு முன்னேறி இருக்கிறது. (இந்த முன்னேற்றம் உண்மையான, சரியான முன்னேற்றமா என்பது தனியே விவாதிக்கப்படவேண்டியது.)

* 3 மற்றும் 4ம் வகுப்பில் பஞ்சாயத்துப் பள்ளியில் படித்தேன். பாடம் நடத்தவே மாட்டார் ஆசிரியர். உண்மையில் அவருக்கு ஏதேனும் தெரியுமா என்பது எனக்கு இன்று வரை சந்தேகமாக உள்ளது. ஆனால் மாட்டடி அடிப்பார்கள். கூட்டமாக உட்கார்ந்து சொன்னதையே சொல்லி மனனம் செய்யச் சொல்வார்கள். அதிலும் ஆயிரம் பிழைகள் இருக்கும். அப்படியே மனனம் செய்யச் சொல்வார்கள். இந்த லட்சணத்தில்தான் அந்தப் பள்ளியில் படித்தேன். (பள்ளியின் பெயர் வேண்டாம் என்பதால் எந்தப் பள்ளியின் பெயரையும் ஆசிரியரின் பெயரையும் சொல்லப் போவதில்லை.) ஆசிரியர்கள் அனைவருமே அபிராமணர்கள்.

* 5ம் வகுப்பு படித்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தண்டம். இதற்கு மேல் அந்தப் பள்ளியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆசிரியர் பிராமணர். 30 வருடத்துக்கு முன்பாகவே இதுதான் நிலைமை, தரம்.

* 6,7 வகுப்பும் வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. ஜாதியின் வெறியாட்டத்தை உணர்த்தியது இந்தப் பள்ளிதான். ஆசிரியர்கள் தங்களுக்குள்ளே பிராமணர்கள், அபிராமணர்கள் என்று பிரிந்துகிடந்தார்கள். காந்தியத்தை வளர்த்த பள்ளி திராவிடத்தால் பீடிக்கப்பட்டுக் கிடந்தது. இந்தப் பள்ளியில் படித்ததையே நான் மறக்க நினைக்கிறேன். நான் முதல் ரேங்க் வாங்கவில்லை என்று ஒரு பிராமண ஆசிரியர், ‘குலத்தை கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லி அடித்தார். நான் தொடர்ந்து 15 முறை (இரண்டு ஆண்டுகளில்) முதல் மதிப்பெண் பெற்றபோது, தேவையற்ற காரணங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அபிராமண ஆசிரியர் அடித்தார். இதில் தன்னை பிராமணச் சார்பு இல்லாதவராகக் காட்டிக்கொள்ளவேண்டிய பிராமண ஆசிரியர்களும் திட்டித் தீர்த்து எங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த வெறி மோதல்களுக்கு இடையேதான் நான் ஏதோ படித்தேன். இதில் உள்ள ஆசிரியர்கள் – பிராமணர்களும் அபிராமணர்களும்!

* இப்பள்ளியில் நடந்தவையெல்லாம் அராஜகமானவை. ஒரு பெண் நன்றாகப் படிக்கவில்லை என்பதற்காக ஓர் ஆசிரியர் தன் பேனாவைக் கொண்டு அந்தப் பெண்ணை உந்தித் தள்ளினார். அந்தப் பேனாவின் நுனி பட்டது, எந்நேரத்திலும் வயதுக்கு வரப்போகும் பெண்ணின் மார்பகத்தில். அன்று முழுவதும் அந்தப் பெண் அந்த பேனா மையின் புள்ளியோடு கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தாள். அதை எதைக் கொண்டு மறைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்தடுத்த வகுப்பில் ஆசிரியர்கள் அனைவரும் பார்த்தார்கள். ஒருவரும் இதைப் பற்றிப் பேசக்கூட இல்லை. ஏன்? ஜாதி பயமாக இருக்கலாமோ என்னவோ. அன்று வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேறு உடை மாற்றிக்கொண்டு அப்படி அழுதாள். அந்த ஆசிரியர் அபிராமணர்.

* யாராவதுசரியாகப் பாடம் படிக்கவில்லை என்றால் ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை மாணவிகள் மத்தியில் தூக்கிப் போடுவார். எங்கடா பட்டுச்சு என்று கேட்பார். அந்த ஆசிரியர் பிராமணர்.

* இந்தப் பள்ளியை விட்டுச் சென்றதே என் வாழ்க்கையின் விடுதலை என்று இப்போதும் நினைக்கிறேன். அடுத்து சென்றது இன்னொரு அரசு உதவி பெறும் பள்ளி. 8,9 மற்றும் 10வது படித்தேன். உண்மையான சுதந்திரத்தை இங்கே உணர்ந்தேன். ஆசிரியர்கள் பாடம் எடுக்க முயன்றார்கள். வெகுசிலர் மட்டுமே மிகச் சிறப்பாக எடுத்தார்கள். அதில் ஒரு ஆசிரியரை என் வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன். கணித ஆசிரியர். அவர் கிறித்துவர்.

* இதே பள்ளியில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர் கிறித்துவர். நல்லவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒருநாள் திடீரென்று அனைவரிடமும் இன்று நம் வகுப்பில் ம்யூஸிக் கிளாஸ் நடக்கும் என்று சொன்னார். இசைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தோம். வந்தவர்கள் பெரிய பெரிய கிட்டார், ஸ்பீக்கர் என்றெல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக ஏசுவைப் பற்றிய பாடல்களைப் பாடினார்கள். என்னால் அங்கே இருக்கவே முடியவில்லை. எனக்கு வயது 14. வகுப்பாசிரியர் என் மீது மிகவும் பாசமாக இருப்பவர். அவரிடம் சொன்னேன், இது எனக்கு சரிவராது என்று. மனதுக்குள் எனக்குப் பிடித்தமான கடவுளான ராமரையோ ஆஞ்சநேயரையோ நினைத்துக்கொள்ளச் சொன்னார். அன்று அப்படித்தான் நினைத்துக்கொண்டேன். ஆனால் இனி இப்படி என்னால் இருக்கமுடியாது என்று சொல்லிவிட்டேன். தலைமை ஆசிரியர் கிறித்துவர்! அரசு உதவி பெறு பள்ளி!!! இதுதான் லட்சணம். அங்கிருந்த பிராமண ஆசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் யாரும் இதை எதிர்த்து எதுவும் பேசவில்லை. இந்த லட்சணத்தில்தான் நம் பள்ளிகள் 30 வருடங்களுக்கு முன்பு இருந்தன.

* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல் வீணாகப் பேசிக்கொண்டு இரட்டை அர்த்த ஜோக் அடித்துக்கொண்டிருந்த ஆசிரியர் அபிராமணர்.

* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல், மாணவர்களை ஹோட்டலுக்கு அனுப்பி சாப்பாடு வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டு, தூங்கி எழுந்து சென்ற ஆசிரியர் பிராமணர்.

* பின்பு +1, +2 வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. அங்கே உருப்படியாகப் பாடம் நடத்திய ஒரே ஆசிரியர், என் வாழ்நாளில் நான் மறக்கவே கூடாத இன்னொரு ஆசிரியர், அபிராமணர். இவர் நடத்தும் தனிப்பயிற்சிக்குச் சென்றேன். என்னைப் பார்த்த உடனே அவர் கேட்ட முதல் கேள்வி, “ஏம்ல நீ இங்க வார? ஸ்கூலைவிட இங்க நல்லா சொல்லித் தருவேன்னு நினைக்கியா? அங்கயும் இங்கயும் ஒண்ணுதாம்ல. நாளைக்கு இந்தப் பக்கம் பாத்தேன், தொலைச்சிருவேம்ல” என்றார். கெஞ்சிக் கூத்தாடி ட்யூஷன் சேர்ந்தேன். உண்மையில் பள்ளிக்கும் ட்யூஷனுக்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் நடத்தியக் காட்டியவர் இந்த ஆசிரியர். நமஸ்காரம் இவருக்கு.

* முதல் நாளே இன்னொரு ஆசிரியர் சொன்னார். மெதுவாக. ரொம்பமெதுவாக. மெல்லப் பேசினார். “என்னை நம்பாதீங்க. நான் முடிஞ்சதை நடத்துவேன். நல்ல மார்க் வேணும்னா ட்யூஷன் சேர்ந்து பொழச்சிக்கோங்க. பிராக்டிகல் மார்க் எப்படியாச்சும் வாங்கித் தரேன். நான் ஹார்ட் பேஷண்ட்.” இவர் பிராமணர்.

* இன்னொரு ஆசிரியர் எங்களையே வாசிக்கச் சொல்வார். அவ்வளவுதான் பாடம். அவர் அபிராமணர்.

* இவையெல்லாம் நடந்தது 11 மற்றும் 12ம் வகுப்பில். அதாவது எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் இடத்தில் நடந்தவை. இதே போன்ற பிரச்சினைகளுடன் தான் இன்று வரை நம் அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்வியைத் தந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் நாம் கவனிக்கவேண்டியது ஒட்டுமொத்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் லட்சணத்தையும், அதற்கான காரணங்களையும், இப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் தரத்தையுமே அன்றி, அவர்களின் சாதி மற்றும் மதத்தை அல்ல.

* அரசுப் பள்ளிகளைவிட கொஞ்சம் பரவாயில்லை அரசு உதவி பெறும் பள்ளிகள். இன்றையக் கல்வியில் இந்த அளவுக்கு ஜாதி மற்றும் மதத் தாக்குதல்கள் நிகழாமல் இருக்கக் காரணம், மெட்ரிக் பள்ளிகளின் பெருக்கமே. இவை இல்லை என்றால் மாணவர்கள் இன்னும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள்.

* இப்படி எல்லாம் சொல்வதால் அரசுப் பள்ளிகளில் நல்லவர்களே இல்லை என்று நான் சொல்வதாக எண்ணவேண்டாம். மேலேயே மிக நல்ல ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன். ஆனால் சொற்பம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மனதளவில் நல்லவர்களாக இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. பாடம் நடத்துவதில் கில்லாடிகளாக இருக்கவேண்டும்.

* இன்று அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை நம்மால் கற்பனையில் கூட யோசிக்கமுடியாது. இத்தனை பிரச்சினைகளுக்கு இடையேதான் அந்த மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களின் ஒரே மீட்சி அரசுப் பள்ளிகள்தான். அங்கே எத்தனையோ ஆசிரியர்கள் அவர்களுக்கு சமூக ரீதியாக உதவுகிறார்கள். கால் நடக்க முடியாத பையனைத் தானே தூக்கிச் செல்லும் ஆசிரியர், வகுப்பில் வயதுக்கு வந்துவிட்ட பெண்ணை அழைத்துச் சென்று வேறு உடை தந்து புது ஆடை வாங்கிக் கொடுத்து, குங்குமம் மஞ்சள் கொடுத்து நெட்டி முறித்து வீடு வரை சென்று விட்டு வரும் ஆசிரியை, தன் கைக்காசைப் போட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இரவில் தங்கிப் படிப்பதற்காக உணவு தரும் ஆசிரியர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லாம் தெய்வத்துக்குச் சமம். ஆனால் இவர்கள் சரியாகப் பாடம் நடத்தவில்லை என்றால், ஒரு ஆசிரியருக்குரிய தகுதி இல்லை என்றால், இவர்களை இவர்களது நல்ல செயல்களுக்காகப் பாராட்டலாமே தவிர, ஒரு முழுமையான ஆசிரியராக ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் அரசுப் பள்ளிகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள் இப்படியான ஈரமான ஆசிரியர்களின் தொண்டுகளையே முன் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத் தேவை, இத்துடன் கூடிய சிறப்பான கல்வி. சிறப்பான கல்வி மட்டுமே ஒரு பள்ளியின் முதல் இலக்காக இருக்கவேண்டும். அதை நோக்கியே ஆசிரியர்கள் உயரவேண்டும்.

* இந்த நிலை இன்றைய நிலையில் நம் அரசுப் பள்ளியிலோ அரசு உதவி பெறும் பள்ளியிலோ இல்லை. பணம் இருந்தால் நிச்சயம் உங்கள் பிள்ளைகளை மெட்ரிகுலேஷனில் படிக்க வையுங்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புனிதர்கள் அல்ல. ஆனால் அரசுப் பள்ளிகள் அளவுக்கு மோசமானவையும் அல்ல. எனவே நிச்சயம் சேர்க்கலாம். அதேசமயம் மெட்ரிகுலேஷனில் சேர்த்துவிட்டால் பையன் நன்றாகப் படித்துவிடுவான் என்றெல்லாம் கனவு காணக்கூடாது. இது ஒரு சிக்கலான விஷயம். நாம் முயன்றால்தான் ஒரு பையனை சிறப்பாகப் படிக்க வைக்க முடியும். இது பல படிகளில் நிகழவேண்டியது. ஆசிரியர்கள் மட்டுமே ஒரு பையனை சிறப்பாக உருவாக்கிவிடமுடியாது. பல சூழல்கள் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் மெட்ரிகுலேஷனைவிடப் பல மடங்கு சிறந்தவை சி பி எஸ் இ பள்ளிகள். ஆனால் அவை உண்மையில் சிபிஎஸ்இ பள்ளிகளாக இருக்கவேண்டும். மெட்ரிக் வழிமுறையிலேயே நடத்தி பெயருக்கு சிபிஎஸ்இ என்று வைத்துக்கொள்ளும் பள்ளிகளாக இருக்கக்கூடாது. பணமும் இருந்து நல்ல பள்ளியும் இருந்தால் யோசிக்காமல் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேருங்கள். தமிழ்நாட்டுக் கூச்சல்களுக்கு மதி மயங்கி, முற்போக்காளர்களின் மூளைச் சலவையில் சிக்கி மாணவர்களின் எதிர்காலத்தையும் இந்தியாவின் எதிர்காலத்தையும் வீணாக்கிவிடாதீர்கள்.

* ஹிந்தி படிக்கும் வாய்ப்பு இருந்தால் அதை நிச்சயம் பயன்படுத்துங்கள். ஹிந்தி இல்லாவிட்டால் குடி மூழ்கிவிடாது. அதே சமயம் ஹிந்தி படிப்பதாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடமாட்டார்கள் என்பதோடு பல வகைகளில் பின்னாளில் உதவவும் கூடும். எனவே நிச்சயம் படிக்கச் செய்யுங்கள். தமிழும் ஆங்கிலமும் முதன்மை, ஹிந்தி அடுத்ததாக என்று இருக்கட்டும்.

* அரசுப் பள்ளிகளின் தரத்தை மாற்ற ஆசிரியர்களின் தரத்தை மாற்றவேண்டும். சும்மா பாடத்திட்டத்தை உயர்த்திவிட்டோம் என்று சொல்லிப் பெருமை பேசுவதில் ஒரு பொருளும் இல்லை. தமிழக அரசு இதைத்தான் எப்போதும் செய்துகொண்டுள்ளது. பாடத்திட்டத்தைப் பெருமையாகப் பேசும் முற்போக்காளர்கள் ஆசிரியர்கள் பற்றி மூச்சே விடமாட்டார்கள். இவர்களது ஒரே நோக்கம் இந்திய ரீதியிலான பாடத் திட்டத்தை முடக்குவதுதான். முதலில் இவர்களைப் புரிந்துகொள்ளுங்கள். இவர்களே இன்றைய கல்விக்கும் கல்வித் திட்டத்துக்கும் மாணவர்களுக்கும் முதல் எதிரி. இவர்களை எதிர்கொண்டால் நாம் முன்னேறிவிடலாம்.

* இறுதியாக: பி.ஆர். மகாதேவன் சொன்னதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். அதேசமயம் அவர் சொன்னது இதுவரை யாரும் சொல்லி இராத கருத்தல்ல. இவராவது நிறைய விஷயங்களை யோசித்து ஒன்றாக்கி அதிலிருந்து இன்னொன்றை வந்தடைகிறார். மற்ற சிலர், வெளிப்படையாக, இட ஒதுக்கீட்டால்தான் பள்ளிகள் மோசமாகின என்று சொல்லி இருக்கிறார்கள். இவற்றைச் சொன்னவர்கள் பாஜக அபிமானிகள் அல்ல என்பதும் (குறிப்பு: பாஜக அபிமானிகள் இப்படிச் சொன்னதே இல்லை என்று நான் சொல்லவில்லை!), திராவிட சிந்தாத்தத்தை நம்புகிறவர்கள் என்பதும்தான் யதார்த்தமாக இருக்கிறது.

Share