Tag Archive for மதுரை சரவணன்

Madurai Saravanan is no more

மதுரை சரவணன் – அஞ்சலி

புத்தகக் கண்காட்சிகளில் பங்கெடுத்தவர்களுக்குத் தெரியும் மதுரை சரவணன் என்பவரை. நல்ல கனத்த உடல். நடக்க முடியாமல் நடப்பார். ஆனால் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் வேலை செய்வார். எப்படி இவரால் இந்த உடலை வைத்துக்கொண்டு வேலை செய்ய முடிகிறது என்று ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது.

சிறந்த வாசகர். ஆழமான நினைவாற்றல். ஹிந்துத்துவ ஆதரவாளர். என்றாலும் அனைத்து அரசியல் நூல்களையும் வாசிப்பார். பழைய நூல்கள் மற்றும் பத்திரிகைகளைத் தன் வீட்டில் அடுக்கி வைத்திருந்தார். எந்தப் பழைய நூலும் இவரிடம் கிடைக்கும். ஒரு நூலின் பெயரைச் சொன்னால் அதன் ஆசிரியர் பெயர், அதன் பதிப்பகம் என்று எல்லாவற்றையும் சொல்வார். அதை யார் மறு பதிப்பு போட்டிருக்கிறார்கள் என்றும் சொல்வார்.

புத்தகக் கண்காட்சியில் எந்த வாசகராவது எந்த பதிப்பகத்திலாவது ஏதாவது ஒரு புத்தகத்தைத் தேடுவது இவர் கண்ணில் பட்டுவிட்டால் போதும், உடனே அங்கே ஆஜராகி அந்தப் புத்தகம் தொடர்பான அத்தனை தகவல்களையும் கொட்டிவிடுவார்.

பல முன்னணி பதிப்பகங்கள் இவரிடம் பழைய நூல்களைப் பெற்றே புதிய பதிப்புகளைக் கொண்டு வந்தன. கிழக்கு பதிப்பகம் சுஜாதாவின் நூல்களை வெளியிட்ட போது பல நூல்களை இவர் கொடுத்தார். அதற்குப் பதிலாக கிழக்கு வெளியிட்ட பல அரசியல் நூல்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து நூல்களாவது எங்களிடம் இருந்து வாங்கிக் கொள்வார். ஒரே மாதத்தில் அவற்றைப் படித்தும் முடித்துவிடுவார்.

புத்தகக் கண்காட்சியில் பங்கெடுக்க வேறு ஊர்களுக்குப் பயணமாகும்போது, வயதான, கண்பார்வைக் குறைபாடு உள்ள தன் அம்மாவையும் அழைத்து வருவார். இங்கே சங்க அமைப்பு ஆதரவு பெற்ற இடங்களில் தங்க வைப்பார். இவர் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வார். அம்மாவின் உடல்நிலை ஏற்றுக்கொள்ளாது என்ற நிலைவந்தபோது, அம்மாவை மதுரையிலேயே தெரிந்தவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு இவர் மட்டும் வருவார்.

இவருக்கு சில பெரிய வேட்டிகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அன்புடன் பெற்றுக்கொண்டார். தடம் வெளியிட்ட அனைத்துப் புத்தகங்களையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். வலம் இதழை வாசித்துவிட்டு அடிக்கடி ஃபோனில் பேசுவார்.

பேச ஆரம்பித்தால் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் பேசுவார். சரவணன், வேலையா இருக்கேன் என்று சொன்னால், சரி அப்புறம் கூப்பிடறேன் என்று சொல்லிவிட்டு வைத்துவிடுவார்.

சுவாசம் பதிப்பகம் ஆரம்பித்தவுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது இவரை இவரது வீட்டிலேயே சென்று சந்தித்தேன். குறுகலான சந்தில் ஒரு வீடு. அதுவும் மூன்றாவது மாடிக்கு மேலே உள்ள தட்டோட்டியில் ஒரு சின்ன இடம். அங்கே சுற்றிலும் புத்தகங்கள். பக்கத்தில் ஒரு சின்ன சந்து போன்ற வீட்டில் பழைய புத்தகங்களும் பத்திரிகைகளும். மழை வந்தால் தாங்காதே என்று கேட்டேன். கோணி போட்டு மூடி வைப்பேன் என்றார். எப்படி தினம் தினம் நாலு மாடி ஏர்றீங்க என்று கேட்டபோது, இந்த வாடகையே எனக்கு தர முடியலை என்றார்.

மதுரையில் நான் அவரைப் பார்த்தபோது அவருக்கு உடல்நிலையில் பல பிரச்சினைகள் இருந்தன. அந்த வருடப் புத்தகக் கண்காட்சிக்கு அவர் வந்திருக்கவில்லை. அதற்குப் பிறகும் வரவே இல்லை. அவரது வீட்டுக்கு நாங்கள் வந்திருப்பது கூட தெரியாமல் அவரது அம்மா துவைத்துக்கொண்டிருந்தார்.

மதுரை சரவணனை 2017 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒரு பேட்டி எடுத்து அதை அப்போது யூ டியூபில் வெளியிட்டேன். இன்று தேடிப் பார்த்தால் அந்தப் பேட்டி நீக்கப்பட்டது என்று காண்பிக்கிறது.

மதுரை சரவணன் பல பதிப்பகங்களுக்கு உதவி செய்திருக்கிறார். பதிப்பகங்களும் இவருக்கு உதவி இருக்கின்றன. இன்றுதான் அறிந்தேன், மதுரை சரவணன் இரண்டு நாள்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார் என. நல்ல வாசகர் ஒருவரை நாம் இழந்திருக்கிறோம். சரவணன் ஆன்மா சத்கதி அடையட்டும். ஓம் ஷாந்தி.

Share