"ஹலோ ஃபயர் பார் புக்ஸா?”
“இல்லைங்க, டயல் ஃபார் புக்ஸ்.”
“ஓ, ஸாரிங்க. தப்பா கூப்பிட்டுட்டேன்.”
“சொல்லுங்க சார், என்ன புத்தகம் வேணும்.”
“இல்லை, அவசரமா ஒரு புத்தகத்தை எரிக்கணும். அதுக்கு ஒரு புத்தகம் வேணும்.”
“சார், நாங்க புத்தகத்தை விப்போம். அவ்ளோதான். எரிக்கணும்னா…”
“எரிக்கணும்னா எரிக்கணும். அவ்ளோதான். சரி, சட்டுன்னு ஒரு புத்தகம் சொல்லுங்க.”
“நீங்கதான் என்ன புத்தகம்னு கேக்கணும். எங்ககிட்ட 20,000க்கும் மேல புத்தகம் இருக்கு. சட்டுன்னு சொல்லுங்கன்னா என்ன சொல்றது?”
“இருபதினாயிரத்தையும் எரிக்க முடியாது. வசதியில்லை. ஒண்ணு மட்டும் சொல்லுங்க.”
“சார், என்ன புத்தகம் வேணும்னு சொல்லுங்க. நிறைய கஸ்டமர்ஸ் லைன்ல இருக்காங்க.”
“அவ்ளோ பேர் எரிக்க ஆரம்பிச்சிட்டாங்களா?”
“ஹலோ. உங்களுக்கு வேணும்ன்ற புத்தகத்தை சொல்லுங்க.”
“சரி, இப்ப பரபரப்பா நிறைய எழுதுற ஆள் பேர் யாராவது சொல்லுங்க.”
“ஜெயமோகன். அவர் புத்தகம் வேணுமா?”
“ஆமா, அவரையே எரிப்போம்.”
“சார், என்ன சொல்றீங்க.”
“அவர் புத்தகத்தைத்தான் சொன்னேன். எதாவது புத்தகம் 10 காப்பி அனுப்புங்க.”
“சார், நாங்க விக்கிறது மட்டும்தான் செய்யறோம். எரிக்கிறதெல்லாம் சரியா வராது.”
“அதான் அதை நான் பாத்துக்கறேன். நீங்க பத்து காப்பி அனுப்புங்க.”
“வண்ணக்கடல்னு ஒரு புத்தகம். ஒரு காப்பி 1500 ரூ. பத்து காப்பி 15,0000 ரூபாய். தபால் செலவு கிடையாது. சர் சார்ஜ் உண்டு…”
“என்னது பதினஞ்சாயிரமா? ஏன் இருபது ரூபா முப்பது ரூபாய்க்கெல்லாம் எழுதுறதில்லையா அவரு?”
“இருக்கு சார். உலோகம்னு இருக்கு. 50 ரூபாய்தான். அதுல பத்து காப்பி?”
“உலோகம்ன்றீங்க. எரிக்க முடியுமா?”
“சார், நாங்க எரிக்க அனுப்பலை. நான் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேன்.”
“நானும் திரும்ப திரும்ப சொன்னேனே.”
“சார் இது சரிப்பட்டு வராது.”
“என்ன சரிப்பட்டு வராது? சொல்லாம வாங்கி எரிச்சா நல்லவன். சொல்லிட்டு செஞ்சா கெட்டவனா?”
“நீங்க என்னமோ செய்ங்க, சொல்லாதீங்கன்னு சொல்றேன்.”
“சரி விடுங்க. பத்து காப்பி, புத்தகம் பேர் என்ன சொன்னீங்க? இரும்பா? செம்பா? அதை அனுப்புங்க.”
“உலோகம் சார்…”
“ஏன் இரும்பு உலோகம் இல்லையா?”
“அனுப்பறேன் சார். போஸ்ட்மேன் கிட்ட பணம் கொடுத்துட்டு புத்தகம் வாங்கிக்கோங்க.”
“ஓ போஸ்ட்மேன் வேற வருவாரா? உடனே போய்டுவார்ல? இல்லை அவர் முன்னாடியே எரிக்கலாமா?”
“சார், உங்க ஆர்டரை எடுத்துக்கறோம். உங்கள் வீடு தேடி புத்தகம் வரும்.”
“போஸ்ட்மேன் எத்தனை மணிக்கு வருவார்னு சரியா சொல்லுங்க.”
“அது சொல்லமுடியாது சார். எப்ப வேணா வருவார்.”
“என்னங்க பொறுப்பே இல்லாம சொல்றீங்க. போட்டோகிராபர் எல்லாம் அரேஞ்ச் பண்ணனும், நிறைய வேலை இருக்கு. சரியா எப்ப வருவார்னு சொல்லுங்க.”
“அதை சொல்லமுடியாது சார். அது உங்க வேலை. உங்க ஆர்டருக்கு நன்றி. புத்தகம் வீடு தேடி வரும்.”
“வரலைன்னா நான் அங்க தேடி வருவேன். சரி, அந்த புத்தகம் எழுதுனவர் பேர் என்ன்? நடிகர் மோகனா?”
“சார், ஜெயமோகன்.”
“கூட வேற யார் புத்தகம் இருந்தாலும் அனுப்புங்க.”
“நீங்கதான் சொல்லணும் யார் புத்தகம் வேணும்னு.”
“நின்னு எரியணும். யார் இதா இருந்தா என்ன?”
“ஜெயமோகன் புத்தகத்தை ஏற்கெனவே எரிச்சிருக்காங்க. நின்னு எரிஞ்சதாத்தான் பேச்சு.”
“என்னது ஏற்கெனவே எரிச்சுருக்காங்களா? நல்லவேளை சொன்னீங்க. அப்ப அவர் வேண்டாம். வேற சொல்லுங்க. நேரமாச்சு. நீங்க புத்தகம் எழுதிருந்தா அதைக்கூட அனுப்பலாம்.”
“சார்… சார்…”
“ஏன் திடீர்னு ரகசியமா பேசறீங்க?”
“இல்லை, நானும் ஒரு புத்தகம் எழுதிருக்கேன். பத்து நூறு காப்பி விக்காம அப்படியே இருக்கு.”
“மொதல்லயே சொல்லிருக்கலாம்ல. சரி விலை என்ன? 20 ரூபாய்ல இருக்கா?”
“புத்தக விலை 90 ரூபாய் சார். பத்து காப்பி வாங்கினா நான் 10% டிஸ்கவுண்ட் தர்றேன். யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.”
“நான் ஏன் சொல்லப்போறேன்?”
“உங்க அட்ரஸ் சொல்லுங்க, இப்பவே அனுப்பறேன்.”
“உங்க புத்தகம் என்னத்த பத்தினது?”
“கவிதை சார்…”
“கவிதையா? அப்ப வேண்டாம். எரிக்கது கஷ்டம்.”
“என்ன சார் சொல்றீங்க. 20% டிஸ்கவுண்ட்கூட தர்றேன் சார்.”
“அடுத்த தடவை பார்க்கலாம். வேற யாராவது இருந்தா சொல்லுங்க.”
“இப்படி சட்டுன்னு கேட்டா?… பா.ராகவன்னு ஒருத்தர்… இல்லை, மருதன்… வேணாம் சொக்கன். ஹ்ம்ம்ம் இருங்க, அரவிந்தன் நீலகண்டன்னு ஒருத்தர்… இல்லை முகில்… இருங்க சார்… மகாதேவன்னு ஒருத்தர்… நிறைய இருக்கா சட்டுன்னு குழப்புது சார், சாரி.”
“அப்பம் ஒண்ணு செய்ங்க. ஒரு லிஸ்ட் எடுத்து எனக்கு அனுப்புங்க. ஒவ்வொண்ணா எரிக்கேன். அப்பம் இப்பம் போனை வைக்கேன்.”
“சார்.. ஹலோ… சார்… சார்… போனை வெச்சிட்டீங்களா?”