Tag Archive for பாலு மகேந்திரா

தலைமுறைகள் – திரைப்பட விமர்சனம்

தன்னகங்காரத்திலும் வறட்டுப் பிடிவாதத்திலும் ஊறிக்கிடக்கும் ஒரு முதியவர் தன் பேரனின் வரவால் தன்னை அறிந்துகொள்ளும் கதையை பாலுமகேந்திரா தலைமுறைகளில் காட்டியிருக்கிறார். பாலுமகேந்திராவின் படங்களுக்கே உரித்தான, நிலைகொள்ளும் கண்கள் காணும் காட்சிகளோடு அவரது கேமரா வெகு இயல்பாக உணர்ச்சிகளைத் திரையில் கொண்டுவருகிறது.

முதியவராக பாலுமகேந்திரா நடித்திருக்கிறார். காவி வேட்டியுடன் நடுங்கும் குரலுடன் தடுமாறும் நடையுடன் உடைந்த குரலுடன் திரைமுழுக்க அவரது உடல்மொழி வியாபித்துக் கிடக்கிறது. தன் மகனிடம் காண்பிக்கும் முரட்டுப் பிடிவாதத்திலும் சரி, தன் பேரனை முதன் முதலில் பார்க்கும்போது தனது இறுக்கங்களெல்லாம் உடைந்து தளர்ந்து அழும்போதிலும் சரி, அவரது அலட்டலற்ற இயற்கையான நடிப்பு அசர வைக்கிறது.

படத்தில் பேரனாக வரும் சிறுவனும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் தேவை உணர்ந்து, மிகை நடிப்பில்லாமல் நடித்திருப்பது பெரிய பலம்.

இளையராஜாவின் இசை எந்த ஒரு இடத்திலும் உறுத்தலாக இல்லை. பெரும்பாலான மௌனமான காட்சிகளுக்கிடையே பின்னணியில் உறுத்தாத இசை என இளையராஜாவின் இசை படத்தோடு ஒன்றி வெளிப்படுகிறது.

இத்தனை இருந்தும் படத்தில் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதுபோலவே தோன்றுகிறது. படம் முழுக்க ஒரு சரடாக இல்லாமல், சிறிய சிறிய காட்சிகளாக நகர்வது போன்ற ஒரு தோற்றமே அதன் காரணம். சிறிய சிறிய காட்சிகளின் வழியாக, நாம் தாத்தா பேரனுக்கு இடையே நிகழும் உணர்வுப் பரிமாற்றத்தைப் புரிந்துகொள்கிறோம் என்றாலும், பல காட்சிகள் க்ளிஷேத்தனமாக உள்ளது. கதையில் புதுமை இல்லை என்னும்போது காட்சிகளிலாவது புதுமை வேண்டும். அது இல்லை.

தாத்தா தனது பாரம்பரியத்தைத் தன் பேரன்மீது செலுத்த முயல்வது இயல்பு என்றால், ஒரு பாதிரியார் ஒரே ஒரு வார்த்தை சொன்னதும் அதைக் கைவிடுவதும், ஏசு படத்தைத் தன் பூஜையறையில் மாட்டி வைப்பதும் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாகத் தெரிகின்றன. பழமைவாதத்துடன் ஒரு கதாபத்திரம் கடைசி வரையில் இருப்பது இயல்புக்கு எதிரான ஒன்றல்ல. உண்மையில் அதுவே இயல்பு. ஆனால் இந்தக் காட்சிகளின் மூலம் பாலு மகேந்திரா ஒரு செய்தியைச் சொல்ல முயன்றிருக்கிறார். திரைப்படத்தில் செய்தி சொல்வது என்பதே யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்வதுதான். படமும் இந்தப் புள்ளியில் யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்கிறது.

ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக இருந்த ஒருவருக்கு வாட் இஸ் யுவர் நேம் என்றுகூடக் கேட்கத் தெரியாது என்பது ஏற்கும்படியாக இல்லை. 12 வயதுள்ள சென்னையில் வளரும் ஒரு பையனுக்கு தமிழ் தெரியாது என்பதும், டாக்டர் பெண்ணுக்கு நதி என்றால் என்னவென்று தெரியாது என்பதும் நம்பும்படியாக இல்லை. கதாபாத்திரத்தை நிறுவ இத்தனை கருப்பு-வெள்ளையாக்க வேண்டியதில்லை.

நறுக்குத் தெரித்தாற்போல் வந்துவிழும் வசனங்கள் பெரிய பலம். பல காட்சிகளில் இந்த வசனங்களே படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம், வசனம் மிக யதார்த்தமாக, நாம் யாரும் பேசும் மொழியில் அதே வார்த்தைகளோடு வெளிப்படுகிறது என்பதுதான்.

தமிழில் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து வரவேண்டும். அந்த வகையில் இது முக்கியமான படம். பாலுமகேந்திராவின் சமீபத்திய முந்தைய திரைப்படங்களைவிட இது சிறப்பாக உள்ளது என்பதும் உண்மை. சிறந்த நடிகருக்கான விருது பாலுமகேந்திராவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

நன்றி: ஆழம், ஜனவரி 2014

Share