Tag Archive for நிர்மலா சீதாராமன்

ஒரு நேர்காணல், ஒரு பேச்சு

ஒரு நேர்காணல், ஒரு பேச்சு

* நிர்மலா சீதாராமன் – கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளை எதிர்கொண்ட விதம் மிக நன்றாக இருந்தது. எல்லாக் கேள்விகளுக்கும் முடிந்த அளவு தமிழில் பதில் சொன்னார். அவரது தமிழ் கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருந்தாலும், கருத்துகள் சரியாகச் சென்று சேர்வதில் எக்குழப்பமும் இருக்கவில்லை. மிகத் தீர்க்கமாகவே பதில் சொன்னார். பாண்டே குறுக்கே குறுக்கே கேட்கும்போதெல்லாம் பாண்டேவைக் கண்டிக்கத் தவறவில்லை. ‘நீங்க ஒவ்வொண்ணா சொல்லிக்கிட்டே இருப்பீங்க, அதுக்கு ஆம்/இல்லைனு பதில் சொல்லிக்கிட்டே இருக்கணுமா?’ என்ற பதிலில் பாண்டேவே கொஞ்சம் அடக்கித்தான் வாசித்தார் என்று தோன்றியது. சில கேள்விகளுக்கு, பாண்டேவைக் குறை சொல்லும் விதமாக பதில் சொன்னார் நிர்மலா சீதாராமன். ராகுலின் டிவீட் மற்றும் ஓபிஎஸ்ஸின் மோதி பற்றிய கருத்து இரண்டையும் பாண்டே கோட் செய்ததை நிர்மலா சீதாராமன் புரிந்துகொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் பாண்டேவையே குறை சொன்னார். ஒரு கட்டத்தில் பாண்டே அப்படியே அதை விட்டுவிட்டார். கேள்வி கேட்கும் ஊடகத்தினரை இப்படி ஒரு கட்டத்துக்குள் இருக்கச் செய்வது தேவைதான் என்றாலும், பாண்டேவுக்கும் இது நிகழ்வது கொஞ்சம் பாவமாகத்தான் உள்ளது. ஏனென்றால், ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என எல்லாரையும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் கேள்வி கேட்பது பாண்டே மட்டுமே. மற்ற ஊடகத்தினர் ஹிந்துத்துவர்களுக்கு எதிராக மட்டுமே பொங்குவார்கள். ஆனால் அவர்கள் பட்டியலில் பாண்டேவையும் நினைத்துக்கொண்டுவிட்டார் நிர்மலா சீதாராமன் என நினைக்கிறேன். இதை மட்டும் நிர்மலா சீதாராமன் தவிர்த்திருந்திருக்கலாம்.

நிர்மலா சீதாராமன் எல்லாப் பேட்டிகளிலுமே மிகக் கறாராகப் பேசுகிறார். உள்ளத்தில் உண்மை இல்லாமல் போனால் அது வெற்று அகங்காரமாக ஆகிவிடும். நூலிழையில் நடமாடு வித்தை இது. ஆனால் நிர்மலா சீதாராமன் பேசும்போது அது தன்னம்பிக்கையின், தன் நேர்மையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இந்தப் பேட்டியிலும் அப்படியே. எந்தக் கேள்விக்கும் தயங்கவோ தத்தளிக்கவோ இல்லை. தமிழ்நாட்டின் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக வருவார் என நினைத்தேன். ஆனால் அந்தப் பேச்சு கொஞ்சம் தீவிரமடையும் நேரத்தில் சட்டென சுதாரித்துக்கொண்ட மோதி அவரை பாதுகாப்பு அமைச்சராக்கிவிட்டார்! நிர்மலா சீதாராமன் இன்னும் உயரத்தைத் தொடுவார் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

* புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியின் பேச்சு, பூணூல் அறுப்புக்கு எதிராக மயிலாப்பூரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசியது. திராவிடக் கட்சிகளின், திராவிடக் கொள்கையின் தோல்விகளைப் பற்றியும், பூணூல் அறுப்பு என்பது தரும் வலியை ஒத்த வேதனையை புதிய தமிழகம் கட்சி பல பத்தாண்டுகளாக அனுபவித்து வருகிறது என்பதால் இதைப் புரிந்துகொள்ளமுடிகிறது என்பது பற்றியும் பேசினார். அவரது தனிப்பட்ட வாழ்வில் பிராமணர்கள் செய்த உதவிகளைப் பட்டியலிட்டார். ஒரு சமூகமாக பிராமணர்கள் செய்ததைவிட பிற சமூகங்களே தலித்துகளுக்கு அதிகம் பிரச்சினைகளைச் செய்திருக்கிறார்கள் என்றும், ஆனால் திராவிடக் கட்சிகள் அச்சமூகங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்றும் சொன்னார்.

இவையெல்லாம் காலம்காலமாகச் சொல்லப்படுபவைதான். திராவிடத் தரப்பு இதை எளிமையாக எதிர்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். கிருஷ்ணசாமி எத்தனை தூரம் நம்பகத்தனைக்கு உரியவர் என்பது இன்னொரு விஷயம். ஆனால், இவற்றையெல்லாம் மீறி இச்சூழ்நிலையில் கிருஷ்ணசாமி பேசி இருப்பது மிகப்பெரிய விஷயம். நிச்சயம் பாராட்டப்படவேண்டியது இது. பூணூல் அறுப்புக்கு ஹிந்துத்துவ இயக்கங்கள் தெருவுக்கு வந்து போராடியிருக்கவேண்டும். பெரிய அளவில் அதை எதிர்த்திருக்கவேண்டும். ஆனால் அது எங்கே பிராமண ஆதரவுக்கட்சி என்ற முத்திரைக்கு மீண்டும் கொண்டு போய்விடுமோ என்று அஞ்சினார்களோ என்னவோ, கண்டித்ததோடு நிறுத்திக்கொண்டார்கள். அந்நிலையில் கிருஷ்ணசாமி இத்தனை தூரம் எதிர்த்திருப்பது மிக முக்கியமானது. மற்ற கட்சிகளெல்லாம் வாய்மூடிக் கிடக்கையில் இவர் மட்டுமே இதனை நியாயமாக எதிர்கொண்டிருக்கிறார். பெரிய விஷயம் இது. கிருஷ்ணசாமியின் பேச்சு சுமாரானதுதான் என்றாலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு நன்றி.

Share