Tag Archive for தொலைகாட்சி

மாலைமுரசு விவாதம் – பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானி உள்ளிட்டோடு விடுவிப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டது தொடர்பாக மாலைமுரசு டிவியி நடந்த விவாதத்தைப் பார்த்தேன். நியூஸ் 18ல் இருந்த செந்தில் இப்போது இங்கே இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். செந்திலும் அரசியல் சார்பு அனைவரும் அறிந்ததே. அந்த விவாதத்தில் பாஜக சார்பாக இரண்டு பேர் பேசினார்கள். கனிமொழி பாஜக சார்பாக. இன்னொருவர் ஸ்ரீராம் பார்த்தசாரதி. செந்தில் கனிமொழியைப் பேசவே விடவில்லை. மீண்டும் மீண்டும் அரசியல் சார்பான கேள்விகளைக் கேட்டு அவரைப் பேசவிடாமல் தடுமாற வைத்தார். கனிமொழியும் அரசியல் சரியாக பேசவேண்டிய நிர்பந்தம் இருந்ததால் மிகவுமே தடுமாறினார். அவர் சொல்ல வந்த சில சரியான கருத்துகளையும் செந்தில் பேசவிடவில்லை. இரண்டாம் சுற்றில் இரண்டு நிமிடமாவது பேச விடுங்கள் என்று கனிமொழி கேட்டும் கூட, செந்திலால் அவரைப் பேசவிட முடியவில்லை. மீண்டும் மீண்டும் குறுக்கிட்டுப் பேசினார்.

ஆனால் ஸ்ரீராம் மிகச் சரியாகப் பேசினார். எந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது என்பதை மட்டும் சரியாக எடுத்துக்கொண்டு பேசினார். மற்றவர்கள் சட்ட ரீதியாகச் சொன்ன தவறை எல்லாம் குறிப்பிட்டுச் சொன்னார். செந்தில் இவரிடம் இடைமறித்து முதலில் பேச முயன்றார். ஆனால் ஸ்ரீராமின் பொட்டு தெறித்தாற் போன்ற பதிலில், நீங்கள் சொல்வது சரிதான் என்று விட்டுவிட்டார். ஆனால் இவருக்கும் நேரமே செந்தில் தரவில்லை.

செந்தில் ஒரு நெறியாளராக இருந்தாலும், ஹிந்து எதிர்ப்புக் குழுவின் ஒரு பேச்சாளர் போலவே பேசினார். பாபர் மசூதி தானாக இடிந்துகொண்டதோ என்பதை கிண்டலும் கேலியுமாகச் சொன்னார். கனிமொழியை கத்தி முனையில் மிரட்டுவது போல மிரட்டி தான் நினைப்பதைச் சொல்ல வைக்கப் பார்த்தார். அதே நேரம் வன்னி அரசுவோ தமிழ் மணியோ எதாவது தவறாகப் பேசினாலும் அதைக் கண்டுகொள்ளாமல் போனார். அதை ஸ்ரீராம் எடுத்துச் சொல்லும்போதுதான் ஒப்புக்கொண்டார். இதுவே பாஜக ஆதரவாளர்கள் தவறாகப் பேசினால் உடனே அதைப் பிடித்துக்கொண்டு மடக்கு மடக்கு என்று மடக்க மட்டும் செந்தில் யோசிப்பதே இல்லை. எங்கேயும் தெய்வம் இருந்தே தீரும் என்பதைப் போல ஸ்ரீராமின் பேச்சு மிகச் சரியாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ஸ்ரீராமால் ஐந்து நிமிடம் கூடப் பேச முடியவில்லை. கனிமொழி வரலாற்றைச் சொல்லப் போனால், அதெல்லாம் வேண்டாம், இந்த விஷயத்தை மட்டும் பேசுங்கள் என்று சொன்ன செந்தில், மற்றவர்கள் வரலாற்றை இஷ்டத்துக்குப் பேசும்போது அதை தன் சார்பாக எடுத்தும் கொடுத்தார். எல்லாம் போகட்டும், ஆனால் பாஜக தரப்பின் வாதங்களை வைக்கும்போது அதை எதிர்த்து செந்தில் சொன்ன விதம், அந்தக் கிண்டல், மிகவும் ஆபாசமாக இருந்தது. ஒரு நெறியாளராக இது ரொம்ப அசிங்கம். அதை ஸ்ரீராம் சரியாகச் சுட்டிக் காட்டினார். அப்போது செந்தில் அதை தான் சீரியஸாகச் சொன்னதாக பல்டி அடிக்கவும் தயங்கவில்லை.

தமிழ் தொலைகாட்சிகளின் விவாதங்களைப் போன்ற தண்டம் எதுவும் இல்லை. யாரையும் பேசவிடக்கூடாது என்பது மட்டுமே முதல் குறிக்கோள். அதிலும் அவர்கள் ஹிந்துத்துவத் தரப்பாக இருந்தால் அசிங்கப்படுத்த வேண்டும் என்ற முடிவோடுதான் விவாதங்கள் ஒருங்கிணைப்படுகின்றன. அதில் இப்போது மாலைமுரசு-வும் சேர்ந்துகொண்டிருக்கிறது போல.

Share