தேவாஆஆஆ
நேற்று ஒரு வேலையாக கேப் ஏறி அமர்ந்ததுமே என்னவோ கலவரமாக இருந்தது. காரணம் உள்ளே ஒலித்தது தேவாவின் ஒரு பாடல். தேவா எனக்கு அத்தனை பிடித்தமான இசையமைப்பாளர் அல்ல. அவரது 20 – 30 பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும் பல பாடல்கள் ஏனோ எரிச்சலைத்தான் வரவழைத்திருக்கின்றன. நேற்று கேப்-இல் ஒலிபரப்பானது தேவாவின் ஹிட் பாடல்கள் அல்ல. படம் வந்தபோது அவ்வப்போது அங்கங்கே கேட்டு தேவாவே மறந்து விட்ட பாடல்கள். தொடர்ந்து அதே போன்ற பாடல்கள் வரிசையாக வந்தன. இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், எம் எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன் தவிர யார் இசை அமைத்த பாடல்களாக இருந்தாலும் தொடர்ந்து ஐந்தாறு பாடல்கள் கேட்டாலே எனக்கு பிபி ஏறத் தொடங்கும். நேற்று நடந்தது வன்கொடுமை. என்னென்ன பாடல்கள் என்று கூட எனக்கு இப்போது சொல்ல வரவில்லை. ஆனால் அந்தப் பாடல்களை எல்லாம் நான் கல்லூரிக்கு சைக்கிளில் போகும் போதோ அல்லது ஏதோ ஒரு டீக்கடையிலோ நிச்சயம் கட்டியிருக்கிறேன். டிரைவரிடம் பாடலை மாற்றச் சொல்லவும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது. சரி போய்த் தொலையட்டும் என்று அமைதியாக விட்டுவிட்டேன். கிட்டத்தட்ட 50 நிமிடப் பயணம். 11 பாடல்கள். காது புண்ணாகிப் போனது.

அவர் என்னை இறக்கி விடவும் அங்கே இருந்த ஒரு டீக்கடையின் முன்பாக இருந்த பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து, அந்த மிதமான மழைச்சாரலின் நடுவே, எனது மொபைலில் ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வரும் ராம நாமம் ஒரு வேதமே பாடலைக் கேட்டேன். கிட்டத்தட்ட கண்ணீர் வந்துவிட்டது. அதிலும் அந்த யேசுதாஸின் குரலும் இளையராஜாவின் இசையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அது ஒர் அனுபவம். அடுத்ததாக அழைக்கிறான் மாதவன் கேட்டேன். டீக்கடை மறந்து, டீக்கடையின் முன்னால் நின்று 5 இளைஞர்களும் 5 யுவதிகளும் சிறிய கேக்கை வாங்கி என்னவோ பேசி அர்த்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த காட்சிகள் மறைந்து, எனக்குள்ளே ஒரு பிருந்தாவனம் தோன்றி மறைந்தது. மனம் கொஞ்சம் இலகுவானது.
ஒரு வேலையை முடித்துவிட்டு மீண்டும் கேப் பிடித்தேன் மீண்டும் தேவா. இப்படி ஒரு நிலைமை எனக்கு இதுவரை
வந்ததில்லை இந்த முறை தேவாவின் ஹிட் பாடல்கள். அதனால் கொஞ்சம் தாங்கிக் கொள்ள முடிந்தது. மீண்டும் 50 நிமிடம். மீண்டும் பதினொரு பாடல்கள்.
நேற்று எனக்கும் தேவாவுக்கும் இப்படி ஒரு ஏழாம் பொருத்தம் அமைந்திருக்க வேண்டாம்.


