Tag Archive for திரௌபதி

திரௌபதி – அவர்கள் எறிந்த கல்

இன்று தமிழில் வரும் பெரும்பாலான திரைப்படங்கள் முற்போக்கு என்ற பெயரில் வரும் போலி முற்போக்குத் திரைப்படங்களே. ஹிந்து மதத்தைக் கிண்டல் செய்வது, ஹிந்து வெறுப்பைக் கக்குவது, இந்தியக் காழ்ப்பைக் கொட்டுவது, பாஜகவைக் குறை சொல்வது – அரசியல் மற்றும் சாதி பேசும் அத்தனை தமிழ்த் திரைப்படங்களையும் இந்த நான்கிற்குள்  அடைத்துவிடலாம். இப்படிப்பட்ட படங்கள் வரும்போது கொண்டாடி மகிழ்ந்து போகும் போலிகளைக் கதற வைக்கும் ஒரு படமாக வந்திருக்கிறது திரௌபதி. ஹிந்து மத நிந்தனைகளைப் பயன்படுத்தி நியாயமே இல்லாமல் பேசிய திரைப்படங்களைக் குற்றம் சொன்னவர்களுக்கு மட்டுமே திரௌபதியைக் குற்றம் சொல்லத் தகுதி இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக முற்போக்கு முகமூடிகளில் அப்படி யாரும் இருக்கவில்லை. எனவே இந்தப் படத்தைக் குறை சொல்லும் தகுதியும் ஹிந்துத்துவர்களுக்கு மட்டுமே உண்டு.

தலித்துகளுக்கு ஆதரவான திரைப்படம் வரும்போது அதிலிருக்கும் சமநிலையின்மையைப் பற்றி யாரும் இங்கே பேச மாட்டார்கள். பரியேறும் பெருமாள் மிக முக்கியமான திரைப்படம். திரைப்படம் என்கிற வகையிலும் சரி, அது படமாக்கப்பட்ட விதத்திலும் சரி, அது சொல்ல வந்த வகையிலும் சரி, அது நிச்சயம் தமிழின் முக்கியமான திரைப்படம்தான். அந்தப் படத்தில் முற்பட்ட சாதியினர் அனைவருமே கொடூரர்களாகக் காட்டப்படவில்லை. சாதி வெறி இருந்தாலும் கூட, அவர்களுக்குள்ளும் ஒரு மனிதாபிமானம் இருப்பதாகப் பெண்ணின் தந்தையின் பாத்திரம் காட்டப்பட்டது. அதாவது முற்பட்ட சாதியினரில் எல்லா வகை மனிதர்களும் உண்டு! ஆனால் தலித்துகளில்? அந்தப் படத்தில் தலித்துகள் அனைவருமே நல்லவர்கள். இப்படி ஒரு சமநிலையின்மை அந்தப் படத்தில் இருக்கிறது. ஏன் அந்தப் படம் தலித்துகளிலும் சாதி வெறியர்கள் உட்பட பல்வேறு வகையான மனிதர்கள் உண்டு என்பதைக் காட்டவில்லை? ஒரு பிரசாரப் படம் இதைக் கணக்கில் கொள்ள முடியாது என்பதே பதில். அதே சமயம் பரியேறும் பெருமாள் வெறும் பிரசாரப் படமாகத் தேங்கவில்லை. அதையும் தாண்டிச் சென்றது. அப்படியானால் தலித்துகளில் உள்ள வேறுவகைபட்ட மனிதர்களையும் அது கொஞ்சம் பேசி இருக்கவேண்டும். ஆனால் பேசவில்லை. ஒரு தலித் படமும் மற்ற சாதிப் படங்களும் ஒன்றல்ல என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஆயிரம் படங்களில் ஒரு படம் கூடவே வேறு விதமாகப் பேசாது?

பரியேறும் பெருமாள் என்றில்லை, தமிழில் வரும் அனைத்து முற்போக்குத் திரைப்படங்களும் இப்படித்தான். பல படங்களைச் சொல்லலாம் தற்போது வெளியான கன்னிமாடம் வரை. முற்பட்ட சாதியினரின் சாதி வெறியை சரியாகப் படம் பிடிக்கும் ஒரு திரைப்படம், தான் பரிந்து பேசும் சாதியினரைப் பற்றிய ஒரு சிறிய விமர்சனத்தைக் கூட வைப்பதில்லை. ஒரு பிரசாரத் திரைப்படம் பல்வேறு நுணுக்கங்களுக்குள் சிக்கினால் தாங்கள் சொல்ல வரும் கருத்து மக்களைச் சென்றடைவதில் குழப்பம் இருக்கலாம் என்று இயக்குநர்கள் சொல்லக் கூடும். அது நியாயம்தான். ஒரு படத்துக்குள்ளும் சமநிலை இல்லை சரி, தமிழில் வெளியாகும் அத்தனை சாதிப் படங்களுக்குள்ளும் சமநிலை இல்லையே ஏன் என்பதற்கு அவர்களால் பதில் சொல்லவே முடியாது. ஒரே ஒரு பதில் நாம் சொல்வதாக இருந்தால், ஹிந்து மத வெறுப்பு மட்டுமே. உண்மையான தலித் திரைப்படத்தின் சாத்தியங்களைக் கெடுத்ததோடு அல்லாமல், அதற்கான முன்னெடுப்புகளையும் தங்கள் அரசியல் சார்பாலும் இந்திய-ஹிந்து மத வெறுப்பாலும் மந்தப் படுத்தி வைத்திருக்கிறது தமிழ் சினிமா.

ஒரு தலித் பிரசாரத் திரைப்படத்துக்கான அத்தனை சால்ஜாப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களையே தாக்கும் ஆயுதமாக உருவாகி இருக்கிறது திரௌபதி. அவர்கள் எறிந்த கற்களையே எடுத்து அவர்களை நோக்கி எறிந்திருக்கிறது. தலித் திரைப்படங்களில் தலித்துகள் அனைவருமே நல்லவர்கள் என்றால், இப்படத்தில் முற்பட்ட சாதியினர் அனைவருமே நல்லவர்கள்! தலித் திரைப்படங்களில் வரும் அத்தனை காதலும் நல்ல காதல், ஒரு திருடனை ஒரு நல்ல குடும்பத்துப் பெண் காதலித்தாலும் அது நல்ல காதல் என்றால், திரௌபதியில் வரும் அத்தனை காதலுமே நாடகக் காதல்! காதலே கூடாது, அப்பா அம்மா சொல்லும் பையனையோ பெண்ணையோ கட்டவேண்டும் என்கிறது திரௌபதி. இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது? முடியாது. கூடாது. ஆனால் தலித்துகளை மட்டும் குறையில்லாமல் காட்டியபோது சிரித்தவர்கள் இப்போதும் சிரிப்பதுதானே நியாயம்? சிரிக்காமல் கடுப்பாகிறார்கள்.

ஜிப்ஸி திரைப்படத்தில் உத்திர பிரதேசத்தின் ஆதித்யநாத் யோகியை வில்லனாகக் காண்பித்தபோது அப்படியே புளகாங்கிதம் அடைந்தார்கள். அதை எப்படிக் காட்டலாம் என்று ஒருவர் கூடப் பேசவில்லை. சென்சார் அதைப் பெரும்பாலும் நீக்கவும் சென்சாரையும் திட்டினார்கள். படத்தின் இயக்குநர் கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் ட்ரைலரில் ஜிப்ஸி ஒரு இசைத் திரைப்படம் என்று கூறினார். யோகியைக் காண்பித்தது தவறு என்று சொல்ல இங்கே ஆளில்லை. திரௌபதி ஒரு அண்ணன் கதாபாத்திரத்தைக் காட்டியது. யோகியைக் காண்பித்தபோதே நியாயம் பேசி இருந்தால் இப்போதும் நீங்கள் பேசும் நியாயத்தில் ஒரு அறம் இருந்திருக்கும். அப்போது அமைதியாகக் கூட நீங்கள் இல்லை, குதூகலித்தீர்கள். படத்துக்குத் தொடர்பே இல்லாமல் குறியீடுகளை வைப்பது, குறியீடுகளுக்காகவே படங்களை எடுப்பது, அந்தக் குறியீடுகளைப் புகழ்ந்தே படம் எடுப்பது – இவற்றையே ஆயுதமாக்கி உங்களை நோக்கி எறிந்திருக்கிறது திரௌபதி.

காதலே கூடாது, சாதி மாறி காதலோ கல்யாணமோ கூடாது என்பதை நான் ஏற்கவில்லை. நாடகக் காதல், லவ் ஜிகாத் போன்றவை எல்லாம் இல்லவே இல்லை என்றும் நான் சொல்லவில்லை. நாடகக் காதல், லவ் ஜிகாத் போன்றவற்றை எதிர்க்கவும் வேண்டும். சாதி மாறி நடக்கும் காதல் திருமணங்களை ஏற்கவும் வேண்டும். எப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பது சவால்தான். அதற்காக ஒட்டுமொத்த சாதி மாறிய திருமணங்களைப் புறக்கணிப்பது சரியானதல்ல. உண்மையில் சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்த பின்னர் பெரும்பாலானவற்றில் அந்தத் திருமணத்தில் எதோ ஒரு ஆதிக்க சாதி புழங்கப் போகிறது என்பதே யதார்த்தம். (விதிவிலக்குகள் உண்டு!) மதம் மாறி நடக்கும் திருமணங்களிலோ ஹிந்து மதம் அல்லாத ஒரு மதமே புழங்கப் போகிறது. எனவே சாதி மறுப்புத் திருமணம் என்பதே ஒரு கண்கட்டு வித்தைதான். சாதி இணக்கத் திருமணம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதிலும் கூட அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் சாதி இணக்கம் என்பது என்னவாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்யத்தான் வேண்டும். முற்போக்கு ஜிகினாக்களில் சிக்கி வாய்ப் பந்தல் போட வேண்டுமானால் இவையெல்லாம் உதவலாம்.

தங்கள் சாதிப் பெண்கள் குறி வைத்து ஏமாற்றப்படுகிறார்கள் என்று ஒரு சாதி நம்ப இடம் இருக்கிறது. அதையே திரௌபதி முன் வைக்கிறது. ஆனால் தட்டையாகச் சொல்கிறது. அனைத்துக் காதல்களுமே நாடகக் காதல் என்பதும், ஆணவக் கொலையே இல்லை என்பதுமெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை. ஆனால் ஒரு பிரசாரப் படமாகவே இது வெளியாகி இருப்பதால், இந்த விவாதங்களுக்குள் செல்லாமல், தன் பிரசாரத்தை மட்டுமே முன் வைக்கிறது – முன்பு தலித் திரைப்படங்கள் செய்ததைப் போலவே!

இத்திரைப்படத்தின் சிக்கல்கள் என்ன? ஒரு திரைப்படமாக இது மிகவும் பின் தங்கி இருக்கிறது. மெட்ராஸ், அட்டகத்தி, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டதற்குக் காரணம், அத்திரைப்படங்கள் பேசிய விஷயம் மட்டும் காரணமல்ல, அவை சொல்லப்பட்ட விதமும், அவற்றின் தரமும் கூடக் காரணங்கள்தான். திரௌபதி இந்த விஷயத்தில் மிகவும் பின் தங்கி விட்டது. அதே சமயம், பார்க்கவே முடியாத அளவுக்கு இல்லை என்பது ஒரு ஆச்சரியம். இடைவேளை வரை (அந்த தேவையற்ற ஒரு பாடல் நீங்கலாக) ஓரளவு பரவாயில்லை. இடைவேளைக்குப் பிறகு ஆவணப் படம் போல் ஆகிவிட்டது. தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் ஓரளவுக்கு இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம்.

ஒரு பிரசாரத் திரைப்படமாகவே இருந்தாலும் படம் தரமாக எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் புறக்கணித்துவிடுவார்கள். திரௌபதி தப்பித்ததன் ஒரே காரணம், இந்த வகையான தலித்துகள் அல்லாத சாதியில் இருக்கும் ஒரு பிரிவினரின் மனக்குமுறலை முதன்முதலாகச் சொன்னது என்பதால்தான். அது சரியோ தவறோ நியாயமோ அநியாயமோ அவர்களுக்கான குரல் வெளிவர ஒரு இடம் தேவை என்பதை திரௌபதி பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

திராவிட அரசியல் உருவாக்கி வைத்திருக்கும் ‘ஹிந்துக் காழ்ப்பு என்பதே பிராமணக் காழ்ப்புதான்’ என்கிற மாயையில் திரௌபதி திரைப்படமும் விழுந்திருப்பது பெரிய அலுப்பைத் தருகிறது. எந்த சாதிகளைப் பற்றிப் பேசுகிறார்களோ அந்த சாதிகளைப் பற்றி ஒரு வெளிப்படையான குறிப்பு கூட கிடையாது. ஆனால் பிராமண ஜாதியை வெளிப்படையாகக் காட்டும் ஒரு பாத்திரம் உண்டு. இதை ஏன் இப்படி இயக்குநர் வைத்தார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. பழக்கப்பட்டுவிட்ட ஒன்றுதான் என்றாலும், திரௌபதி போன்ற படத்திலும் அப்படித்தான் இருக்கும் என்பதுதான் சிக்கல். அர்த்தநாரீஸ்வர வர்மாவின் புகைப்படத்தைக் கூட காண்பிக்காமல் இருக்கச் சொல்லி நிபந்தனை விதிக்கும் சென்ஸார், இந்தப் பாத்திரத்தைக் கண்டுகொள்ளவில்லை. சாதிக் கலவரம் வரும் என்றால் மட்டுமே சென்ஸார் அஞ்சும் போல.

ஒரு திரைப்படத்தின் ஆதாரக் கருத்து என்பது அது சொல்ல வரும் நீதியிலும் அறத்திலும்தான் உள்ளது. அதாவது அந்தத் திரைப்படத்தின் ஆன்மாவிலேயே உள்ளது. மற்ற திரைப்படங்களில் வரும் ஆன்மா களங்கத்துடன் இருந்தபோது கொண்டாடியதால்தான் திரௌபதி போன்ற ஒரு திரைப்படம் வரவேண்டிய அவசியம் உருவானது. திரௌபதி திரைப்படத்தின் ஆன்மா நிச்சயம் குறைபட்டதுதான், அதற்கான காரணம் இதற்கு முன் வந்து குவிந்த போலி முற்போக்குத் திரைப்படங்களே. திரௌபதி போன்ற படங்கள் இனி இல்லாமல் போகவேண்டும் என்றால் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டியது, ஹிந்து மதக் காழ்ப்பால் பீடிக்கப்பட்டிருக்கும் இயக்குநர்களும், அதைக் கொண்டாடும் முற்போக்காளர்களுமே. ஹிந்து மதத்தைக் கிண்டல் செய்வது, ஹிந்து வெறுப்பைக் கக்குவது, இந்தியக் காழ்ப்பைக் கொட்டுவது, பாஜகவைக் குறை சொல்வது – இந்த நான்கிற்குள் சிக்கி தமிழ்த் திரையுலகமே தன் முகத்தை இழந்து நின்றுகொண்டுள்ளது. இன்று கைதட்டுபவர்கள் நாளை தங்கள் அரசியலைப் பார்க்கப் போய்விடுவார்கள். இது உறைக்காதவரை தமிழ் இயக்குநர்கள் பெரிய அளவில் திறமை இருந்தும் கிணற்றை விட்டு வெளியே வரப் போவதே இல்லை.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share