Tag Archive for திரையரங்கு

Theatres of Tirunelveli in 1990s

தாமிரபரணி பாயும் – ஓடும் அல்ல – நிஜமாகவே பாயும் சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் கூனியூர். ‘கூனியூருக்குப் போகணும்னா குனிஞ்சிக்கிட்டே போகணுமா’ என்னும் பழமொழியில் இந்த ஊரின் பேரை நீங்கள் கேட்டிருக்கலாம். எப்படியும் பல இடங்களில் இந்தப் பெயரில் ஊர்கள் நிச்சயம் இருக்கும். இது சேரன்மாதேவியின் கூனியூர்.

சேர்மாதேவியில் இருந்து பொடிநடையாக நடந்தால் அரைமணி நேரத்தில் கூனியூருக்குப் போய்விடலாம். அப்படித்தான் நடப்போம். ஓரளவுக்குப் பெரிய கிராமமான சேரன்மாதேவிக்கு இல்லாத ஒரு பெருமை கூனியூருக்கு வந்துவிட்டிருந்தது. டூரிங் டாக்கீஸ்.

அந்த தியேட்டரின் பெயர் கூட நினைவில்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டால் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் அந்தச் சாலையில் நடக்கும். ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ பாடல் கேட்டுவிட்டால், அத்தனை கூட்டமும், ஆரம்பிச்சிட்டான் அரம்பிச்சிட்டான் என்று வெரசலாக நடக்கத் தொடங்கும். ஆம், ‘டிக்கெட் கொடுக்கப் போகிறோம்’ என்பதற்கான சமிக்ஞையே அந்தப் பாடல்.
கூனியூரில் மூன்று நாளைக்கு ஒரு படம் மாற்றிவிடுவான். ஒரு வாரம் ஒரு படம் ஓடிவிட்டால் அது வெள்ளிவிழா திரைப்படம். சிவாஜி, எம்ஜியாரெல்லாம் வரிசையாக வந்து கல்லா கட்டுவார்கள். புதிய கலர்ப் படம் வந்துவிட்டால் சேர்மாதேவி, கூனியூர், வீரவநல்லூர் என எல்லா ஊர்களும் வண்ணம் கொண்டு விடும். திரைப்படம் ஓர் அனுபவம் என்றால், திரைப்படத்துக்குப் போய்விட்டு வருவதே ஓர் அனுபவம்.

அனைவரும் ஒரே சாலையில் ஒன்றாக நடந்துவந்தாலும், காதில் ‘விநாயகன்’ விழுந்தவுடன், யாருக்கு டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்பதில் ஒரு வேகம் இருக்கும். மண் தரை ஏழைகளுக்கு. உடைந்து போன மர பெஞ்சு பணக்காரர்களுக்கு. டிக்கெட் வித்தியாசம் ஐம்பது பைசா இருக்கும்.

இடைவேளை ஒரு தடவைதான் என்றாலும், கார்பன் தேய்ந்துவிட்டால், கூடுதலாக இரண்டு இடைவேளைகள் வரும். அந்த சிறிய இடைவேளைகளில், கண்ணாடி போட்டிருக்கும் டின் டப்பாக்களில் வைத்து முறுக்கு விற்பார்கள். சோள மாவு முறுக்கின் மணம் இப்போதும் உங்கள் நாக்கில் எட்டிப் பார்த்தால், நீங்களும் ஏதோ ஒரு கிராமத்தில் படம் பார்த்திருப்பீர்கள் என்றே அர்த்தம்.

அந்த டூரிங் தியேட்டருக்கு லைசன்ஸ் மூன்று வருடங்கள்தான் என்ற செய்தி ஊரெங்கும் நெருப்புப் போல பரவியது. எப்படியோ இன்னொரு மூன்று வருடங்களுக்கு லைசன்ஸ் வாங்கிவிட்டார் அதன் உரிமையாளர்.

வாரத்துக்கு இரண்டு படங்கள் எனப் பார்த்துக் குவித்த படங்களின் எண்ணிக்கையைச் சொல்ல முடியாது. வேறு பொழுது போக்குகளே இல்லாத நிலையில், ஊரில் இருந்த ஒரே டூரிங் தியேட்டர் மட்டுமே மன அமைதி பெற ஒரே வழி.
டூரிங் தியேட்டர் என்பதால் மாலைக் காட்சியும் இரவுக் காட்சியும் மட்டுமே. மாலைக் காட்சி, இரவு கவியும்போதுதான் தொடங்கும். மூன்று இடைவேளைகள் விட்டு இரவு பத்து மணிக்குத்தான் முடியும். ஆதிபராசக்தி படத்திற்கும், சம்பூர்ண ராமாயணம் படத்திற்கும் கூடுதலாக ஒரு இடைவேளை என்று ஊரெல்லாம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டோம்.

இந்த டூரிங் தியேட்டர் வருவதற்கு முன்பு சேரன்மகாதேவிக்கார்களுக்கு வீரவநல்லூரே கதி. இல்லையென்றால் திருநெல்வேலிக்குப் போகவேண்டும். அது செலவு பிடிக்கும் வேலை. ஆனாலும் இதையே ஒரு திருவிழாக மாற்றிவிடுவோம். அதிகாலை எழுந்து குளித்து காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மதியச் சாப்பாட்டையும் கட்டிக்கொண்டு காலைக் காட்சிக்கு திருநெல்வேலிக்குப் போய்விடுவோம். பாப்புலர், ராயல், ரத்னா, பார்வதி, செண்ட்ரல், சிவசக்தி அத்தனை தியேட்டர்களும் இரண்டு கிலோமீட்டர்களுக்கு உள்ளாகத்தான். காலைக்காட்சி பார்த்துவிட்டு, அடுத்த தியேட்டருக்கு நடந்தே போய், அவன் டிக்கட் கொடுப்பதற்குள் அந்த தியேட்டரிலேயே ஓர் ஓரமாக உட்கார்ந்துகொண்டு நாம் கொண்டு போன சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, படம் பார்த்துவிட்டு, அங்கேயே பஸ் பிடித்தால் இரவு 7 மணிக்கு சேர்மாதேவிக்கு ஹாயாக வந்துவிடலாம். ஒருநாளில் இரண்டு படங்கள், அடுத்தடுத்த காட்சியில்!

அதிலும் ரத்னா தியேட்டரும் பார்வதி தியேட்டரும் எதிரெதிர் வீட்டுக்காரர்கள். அப்படி இரண்டு படம் பார்ப்பதென்றால் மிகவும் எளிது என்பதால், பெரும்பாலும் அப்படி இருக்கும்படிப் பார்த்துக்கொள்வோம்.

இந்த வசதி இல்லாதவர்களுக்கு வீரவநல்லூரே கதி, கூனியூர் டூரிங் தியேட்டர் வரும் வரை. வீரவநல்லூருக்குள் நுழைவதற்கு முன்பாகவே மெய்ன்ரோட்டில் காந்திமதி தியேட்டர் இருந்தது. ஊருக்குள் சண்முகா தியேட்டர். இரண்டிலும் மூன்று நாளைக்கு ஒரு தடவை படம் மாற்றுவார்கள். எந்த நாளில் படம் மாற்றுவது என்பதில் அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. காந்திமதியில் போட்ட படம் சண்முகாவில் வராது. விதிவிலக்காகச் சில சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் மட்டும் வரும். அப்படி காந்திமதியிலும் வந்து சண்முகாவிலும் வந்த படம், புதுக்கவிதை. இரண்டு தியேட்டரிலும் பார்த்தவர்கள் அதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள்.

கூனியூர் டூரிங் தியேட்டர் வரவும் சேர்மாதேவிக்காரர்கள் வீரவநல்லூர்ப் பக்கம் ஒதுங்குவதைக் கைவிட்டுவிட, சண்முகா தியேட்டர் நலிந்து போனது. ஒரு கட்டத்தில் கூனியூர் தியேட்டரின் லைசன்ஸும் முடிய, சேரன்மகாதேவியிலேயே ஒரு தியேட்டர் எட்டிப் பார்த்தது. டூரிங் தியேட்டர் அல்ல, சிமிண்ட் கட்டட தியேட்டர்!

ஊருக்குள் போலிஸ் ஸ்டேஷன் கிடையாது, தியேட்டர் கிடையாது என்னும் பெருமைகள் பறந்து போக, ஊருக்குள்ள தியேட்டரே இருக்கு என்கிற புதிய பெருமை சேரன்மகாதேவிக்கு ஒட்டிக்கொண்டது. ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படப்பிடிப்பு சேரன்மகாதேவியில் நடந்தபோது ஊரில் தியேட்டர் இல்லை, அந்தப் படம் வரும்போதும் தியேட்டர் இல்லை, தியேட்டர் வந்த பின்பு அந்தப் படம் அங்கே திரையிடப்பட்டபோது, நம்ம ஊர்ல எடுத்த படம் என்று மக்கள் விழுந்து விழுந்து பார்த்தார்கள். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படப்பிடிப்பு எல்லாம் கடைசிச் சொட்டு உயிர் இருக்கும் வரை எனக்கு மறக்காது.

பின்னர் நான் கல்லுப்பட்டிக்குப் போய்விட்டிருந்தேன். அங்கே ஒரு தியேட்டர் இருந்தது, லட்சுமி தியேட்டர். பதினெட்டுப் பட்டி கிராமத்துக்கும் ஒரே சின்ன தியேட்டர் லட்சுமி தியேட்டர். பேரையூரில் ஒரு தியேட்டர் இருந்த நினைவு. நான் போனதில்லை. அல்லது அந்த தியேட்டர் அப்போது இல்லை. லட்சுமி தியேட்டருக்கு மாட்டு வண்டி கட்டிக்கொண்டு, டிராக்டரில் கும்பலாக ஏறிக்கொண்டு படம் பார்க்க வருவார்கள்.

ரஜினி படம் என்றால் திருவிழா என்று அர்த்தம். எந்தப் படம் வந்தாலும் கூட்டம் வரும். விக்ரம் படம் பார்க்க பெருங்கூட்டம் வரிசையில் நின்றது இப்போதும் நினைவில் இருக்கிறது. டிக்கெட் விலை அறுபது பைசாவோ என்னவோ. அதற்கு மேல் பத்து பைசா கூடச் செலவழிக்காமல் பெண்கள் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ‘சம்சாரம் அது மின்சாரம்’ இருபத்து ஐந்து நாள்களுக்கு மேல் ஓடி சாதனை கண்டது.

எங்கேயும் பார்க்க முடியாத ‘பொம்மை’ போன்ற திரைப்படங்களை எல்லாம் மதியக் காட்சியாகப் போடுவார்கள். தூர்தர்ஷன் திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்ததும், பழைய சிவாஜி எம்ஜியார் படங்களைப் பார்க்க மக்கள் வருவது குறைய ஆரம்பித்தது. தூர்தர்ஷனில் வருவதற்கு முன்பாகத் திரைப்படங்களைத் திரையிடவேண்டிய கட்டாயம் வந்தது. இதனால் தொடர்ந்து புதிய படங்கள் (படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்தும் எங்களுக்கு அவை புதுப்படங்கள்தான்!) பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

கல்லுப்பட்டியில் இருந்து மதுரை அழகரடிக்குப் போனேன். அழகரடியில் எங்கள் தெருவில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருந்த தியேட்டர் பரமேஸ்வரி தியேட்டர். டிக்கெட் விலை ரூ 1.10. ஒன்னு பத்து தாம்மா என்று கேட்டாலே அது படம் பார்க்க என்று அர்த்தம். ஒன்னு அறுபது என்றால் ஹை க்ளாஸ். அங்கே ஒரு ரூபாய்க்கு ஒரு தேங்காய் பப்ஸ் விற்பார்கள். அது மிகவும் பிரசித்தம். அங்கே பார்த்துத் தள்ளிய படங்களுக்குக் கணக்கே இல்லை.

இரண்டு தெரு தள்ளி இருந்த தியேட்டர் என்பதால் சாவதானமாக நடந்து போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம். காலையில் சாம்பார் செய்துவிட்டு, பொடி நடையாக தியேட்டருக்குப் போய் காலைக்காட்சி பார்த்துவிட்டு மதியம் வந்து உலை வைத்து மூன்று மணிக்குச் சாப்பிடுவது பெண்களின் வழக்கமாக இருந்தது. இளையராஜாவின் பாடல்கள் திரும்பும் இடமெல்லாம் கேட்கும். தொடர்ந்து படங்கள் வந்துகொண்டே இருக்கும். இப்போது போல் அல்லாமல், அதிகம் அரசியல், மண்டை பிளக்கும் ஆய்வு என எதுவும் இருக்காது. படம் பார்க்கப் போவதே ஜாலிக்கு என்று இருந்த நேரம். ‘கேளடி கண்மணி’ போல எப்போதாவது சீரியஸ் படங்கள் வரும். அவையும் ஹிட்டடிக்கும்.

பரமேஸ்வரி தியேட்டரை இன்னொரு காரணத்துக்காகவும் மறக்கமுடியாது. நடிகர் சிவாஜியின் மகள் திருமணம் அந்தத் திரையரங்கில்தான் நடந்தது. யார் வேண்டுமானாலும் போகலாம், சாப்பிடலாம் என்று கேள்விப்பட்டு, பள்ளி நண்பர்கள் அனைவரும் பரமேஸ்வரி தியேட்டர் பக்கம் போய் எட்டிப் பார்த்தோம். உள்ளே நுழைய முடியாத அளவுக்குக் கூட்டத்தைப் பார்த்துப் பயந்து போனோம். அங்கே வெளியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிகளில், நேரலையாக தியேட்டருக்குள் இருந்த சிவாஜியைப் பார்த்துவிட்டுச் சாப்பிடாலேயே பள்ளிக்கு ஓடினோம்.

என் வாழ்க்கையின் பொற்காலம் என்றால் இங்கே இருந்த இந்த மூன்று வருடங்களைத்தான் சொல்வேன். மனம் இரண்டாகப் பிரிந்து கிடந்த நேரம். ஒரு பக்கம் முழுக்க படிப்பு, இன்னொரு பக்கம் முழுக்க திரைப்படங்கள். இப்படித்தான் பத்தாவது முடித்து ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் வாங்கி மீண்டும் நெல்லைக்குப் போனேன்.

நெல்லையே தியேட்டர்களின் சொர்க்கம் என்பதை என் பதின்ம வயதில் புரிந்துகொண்ட போது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. மதுரை, கல்லுப்பட்டி, வீரவநல்லூர், சேரன்மகாதேவியில் எல்லாம் நடந்து போகும் தூரத்தில் ஒரே ஒரு தியேட்டர். ஆனால் நெல்லையில் ஆறு தியேட்டர்கள்! அப்போதுதான் புதியதாக அருணகிரி தியேட்டரைத் திறந்திருந்தார்கள்.

அங்கே சின்னதம்பி 175 நாளாக ஓடியது. நான் பத்தாவது படிக்கும்போது வெளியான படம், 11ம் வகுப்புப் படிக்கும்போதும் ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கெனவே பார்த்த படத்தை மீண்டும் பார்க்கவேண்டுமா என்று தோன்றினாலும், அப்போதைக்குப் பெரும் புகழ் பெற்றிருந்த அந்தப் புதிய ‘அருணகிரி’யைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ‘சின்னத்தம்பி’க்கு மீண்டும் போனேன். படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஏதோ தொழில்நுட்பக் கோளாறு. ஊர் முழுக்க இதே பேச்சுதான்.

அன்று அந்தக் காட்சிக்கு வந்தவர்களுக்கு மட்டும் ஒரு டோக்கன் தரப்பட்டு மறுநாள் மீண்டும் இலவசக் காட்சி திரையிடப்பட்டது. ஊர் இப்போது இரண்டு மடங்காகப் பேசியது, ‘சே… நமக்கு இப்படி ஒரு பிரைஸ் அடிக்காம போயிட்டே!’ ஆம், நான் தியேட்டரில் ‘சின்னத்தம்பி’யை ஒன்றரை தடவை பார்த்திருக்கிறேன்!

திருநெல்வேலிதான் தியேட்டர்களின் சொர்க்கம். வீட்டுக்கு அப்பால் பெண்களின் ஒரே புகலிடம் தியேட்டர்களே. 11.30க்குக் காலைக் காட்சி. 11.25க்குத்தான் பவுடர் அப்புவார்கள் பெண்கள். 11.30க்குத்தான் டிக்கெட் எடுப்பார்கள். தியேட்டருக்குளிருந்து கேட்கும், ‘மனைவி வீட்டின் மருமகளானாள்’.

ஆரம்கேவியின் உலகப் புகழ் பெற்ற விளம்பரம். ‘சே ரெண்டு நிமிஷம் முன்னாடி வந்திருந்தா இந்த விளம்பரத்தை பாத்துருக்கலாமே’. நிஜமாகவே வருத்தப்படுவார்கள். அந்த விளம்பரத்தின் நாதஸ்வர ஓசைக்குக் கைத்தட்டு விழுவதை இப்போதும் என் காதில் கேட்கிறேன். புல்லரிக்கிறது.

தியேட்டரே வாழ்வாக, வாழ்வே தியேட்டராக திருநெல்வேலி வாழ்ந்தது. ஐம்பதுகளில், அறுபதுகளில் தொடங்கிய அப்பழக்கம் தொண்ணூறுகளின் இறுதி வரை இருந்தது. சிவாஜி கணேசன் ஒரு வார இடைவெளியில் நான்கு திரைப்படங்களை வெளியிட, நெல்லையின் பத்து தியேட்டர்களில் நான்கு தியேட்டர்களின் சிவாஜி கணேசன் படம் ஓட, எம்ஜியார் ரசிகர்கள் காண்டானதெல்லாம் வரலாறு. எத்தனை முறை படகோட்டி படம் போட்டாலும் கூட்டம் அம்முதுப்பா என்று சிவாஜி ரசிகர்கள் எரிச்சலானதும் வரலாறுதான்.

செண்ட்ரல் தியேட்டர்

ரஜினி புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், இது பாதி உண்மைதான். திரையரங்க வரலாற்றில் திருநெல்வேலி இன்னொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. வேறெங்கும் பார்க்கவே முடியாத வினோதங்களை திருநெல்வேலி செய்து காண்பித்தது.

ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

ஏதேனும் ஒரு காட்சி, ஹீரோயிஸக் காட்சி வந்துவிட்டால், வெள்ளித்திரையைச் சுற்றி பளபள பல்புகள் மின்னும். சில சமயம் முழுப் பாடலுக்கும் வெள்ளித்திரை பல்புகள் மட்டுமல்ல, தியேட்டர் முழுக்க இருக்கும் பல்புகளும் மின்னும். ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலுக்கு தியேட்டரின் பல்புகள் அப்படி மின்னின. நான் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ‘செம்பருத்தி’ படத்தில், ஒரு பைக்கைத் தாண்டி பிரசாந்த் குதிக்கும் காட்சியில், திரையைச் சுற்றி பல்புகள் மின்ன, அது அந்தக் காட்சியை விட அழகாக இருந்தது. ‘வசந்த காலப் பறவை’ படத்தில் நீதிமன்றக் காட்சியில் பல்பு மின்னியது நினைவிருக்கிறது. ‘கறவை மாடு மூனு காளை மாடு ஒன்னு’ பாடலுக்கு ஒட்டுமொத்த தியேட்டரும் டான்ஸ் ஆட, கூடவே வெள்ளித்திரை பல்புகளும் தியேட்டர் பல்புகளும் ஆடின. ஏ.ஆர்.ரஹ்மானின் புயலில் ‘முக்காலா’ பாட்டுக்கும் ‘ஊர்வசி’ பாட்டுக்கும் ‘பேட்ட ராப்’புக்கும் தியேட்டர் இடிந்து விழாமல் இருந்தது ஆச்சரியம்தான்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து வேலை பார்த்த நண்பன் ஒருத்தன் என்னுடன் திருநெல்வேலியில் படம் பார்க்க வந்து, இந்த பல்புகளின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, ‘சை, சரியான பட்டிக்காடு’ என்றான். அப்போதுதான், ‘ஓ… இதெல்லாம் பிடிக்காத ஒரு கூட்டமும் இருக்கா’ என்று எனக்கு உறைத்தது. அப்படி ரத்தத்தோடு எங்களுக்கு ஊட்டி வளர்த்து வைத்திருந்தது திருநெல்வேலி. இப்போதும் கூட நெல்லையில் ஏதேனும் ஒரு தியேட்டரில் ஒரு முக்கியமான காட்சியில் பல்புகள் மின்னிக் கொண்டிருக்கக் கூடும்.

ரஜினியின் ‘அண்ணாமலை’ மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளி வந்தது. இளையராஜாவின் இசை இல்லாமல் தேவாவின் இசையில் வெளிவந்த படம் என்பதால் கொஞ்சம் எதிர்மறைப் பேச்சுகள் இருந்தன. ரஜினி வெளிப்படையாகச் சொன்னார், ‘இந்தப் படம் என் படங்களிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்று.

அது உண்மையானது. ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்த மோதலை ஒட்டி திரைப்படத்தின் சில வசனங்கள் புரிந்துகொள்ளப்பட்டன. எனவே ரஜினியே எதிர்பாராத ஒரு வெற்றி அண்ணாமலைக்குக் கிடைத்தது. அண்ணாமலை திருநெல்வேலி திரை வரலாற்றில் இன்னொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது.

பூர்ணகலாவில் வெளியான இத்திரைப்படத்துக்கு வந்த கூட்டம், மேம்பாலத்தையும் தாண்டி இரண்டு கிலோமீட்டருக்கு நீண்டது. ஜெயலலிதாவின் போலிஸ் கையைப் பிசைந்துகொண்டு நின்றது. இதைப் பணமாக்க நினைத்த திரையரங்க உரிமையாளர், முதலிலேயே இந்த வெற்றியை யோசித்து ஒரு விஷயத்தைச் செய்தார். ஆம், முதல் காட்சி அதிகாலை நான்கு மணிக்கு. அதற்கு டிக்கெட் வாங்க, முந்தைய நாள் இரவு குவிந்த மக்கள் விடிய விடிய தியேட்டரில் கிடந்தார்கள். இதைக் கண்டுகொண்ட அனைத்து தியேட்டர்களும் அடுத்து வந்த எல்லாம் சூப்பர்ஹிட் படங்களுக்கும் இதை வழக்கமாக்கின.

வழக்கமாக்கும்போது அப்படியே செய்தால் அதில் என்ன சந்தோஷம் இருக்கிறது? மெல்ல மெல்ல நேரத்தைக் குறைத்துக்கொண்டே போனார்கள். ஒரு கட்டத்தில் அதிகாலை ஒரு மணிக்கு முதல் காட்சி. அதாவது நள்ளிரவுக் காட்சி. இதுவும் தியேட்டர்களுக்கு பத்தல! இன்னொன்றைச் செய்ய ஆரம்பித்தார்கள். உலகில் எங்கேயும் கேள்விப்பட்டிருக்காத விஷயம். மாலை ஆறு மணிக் காட்சிக்கு மதியம் ஒரு மணிக்கு டிக்கெட் தருவார்கள். இரண்டு மணிக்குத் தியேட்டருக்குள் விட்டு அடைத்துவிடுவார்கள். இரண்டு மணிக் காட்சி அப்போதுதான் தொடங்கி இருக்கும். ஆறு மணிக்காட்சிக்கு ஹவுஸ்ஃபுல் என்று போர்ட் தொங்க விட்டிருப்பார்கள். ஆறு மணிக்காட்சியைக் காண நான்கு மணி நேரம் தியேட்டருக்குள் அடைபட்டிருப்போம். நாங்கள் ஆறு மணிக் காட்சிக்குப் படம் பார்க்க தியேட்டருக்குள் போகும்போது, எங்கள் இடத்தை இரவு பத்து மணிக் காட்சிக்காரன் பிடித்துக்கொண்டிருப்பான். அங்கே வந்து தண்ணீர், போண்டா எல்லாம் வேறு விற்பார்கள். திருப்பதியின் மாடலைத் தியேட்டருக்குள் புகுத்தி வைத்தார்கள்.

விழித்துக்கொண்ட மாவட்ட அரசு நிர்வாகம், அத்தனைக்கும் ஒரேடியாகத் தடை விதித்தது. அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக அன்றைய காட்சிகள் தொடங்கக் கூடாது, உள்ளே அடைத்து வைக்கக் கூடாது என்று அறிவிப்புகள் வந்தன.

மதியம் இரண்டு மணிக் காட்சி என்று நினைத்து, படையப்பாவுக்கு இத்தனை ஈஸியா டிக்கெட் கிடைக்குதே என்று கிண்டல் செய்தபடி என்னுடன் படம் பார்க்க வந்த சென்னையைச் சேர்ந்த கமல் ரசிகன் ஒருத்தன், டிக்கெட் கிடைத்தது ஆறு மணிக் காட்சிக்கு என்றும், அதுவரை தியேட்டரில் அடைப்பட்டுக் கிடைக்கவேண்டும் என்று தெரிந்து கிட்டத்தட்ட மூர்ச்சையாகிப் போனான். ‘இந்த ஊர் உருப்படவே உருப்படாது’ என்று சாபமிட்டுவிட்டு பஸ் ஏறினான்.

திருநெல்வேலியும் தியேட்டர்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. தேவர்மகனுக்கு போலிஸில் அடி வாங்காமல் படம் பார்த்தவர்கள் குறைவு. திருநெல்வேலியின் ஒரே பொழுதுபோக்கு தியேட்டர்களே. மூன்று கிலோமீட்டர் நீளமான பெரிய சாலைக்குள்ளாக பத்து தியேட்டர்கள். பேருந்து நிறுத்தமே தியேட்டர்களின் பெயர்கள்தான். ஒரு ரத்னா, ஒரு ராயல், ஒரு செண்ட்ரல், ஒரு சிவசக்தி இப்படித்தான் டிக்கெட்டே வாங்குவோம்.
இன்று காணாமல் போன தியேட்டர்களை எண்ணினால், இருக்கும் தியேட்டர்களைவிட அதிக எண்ணிக்கை வருகின்றது. பாப்புலர் (ஸ்ரீ கணேஷ்), லக்ஷ்மி, ராயல், பார்வதி, செண்ட்ரல், சிவசக்தி, ஸ்ரீ செல்வம் என அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இவையெல்லாம் வெறும் தியேட்டர்கள் அல்ல. வரலாறுகள்.

இது போக, இளமை வரலாறு ஒன்றிருக்கிறது, கலைவாணி தியேட்டர். இந்த இளமை வரலாற்றைத் தனியேதான் சொல்லவேண்டும். அந்த தியேட்டரும் இன்றில்லை. இழந்தவற்றின் வலியும் அங்கே பெற்றவற்றின் சந்தோஷமும் ஒன்றுக்கொன்று முட்டி நிற்கின்றன. இதுதான் வாழ்க்கை. மீண்டும் பெறவே முடியாமல் இழந்தவற்றின் சுகமான தொகுப்புகளே மீதமிருக்கும் வாழ்க்கை.

2022 செப்டம்பரில் மெட்ராஸ் பேப்பர் வலைத்தளத்தில் வெளியான கட்டுரை.

Share