Tag Archive for திருச்சி

மாதிரிக்கு ஒரு புத்தகக் கண்காட்சி – எஸ்.ஆர்.வி பள்ளி, திருச்சி

திருச்சியில் உள்ள எஸ் ஆர் வி பள்ளியில் சென்ற மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதில் டயல் ஃபார் புக்ஸ் சார்பில் முதன்முறையாக நாங்கள் பங்கேற்றோம். இது அப்பள்ளி நடத்தும் 9வது வருடப் புத்தகக் கண்காட்சி. பொதுவாக கிழக்கு சார்பில் கிழக்கு புத்தகங்களை மட்டுமே அங்கே விற்பனைக்கு வைப்போம். மற்ற பதிப்பகங்கள் அவர்களது புத்தகங்களை காட்சிக்கு வைப்பார்கள். இந்தமுறை அப்படி அல்லாமல் டயல் ஃபார் புக்ஸ் சார்பில் அனைத்துப் பதிப்பகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனைக்குக் காட்சிப் படுத்தியிருந்தோம். 

IMG-20141127-WA0000

புத்தகக் கண்காட்சியை சிறப்பாக நடத்த பள்ளி நிர்வாகம் தந்த ஒத்துழைப்பு அபாரமானது. அப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றித் தனியே சொல்லவேண்டும்.

புத்தக வாசிப்பை வளர்க்க என்ன செய்யவேண்டும் என்று பலரும் யோசிக்கிறோம். ஒரு கையறு நிலையில்தான் நாம் உறைந்துவிடுகிறோம். எங்கே சென்றாலும் அவ்வாசல் மூடப்பட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இன்றைய நிலையில் புத்தக வாசிப்பை மேம்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளெல்லாம் தடைப்படுகின்றன. எங்கோ தவறு செய்கிறோம், அது எது என்று கண்டறியவோ, அப்படியே கண்டறிந்தாலும் அதை சரி செய்யவோ இயலாத நிலை ஒன்றை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

எல்லோருக்குமே தெரியும், மாணவர்களிடம் இருந்து புத்தக வாசிப்பைத் தொடங்கவேண்டும் என்பது. பதில் நம்மிடையே இருக்கிறது. ஆனால் அதைச் செயல்படுத்த வழிகள் தெரியவில்லை. ஏனென்றால் அதைச் செய்யும் பொறுமையும் பக்குவமும் இல்லை. அதைச் செய்யவேண்டிய ஆசிரியர்களே புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றித் தெரியாதவர்களாக இருப்பது பெரிய சோகம். அதையும் மீறி ஒரு சில ஆசிரியர்கள் புத்தக வாசிப்பின் அவசியம் பற்றித் தெரிந்து அதை முன்னெடுக்க நினைத்தால், அடுத்த தடை பெற்றோர்கள் வழியே வருகிறது. பக்கத்துவீட்டு மாணவனோ சொந்தக்காரப் பையனோ அதிகம் மதிப்பெண் பெற்றால், அதைவிட அதிக மதிப்பெண்ணைத் தன் மகன் பெறவேண்டும் என்ற அழுத்தத்தை பெற்றோர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்படி பாடப் புத்தகத்தைப் படிக்காமல் வேறு புத்தகங்களைப் படிப்பதால் என்ன பயன் என்று அவர்கள் மிகத் தெளிவாகவே கேள்வி எழுப்புகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இக்குரலை நீங்கள் தொடர்ந்து கேட்கமுடியும். இதைமீறி ஆசிரியர்களால் என்ன செய்துவிடமுடியும்? இப்படி பல இடங்களில் மோதிய பந்து கடைசியில் தஞ்சமடையும் இடம், புத்தக வாசிப்பைப் பிறகு பார்த்துக்கொள்ளாம் என்னும் இடமே.

IMG_20141128_121119

எஸ் ஆர் வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் தன் தொடர் முயற்சியின் காரணமாக, மாதிரி ஒன்றை நமக்கு உருவாக்கிக் காண்பித்துள்ளார். அதை அப்படியே பின்பற்றினாலே, மேலே சொன்ன அத்தனை தடைகளையும் நாம் உடைத்து, மாணவர்களை புத்தக வாசிப்பாளர்களாக மாற்றும் பெரிய சாதனையை சுலபமாகச் செய்யமுடியும். ஒரு பள்ளி தொடர்ந்து 20 ஆண்டுகளில் அதன் மாணவர்களில் பாதி பேரையாவது புத்தக வாசிப்பாளர்களாக மாற்றுமானால், அப்பள்ளி மிகப்பெரிய சமூக சாதனை செய்திருக்கிறது என்றே அர்த்தம். படிக்க சாதாரணமாகத் தோன்றினாலும், உண்மையில் இது அசுர சாதனை. ஒவ்வொரு பள்ளியும் இதில் பத்தில் ஒரு பங்கைச் செய்தாலே போதும், அடுத்த பத்து ஆண்டுகளில் வரும் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் பெரிய அளவில் ஊக்கம் பெறும். அடுத்த இருபது ஆண்டுகளில் அது ஒரு இயக்கமாகும். அத்தலைமுறை பெற்றோர்களாகும்போது, ஆசிரியர்களும் அவர்களும் இணைந்தே இதைப் பெரிய அளவில் – அவர்கள் அறியாமலேயே – முன்னெடுத்துச் செல்வார்கள். இத்தகைய பெரிய சாதனையை அமைதியாகச் செய்திருக்கிறது எஸ் ஆர் வி பள்ளி.

இந்தக் கண்காட்சிக்கு முன்னர் நான் துளசிதாசன் அவர்களை இரண்டு முறை சந்தித்துப் பேசினேன். கண்காட்சியின் வெற்றி பற்றி ஐயம் பெரிய அளவில் இல்லை என்றாலும், இது சாத்தியமாகுமா என்ற சிறிய சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால் துளசிதான் மிக நம்பிக்கையுடன் பேசினார். துளசிதானின் மிகப்பெரிய பலம் அவரது அபாரமான புத்தக வாசிப்பு. வீட்டில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருப்பதாகச் சொன்னார். துளசிதாசன் வயதொத்தவர்கள் இளமையில் ஒரு வேகத்தில் புத்தகம் வாசிக்கத் துவங்கி, ஒரு நிலையில் தேங்கிவிட்டிருப்பார்கள். ஆனால் இவர் இன்றுவரை தொடர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். எனவே எப்புத்தகங்களை மாணவர்களுக்கு பள்ளி வயதில் படிக்கத் தரவேண்டும், எவற்றைப் படிக்கத் தரக்கூடாது என்பதில் தீர்மானமான கருத்துகள் கொண்டிருக்கிறார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும்போது அவர்களே தேடிப் படிக்கவேண்டிய நூல்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார். இவையே ஒரு நல்ல புத்தக கண்காட்சி இயக்கத்தை உருவாக்க அவருக்கு மூலதனமாக இருந்திருக்கவேண்டும். ஆம், அவர் உருவாக்கி இருப்பது நிச்சயம் ஒரு இயக்கம்தான்.

பள்ளியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களையும் பெற்றோர்களையும் வரவைக்க மிக எளிமையான வழியைப் பின்பற்றுகிறது பள்ளி நிர்வாகம். பெற்றோர் ஆசிரியர் தினம், புத்தகக் கண்காட்சியை ஒட்டி வைக்கப்படுகிறது. இதனால் எல்லாப் பெற்றோரும் நிச்சயம் பள்ளிக்கு வந்தே தீரவேண்டும். இதுவரை நாங்கள் எத்தனையோ பள்ளிகளில் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கிறோம். அங்கே பெற்றோர்கள் வரவு குறைவாகவே இருக்கும். ஏனென்றால் பெற்றோர்களுக்குப் பல வேலைகள். அதற்கிடையில் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க அவர்களுக்கு நேரமில்லை. அதை, இந்தப் பெற்றோர் ஆசிரியர் தினத்தின் மூலம் எஸ் ஆர் வி பள்ளி எளிதாகத் தாண்டிவிட்டது.

புத்தகக் கண்காட்சியின் முன்பிருந்தே, அதைப் பற்றி தொடர்ந்து மாணவர்களிடம் பேசுவது, மாணவர்களின் பெற்றோர்களுக்கு அதைப் பற்றிய செய்திகளை அனுப்புவது, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்புவது என எல்லா வழிகளிலும் புத்தகக் கண்காட்சி பற்றிய ஆர்வம் மாணவர்களிடையேயும் பெற்றவர்களிடையேயும் வளர்க்கப்படுகிறது. பள்ளியில் நடைபெறும் தினசரி வழிபாட்டின்போதும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் சேரும்போது ஒவ்வொரு வருடமும் அவருக்கு ஓர் உண்டியில் தரப்படுகிறது. அம்மாணவர் அந்த உண்டியலை அவர் வீட்டில் ஒரு நூலகம் உருவாக்கப் பயன்படுத்தவேண்டும். வீட்டுக்கு ஒரு நூலகம் என்ற பெயரில் இதை எஸ் ஆர் வி பள்ளி பிரபலப்படுத்தியுள்ளது. புத்தகக் கண்காட்சி வரை சேமிக்கப்படும் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து மாணவர்கள் புத்தகம் வாங்குகிறார்கள். பல மாணவர்கள் தங்கள் உண்டியிலில் இருந்த சில்லறையை எண்ணிக்கொண்டு வந்து எங்களிடம் தந்து புத்தகம் வாங்கியபோது, தனிப்பட்ட முறையில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாணவர்கள் வரிசையில் நின்று புத்தகம் வாங்குகிறார்கள். நான்கு நாள்கள் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வகுப்பின் மாணவர்களை ஆசிரியர்கள் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கிறார்கள். மாணவர்கள் தங்களிடையே, “நான் சச்சின் வாங்கிட்டேன், நீ எங்க வாங்கிருக்க?”, “நான் பஞ்ச தந்திரக் கதை வாங்கிருக்கேன்” என்று பேசிக்கொண்டே புத்தகம் வாங்குவதைப் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

IMG_20141129_113517

மாணவர்கள் தாங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலை மறுநாள் வகுப்பாசிரியரிடம் தரவேண்டும். எந்த மாணவர்கள் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறாரோ அவருக்குப் பாராட்டு உண்டு. அதேபோல் பெற்றோர்கள் வாங்கியிருக்கும் புத்தகங்களை வீட்டில் அடுக்கி, அதைப் புகைப்படம் எடுத்து, வீட்டுக்கு ஒரு நூலகம் என்று பெயரிட்டு வகுப்பாசிரியர்களிடம் தரச்சொல்லியும் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள். 

வாங்கிய புத்தகங்களை மாணவர்கள் படிப்பது பற்றியும் அதைத் தொடர்ந்து உரையாடுவது பற்றியும் ஆசிரியர்கள் கவனம் கொள்கிறார்கள். அடிக்கடி ஏதேனும் ஒரு முக்கியஸ்தர் அப்பள்ளிக்கு வந்து விரிவுரை ஆற்றுவது வழக்கமாகவே உள்ளது. இப்படி மாணவர்களிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்த எஸ் ஆர் வி பள்ளியும், அதன் முதல்வர் துளசிதாசனும் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகள் அசரடிக்கின்றன.

மயிலாப்பூரில் மயிலாப்பூர் திருவிழாவில் தெருவில் நாங்கள் புத்தகக் கண்காட்சி நடத்தியிருக்கிறோம். எதிர்பாராத பலர் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். கோவில் அர்ச்சகர் ஒருவர் ஒவ்வொரு நாளும் வரும் காணிக்கையை எடுத்துக்கொண்டு வந்து அவருக்குத் தேவையான புத்தகத்தை வாங்கிச் செல்வார். அவர் தரும் காணிக்கையில் விபூதி ஒட்டியிருக்கும். ரூபாய் தாள்கள் கசங்கி குங்குமத்தோடு வரும். அன்று நான் அடைந்த அதே மகிழ்ச்சியை எஸ் ஆர் வி பள்ளியில் மாணவர்கள் புத்தகம் வாங்கும்போதும் அடைந்தேன். 

IMG_20141127_125442

இன்றைய நிலையில் இப்படி செயல்படும் முதல்வர்களையும், அதை அனுமதித்து சிறப்பாக முன்னெடுக்கும் பள்ளி நிர்வாகத்தையும் பார்ப்பது அரிது. உண்மையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் இதை ஒவ்வொரு வருடமும் செய்யமுடியும். பள்ளி முதல்வர்கள் திடத்துடன் இருந்தால், இதை வழக்கமாக்கிவிடலாம். இதனால் மாணவர்கள் பெறப்போகும் அனுகூலங்கள் சொல்லி மாளாது. அத்தோடு ஒரு சமூக மாற்றத்துக்கான வித்து ஊன்றப்படும். ஆனால் இப்படிச் செய்யும் ஆசிரியர்களும் பள்ளிகளும் மிகக்குறைவே என்ற உண்மை முகத்தில் அறைகிறது. இதைப் படிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு, இதைப் போன்ற புத்தகக் கண்காட்சி நடத்துவதைப் பற்றி ஆலோசனை அளிக்கலாம். எங்கே இருந்தாவது ஒரு மாற்றத்தை நாம் தொடங்கியாகவேண்டும். புத்தக வாசிப்பு அதிகமாகாமல் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் தீவிரமாகச் செய்துவிடமுடியாது என்று நான் நம்புகிறேன். நாம் செய்யப்போகும் எந்த ஒரு செயலுக்கும் நம் புத்தக வாசிப்பு நமக்குப் பின்புலமாக இருந்து பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் என் மனமார்ந்த நன்றியை எஸ் ஆர் வி பள்ளிக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

Share