Tag Archive for திராவிடம்

The deceptions of Dravidan Movement of Tamilnadu

திராவிட இயக்க வரலாற்றுப் புரட்டுகள்

பல தலைப்புகளில் ம.வெங்கடேசன் திராவிட இயக்க அரசியல்வாதிகள் கூறி வரும் புரட்டுகளைத் தோலுரித்திருக்கிறார். ம.வெங்கடேசன் இப்படிச் செய்வது முதல் முறையல்ல, கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை.

இதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக திராவிட இயக்க அரசியல்வாதிகளின் அடிப்பொடிகள் செய்யப்போவது என்ன? வாய்க்கு வந்தபடி ஏசுவது. இந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு குறிப்பொன்றைப் போட்டதற்கே அத்தனை ஏச்சுகள். ஏசியவர் பெயரும் ராமசாமி என்றே இருந்தது. அவர்கள் வழக்கம் அது.

1. பூனா ஒப்பந்தம் அம்பேத்கருக்கு பெரியார் கடிதம் அனுப்பினாரா?
2. அருணன் என்ற மார்க்சிய வரலாற்றுப் புரட்டர்.
3. நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?
4. ஜாதியின் பெயரால் ஜாலம்
5. திருமண மந்திரத்தை திரிக்கும் மஞ்சை வசந்தன்
6. பெரியார் பற்றி வ.உ.சி.
7. பச்சையப்பன் கல்லூரி திறக்கப்பட்டது யாரால்?
8. வ.உசி.க்கு, ஈவெரா கப்பல் வாங்க பணம் கொடுத்தாரா?
9. புரட்சியாளர் அம்பேத்கர் மாட்டுக்கறி உண்ணச் சொன்னாரா?
10. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் குற்றம் சாட்டினாரா காமராஜர் ?
11. ஈவெராவால் கொண்டுவரப்பட்டதா எழுத்துச் சீர்திருத்தம்?
12. முதன்முதலாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை அமைச்சர் பதவியில் அமர்த்தியது நீதிக்கட்சியா?
13. பாரதியாருக்கு உயிர் மூச்சு தமிழா, ஆரியமா?
14. பெண்கள் சொத்துரிமை
15. பாடப்புத்தகத்தில் தவறான தகவல்

இந்தத் தலைப்புகளில் ம.வெங்கடேசன் எழுதி இருப்பவை அனைத்துமே மிக முக்கியமானவை. எந்த அளவுக்கு இவர்கள் ஒரே பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்லி உண்மை போன்று நம்ப வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பூனா ஒப்பந்தத்துக்கு ஈவெரா தந்தியடித்தார் என்பது இவர்கள் பல ஆண்டுகளாக அடித்துக்கொண்டிருந்த தந்தி. அதுவும் இணையத்தில் தமிழ் பரவிக்கொண்டிருந்த 2000களில் இந்தப் பொய்யெல்லாம் உலகபிரசித்தம். அது உண்மையே இல்லை என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்லி இருக்கிறார் ம.வெ.

கோட்ஸே ‘இஸ்மாயில்’ என்று தன் கையில் பச்சை குத்திக்கொண்டிருந்தார் என்ற பொய்யைப் பரப்பியவர்கள் இன்றுவரை அது தவறு என்று ஒப்புக்கொள்ளவில்லை.

அருணனுக்கு ம.வெ கொடுத்திருக்கும் பதிலடி மிக முக்கியமானது. ஜாகிர்தார் முறையை ஒழிக்க பாஜக முயன்ற வரலாற்றை மறைத்து, ஜாகிதார்களையே எம் எல் ஏக்கள் ஆக்கினார்கள் என்ற பாதி வரலாற்றை மட்டும் சொல்லி கம்யூனிஸ்டுகள் செய்யும் புரட்டை மவெ விரிவாக விளக்கி இருக்கிறார். உண்மையில் பாஜக அன்று செய்தது இன்று வரை அரசியலில் யாரும் செய்யத் துணியாத ஒன்று.

‘ஈவெரா என் குருநாதர்’ என்று வ உ சி சொன்னதாகச் சொல்லும் புரட்டெல்லாம் வேறு வகை. கடைசியில் பார்த்தால், ‘வ உ சி தான் என் அரசியல் குரு’ என்று ஈவெரா சொல்லி இருப்பதை மவெ ஆதாரத்துடன் பதிவிடுகிறார். (ஈவெரா இப்படிச் சொன்னதுகூட வ உ சிக்கு அவமரியதை என்பதுதான் என் நிலைப்பாடு!)


Advt
ஆரிய திராவிட மாயை, கு.சடகோபன், சுவாசம்.

பச்சையப்பன் கல்லூரி அனைத்து ஜாதியினருக்கும் திறந்துவிடப்பட்டது என்பது, இன்றைய திராவிட இயக்க அரசியல்வாதிகள் சொல்லும் பொய்களுக்கு இணையானது. அதையும் அடித்து நொறுக்கிவிட்டார் மவெ. (ஏன் மகாத்மா காந்தி ஒரு மகான் என்பதற்கும் இந்தக் கட்டுரையில் பதில் இருக்கிறது.)

ஆர் எஸ் எஸ் குறித்து காமராஜர் சொன்னதாகச் சொல்லப்படும் பொய், எப்படி திராவிட இயக்க அரசியல்வாதிகள் ஒரு வரியை வெட்டி ஒட்டி அரசியல் வரலாறே எழுதுவார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.

எல்லா ஆதாரங்களும் கிடைக்கும் நிலையிலேயே இவர்கள் இத்தனை தூரம் அரசியல் செய்திருக்கிறார்கள் என்றால், மற்ற விஷயங்களில் இவர்கள் எத்தனை தூரம் போவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

நான் அடிக்கடி சொல்வதுதான். பாஜக சார்பாகத் தொலைக்காட்சிகளிலும் வேறு விவாதங்களிலும் பங்கேற்க விரும்புகிறவர்கள் மனப்பாடம் செய்யவேண்டிய புத்தகங்கள், அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன், சுப்புவின் திராவிட மாயை புத்தகங்கள் உள்ளிட்ட இருபது புத்தகங்கள். இவற்றைப் புரிந்துகொண்டுவிட்டால், நீங்கள் விவாதங்களில் எவரையும் எதிர்கொண்டுவிடலாம். அவர்கள் பரப்பும் புரட்டுகளுக்கு அங்கேயே பதிலடி தந்துவிடலாம்.

அப்படிப்பட்ட பட்டியலில் இன்னுமொரு மைல்கல்லாகச் சேர்ந்திருக்கிறது ம.வெங்கடேசனின் ‘திராவிட இயக்க வரலாற்றுப் புரட்டுகள்’.

இந்தப் புத்தகத்துக்குத் தேவையற்ற விளம்பரம் தந்து நன்றி தேடிக்கொண்ட தமிழக அரசு அதிகாரிகளைப் போல, தமிழக அரசைப் போல, சோஷியல் மீடியா திராவிட இயக்க ஆதரவாளர்களும் செய்வார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால் அவர்களால் ஏசாமல் இருக்க முடியாது.

***
நாளை காலை 11 வரை இந்தப் புத்தகம் சுவாசம் புக்ஸ் வலைத்தளத்தில் 15% தள்ளுபடியுடன் கிடைக்கும்.

புத்தகம் வாங்கும் லின்க் https://www.swasambooks.com/products/225301000102875007

Share