Tag Archive for தடுப்பூசி

ரூபெல்லா தடுப்பூசியும் வாட்ஸப் முட்டாள்களும்

என் மகனும் மகளும் படிக்கும் பள்ளியில் இன்று ரூபெல்லா தடுப்பு ஊசி போடப்பட்டது. நான்கு நாள்களுக்கு முன்பே ஊசி போடச் சம்மதம் என்று ஒரு படிவத்தில் எழுதி வாங்கிக் கொண்டார்கள். நேற்று அழைத்து, இன்று ஊசி போட வரச் சொன்னார்கள். அழக்கூடாது மஹி என்று அவளை அழைத்துகொண்டு சென்றேன். சாக்லேட் வாங்கித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டாள். அபிராமுக்கு இன்று ப்ரவீன் பூர்வார்த் பரிட்சை என்பதால் அவனுக்கு ஊசி போடவில்லை. அடுத்த முகாமில் போடவேண்டும்.

பள்ளியில் கூட்டமே இல்லை. நான் 8 வயதில் இருக்கும்போது காலரா தடுப்பூசி போட்டார்கள். அப்போதும் இதேபோல் ஒரு வதந்தி இருந்தது. காலரா ஊசி போட்டால் கண்ணு போகுதாம், காது போகுதாம், அதுவா டாம் டாம்னு வெடிக்குதாம் என்ற வதந்திகளை மீறி மக்கள் சாரை சாரையாக வந்து வரிசையில் நின்று போட்டுக்கொண்டார்கள். சேரன்மகாதேவியில் நாங்கள் குடி இருந்த தெருவில் எங்கள் வீட்டுக்கு எதிரே தெருவை அடைத்துப் பந்தல் போட்டு விழா போல நடந்தது. ஊர் நண்பர்கள் குழந்தைகளை அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்து ஊசி போட்டார்கள். ஊசி போட்டால் ஆரஞ்சு மிட்டாய் தருவார்கள். காய்ச்சல் நிச்சயம் வரும் என்றார்கள். காய்ச்சல் வந்தால் 2 நாள் பள்ளிக்கு மட்டம் போடலாம் என்ற என் ஆசையில் மண் விழுந்தது. சரியாக எனக்கு மட்டும் காய்ச்சலே வரவில்லை. நம் வாழ்க்கையில் இப்படி ஒரு தோல்வியா என்று நான் துக்கித்துக் கிடந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் 40 வயது மாமாவுக்கும் அத்தைக்கும் கை வீங்கி அதற்கு தனியே மருத்துவம் பார்க்க ஹைகிரவுண்டு போனார்கள்.

இன்று வாட்ஸப் ஃபேஸ்புக் காலம். விவஸ்தையே இல்லாமல் புரளிகள் மட்டுமே உண்மை என்று சுற்றி வரும் காலம். எவ்வித யோசனையும் இன்றி, காசா பணமா என்று எல்லாவற்றையும் ஃபார்வெர்ட் செய்து பெருமை பீற்றிக்கொள்ளும் முட்டாள் கூட்டம். எதை அனுப்புகிறோம், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் எந்த யோசனையும் கிடையாது. மீம்ஸா அனுப்பு. செய்தியா அனுப்பு. எதையும் யோசிக்க நினைப்பதில்லை. யோசிக்க கொஞ்சம் மூளையும் அவசியம் என்பதால் இப்பிரச்சினை. இதில் உச்சம் என்னவென்றால், இதையே செய்தியாக நம்பி வெளியிடும் பத்திரிகைகளில் பொறுப்பற்ற மூடத்தனம். இதனால் இப்பிரச்சினை இன்னும் கூடுதல் சிக்கல் கொள்கிறது. இன்னும் அதிகம் பகிரப்படுகிறது. வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக்கின் புரளிகளின் ஆதாரம், ரூபெல்லா தடுப்பூசிக்கு வந்திருக்கும் பயம்.

அரசு கரடியாகக் கத்தினாலும், புத்தி உள்ளவர்கள் இதன் தேவை பற்றிக் கதறினாலும், இவர்களின் செயல்பாட்டைவிட லட்சம் முறை அதிகம் பேசப்படுவது புரளிகளே. இந்த ஒட்டுமொத்த தடுப்பூசிகளினால் ஏற்படும் நன்மை என்ன, தேவை என்ன என்பதன் விவாதம் நிச்சயம் தேவைதான். ஆனால் அதை முன்னெடுக்கும் விதம், இதைப் போட்டால் உயிர் போய்விடும் என்ற ரீதியில் அல்ல. இதனால் பயந்துபோய் பலர், பெருவாரியானவர்கள் ஊசி போடவில்லை.

இன்று பள்ளியில் பேசிக்கொண்டிருந்தபோது, 40 பேர் உள்ள வகுப்பில் 5 பேர்தான் போடச் சம்மதித்திருக்கிறார்கள். பலருக்கு வாட்ஸப்பில் வந்த வதந்தியால் பயம். இவர்கள் புத்திசாலித்தனமான வாதமாகச் சொல்வது, “அது பொய்யாவே இருக்கட்டும். ஆனாலும் எதுக்கு ரிஸ்க்?” என்பது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.

மிகச் சொற்ப அளவில் வந்திருந்த குழந்தைகளுக்கே இன்று ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது. போட்டவுடன் ஒரு அறையில் அரை மணி நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். அப்வர்வேஷனில் இருக்கவேண்டும் என்றார்கள். இதெல்லாம் வாட்ஸப்பின் கைங்கர்யம்தான். அரை மணி நேரம் காத்திருந்துவிட்டு, நர்ஸுகளுக்கு நன்றி சொல்லிவிட்டு மஹியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.

“என்னப்பா வீட்டுக்கு போகாம எங்க போற?” என்றாள் மஹி. “சாக்லெட் வாங்க” என்றதும், அவள் சொன்னது. “என்னப்பா நீ. நெஜமாவே வாங்கித் தர! மிஸ்ஸெல்ல்லாம் நாங்க சேட்டை செஞ்சா டார்க் ரூம்ல போடுவோம்னு சொல்லுவாங்க. ஆனா போடவே மாட்டாங்க. எங்களுக்கெல்லாம் நல்லா தெரியும் அவங்க போடமாட்டாங்கன்னு. ஆனாலும் நாங்கள்லாம் அப்படியே பயந்து போய் அமைதி ஆயிடுவோம். நீ என்னடான்னா சாக்லெட் வாங்கித் தர!”

🙂

Share