Tag Archive for சேர்மாதேவி

Amma and the scorpions

அம்மாவுக்குக் கடக ராசி. அதாவது நண்டு. ஆனால் அம்மாவுக்கு நண்டு, தேள் போன்ற எந்த ஜீவராசிகளையும் பிடிக்காது. யாருக்குத்தான் பிடிக்கும்? ஆனால், தேள்களுக்கு அம்மா என்றால் பிடிக்கும் என்பதுதான் பிரச்சினை. எப்படித்தான் தேடி வந்து சரியாக அம்மாவைத் தேள்கள் கொட்டுமோ தெரியாது.

 1985 வாக்கில் சேர்மாதேவியில் தேள்களைத் தினம் தினம் பார்க்கலாம். நம்முடன் வீட்டில் வசிக்கும் ஒரு சக உயிரிநண்பன் மாதிரி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். அந்தக் காலத்து வீடுகளில் விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும். தெருவில் இருந்து வீட்டுக்குள் வரும் போது காலைத் துடைத்துக் கொண்டு வர சாக்குதான் போடப்பட்டிருக்கும். சிறுவயதில் எங்கோ படித்த நினைவு. சாக்குகளில் தண்ணீர் தெளித்து ஓரமாகப் போட்டு விட்டால் பத்து நாட்களில் அங்கே தேள் குட்டிகள் பிறந்திருக்கும் என்று.  தேள் குட்டிகளால் குஞ்சுகளா என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டுமாம்!

அம்மாவுக்கு ஒரு வழக்கம் உண்டு. வீட்டுக்குப் பின்புறத்தில் இருக்கும் மரங்களில் இருந்து விழும் சுள்ளிகளைப் பொறுக்கி அதில்தான் வெந்நீர் போடுவாள். வெந்நீருக்கு விறகைப் பயன்படுத்தினால் கட்டுப்படியாகாது என்பது அவளது எண்ணம். வெட்டியாகப் போகும் சுள்ளிகளை வீணாக்கக்கூடாது! பொறுக்கிய சுள்ளிகளை ஓரிடத்தில் அழகாக அடுக்கி வைப்பாள். அங்கே சென்று பாதுகாப்பாக வாழத் தொடங்கும் தேள்கள்.

திருநெல்வேலி, சேர்மாதேவி, கல்லுப்பட்டி, சந்தாஸ்பத்திரி என எல்லா இடங்களிலும் இப்படி அம்மா சேமித்து வைத்தது உண்டு. காலை அம்மா வெந்நீர் போட சுள்ளி  எடுக்கும்போது சரியாகத் தேள் அவள் கையில் கொட்டும். அம்மா டாக்டருக்கு ஓடுவாள். ஒரு முறை அவள் விரலில் கொட்டிய தேளின் கொடுக்கு இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். ஒரு தடவை தேள் அம்மாவின் கை விரலில் கொட்டியதில் விரல் வீங்கி கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு அந்த விரலை அசைக்க முடியாமல் இருந்தது.

வீடுகளில் பூனைகள் வளர்த்துக் கொண்டிருக்கும் போது இந்தத் தேள்களின் பிரச்சினை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனாலும் தேள்களுக்குப் பூனைகளும் பயப்படத்தான் செய்யும். பூனை உடல் விதிர்த்து ரோமங்கள் தூக்க ஏதேனும் இடத்தை வெறித்துப் பார்க்கத் தொடங்கினால் அங்கே தேள் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்வோம்.

ஒரு முறை சேர்மாதேவி வீட்டில் மாடியில் இருந்து என்னவோ சத்தம் கேட்க அனைவரும் மேலே போய் பார்த்தோம். அங்கே மாடியில் ஒரு பொந்திலிருந்து இன்னொரு சிறிய பொந்துக்கு வரிசையாக தேள்கள் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்து 10 தேள்களாவது இருக்கும். ஒரு பெரிய தேள். மற்றவை எல்லாம் சிறிய தேள்கள். ஆச்சரியத்துடன் பார்த்தோம். அவை எங்களைப் போடுவதற்கு முன்பே மாமா அவற்றைப் போட்டுத் தள்ளி விட்டார்.

நான் கடைசியாக நட்டுவாக்காலியை பார்த்தது திருநெல்வேலியில் சந்தாஸ்பத்திரி வீட்டில் இருந்தபோதுதான். நல்ல மழை நாளில் மரத்தின் பச்சையங்கள் கீழே சிதறி இருக்க வானம் கிளர்ந்திருந்த சமயத்தில் அங்கே கிடந்த நாகலிங்கப்பூவை எடுக்கப் போனேன். அப்போது ஏதோ ஓர் அசைவு கண்ணில் பட, பார்த்தால் அழகாக கருமையாக ஒரு நட்டுவாக்காலி. அது தேள் என்றே நினைத்தேன். ஆனால் நட்டுவாக்காலி.

பகலில் தேள் கண்ணில் பட்டுவிடுகிறது. இரவில்? இரவில் தேள்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அம்மா ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். தூங்கப் போகும் போது சங்கர கோமதி அம்மனை நினைத்துக் கொள், எந்த விஷ ஜந்துகளும் கெட்ட கனவுகளும் உன்னை அண்டாது என்பார். தன்னை எத்தனையோ முறை தேள் கொட்டி இருந்தாலும் உறக்கத்தில் இருக்கும்போது மட்டும் தேள் கொட்டியதில்லை, காரணம் கோமதி அம்மன்தான் என்பார். இன்று வரை இரவு கோமதி அம்மனை நினைத்துக் கொண்டுதான் படுத்துக் கொள்கிறேன்.

இப்போதெல்லாம் தேள்களைப் பார்க்கவே முடியவில்லை. கல்யாண்ஜி மோடில் இருந்தால் தாவிக் குதிக்கும் தேரைகளைப் பார்த்து விட முடிகிறது, தேள்களைத்தான் பார்க்க முடியவில்லை என்று எழுதலாம். ஆனால் அதை எல்லாம் கல்யாண்ஜி போன்றவர்கள் எழுதினால்தான் சரியாக வரும்.

பின்குறிப்பு: அம்மா சொன்னது, “என் மாமியார், அதான் உன் பாட்டிக்கு விருச்சிக ராசி.” நான் கேட்டது, “எப்படி ராசி மாறிப் போச்சு?”

Share