சர்தார் உதம் (H) – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படம். இப்போதுதான் பார்த்தேன். ஹிந்தித் திரைப்படம் என்றாலும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான மேக்கிங். மே அடல் ஹூம், சாவர்க்கர் திரைப்படங்களில் அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. காரணம், அப்படி படம் எடுப்பது அதிக செலவையும் கற்பனையையும் கோரும் ஒன்று. காலாபாணி திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் இவ்விஷயத்தில் கறாராக இருப்பார்கள். காரணம் பெரிய பட்ஜெட்.
கலை விஷயத்தில் கவனமாகவும் பிரமாண்டமாகவும் தயாரிக்கப்படும் படங்கள் காட்சி ரீதியாகப் பார்வையாளனுக்குக் கடத்தும் பல விஷயங்கள் முக்கியமானவை. சர்தார் உதம் இந்த விஷயத்தில் ஹாலிவுட் திரைப்படத்துக்கு இணையாக வந்திருக்கிறது. சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்கள்.
படத்தைப் பொறுத்தவரை, திரைக்கதை ரிவர்ஸ் பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவையே உலுக்கிய ஜாலியன்வாலா பாக் படுகொலைக்காக ஒரு சீக்கிய இளைஞன் 20 வருடங்கள் காத்திருந்து பழிவாங்குகிறான் என்பது எப்போதுமே நம்மை வியக்கச் செய்யும் ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வுக்குள்ளேயே ஒரு கதை இருக்கிறது. ஆனால் இதைத் திரைப்படமாக எடுப்பது சுலபமல்ல. பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில், முதலில் ஜாலியன்வாலா பாக் நிகழ்வைக் காட்டிவிட்டு, இறுதிக்காட்சியாக மைக்கேல் ஓ டயரை (ஜாலியன்வாலா பாக் கொலைக்கு உத்தரவிட்டவர்) கொல்வதைக் காட்டுவதுதான் சிறப்பாக இருக்கும்.
ஆனால் இப்படத்தில் முதல் காட்சியிலேயே மைக்கேல் டயரை உதம் சிங் கொல்வதைக் காட்டிவிட்டார்கள். பின்னர் படம் துப்பறிவு வகைத் திரைப்படம் போல நகர்கிறது. உதம் சிங்கை பிரிட்டிஷ் போலிஸ் எப்படி விசாரிக்கிறது, ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதெல்லாம் அணுஅணுவாகக் காட்டப்படுகிறது. இதற்கிடையில் உதம் சிங்கின் வாழ்க்கை நான்-லீனியராக விரிகிறது. இறுதிக்காட்சியாக ஜாலியன்வாலா பாக் படுகொலை வருகிறது. இதுவே படத்தின் மையம் என்பதால் மிக நீண்ட காட்சியாக இதை எடுத்திருக்கிறார்கள். கண்முன்னே நிகழ்ந்த ஒரு நிகழ்வு என்பதால் பதைபதைப்புடன் இதை நாம் பார்க்கிறோம்.
முடிவு இதுதான் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும் என்ற வகைத் திரைப்படம்தான் இது. இருந்தாலும், வழக்கு விசாரணை, சித்திரவதையை இத்தனை தூரம் காண்பித்து, அதையும் விறுவிறுப்பாக எடுத்திருப்பது ஆச்சரியம்தான். மைக்ரோ விஷயங்களில் அதீத கவனம் எடுத்திருப்பதும், வழக்கு விசாரணைகளில் வரும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மைக்கு அருகில் இருப்பதும் இப்படத்தை முக்கியமானதாக்குகின்றன. உதம் சிங் தன் கையில், ராம் முஹம்மத் சிங் ஆசாத் இன்று பச்சை குத்தி இருப்பதும், நீதிமன்ற விசாரணையின்போது உதம் சிங்கின் தரப்பு பத்திரிகையில் வரக்கூடாது என்று நீதிபதி சொல்வதும், அப்போது உதம் சிங், ‘பிரிட்டிஷ் இம்பீரியலிஸம்’ ஒழிக என்று கத்தியதும் படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.
உதம் சிங்காக நடித்திருக்கும் விக்கி கௌஷல் பிரமாதமாக நடித்திருக்கிறார். இயக்கம் ஷூஜித் சர்க்கார். தமிழர்களுக்கு அறிமுகமானவர்தான். இவரது திரைப்படமான ‘மெட்ராஸ் கஃபே’ ஈழத் தமிழர்களை மட்டம் தட்டிய வகையில் இருந்ததற்காகப் பெரிய பிரச்சினை அப்போது உருவானது. இந்திய அளவில் முக்கியமான திரைப்படமான பின்க் (தமிழில் நேர்கொண்ட பார்வை) இவரது இயக்கத்தில் உருவானதுதான். இவர் இயக்கிய இன்னொரு திரைப்படம் ‘அக்டோபர்’ நம் பாலுமகேந்திராவின் இயக்கத்தைப் போன்ற ஒரு திரைப்படம். விக்கி டோனர் (தமிழில் தாராள பிரபு) இவர் இயக்கியதுதான்.
நம் நாட்டு விடுதலைக்காகப் போரிட்ட வீரர்களின் படத்தைப் பார்க்க வேண்டியது, அதுவும் இத்தனை தரமான படத்தைப் பார்க்க வேண்டியது நம் கடமை.