Tag Archive for சர்கார்

சர்கார் (தமிழ்)

சர்க்கார் –

முதலில் சில பாஸிடிவ்வான சிலவற்றைச் சொல்ல ஆசைதான். ஆனால் எத்தனை யோசித்தாலும் எதைச் சொல்வதென்று தெரியவில்லை. விஜய் அழகாக இருக்கிறார். அவ்வளவுதான். இன்னொன்றைச் சொல்லவேண்டுமென்றால் பழ.கருப்பையா, ராதாரவி தேர்வு. மிக முக்கியமான இன்னொன்று, ராதாரவி சொல்லும் வசனங்கள். இவை நிச்சயம் ஜெயமோகனின் பங்களிப்பாகவே இருக்கவேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை நன்றாக உள்ளது. இதற்கு மேல் தேத்தமுடியாது.

மற்றபடி

வலுவே இல்லாத கதை. அதனால் எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் அலைபாயும் திரைக்கதை.

அரசியல் ஒரு கதையென்றால், கூடவே நடிகர் விஜய்யின் முதல்வர் கனவு இன்னொரு கதை. இதனால் தமிழ்நாட்டில் நடந்த எல்லாவற்றையும் எங்கேயாவது எப்படியாவது தூவ வேண்டிய நிர்ப்பந்தம். கந்துவட்டி, ஜல்லிக்கட்டு, நீயுட்ரினோ என வாயில் வந்ததையெல்லாம் யார் யாரோ சொல்கிறார்கள்.

ஒரு நிமிடத்துக்கு முன்பு பதவி ஏற்பு ரத்து, ஒரு ஓட்டு கள்ள ஓட்டானதால் அதற்கு மறு ஓட்டு உரிமை தரப்படுவதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மறுதேர்தல் என்றெல்லாம் நம்பவே முடியாத கதை. முதல்வனும் நம்பமுடியாத கதைதான். ஆனால் அதில் தெளிவான ஓட்டமும் திரைக்கதையும் இருந்தன. முதல்வன் போல ஒரு படம் எடுப்பது அத்தனை எளிதில்லை என்று நிரூபிக்கிறது சர்கார். கூடவே விஜய்யின் அரசியல் ஆசையும் சேர்ந்துகொண்டதால் தெலுங்குப் படம் போல போகிறது.

இதற்கிடையில் விஜய்யின் கமர்ஷியல் ஹீரோ பிம்பத்தையும் கட்டிக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. குப்பத்துக்குப் போய் பேசி மீனவன் என்கிறார். உடனே நம்பி ஓடி வருகிறார்கள். (அதிலும் அந்த தக்காளி விளக்கம் ஐயையோ.) ஆளும் கட்சி கூட்டத்துக்குப் போயே பேசுகிறார். நாம் திடீரெனக் கனவு காண்போமல்லவா, ஜெயலலிதா நாளைக்கே ஜெயிலுக்கு போனால், கருணாநிதி கைதானால் என்று, அதை அத்தனையும் விஜய் செய்கிறார். ஆளும்கட்சியின் முதல்வர் மரணம் அடைந்தாலும் 15 நாளில் தேர்தல் நடக்கிறது. படத்தின் போக்குக்கு இது முக்கியம் இல்லைதான். ஆனால் இப்படிப் பல நெருடல்கள்.

ஒரு ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டால் பேலட் ஓட்டு பதிவு செய்யப்படவேண்டும் என்பது விதி. தேர்தலின் முடிவில் குழப்பம் இருந்தால் தேவைப்பட்டால் மட்டுமே அந்த பேலட் ஓட்டு கணக்கில் கொள்ளப்படும். விஜய் பேலட் ஓட்டும் போடுவதில்லை என்பதால் என்றாரம்பித்து என்ன என்னவோ செய்து… முடியல. அதிலும் அந்த கொடுமையான க்ளைமாக்ஸ், கற்பனை வறட்சி. ஓட்டுப் பதிவு தொடங்கி பாதி நேரம் பதிவு கழிந்தும்… ரொம்ப ஓவருங்க இதெல்லாம். தாங்கமுடியலை.

பல முக்கியமான காட்சிகளில் விஜய் என்னவோ போல் பேசி வெறுப்பேற்றுகிறார். அதிலும் ஆளும்கட்சி அலுவலகத்துக்குள்ளே போகும் காட்சி (ஆமாம், இப்படி ஒரு காட்சி!) கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும்போதே விஜய் அடிதடியில் இறங்கி அக்காட்சியை காலி செய்கிறார். சாதாரணமாகப் பேசுவதே இல்லை. மீண்டும் தேர்தல் என்பதைக் கூட அடிவயிற்றிலிருந்து உணர்ச்சி பொங்க மட்டுமே பேசுகிறார் விஜய். இப்படியே போனால் பிற்கால சிவாஜியாகிவிடுவார் என்று நினைக்கிறேன்.

படத்தில் எனக்குப் பிடித்த ஒரே காட்சி, வரலட்சுமி பழ.கருப்பையாவுக்கு மருந்து கொடுக்கும் காட்சிதான். அதற்குப் பின்னர் தெலுங்குப் படமாகிவிட்டது.

வலுவற்ற கதை, வலுவற்ற திரைக்கதை, திக்கின்றி அலையும் காட்சிகள். சீரியஸான காட்சியில் சொதப்பும் விஜய். இதுதான் சர்க்கார்.

Share