Tag Archive for சந்திரலேகா

இரண்டு நேர்காணல்கள் – சந்திரலேகா ஐ ஏ எஸ், சிவாஜி சொண்டிநேனி

இரண்டு நேர்காணல்கள்
 
* சந்திரலேகா ஐ ஏ எஸ் உடனான நேர்காணல் – ஹரிஹரன் எடுத்தது. ராஜபாட்டை – தந்தி டிவி. மிக நல்ல நேர்காணல். ஆனால் முக்கியமான நேர்காணல் என்று தோன்றவில்லை. சந்திரலேகா இதுவரை பேசியதில்லை என்பதால் இந்நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. ஹரிஹரன் மிக அழகாகக் கேள்விகளைக் கேட்டார். ஆம், அழகாக. எந்தத் தவறான தொனியும் வந்துவிடக்கூடாது, அதே சமயம் எல்லாக் கேள்விகளையும் கேட்டுவிடவேண்டும் என்கிற பொறுப்புணர்வு தெரிந்தது. சந்திரலேகா எவ்வித அலட்டலும் இல்லாமல் (நான் கேட்ட வரைக்கும்) எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவாகவே பதில் சொன்னார்.
 
தன் மீதான அமில வீச்சுக்கு ஜெயலலிதா வேண்டுமானால் காரணமாக இருக்கலாம் (அல்லது அவர்தான் காரணம்) என்ற ரீதியில் பேசியவர், நிச்சயம் சசிகலாவும் நடராஜனும் காரணமாக இருக்கமுடியாது என்றார். அதற்கான காரணம், மிக எளிமையாக, தனக்கு அப்படித் தோன்றுகிறது என்றும், சசிகலாவும் நடராஜனும் நண்பர்கள் என்பதால் அப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்.
 
நேர்காணலின் ஒட்டுமொத்த தொனி – சசிகலா தியாகி, ஜெயலலிதா மக்கள் நினைப்பது போலப் புனிதமானவர் அல்ல, எல்லாத் தவறுகளுக்கும் சசிகலாவே காரணம் என்றும் ஜெயலலிதாவுக்கு நல்லவை மட்டுமே சேர்கிறது என்றும் இவற்றை ஏற்பதற்கில்லை என்றும் சந்திரலேகா சொல்கிறார். ஒருவகையில் சசிகலா ஜெயலலிதாவை இப்படிப் பிரித்துப் பார்ப்பதே தவறு. எல்லாத் தவறுகளுக்கும் இருவருமே காரணம். மக்கள் ஜெயலலிதா காரணமல்ல என்று நினைத்தால் சந்திரலேகா சசிகலா காரணமல்ல என்று நினைக்கிறார். இரண்டுமே முட்டாள்தனம். இருவருமேதான் காரணம் அவரவர்கள் நிலையில்.
 
தன் மீது அமில வீச்சுக்கு சசிகலா காரணமாக இருக்கமுடியாது என்று சொன்னதற்கு சந்திரலேகா சொல்லும் காரணமெல்லாம் குழந்தைத்தனமானது. எதோ ஒரு வகையில் சுப்பிரமணிய சுவாமியின் இன்றைய திடீர் குபீர் சசிகலா ஆதரவுக்கு இணையான நேர்க்கோட்டை சந்திரலேகா வரைகிறார்.
 
மக்கள் மனத்தில் இருக்கும் கேள்விகளை ஹரிஹரன் கேட்டவகையில் மட்டும் இது முக்கியமான நேர்காணல். பத்து பேரை உட்கார வைத்து நேரடி ஒளிபரப்பில் குய்யோ முறையோ என்று கத்தவிடுவதற்குப் பதிலாக ஹரிஹரனை இது போன்ற பேட்டிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே முஷாரஃப்புடன் எடுத்த நேர்காணலில் கலக்கினார் என்பது நினைவுக்கு வருகிறது. ஜெயலலிதா மீதான சாஃப்ட் கார்னரை ஹரிஹரனால் மறைக்கவே முடியவில்லை என்பது, அவரை எனக்குப் பிடிப்பதற்கான இன்னொரு காரணம். 🙂
 
* இரண்டாவது நேர்காணல் – சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த நேருக்கு நேர் – சிவாஜி சொண்டிநேனி (உச்சரிப்பு சரியா?!) – இலுமினாட்டிகளின் உலகத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்தார். சிரித்து சிரித்து மாளவில்லை. நல்ல சிரிப்பு நாடகம் பார்க்க விரும்புகிறவர்கள் இதைப் பார்க்கலாம். கேள்விகளும் பதில்களுக்கு ஈடாக நகைச்சுவை வாய்ந்தவை என்பது சிறப்பம்சம். பாஜக பெயரைச் சொல்ல கேள்வி கேட்டவர் அடித்த குட்டிக்கரணம் ஆசம். ஆபரேஷன் திவிராடா-வில் கூட கமலுக்கு இடமில்லை என்பதுதான் சோகமான விஷயம். 😀
Share