சச்சின் – இன்னொருவரின் நம் டைரி
சச்சின் டெண்டுல்கர் கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவு நாயகன். இன்று அரைக்கிழவர்களாகியிருக்கும் ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் எப்படி இளையராஜா ஒன்றரக் கலந்திருக்கிறாரோ அப்படி ஒவ்வொரு இந்திய அரைக்கிழவர்களின் பெரும்பாலான கனவாக சச்சினே இப்போதும் எஞ்சியிருப்பார். சச்சின் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் நாம் அவரது ஆட்டத்தைப் பார்த்தது நம் வாழ்நாளின் கொடுப்பினை என்று உறுதியாக நம்பும் ஒரு மிகப்பெரிய மக்கள்திரளுள் நானும் ஒருவன். இன்று கிரிக்கெட்டைப் பார்ப்பதை நிறுத்திவிட்ட பலரும் விரும்புவது ஒரு டைம் மிஷினில் மீண்டும் சச்சினின் யுகத்தைச் சென்றடைந்துவிடமாட்டோமா என்பதையே. அப்படி ஒரு டைம் மிஷின்தான், சச்சின் – பில்லியன் ஆஃப் ட்ரீம்ஸ், கொஞ்சம் குறைகளுடன்.
படம் என்று நம்பிச் சென்றவர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை நிச்சயம் சந்தித்திருப்பார்கள். நான் ஒரு வாழ்க்கையைத் தேடியே சென்றேன். என் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ‘இப்படத்தில்’ பெரும்பகுதியில் நடிகர்கள் இல்லை. மினுமினுப்புக் காதல் இல்லை. நாடகிய துரோகங்கள் இல்லை. இப்படி ஒரு படத்தைப் பார்க்கமுடியும் என்று நம்பமுடியாத ஒரு டாக்குமெண்ட்ரியாக இத்திரைப்படம் வந்திருப்பது பெரிய மகிழ்ச்சிக்குரிய விஷயமாக எனக்குப் படுகிறது.
இன்னொருவரின் டைரியில் நம் வாழ்வின் மறக்கமுடியாத பக்கங்கள் நம்கண்முன்னே விரியும்போது, மீண்டும் அவ்வாழ்வுக்குள் சென்றுவிடமாட்டோமா என்ற ஏக்கம் இணைகோடாகத் திரைப்படம் முழுக்க விரிகிறது. சச்சின் அவுட்டா, இந்தியாவே அவுட்டு என்ற வசனங்களையெல்லாம் எத்தனை முறை கேட்டிருப்போம், சொல்லி இருப்போம். இது நடந்து பத்து வருடங்கள்தான் ஆகிறது என்பதால் வரலாற்றை மிக அருகில் இருந்து மீண்டும் ஒரு முறை வாழ்ந்தது போன்ற உணர்வுடன் பார்க்கமுடிகிறது.
சச்சினின் நீண்ட நெடும் பயணத்தில் எதை எடுப்பது எதை விடுவது என்பது மிகப்பெரிய சிக்கல் என்பது உண்மைதான். எனவே மிக முக்கியமான ஹைலைட்டுகளை மட்டும் வைத்துக்கொண்டு, உச்சகாட்சியாக உலகக் கோப்பை வெல்வதை நோக்கியே படம் பயணிக்கிறது. சஸ்பென்ஸ், திரில் எதுவும் இல்லை என்பதால் நிஜமான உணர்வுடன் படத்தைப் பார்க்க முடிகிறது. பத்து முக்கியமான விஷயங்களை மனத்தில் வைத்து எடுத்ததெல்லாம் சரிதான். ஆனால் எப்படி மிக மிக முக்கியமான வாழ்க்கைத் தருணங்களைத் தவறவிட்டார்கள் என்று யோசிக்கும்போது வரும் எரிச்சல் இன்னும் அடங்கவில்லை.
சச்சினின் முதல் ஆட்டத்தில் அவர் டக் அவுட் என்பது, இது போன்ற திரைப்படத்துக்கு எத்தனை முக்கியமான பதிவு? அடுத்த சச்சின் அடையப்போகும் உயரத்துக்கு இது எத்தனை முக்கியமான எதிர்முனை? கோட்டை விட்டிருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில் தொடங்கும் சச்சினின் வாழ்க்கையைச் சொன்னவர்கள் சச்சினின் ஒருநாள் முதல் போட்டியைப் பற்றிப் பேசவே இல்லை. இதைவிட அநியாயம், சச்சின் முதன்முதலாக எப்போது துவக்க ஆட்டக்காரராக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார் என்பதைக் காட்டவே இல்லை. ஜஸ்ட் ஒரு வரியில் பேச்சில் அதைக் கடந்துவிட்டார்கள். அந்த ஒருநாள் போட்டி சச்சினின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் நிறத்தையே மாற்றியது. அது ஒரு வரலாற்றுத் தருணம். அதையும், அதை நிகழ்த்திக்காட்டிய அசாருதீனையும், அத்தருணத்தை அற்புதமாக்கிய சச்சினின் பேட்டிங்கையும் காட்டாத ரணம் இன்னும் ஆறவில்லை. இதையெல்லாம் விடப் பெரிய அக்கிரமம், நூறுகளாக அடித்துக் குவித்த சச்சின் அடித்த முதல் சதம் பற்றிய விவரணை இல்லாதது. என் நினைவில் தோராயமாக 80 ஆட்டங்களுக்குப் பிறகே சச்சின் சதமடித்தார் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு நிற்கவே இல்லை. இவற்றையெல்லாம் கவனமாகப் பதிவு செய்திருக்கவேண்டாமா?
இன்னொரு முக்கியத் தருணம், மணற்புயல் வீசும்போது சச்சின் அதை எதிர்த்து நின்றது. இப்படியான ஒரு நாடகத் தருணம் நிஜ வாழ்க்கையில் நடந்து அதை ஐம்பது கோடிப் பேர் பார்த்தார்கள் என்பதெல்லாம் நம்பக்கூடிய ஒன்றா? அப்படி நிகழ்ந்ததைத் திரைப்படத்தில் காட்டவேண்டாமா? அந்த ஆட்டத்தில் சச்சின் அடித்ததை மட்டுமே காண்பிக்கிறார்கள். புயலை விட்டுவிட்டார்கள்.
சச்சின் கேப்டனாக இருந்தபோது அசாருதீன் ஏற்படுத்திய பிரச்சினைகளே அதிகம் என்பதை அன்று பேசாத ஊடகங்கள் இல்லை. அதை மிகத் தெளிவாக இப்படத்தில் காட்டி இருக்கிறார்கள். அசாருதீனின் அரசியலைப் பற்றிப் பேசும்போது அசாருதீனை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும் அசாருதீனைத்தான் காமிக்கிறார்கள். அசாருதீனின் மிகப்பெரிய ரசிகனாக இருந்த எனக்கு அவர் செய்த ஃபிக்ஸிங் தந்த எரிச்சலும் ஏமாற்றமும் கொஞ்சநஞ்சமல்ல. இப்படத்தில் இக்காட்சிகளைப் பார்க்கும்போது ஏற்பட்ட பரவசமும் கொஞ்சநஞ்சமல்ல. சச்சினுக்கும் அப்படியே இருந்திருக்கவேண்டும்.
ராகுல் டிராவிட், சச்சின், சௌரவ் கங்கூலி (கூடவே கும்ப்ளே) இவர்களே இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கிய சூத்ரதாரிகள். இவர்களே இந்திய கிரிக்கெட்டை மீட்டெடுத்தவர்கள். இதை மிக முக்கியமாகச் சொல்கிறார் சச்சின் டெண்டுல்கர். மிக மகிழ்ச்சியாகக் கடந்த தருணங்கள் அவை, திரைப்படத்திலும், அன்றைய நிஜ வாழ்விலும்.
கொல்கத்தாவில் நடந்த உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோற்றதைச் சொல்லும் இப்படம், அதற்கு இணையான தோல்வியாக நான் நினைக்கும் சென்னை டெஸ்ட் தோல்வியைக் காட்டவில்லை. சச்சின் அழுது மேன் ஆஃப் தி மேட்ச் வாங்க மறுத்த ஆட்டம் அது. அவரால் இந்தியாவின் அத்தோல்வியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதுவும் பாகிஸ்தானுடன் தோல்வி. அதுவும் வெற்றிக்கோட்டைத் தொடும் வேளையிலான தோல்வி. அந்த ஆட்டத்தில்தான் சச்சினின் முதுகுவலியை உலகமே அறிந்துகொண்டது என்பது என் நினைவு. அதைப் பற்றியும் இப்ப்படத்தில் இல்லை. சிம்பாப்வேவின் ஒலங்காவுக்கு தண்ணிய காட்டியது பற்றியெல்லாம் மூச்சே இல்லை.
வெங்கடேச பிரசாத்தின் ஒரு பந்தில் ஃபோர் அடிக்கும் அமீர் சோஹைல் (சரிதானா?) அடுத்த பந்திலேயே அவுட் ஆகும் காட்சியை சச்சின் ஒரு குழந்தையைப் போலச் சொல்கிறார். ஒட்டுமொத்த திரையரங்கமும் அதிர்ந்தது. தோனியைக் காட்டும்போது, டிராவிட், கங்குலி, ஷேவக் என ஒவ்வொருவர் வரும்போது தியேட்டர் அலறுவதைப் பார்க்கவும் குதூகலம் கொள்ளவும் நீங்கள் 1989ல் பதின்ம வயதில் இருந்திருக்கவேண்டும். இன்று நாற்பதைத் தொடும் அத்தனை பேரும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தங்கள் குழந்தைகளுக்குக் காட்டவேண்டும் என்ற வெறியில் தியேட்டரில் குழுமி இருந்தார்கள் என்றே நினைக்கிறேன்.
தோனியைப் பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் சச்சின் முன்வைக்கவில்லை. கிரேக் சாப்பல் பற்றி மிக விளக்கமாகச் சொல்லும் சச்சின், அசாரூதினைப் பற்றிய கருத்தைச் சொல்லும் சச்சின், 20-20 வகை ஆட்டத்தில் இருந்து தான் விலகியதைப் பற்றி எந்த ஒரு வரியையும் சொல்லவில்லை. சச்சின் தன் குடும்பத்தின் மீதும் தந்தையின் மீதும் வைத்திருக்கும் பாசமும் நம்பிக்கையும் இப்படத்தில் மிக விரிவாகவே பதிவாகிறது. உண்மையில் ஒரு குடும்பமே இந்தியாவுக்கு சச்சினைத் தர உழைத்திருக்கிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் தன்னுடன் தன் சகோதரன் அஜய் இருப்பதாக சச்சின் சொல்வதெல்லாம் ஒரு அண்ணனுக்கு எத்தனை பெரிய பெருமிதம்? சச்சினின் பணிவு படம் முழுக்க பார்க்கக் கிடைக்கிறது.
தனக்கு இப்படத்தில் வேலை இல்லை என்பதை ஏ.ஆர்.ரஹ்மான் உணர்ந்ததுதான் பாராட்டுக்குரியது. ரசிகர்களின் காட்டுக் கத்தலே பின்னணி இசை என்பதை உணர்ந்து அவர்களோடு இணைந்து பயணிக்கிறது பின்னணி இசை. எப்போது தீம் பாடல் துவங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்கமுடியாதபடித் தொடங்குகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
பாகிஸ்தானுடனான ஒவ்வொரு உலகக்கோப்பை வெற்றியின் பெருமிதத்தையும் சச்சின் பதிவு செய்கிறார். தன் உடைமைகளை வைத்திருக்கும் பெட்டியில் கடவுள்களின் படத்துடன் இந்தியக் கொடியும் இருக்கிறது. கடவுளும் தந்தையுமே தன் வெற்றிக்குக் காரணம் என்று தான் உறுதியாக நம்புவதை, உலகின் முன் பலப்பல முறை சொன்னதை இப்படத்திலும் மீண்டும் மீண்டும் சொல்கிறார் சச்சின்.
இது திரைப்படம் போல எடுக்கப்படவில்லை என்பதுதான் எனக்குப் பிடித்திருந்தது. முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் படம் டாக்குமெண்ட்ரி ஆகிறது. பின் இறுதிவரை டாக்குமெண்டரிதான். சச்சின் போல ஒருவர் நடிப்பதை எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும்? இத்தவறைச் செய்துவிடக்கூடாது என்று சரியாக முடிவெடுத்துச் செயல்பட்டிருக்கிறார்கள். கிரிக்கெட்டைப் பார்த்தே வாழ்க்கையைத் தொலைத்துவிடுவோமோ என்று என்னைப் போல அஞ்சிய கூட்டம் நிச்சயம் தவறக்கூடாத படம் இது. சுவாரஸ்யத்துக்காக அல்ல, நம்மை ஒருதடவை திரும்பிப் பார்க்க. இந்திய வரலாற்றில் இப்படியான டாக்குமெண்ட்டரியெல்லாம் வராது என்று நினைத்திருந்தேன். வந்திருக்கிறது. நிறைய குறைகள் இருந்தாலும், இந்த முயற்சிக்காகப் பார்க்கலாம்.