டிசம்பர் 4, 2006 அன்று சுரேஷ்கண்ணன் பதிவில் பின்னூட்டமாக எழுதியது. வசதி கருதி இங்கே. 🙂
படத்தின் ஆரம்பக் காட்சிகள் வெகு சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. படத்தோடு இயைந்து ஒலிக்கும் பின்னணி இசை படத்தின் பரிமாணத்தைப் பலமடங்கு கூட்டிவிட்டது. ஆனால் சத்ருகன் சின்ஹாவின் தேர்வை நான் ஏற்கவில்லை. வேறு நடிகர் யாரையாவது போட்டிருக்கலாம். அவர் சிறப்பாக நடித்திருந்தார் என்பதில் ஐயமில்லை. "கருவேலம்பூக்கள்" படத்தில் ராதிகா போல இப்படத்தில் சத்ருகன் சின்ஹாவின் உடல் நிறம் ஒத்துழைக்கவில்லை. அந்தக் கிழவர் ஏன் கங்கை நதிக்கரையில் தனித்து விடப்படுகிறார் என்பது விளக்கப்படவில்லை. ஆரம்பக் காட்சிகளில், அவர் உயிரிழக்கக்கூடும் என்று அவசரப்பட்டு அங்கு அழைத்துவரப்படுகிறார் என்று ஜோதிடரும் மருத்துவரும் சொல்லிக்கொள்கிறார்கள். பின் அவர் உடல்நிலை தேறத் தொடங்கியதும் அவரும் மணப்பெண்ணும் ஏன் அங்கேயே தனித்துவிடப்படுகிறார்கள் என்பதில் தெளிவில்லை. வெட்டியான் ஒருவன் இத்தனை கேள்விகளுடனும் தர்க்கங்களுடன் படைக்கப்பட்டிருப்பதே ஒரு யதார்த்தம் மீறிய புனைவுதான். அதுவும் கதை நடப்பதாகச் சொல்லப்படும் காலகட்டத்தில். ஆனால் அந்த சுதந்திரம் இயக்குநருக்கு இருப்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.
வெட்டியானுக்கும் அந்த மணப்பெண்ணும் இருக்கும் நெருக்கம் மனதளவில் மட்டுமா இல்லை உடலளவிலுமா என்பது பூடகமாக விடப்பட்ட விஷயம். நான் உடலளவிலும் இருந்தது என்றே எடுத்துக்கொள்கிறேன். அவர்கள் இருவரும் தனித்துக்கிடக்கும் இரவுக்கு மறுநாள் காலை அந்த மணமகள் கங்கையில் தலைமுழுகக் குளிக்கிறாள். அந்தக் கிழவரைப் பார்க்கும்போது அவளுக்கு ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. மேலும் வெட்டியான் அவளைப் பார்க்கும் அடுத்த காட்சியில் அவளை "காம சொரூபிணி" என்கிறான். அப்போது அந்த மணப்பெண் வெட்டியானை நோக்கி, "இன்று ஒருநாள் இரவு காத்திரு" என்கிறாள். கடைசியில் அவளை வேசி என்றும் விபசாரி என்றும் கிழவர் திட்டும்போது அவள் மன்னியுங்கள் என்று அழுகிறாள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவள் அவனிடம் உடலளவில் தன்னை இழந்திருக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
பல விஷயங்களைப் பூடகமாக விட்டிக்கும் இயக்குநர், முடிவை ஒரு கங்கையின் வெள்ளத்தில் கரைத்திருப்பது ஏற்கமுடியாததாக உள்ளது. பல பிரச்சினைகளைக் காட்டிவிட்டு யதார்த்தம் என்கிற போர்வையில் ஒரு வெள்ளத்தில் படத்தை முடிப்பதை எப்படி ஏற்கமுடியும்?
உயர்ஜாதி ஹிந்துக்களின் ஜாதி வேஷத்தைக் காட்டும் காட்சி நாடகத்தனையுடன் கூடியது. அதற்கு முன்னரே பல காட்சிகள் உயர்ஜாதி ஹிந்துக்களின் ஜாதி வேஷத்தையும் பணத்தின் மீதான மோகத்தையும் தன் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள கடவுளின் பெயரைத் துணைக்குத் தேடுவதையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன. குறிப்பாக, அந்தக் கிழவரை மணம் செய்துகொள்ள தன் மகளைத் தேர்வு செய்யும் பிராமணர், ஜோதிடரைத் தனக்கு உதவுமாறு நிர்ப்பந்திக்கிறார். வெட்டியான் பின்னொரு காட்சியில் அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பல வெள்ளியும் பொன்னும் கிடைக்குமெனக் காரணம் கூறுகிறான். மணம் செய்விக்கும் பிராமணர்களுக்கும் பொன்னும் வெள்ளியும் கிடைக்குமெனச் சொல்லப்படுகிறது. இப்படிப் பல காட்சிகளில் வேதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் ஏமாற்றிப் பிழைக்கும் உயர்சாதி ஹிந்துக்களின் தோற்றங்கள் இயல்பாகக் காண்பிக்கப்பட்டுவிட, வெட்டியானிடமே காசு கேட்பதாகக் காட்டப்படும் காட்சி நாடகத்தன்மையைத் தன்னுள் கொண்டுவிடுகிறது. அதிலும் அந்த வெட்டியான் காசை வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட, அத்தகப்பனார் காசைக் குனிந்து எடுக்கிறார். கேமரா அந்தக் காசையும் அதை எடுக்க முயலும் அத்தகப்பனின் கையையும் காட்டுகிறது. இது நாடகக் காட்சியின் உச்சகட்ட சட்டம் (fரமெ.) அதாவது இக்காட்சி யதார்த்தமும் நாடகத்தன்மையும் கலந்தே வெளிப்படுகிறது. இக்காட்சியில் பின்னாலிருக்கும் இயக்குநர் முன்னால் வந்துவிடுகிறார். இதனால் இக்காட்சியின் யதார்த்த நம்பகத்தன்மை சற்றே குறைந்துவிடுகிறது. இதையே வெட்டியான் கதாபாத்திர வடிவமைப்புக்கும் பொருத்தலாம். அங்கே இயக்குநரின் (அல்லது நாவலாசிரியரின்) முகமே முன்னுக்கு வருகிறது, யதார்த்தத்தைப் பின்னுக்குத் தள்ளி. அதேபோல் அந்தப் பெண் கிழவரிடமிருந்து சாவியைப் பிடுங்கி எறிய, அவர்கள் அதை எடுக்க அடித்துக்கொள்ளும் காட்சி. இதை இன்னும் சிறப்பாக, இத்தனை காட்சிகளின்றி படமாக்கியிருக்கலாம். பின்னர் அப்பெண் தன் தந்தையிடம் கேட்கிறாள், "மகன்கள் என்ன ஆனார்கள் என்று." அவர் "அவர்கள் திரும்பவே இல்லை" என்கிறார். இந்த இரண்டு வசனங்களே போதுமானது. அவர்கள் அடித்துக்கொண்டு ஓடுவதும் ஒருவரை ஒருவர் பின் துரத்துவதும் அதை லாங் ஷாட்டில் காண்பித்துக்கொண்டே இருப்பதும் பழமையான காட்சிமுறைகள். (படம் வந்தது 1988-இல்.) இதேபோல் தான் சதியில் எரிவதாக அவளாக நினைத்துப் பார்த்து அழும் காட்சி. எல்லாவற்றையும் காட்சிமூலம் காட்டித்தான் பார்வையாளரை உணரச்செய்யவேண்டும் என்பதில்லை. அவளின் மன உணர்வுகள், எனக்கு பயமாயிருக்கு போன்ற வசனங்கள் இதை ஏற்கனவே பார்வையாளருக்கு அளித்துவிட்டிருக்க, அவள் சதியில் எரிவதாக நினைப்பதை காட்சிப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.
மிக முக்கியமான காட்சிகள் படத்தில் ரசிக்கத்தக்கவையாக உள்ளன. அந்த மணப்பெண்ணின் தந்தையும் ஜோதிடரும் பேசிக்கொள்ளும் காட்சிகள். கிழவர் தனது புது மனைவியை முத்தமிட (அல்லது முகத்தை நெருங்கி நோக்க) முயலும் காட்சியில் அப்பெண் அழுவது. தன் முகத்தை நீரில் பார்த்துவிட்டு அந்தக் கிழவர் தன்னை அழகந்தானே என்று அந்தப் பெண்ணிடம் கேட்பது. பின்னணி இசையை ஒலித்துக்கொண்டு அந்தக் கிழவரைச் சுற்றி ஆடும் ஒரு கூட்டம். இப்படிப் பல காட்சிகள்.
சதி என்னும் வழக்கத்தைப் பற்றிய இப்படம் அதை எதிர்நோக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை மிகச்சிறப்பாக பிரதிபலித்தது. அவள் "எனக்கு பயமா இருக்கு" என்று சொல்லுமிடங்கள் சதியை எதிர்நோக்கும் பெண்ணின் உணர்வை ஒருசேரக் கொண்டு வந்துவிடுகின்றன.
கௌதம் கோஷின் இத்திரைப்படம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சில விருதுகளை வென்றிருக்கிறது. நிச்சயம் தகுதியான திரைப்படமே.
மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றியும் பாராட்டுகளும்.