ஜிகர்தண்டா xx – கார்த்திக் சுப்புராஜ் திறமையான இயக்குநர் என்று மீண்டும் பறைசாற்றும் ஒரு திரைப்படம். மிகக்கடினமான திரைக்கதை. ஒற்றைப் பரிமாணத்தில் செல்லாமல், மூன்று பிரிவுகளாகச் செல்லும் திரைக்கதை. அதிலும் கார்த்திக் சுப்புராஜின் சிக்னேச்சர் ஆகிவிட்ட திடீர்த் திருப்பம் வேறு. ஒரு படமாக மிக திறமையான திரைப்படமே.
ஜிகர்தண்டா முதல் பாகத்தில் இருந்த எளிமையே அதன் வெற்றிக்குக் காரணம். ஓர் இயக்குநர் வளர வளர எங்கோ தன் எளிமையை, நேரடியாகக் கதை சொல்லும் தன்மையை இழந்துவிடுகிறார். இப்படிக் கடினமான கதை சொல்லல் முறையே திறமையானது என்கிற எண்ணம் ஆழமாக வேரூன்றிவிடுகிறது. இதுவே ஜிகர்தண்டா xxக்கு நேர்ந்திருக்கிறது.
இடைவேளை வரை படம் மிக விறுவிறுப்பாகச் சென்றது. அதிலும் இடைவேளை ப்ளாக் எல்லாம் கச்சிதம். அதன் பிறகு திரைப்படம் ஒரு கருத்தைச் சொல்வதில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறது. அதுவரை ஒரு வாழ்வியலையும் அதற்கு இணையான கற்பனையையும் சொல்லிக்கொண்டிருந்த படம் அங்கேயே தேங்கிப் போகிறது. சினிமா என்னும் கலையை உயர்த்திச் சொல்லவேண்டிய இன்னொரு ஜிகினாவுக்குள் செல்லும்போது படம் முழுமையாகத் தொலைந்து போகிறது.
காட்டுவாசிகள் அத்தனை பேரையும் நல்லவர்களாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம், ஆளும் தரப்பு அத்தனை பேரையும் கெட்டவர்களாகக் காட்டவேண்டிய அவசரம் எனப் பல இன்றைய தேவைகளுக்குள் கார்த்திக் சுப்புராஜ் சிக்காமல் இருந்திருந்தால் இந்தப் படம் வேறு ஒரு தளத்துக்குப் போயிருந்திருக்கும்.
நம் ஊரில் ஆதிவாசிகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி மாற்றுக் கருத்தில்லை. ஆனால் 1975ல் ஓர் அரசு தமிழ்நாட்டில் இப்படி ஒட்டுமொத்த இனத்தை அழிக்க முயன்றது என்பது கொஞ்சம் மிதமிஞ்சிய கற்பனை. அதிலும் டெல்லியில் இருப்பவர்கள் இங்கே இடத்தை ஆக்கிரமிக்க நினைத்தார்கள் என்ற காரணம் எல்லாம் எஸ்கேப்பிசம்.
நிஜ வாழ்க்கையில் இருந்து பல்வேறு கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு எதிர் குணங்களை இட்டு நிரப்பி, யார் சாயலும் வராமல் பார்த்துக்கொண்டதில் இருக்கும் கவனத்தையும், கவனத்துடன் அதில் உருவாக்கிய ஆர்வத்தையும், இறுதிக்கட்ட காட்சிகளின் நீளத்தில் இப்படி வீணடித்திருக்கவேண்டாம். படத்தை முடிக்கவே கார்த்திக் சுப்புராஜுக்கு மனம் வரவில்லை. இன்னும் என்ன டிவிஸ்ட் வைக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துவார் போல.
மதுரை வட்டார வழக்கு ஓட்டவே இல்லை. இதில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். காட்டுவாசிகளின் பேச்சு வழக்கு பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்பதால் அதில் பிரச்சினையில்லை.
கார்த்திக் சுப்புராஜ் சந்தேகமே இன்றி முக்கியமான இயக்குநர். தேவையற்ற அரசியலில் சிக்கி திசை தெரியாமல் திரிவதை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இறுதிக் காட்சியில் போலிஸ் பட்டாளம் காட்டுவாசிகளைச் சுட்டுக் கொல்லும்போது போலிஸ் நீண்ட குங்குமம் வைத்திருக்கிறார். இந்த அற்பத்தனத்தில் என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை. தமிழக முதல்வர் ஓர் இனத்தையே அழிக்கப் பார்க்கிறார், ஆனால் அவருக்கு எந்த அடையாளத்தையும் தந்து சிக்கலில் சிக்கிக் கொள்ளாத புத்திசாலித்தனம் மட்டும் இருக்கிறது. நல்ல தமிழ்ப்படங்கள் இப்படிப்பட்ட திசை திருப்பல்களில்தான் காணாமல் போகின்றன.