நிமித்தம் நாவல்
எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் நாவல். நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாசிக்கும் எஸ்ராவின் நாவல் இது. அரைகுறையாகக் காது கேட்கும் ஒருவனது வாழ்க்கை. மிக நீண்ட வாழ்க்கை. அவனுக்கு மட்டுமல்ல, வாசிக்கும் நமக்குமே அந்த அலுப்பைக் கடத்திவிடக்கூடிய ஒரு நாவல்.
தேவராஜுக்கு முதல் அத்தியாயத்திலேயே கல்யாணம் என்று வருகிறது. கடைசி அத்தியாயத்தில் கல்யாணம் நடக்கிறது. இடைப்பட்ட நானூற்றுச் சொச்சம் பக்கங்களில் அவனது திருமணம், கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக எப்படியெல்லாம் தள்ளிப்போகிறது, அவன் எத்தனை பெண்களை சந்தித்தான், அவனது வாழ்க்கையில் அவனுக்கு நேர்ந்த தோல்விகள் என விரிகிறது
தேவராஜுக்கு அன்பு செலுத்த யாரும் இல்லை. அப்பா முதல் அம்மாவிலிருந்து உறவினர்கள் எல்லோரும் அவனை அன்புக்கு லாயக்கற்றவர்களாகவே பார்க்கிறார்கள். இடையில் யாரேனும் அவனுக்கு அன்பைத் தந்தால் அவர்களுடனும் ஒரு முறிவு ஏற்பட்டு வருகிறது. கடைசி வரை அவனுடன் நட்பாக அன்பாக இருப்பது அவனது நண்பன் ராமசுப்பு மட்டுமே. இப்படி அன்புக்காகவும் ஒரு பெண் துணைக்கும் ஏங்கி தெரியும் தேவராஜுவின் கதை இது.
ஆனால் நான் இந்த நாவலை எஸ்ரா என்னும் சுவாரஸ்யமான கதைசொல்லியின் ஒரு கதைத் தொகுப்பாகவே பார்க்கிறேன். தொடக்கம் முதல் இறுதிப் பக்கம் வரை புதிது புதிதாக கதாபாத்திரங்கள் வந்தவண்ணமுள்ளன. அவர்கள் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பெங்கும் விரியும் இக்கதைகள் அதன் வழியே ஒரு சித்திரத்தைக் கொண்டு வருகின்றன. இந்தக் கதைகள், தொன்மக் கதைகளிலிருந்து பேய்க் கதைகள் என நீண்டு, உண்மைக் கதைகளின் சாயல் கொண்ட கதைகள் என்பது வரை செல்கின்றன. ஒருவகையில் இந்த நாவலில் இக்கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆனால் இக்கதைகளின் சுவாரசியம், நாவலின் மையக் கதையைவிடப் பெரியதாக உள்ளது.
நாவலின் இடையிடையே தெறிக்கும் அரசியல் குறிப்புகளும் வேண்டுமென்றே நுழைக்கப்பட்டதாக உள்ளது. அந்த அரசியல் குறிப்புகளின் வழி நமக்கு வெளியாகும் கதாபாத்திரம் ஒன்றிரண்டுதான். அந்தக் காலகட்டத்தின் வழியே நாவல் நம்மை இழுத்துக் கொள்ள இந்த உத்தியைக் கடைப்பிடித்திருக்கிறார் போலும்.
எப்படியாவது தேவராஜுக்குக் கல்யாணம் ஆகி விடாதா அல்லது நாமே ஒரு பெண் பார்த்துக் கட்டி வைத்துவிட்டு விட மாட்டோமா என்று நாமே சொல்லும் அளவுக்கு அவனுக்குப் பெண் துணை தொடர்பான தோல்விகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அவன் வாழ்க்கை அங்கும் இங்கும் என ஊர் ஊராக அலைபாய்கிறது. ஒருவகையில் அவனுக்கு எதிலும் நிறைவு என்பது ஏற்படுவதில்லை. இறுதிவரை.
எஸ்ராவின் நாவல்களில் பொதுவாக எனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை என்பது, இப்படியான அல்லது எப்படியாவது ஒரு தொடர்பு கொண்டு வரும் கதைகளின் நுழைப்புதான். ஆனால் இந்த நாவலில் அப்படி வரும் காட்சியமைப்புகள் நாவலின் ஆதாரத்தை விட வெகு சுவாரஸ்யமாக உள்ளன. எனவே இந்த நாவலைப் படிப்பது மிக ரசனையாக உள்ளது.
நாவலில் வரும் பல உபகதைகள் மிகவும் ரசித்த தக்கவையாக உள்ளன. இறுதிக்காட்சிகளில், வாழ்வாங்கு வாழ்ந்த அந்த பண்ணையார் நாயுடுவின் வீழ்ச்சி… ஒரு கதை போல அறிமுகமான நபர், தலைமுறைகள் கழிந்து வீதிகளில் வரும்போது திக்கென்றுதான் உள்ளது.
ஒரு கட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார், ஒரு சாதாரணன் வாழ்ந்ததற்கான தடயங்கள் எந்த வகையிலும் இருப்பதில்லை என்று. இது குறித்து நான் பலமுறை யோசித்திருக்கிறேன். அந்த யோசனைக்குள்ளே ஒளிந்திருக்கும் ஒன்றுமில்லாதது தரும் எல்லாமுமான சிந்தனை எப்போதும் ஒரு பயத்தை அளிக்கக் கூடியது. இந்த நாவலின் சில கதைகள் அந்தப் பயத்தைச் தொட்டுச்சென்றன.