சமீபத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளான புத்தகம் கூர்வாளின் நிழலில். பதினெட்டு ஆண்டுகள் புலிகள் இயக்கத்தில் பொறுப்பில் இருந்த ஒரு போராளியான தமிழினியின் தன்வரலாற்று நூல் இது. தொடக்கத்தில் புலிகள் இயக்கத்தின்பால் தான் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும் புலிகள் இயக்கத்தில் தன் வளர்ச்சியைப் பற்றியும் அதில் தனக்கும் தன் இயக்கத்தவர்களுக்கும் உள்ள சவால்கள், உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றியும் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து புலிகள் இயக்கம் எவ்வாறு வீழ்ச்சிப் பாதைக்குச் சென்றது என்பதையும் விரிவாக விவரித்துள்ளார் தமிழினி. இப்பகுதியில் புலிகளின் மீதான தீவிரமான விமர்சனங்கள் இடம்பெறுகின்றன. போரில் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்பு தான் சரணடைந்ததையும் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதையும் கடைசியில் சொல்கிறார்.
புலிகளைப் பற்றிப் பல குற்றசாட்டுகளைச் சொல்லி வந்தவர்களுக்கு இப்புத்தகம் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. புலிகளைப் பற்றி பல்வேறு அமைப்புகளாலும் மனிதர்களாலும் சொல்லப்பட்ட குற்றங்களுக்கு நேரடி சாட்சியமாக தமிழினி இருந்துள்ளார். அவற்றைப் பதிவு செய்துள்ளார்.
ஒருவரை ஒழித்துக்கட்டவேண்டுமென்றால் புலிகள் செய்வது மூன்று விஷயங்களை. அதாவது,
“தலைவருக்கெதிராகச் சதி செய்தார், இயக்கத்தின் நிதியை மோசடி செய்தார், பாலியல் குற்றமிழைத்தார்”
என்பவையே ஆகும். தமிழினி இதைச் சொல்வது, மாத்தையாவின் விவகாரத்தை ஒட்டியே என்றாலும் ஓர் இந்தியனாக எனக்கு இந்திய அமைதிப்படையின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நினைவுக்கு வந்தன. மாத்தையா விவகாரம் பற்றி RAW வை மையமாக வைத்துப் புலிகள் கட்டிவிட்ட கதையையும் விவரிக்கிறார் தமிழினி.
“தலைவர் மேலிருந்த பக்தி விசுவாசத்தால் துரோகியான மாத்தையாவைக் கிருபன் அழித்ததாக நம்பும் போராளிகள் கிருபனையே தலைவராக ஏற்றுக்கொண்டு அவரின் கீழ் செயற்படுவதற்கு முன்வருவார்கள் என்பதுதான் ‘றோ’வின் உண்மையான திட்டம் எனவும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘றோ’வின் கைப்பொம்மையாக்குவதற்குப் போடப்பட்ட திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.”
இயக்கத்தில் நிலவிய தனிமனித வழிபாட்டைப் பற்றியும் தமிழினி குறிப்பிடுகிறார்.
“அண்ணை சொல்லுறார், செய்யத்தானே வேணும்”, “எல்லாத்திற்கும் அண்ணை ஒரு திட்டம் வைத்திருப்பார்” என்பவையாகவே இருந்தன. இதனைப் பலரும் தனிமனித வழிபாடு எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான்.”
இயக்கத்தின் தோல்விக்கு தமிழினி சொல்லும் மிக முக்கியப் பிரச்சினை வரி விதிப்பு தொடர்பானது. நீண்ட காலப் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் தாங்கள் சுரண்டப்படுவதாக நினைத்தார்கள் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு.
புலிகளின் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, இயக்கத்தில் சேர விருப்பம் இல்லாதவர்களைக் கூட, வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்வது. இதையும் தமிழினி உறுதி செய்கிறார்.
ஒரு கட்டத்தில் பிரபாகரன் முன்னிருந்த கேள்வி, மக்களைப் பாதுகாப்பதா அல்லது கோடானகோடி பணத்தைச் செலவு செய்து சேர்த்திருந்த ஆயுதங்களைப் பாதுகாப்பதா என்று சுருங்கிப் போனது
என்று இந்நூலில் தமிழினி சொல்கிறார்.
மகிந்த ராஜபக்ஷே வெல்லவேண்டும் என்பதே புலிகள் இயக்கத்தின் விருப்பமாக இருந்தது என்பதை உறுதி செய்கிறார் தமிழினி. அதற்கான காரணம், புலிகள் தாங்கள் வென்றுவிடுவோம் என்று நம்பியதுதான். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்தது என்னவோ புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டதுதான்.
“மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும், இப்பிடி இவங்களோட பேச்சு வார்த்தையெண்டு இழுபட்டுக் கொண்டிருக்கிறதுக்கு சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்; அதுக்கு சரியான ஆள் இவர்தான்”
என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டதை பதிவு செய்திருக்கிறார்.
போரில் தப்பித்தால் போதும் என மக்கள் ராணுவத்திடம் தஞ்சமடையப் போகும்போது புலிகள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை இக்குறிப்பில் பார்க்கலாம்.
“சனம் இனி ஏலாத கட்டத்தில ஆமியிட்ட போகுது, அப்பிடிப்போற சனத்திற்குக் காலிற்கு கீழே சுடச் சொல்லி இயக்கம் சொல்லுது. என்ர கடவுளே சனத்திற்குச் சுடு எண்டு எந்த மனசோட நான் சொல்லுறது. அப்பிடியிருந்தும் சில பிள்ளைகளிட்ட இயக்கம் இப்பிடிச் சொல்லுது என்ற தகவலைச் சொன்னபோது, அந்தப் பிள்ளைகள் கேக்குதுகள் ‘என்னக்கா எங்கட அம்மா அப்பா சகோதரங்களையோ நாங்கள் சுடுறது. இதைவிட எங்களை நாங்களே சுட்டுச் சாகிறது நல்லது’ எண்டு சொல்லிக் குழம்புதுகள். உண்மை தானேயடி. இப்பிடி கேவலமான ஒரு வேலையை செய்ய வேண்டிய கட்டத்திற்கு இயக்கம் வந்திட்டுது” என்று புலம்பினார்.
சகோதர இயக்கத்தவர்களைக் கொன்றவர்களின் பரிணாம வளர்ச்சி, தன் சொல் கேட்காத தன் மக்களையே சுடுவதில் வந்து நின்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, இன்னொரு குறிப்பும் முக்கியமானது.
“மக்கள் மத்தியில் தமது குடும்பங்களுடன் கலந்திருந்த அவர்கள் மீண்டும் இயக்கத்தின் செயற்பாடுகளுடன் வந்து இணைந்துகொள்ளாது விட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படியான ஓரிரு சம்பவங்கள் கடற்புலிப் போராளிகள் மத்தியில் நடந்தன.”
இந்நூலை எழுதியது ஒரு பெண் என்பதால், பல வரிகள் பெண்களுக்கே உரிய பிரச்சினைகள் பற்றி எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களது எதிர்காலம் பற்றிய தமிழினியின் சிந்தனைகள் மிக முக்கியமானவை. திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்க புலிகள் இயக்கம் முடிவெடுத்தபோது, உயர் பதவியில் இருக்கும் வயதான போராளிகள் கூட, கையிழந்த கால் இழந்த பெண் போராளிகளை மணந்துகொள்ள முன்வரவில்லை என்பதைப் படிக்கும்போது ஏமாற்றமாகவே இருந்தது.
பெண் போராளிகளுக்குத் தரப்படும் பயிற்சிகள் பற்றிய தமிழினியின் ஒரு குறிப்பு:
“குறுகியமனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசியர்கள் அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்திற்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிலுநர்கள் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத் தவறான முன்னுதாரணங்களாகவே இருந்தன.”
இப்படிச் சொல்லும் தமிழினி ஒன்றைச் சொல்கிறார், இறுதிகட்டப் போரில் தப்பிச் செல்ல முடிவெடுக்கும் தலைவர்கள் குழுவில் ஒரு பெண் போராளி கூட இல்லை என்கிறார்.
அதேபோல் புலிகள் மீதான இன்னுமொரு முக்கியக் குற்றச்சாட்டு, இதே நோக்கத்தோடு போராடிய ஏனைய சகோதர இயக்கங்களைக் கொன்றொழித்தது. அது பற்றியும் இந்நூல் பல விஷயங்களைப் பதிவு செய்கிறது.
“ஏனைய இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பில் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு எந்தக் காலத்திலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதில்லை.”
இன்னொரு இடத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் கதறல் இப்படி இருந்திருக்கிறது.
“எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே கொன்னு போட்டுதே” என்று அவர்கள் கதறினார்கள்.”
பாலியல் தொடர்பான விஷயங்களில் கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. திருமணத்திற்கு முன்னதாக அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் தமிழினி.
“அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி முகாம் ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் இயக்கத்தைச் சாராத ஆண்களுடன் பாலியல் தொடர்புகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றத்திற்காகவே இயக்கத்தின் ஒழுக்க நடைமுறைகளுக்கமைவாக அவர்களுக்கு அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தக் குற்றச் செயலோடு தொடர்பு கொண்டிருந்த ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்பட்டிருந்தது.”
புலிகளைப் பற்றி இங்குப் பரப்படும் ஏகப்பட்ட பிம்பங்களுக்கு இந்நூல் கடும் எதிர்க்கருத்தை நேரடி சாட்சியமாக முன்வைக்கிறது. எல்லாத் தீவிரவாதத் தரப்பைப் போலவே புலிகள் தரப்பும் பல்வேறு படுகொலைகளைச் செய்திருக்கிறது. போட்டியில் வெல்ல சகோதர இயக்கங்களைக் கொன்று குவித்திருக்கிறது. உதவி அளித்த நாட்டின் முக்கியமான தலைவரைக் கொன்றிருக்கிறது. அவரோடு சேர்ந்து அப்பாவி மக்கள் உருத்தெரியாமல் சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர். கட்டுப்பாடு என்ற பெயரில் பல்வேறு உரிமைகள் போராளிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. விருப்பமே இல்லாதவர்களும் புலிகள் இயக்கத்தில் சேரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆண்டன் பாலசிங்கம் சொல்வதாக தமிழினி சொல்லியிருக்கும் இவ்வரிகளே புலிகளை சரியாக விளங்கிக் கொள்ளப் போதுமானவை:
“புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை. நாங்கள் ஒரு படுகொலைப் பட்டியலைக் கொடுத்தால் அவர்களும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைப் பட்டியலுடன் வருவார்கள். ஆகவே இப்படியான விடயங்களைக் கிண்டிக் கிளறுவது இரண்டு தரப்புக்கும் பிரச்சனையான விடயமாகத்தான்.”
தமிழினின் இந்த வரிகளைப் பாருங்கள். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கான பதில் இதில் உள்ளது.
ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காக எத்தனை அன்பு நிறைந்த வழிகளை மூடிக்கொண்டு நாம் தனித்துப் போயிருந்தோம் என்பதை முள்ளிவாய்க்காலின் இறுகிப்போன நாட்கள் எனக்கு உணர்த்தின.
நான் யாழ்ப்பாணம் சென்று வந்ததைப் பற்றி எழுதிய கட்டுரைகள் இங்கே உள்ளன. (http://idlyvadai.blogspot.in/2010/09/1.html, http://idlyvadai.blogspot.in/2010/09/2.html, http://idlyvadai.blogspot.in/2010/09/1.html) அங்கே நாங்கள் சந்தித்த நண்பர் சொன்னதும் தமிழினி சொன்னதும் எப்படி ஒத்துப் போகிறது என்பதைப் பாருங்கள். ஆனால் புலிகளின் பேரைச் சொல்லி தங்கள் இருப்பை நிலைநிறுத்த விரும்புகிறவர்கள் அன்று நான் எழுதியபோது கடும் வசைகளையே பதில்களாகத் தந்தார்கள். இன்று ஒரு புத்தகமே மிக முக்கியமான ஒரு பதிப்பகத்தால் (காலச்சுவடு) வெளியிடப்பட்டிருக்கிறது. புலிகள் பேரைச் சொல்லி தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இப்புத்தகத்தையும் பல காரணங்களைச் சொல்லி மறுக்கக்கூடும். ஆனால் உண்மைகள் என்னவோ தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டேதான் இருக்கும்.
இலங்கையின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிப் பலர் கேட்கிறார்கள். உண்மையில் அங்கிருந்த 9 நாளில், பெரும்பாலும் புத்தகக் கண்காட்சியில் இருந்துவிட்டு, இலங்கையின் பெரும்பாலான, பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பார்க்காமல் இதைப் பற்றி எழுதுவது சரியல்ல. நான் கண்ட பகுதிகள் யாழ்ப்பாணமும், கொழும்பும்தான்.
இரண்டிலுமே பாதுகாப்பு மிக முக்கியமான விஷயமாக உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இதைவிட மிகக் கடுமையான பாதுகாப்பு இருந்ததாகவும், இப்போது மெல்ல மெல்ல பாதுகாப்பைக் குறைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள ராணுவ வீரர்களும் காவல்துறை வீரர்களும் ஒருவித அமைதியான மனநிலையில் இருப்பதாகத்தான் தோன்றியது.
போர் பற்றிய பயம் குறைந்துவிட்டதால், யாழ்ப்பாணத்தில் இரவுகளில் 9 மணி வரை எல்லாம் கடைகள் திறந்திருக்க ஆரம்பித்திருக்கின்றன. முன்பெல்லாம் கடைகளை மாலை 4 அல்லது 5 மணிக்கே பூட்டிக்கொண்டு போய்விடுவார்களாம்.
கொழும்பில் மிக இயல்பான வாழ்க்கையைப் பார்க்கமுடிந்தது. நாங்கள் வேனில் சென்றபோது கிட்டத்தட்ட 4 முறை நிறுத்தப்பட்டு, வேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனை என்றால், வேன் டிரைவரிடம் மட்டும் பேசி, ஆவணங்களைச் சரி பார்த்து அனுப்பிவிடுகிறார்கள். டிராக் மாறி வந்தால், அதிக வேகத்தில் வந்தால் உடனே அங்கே ஃபைன் கட்டச் சொல்லிவிடுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தின் விளையாட்டு மைதானங்களில் நிறைய சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. முன்பெல்லாம் விளையாடுவார்களா என்று உடனிருந்த இலங்கைத் தமிழர்களிடம் கேட்டபோது, விளையாடுவார்கள் ஆனால் எப்போது செல் வெடிக்கும் என்ற பயத்துடனேயே விளையாடுவார்கள் என்று சொன்னார்கள். இப்போது அந்தப் பயம் முற்றிலும் இல்லை.
இப்போதைக்கு இலங்கையின் முக்கியக் கவலை, அங்கிருக்கும் அண்டர் வேர்ல்ட் தாதாக்கள்தான் என்றார் ஒரு நண்பர். இவர்களை ஒழிப்பதையே இப்போதைக்கு முக்கிய லட்சியமாக அரசு வைத்திருக்கிறது என்றார் அவர். நிறையப் பேர் திடீர் திடீரென்று காணாமல் போகிறார்கள். இதைப் பற்றிய செய்தியைத் தொடர்ந்து தினசரிகளில் காணமுடிந்தது.
நாங்கள் அங்கிருந்த சமயத்தில் எதிர்பாராத விபத்தொன்றில் டேங்கர் ஒன்று வெடித்து இரண்டு சீனர்கள் உட்பட சிலர் பலியாகிவிட்டனர். கிட்டத்தட்ட அனைவருக்கும் இது சாதாரண விபத்தா அல்லது புலிகளின் எழுச்சியா என்னும் ஆசை தோய்ந்த சந்தேகம் இருப்பதை உணர முடிந்தது. ஒருவகையில் நிம்மதியுடனும் இன்னொரு நிலையில் இனி என்னாகும் என்னும் கவலையோடும் அவர்கள் இருப்பதாகத்தான் தோன்றியது. நான் பார்க்காத மற்ற இடங்களில் என்ன நிலை என்று தெரியவில்லை. மேலும், நான் பார்த்த இடங்களிலும் நான் சொன்னதுதான் சரியான நிலை என்று அறுதியிட்டும் கூற இயலவில்லை.
* – * –
இனி இங்கே எழுதப்போவது நாங்கள் கண்ட மனிதர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்டவை மட்டுமே. பெரும்பாலும் நானே நேரடியாகக் கேட்டவை, சில நான் நேரடியாகக் கேட்காமல், என்னுடன் வந்த நண்பர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டவை. இதை நான் அப்படியே பகிர்ந்துகொள்கிறேனே ஒழிய, இதன் அரசியல் சரி தவறுகளுக்குள் நான் நுழையவில்லை. இதில் உண்மை பொய் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கவில்லை. மேலும், தமிழர்கள் அவதிப்படும் இடங்களுக்குச் சென்று பார்த்தெல்லாம் எழுதவில்லை. அங்கிருந்த தமிழர்கள் ஓரிருவர் சொன்னதை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் ஆண்டுக் கணக்கோடு, நிலவியல் விவரணையோடு தெளிவாகச் சொன்னார்கள். என்னால் அதனை சரியாகச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. மேலும் அவர்களது யாழ்ப்பாண தமிழ் வழக்கு மொழி அதி வசீகரமுடையது. சோதனை என்னும் பெயரில் அதனை எழுதி அழகிய தமிழைக் கொடுமைப்படுத்த விரும்பவில்லை. எனவே அப்படியே எனக்குத் தெரிந்த தமிழில் எழுதுகிறேன். நம்மிடம் பகிர்ந்துகொண்ட நண்பர்களிடம் ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்து அதனையே வலையேற்றிவிடலாம் என்று எண்ணியபோது அனைவரும் பின்வாங்கிவிட்டார்கள். தங்கள் கருத்து உலகெங்கும் பரவவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது, (ஒருவர் ஆவேசமாக பிபிசி வரைக்கும் இதெல்லாம் தெரியணும் என்றார்) அதே சமயம் தங்கள் பெயர் வெளிவரக்கூடாது என்பதிலும் கவனம் உள்ளது. இனி நீங்களே படியுங்கள்.
அந்த நண்பருக்கு ஒரு மனைவி, மூன்று குழந்தைகள். முல்லைத்தீவில் பிறந்தவர். மட்டக்களப்பில் வாழ்பவர். வேலை நிமித்தம் சில ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்திருக்கிறார். தற்போது யாழ்ப்பாணத்தில், ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார். இன்னொருவர் வீட்டு மராமத்து வேலைகள். கலவையாக அவர்கள் தங்களது வாழ்க்கையில் இருந்து சொன்ன விஷயங்கள் இங்கே.
அவரது தம்பி இயக்கத்தைச் சேர்ந்தவர், அதாவது சேர்க்கப்பட்டவர். இயக்கத்தில் 4 மாதங்கள் மட்டுமே இருந்திருக்கிறார். காலில் ஒரு குண்டு பாய்ந்து, இன்னும் அக்குண்டு எடுக்கப்படாமலேயே உள்ளது. இப்போது அவருக்கு 29 வயது இருக்கலாம். திருமணம் ஆகிவிட்டது இப்போது. இயக்கத்தில் தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை குறைந்தபோது, இயக்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வந்து தமிழர் பகுதியில் இருக்கும் இளைஞர்களைக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். இதனை அறிந்த நம் நண்பரும் அவரது குடும்பமும், அந்த நண்பரின் தம்பியை மறைத்து வைத்துவிட்டது. இயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்தபோது அவரது தம்பி இல்லாததால், அவருக்குப் பதிலாக நம்மோடு பேசிய நண்பரையே கூட்டிக்கொண்டு போய்விட்டார்களாம். தம்பியைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, இவரைக் கூட்டிச் செல்லலாம் என்று சொல்லிவிட்டார்களாம். வேறு வழியின்றி, தம்பியை விட்டுவிட்டு, இவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி அங்கு சேர்ந்த அந்தத் தம்பி 4 மாதங்கள் அங்கே இருந்திருக்கிறார். பின்னர் கடைசி கட்டப் போரில் எப்படியோ அங்கிருந்து தப்பி வந்துவிட்டார். இயக்கத்திலுள்ளவர்களை சரணடையச் சொல்லியபோது இவரும் சரணடைந்துவிட்டார். இவர் இருந்தது 4 மாதங்கள் மட்டுமே என்பதாலும், இவர் மிக அடிப்படை நிலையில் மட்டுமே பணி புரிந்திருந்ததாலும் அவருக்கு ஒரு வருடம் 7 நாள்கள் சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார் நண்பர். இன்னும் பலர் வீட்டில் சிறார்களை அழைத்துச் சென்று, மறுநாளே ஒரு பெட்டியில் கொண்டு வந்து தருவார்களாம், அவன் இறந்துவிட்டான் என்று. இப்படி இறந்ததாக நினைத்துவிட்ட இரண்டு பையன்களை இப்போது உயிருடன் பார்த்துக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியானால் புதைக்கப்பட்டது யார் என்று தெரியவில்லை என்றார்.
யாழ்ப்பாணம் (1985?) இலங்கை அரசு வசம் இருந்த நேரம். புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வளைத்துவிட்டது. புலிகளின் கட்டளை, யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குச் செல்லவேண்டும் என்பது. அங்குள்ள தமிழ் மக்கள் புலிகளின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததால், கையில் கிடைத்த பொருள்களுடன் வன்னி நோக்கிச் சென்றது. கிட்டத்தட்டட் 5 லட்சம் பேர் என்றார் அவர். இரண்டு நாளாக கிட்டத்தட்ட 40 கிமீ நடந்ததாகச் சொன்னார். யார் உணவு தருவார்கள் என்றபோது, பல தமிழர்கள் அங்கங்கே உணவு உண்டாக்கிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் என்றும், வன்னியிலும் உணவெல்லாம் தயாராகவே இருந்ததாகவும் சொன்னார். ஆனால் அத்தனை எளிதில் அவர்களை வன்னிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை ராணுவம். இவர்கள் செல்லும் வழியெங்கும் குண்டுகள் வீசி, பல பொதுமக்களைக் கொன்றிருக்கிறார்கள். எப்போது என்ன நடக்கும் என்ற பதைபதைப்பில்தான் வன்னி சென்றதாகச் சொன்னார். இவர்கள் வன்னி சென்றதும், பின்னாலேயே இயக்கமும் வன்னி வந்துவிட்டது என்றும் சொன்னார்.
எப்போது எங்கே எதற்காக செல் வெடிக்கிறது என்பதே தெரியாது. வீடெங்கும் பங்கர் அமைத்து வைத்துக்கொள்வோம். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் பங்கரை நன்றாகவே வடிவமைத்துக்கொள்வார்கள். பலர் உடைந்துபோன பலகையின் மீது தென்னம்பாளையைப் போட்டு (இன்னும் நிறைய சொன்னார், ஞாபகமில்லை) பங்கர் உருவாக்கிக்கொள்வார்கள். செல் விழவும் குழந்தைகள் பழக்கப்படுத்தியதைப் போல அங்கே சென்று ஒளிந்துகொள்ளும். கடும் மழையில் பங்கரில் நீர் சேர்ந்திருக்கும். பாம்புகளும்கூட குடிவந்திருக்கும். அது தெரியாமல் அங்கே ஒளிந்துகொண்டு, பாம்பு கொத்தி இறந்தவர்கள் அநேகம்.
சண்டை என்பது எப்போதும் தமிழ் இயக்கங்களுக்கும் ராணுவத்துக்கும்தானே ஒழிய, தமிழ் மக்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பெரிய அளவில் இல்லை. ஒருவித இறுக்கம் இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், பெரிய பெரிய சண்டைகள் எல்லாமே இயக்கத்துக்கும் ராணுவத்துக்கும்தான் என்றார்.
கடைசி 3 மாத காலக்கட்டத்தில் ரொம்ப கஷ்டப்படுவிட்டோம். முல்லைத் தீவில் இருந்தோம். அரசு எச்சரிக்கை விட்டு சரணடையச் சொல்கிறது. இயக்கமோ எங்களை சரணடைய அனுமதிக்கவில்லை. மீறிச் சென்றால் இயக்கமே எங்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சம் நிலவியது. மட்டகளப்பு, சண்டை நடக்கும் பகுதி, அதைத் தாண்டி அந்தப் பக்கத்தில் கேம்ப். நாங்கள் இங்கிருந்து கேம்புக்குச் செல்லவேண்டும். கேம்ப்பில் இருந்து சண்டை நடக்கும் பகுதிக்கு அரணாக பல தடைகளை இயக்கம் ஏற்படுத்தியிருந்தது. சிறுவர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது. அவர்களும் சரியாகப் பயிற்சி அளிக்கப்படாதவர்கள். இயக்கத்தின் வசம் ஆளே இல்லை என்னும் நிலையில் சிறுவர்களை பணிக்கு கட்டாயமாக அமர்த்தவேண்டியது தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. இயக்கத்தைச் சேர்ந்த பலர் போரில் ஈடுபட மனமில்லாமல் ராணுவத்திடம் சரண்டைந்துகொண்டிருந்தார்கள். நம் நண்பர் முல்லைத்தீவிலிருந்து தன் மனைவி, மூன்று குழந்தைகளிடமிருந்து இயக்கத்திடமிருந்து தப்பித்து கேம்ப் சொல்ல முடிவெடுத்தார். இடையில் சிறிய சாக்கடை போன்ற ஒன்றைக் கடக்கவேண்டியிருக்கும். அங்கே இருப்பதெல்லாம் மல மூத்திரம்தான். வேறு வழியில்லை, அதனைக் கடக்கவேண்டும். நண்பர் தன் இரு மகன்களைக் கூட்டிக்கொண்டு அதில் இறங்கிவிட்டார். அவருடன் பல தமிழர்கள் அப்படிக் கடந்தார்கள். ஆனால் பாதியில் இயக்கம் தப்பிக்க நினைத்தவர்களை வளைத்து, அழைத்துக்கொண்டு சென்றுவிட்டது. நண்பரின் மனைவியும், மூன்றாவது கைக்குழந்தையும் (ஒன்றரை வருடம்) அந்தப் பக்கம் இயக்கத்தின் பக்கத்தில். எப்படியோ தப்பிய நமது நண்பரும் அவரது இரண்டு மகன்களும் இந்தப் பக்கம். ராணுவம் தப்பி வந்தவர்களையெல்லாம் வண்டி வைத்து கேம்புக்கு அழைத்துச் சென்றது. அங்கு, தப்பி வந்தவர்களிடம், இயக்கத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். தப்பி வந்தவர்களில் பலரது குடும்பம் அங்கேயே இருந்ததால், பலரும் தாங்களாகவே முன் வந்து இயக்கம் எப்படியெல்லாம் அரண் அமைத்திருக்கிறது, எந்த வழியில் சென்றால் பிடிக்கலாம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாள்களில் ராணுவம் அப்பகுதியை நோக்கி முன்னேறியது. இயக்கம் தன் பிடியில் உள்ளவர்களை இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி, தான் தப்பிக்க நினைத்து ஓடியிருக்கிறது. அப்போது நடந்த கடும் சண்டையில் உயிரிழந்த பொது மக்கள் பலர். நண்பரின் மனைவி தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு, தான் தப்பிக்கவேண்டிய பகுதியில் சண்டை நடப்பதால், அதன் எதிர்வழியாகச் சென்று கேம்ப்புக்குப் போய்விடலாம் என நினைத்து, எதிர்ப்பக்கமாக ஓடியிருக்கிறார். வழியெங்கும் பொது மக்களின் பிணங்கள், தலைகள், கைகள், ரத்தம். அதற்குமேல் அந்த வழிச் செல்ல முடியாது எனக் கருதி, வேறு வழியின்றி, முதலில் நண்பர் தப்பித்த அதே வழியிலேயே சென்றிருக்கிறார். அதே முத்திர மலக் குளத்தின் வழிச் செல்லும்போது, தன் முதுகில் சுமத்திக்கொண்டு வந்த கைக்குழந்தை அந்த நீரில் விழுந்துவிட, இவருக்கும் மயக்கம் வர, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. யாரோ ஒரு பெண் கைக்குழந்தையைக் கைப்பற்றித் தூக்கி எதிர்ப்புறம் விட்டிருக்கிறார். அவரே இவரது தலைமுடியைப் பிடித்துக்கொண்டு இழுத்துவந்து அக்கரையில் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். விழித்துப் பார்த்தவருக்கு பெரிய ஆச்சரியம். எப்படியோ தப்பித்து குழந்தையுடன் கேம்ப் சென்றிருக்கிறார். நமது நண்பர் ஒரு கிறித்துவர். மரியாள்தான் தன் குழந்தையைக் காப்பாற்றியது என்றும், யேசுவே தன் மனுஷி ஜீவித்திருக்கக் காரணம் என்றும் கூறினார். இப்படி தப்பித்து வந்தவர்களுள், கேம்ப் பக்கம் ஓர் ஆணும் அவரது ஒன்றரை மாத சிசுவும் மாட்டிக்கொண்டு விட்டது. மனைவியோ இயக்கத்தின் பிடியில். பசிக்கு அழும் குழந்தைக்கு, ஒரு பெண்ணைப் பிடித்து பால் புகட்டச் சொன்னதாம் ராணுவம். அன்று சமைந்த பெண்கள் பற்றியெல்லாம் பல கதைகளைச் சொன்னார் நண்பர்.
மட்டக்கிளப்பில் இருந்து கிளம்பும்போது, பெரிய குழி வெட்டி, அதனுள்ளே பாலிதீன் பையைப் போட்டு, மூன்று டிவி, கிரைண்டர் மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷினெல்லாம் போட்டு, மூடி வைத்துவிட்டு வந்தாராம். எப்படியும் சில நாள்களில் திரும்பிவிடலாம் என்று நினைத்தாராம். ஆனால் இதுவரை அங்கே திரும்ப போகமுடியவில்லை. இன்னும் ராணுவத்தின் பிடியில் இருக்கும் அப்பகுதியில், கன்னி வெடிகள் பல இருப்பதால், அதனை நீக்கிய பின்பே மக்கள் வசம் ஒப்படைப்போம் என்று ராணுவம் கூறிவருகிறதாம். அழகான வீட்டைக் கட்டி இரண்டு ஆண்டுகள் அங்கே வாழ்ந்திருக்கிறார். இலங்கை மதிப்பில் 40 லட்ச ரூபாய் வீடு. அந்த வீட்டின் புகைப்படத்தைக் காட்டினார் நண்பர். இப்போது அந்த வீடு செல்லடித்து உருவமே இழந்துவிட்டிருக்கிறதாம். மேற்கூரைகள், விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் ராணுவத்தவர்களே கொண்டு சென்றுவிடுகிறார்களாம். அவரது பைக் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு வந்தாராம். அங்குள்ள பைக்களையெல்லாம் மக்களுக்கு மீண்டும் ஒப்படைப்பது என்று ஒரு கேம்ப் நடைபெற்றதாம். அதில் ஒன்றுக்கும் ஒப்பேறாத வண்டிகளை மட்டுமே மக்களுக்குத் தந்து, பெரிய கண் துடைப்பில் ஈடுபட்டார்களாம் ராணுவத்தவர்கள். இவரது நல்ல வண்டியை அவர்கள் தரவில்லையாம் இன்னும். இதே நிலைதான் இவரது நண்பரின் நல்ல வண்டிக்குமாம். இது போல பல வீடுகளின் பொருள்கள் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லையாம்.
கடைசி மூன்று மாத காலத்தில் பலசரக்குப் பொருள்களின் விலை தாறுமாறாக விற்கப்பட்டதாம். ஒரு கிலோ அரிசியின் விலை 12,000 இலங்கை ரூபாய். ஒரு கிலோ சர்க்கரையின் விலை 3,000 இலங்கை ரூபாய். கேம்பில் ராணுவம் அரிசியும் சர்க்கரையும் வழங்குமாம். அதனை வாங்க பெரிய கியூ நிற்குமாம். காலையில் சென்றால் மாலைதான் வாங்கிவரமுடியுமாம். இப்போதெல்லாம் அங்கேயே ரேஷன் கடை அமைத்து பொருள்களை விநியோகிக்கிறார்களாம். பணமில்லாதவர்கள் எப்படி வாழ்வார்கள் என்றபோது, அப்படி அப்படித்தான் என்றார். கையில் பொருள் இருப்பவர்கள் உணவு தந்து உதவுவதும் உண்டாம்.ஒரு 20க்கு 20 அறையை நான்காக துணி போட்டுப் பிரித்து, ஒவ்வொரு இடத்திலும் ஒரு குடும்பம் தங்க வைக்கப்படுமாம். சிறிய வியாதிகளுக்குப் பார்க்க அங்கேயே மருத்துவமனையும் டெண்ட் அடித்துக்கொண்டு இருக்குமாம். லட்சக் கணக்கில் அங்கு இருந்த மக்களை ஒவ்வொரு பகுதியாக பரிசோதித்து பரிசோதித்து வெளியே அனுப்பியதாம் ராணுவம். மீண்டும் விடுதலைப்புலிகளின் தலை தூக்கிவிடக்கூடாது என்பதற்காக இந்த எச்சரிக்கையாம். தற்போது அந்த முகாமில் 30,000 பேர் இருப்பதாகச் சொன்னார். (நேற்று இலங்கை அரசு வெளியிட்டிருக்கும் குறிப்பில் முகாமில் 27000 பேர் உள்ளதாக அறிவித்திருக்கிறது.) இது போக கிட்டத்தட்ட 9,000 பேர் சரண்டைந்த புலிகள் சிறைகளில் உள்ளார்கள் என்றார். நமது நண்பர் எத்தனையோ முறை மனு அளித்தும் அவரை வெளியில் விடவில்லை ராணுவம். உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, வெளியில் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்து மனைவி குழந்தையுடன் தப்பித்திருக்கிறார் நம் நண்பர். ராணுவம் மீண்டும் தேடி வரவில்லையா என்று கேட்டதற்கு, அதெல்லாம் வரமாட்டார்கள் என்றார். அவர் கேம்ப்பில் இருந்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஐடி கார்ட்டை எல்லாம் காட்டினார் எங்களிடம்.
ராணுவம் சண்டையின்போது பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடத்தியதும் உண்மை. அதேபோல இயக்கமும் சிறுவர்களையும் பொது மக்களையும் கேடயமாகப் பயன்படுத்தியதும் உண்மை என்றார். ராணுவம் பயன்படுத்திய குண்டு பாஸ்பரஸ் குண்டுகள். ஒரு குண்டை எறிந்தால், அது ஒன்பது குண்டாகப் பிரிந்து தாக்குமாம். மேலே பட்டால் அந்த இடமே ரணமாகிக் கொப்பளித்துவிடுமாம். (ஒருவித புன்னகையுடன், இதை சப்ளை செய்தது உங்கட இந்தியாதான் என்றார்.)
மட்டகிளப்பிலிருந்து கேம்புக்கு தப்பிப்பதைத் தடுக்க, இயக்கம் பல்வேறு யுத்திகளைச் செயல்படுத்தியதாம். அதில் ஒன்று, அங்கே இருக்கும் ராணுவத்தவர்கள் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறார்கள் என்பது. ஆனால் அப்படி நடந்தது குறைவுதான் என்றார். உடனே அப்படி நடக்கவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது, நடந்தது என்றும் சொன்னார். ஆனால் புலிகள் சொன்ன அளவு நடக்கவில்லை என்றார். சட்டென, உங்கட ஐபிகேஎஃப் செய்ததைவிடக் குறைவுதான் சிங்களவர்கள் செய்தது என்றும் சொன்னார். ஐபிகேஎஃப்பும் எல்லா இடங்களிலும் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் சில இடங்களில் மிக மோசமாக நடந்துகொண்டது என்றும் சொன்னார்.
செஞ்சோலை படுகொலை பற்றிச் சொன்னார். பள்ளியில் படிக்கும் சிறார்களை இரு நாள் பயிற்சிக்கென வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது இயக்கம். பயிற்சி கொடுத்தால் நிச்சயம் ராணுவம் அழிக்கும் என்று தெரிந்தே இதைச் செய்தார்கள். ராணுவத்துக்கு பயிற்சி பெறுவது பள்ளி சிறார்களா எனத் தெரியுமா தெரியாதா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. முதல் குண்டு விழவும், பயிற்சி அளித்தவர்கள் சிறார்களை ஓடிச் சென்று வண்டியில் ஏறச் சொன்னார்கள். பயந்து போன பிள்ளைகள் வண்டியில் ஏறவும் வண்டியிலும் குண்டு விழுந்தது. படுகொலை ராணுவம் செய்ததுதான் என்றாலும், பயிற்சிக்கென அழைத்துச் சென்றது இயக்கம்தான் என்றார்.
பிரபாகரன் இறந்த அன்று எப்படி உணர்ந்தீர்கள் என்றேன். சட்டென அவர் இறந்துட்டதா இன்னும் தெரியலையே என்றார். பின்னர், 3 மாத காலம் நடந்த சண்டையின் வெறுப்பில் பிரபாகரன் மீது கடும் கடுப்பில் இருந்தோம். ஆனால் அவர் இறந்ததாகச் சொன்ன அன்று ரொம்ப வருத்தப்பட்டோம் என்றார். இனி ஏதேனும் பிரச்சினைகள் என்றால் என்ன செய்வது என்றும் தோன்றியதாகச் சொன்னார். ஆனால் இலங்கை ராணுவம் அவரது உடல் போன்ற ஒன்றையும், அவரது முகம் போன்ற ஒன்றையும் வைத்து பொய் சொல்லிவிட்டதாகச் சொன்னார். உண்மை என்றால் ஏன் அவரது உடலை பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
பிரபாகரனைப் பாத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, 1985ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, யாழ்ப்பாணம் அருகில் ஏதோ ஒரு கோவிலில் அவர் வந்தார் என்றும், அப்போது பார்த்ததுதான் என்றும் சொன்னார். கடைசியாக இயக்கத்தில் சேர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகாலம் இயக்கத்தில் இருந்திருந்தாலும் அவரைப் பார்த்திருக்க இயன்றிருக்காது என்றார்.
இனி இயக்கம் துளிர்விடுமா என்று கேட்டோம். அதற்கான வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டது அரசாங்கம் என்றார். ஒருவேளை துளிர்விட்டால் நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டோம். நிச்சயம் இல்லை என்றும், தெரிந்தால் அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடுவோம் என்றும், இன்னொருமுறை இப்படி போரின் இன்னல்களைத் தாங்கிக்கொள்ள இயலாது என்றும் சொன்னார். வெளி நாட்டிலிருந்து பணம் கொடுக்கிறவர்களுக்கு இங்கே நாங்கள் படும் வேதனை புரிவதில்லை என்றார். பின்னர் மீண்டும், இனி சில வருடங்கள் கழித்து ஏதேனும் பிரச்சினை என்றால் என்ன என்ன நடக்கும் என்றெல்லாம் தெரியவில்லை என்றார்.
புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நார்வே தூதுக் குழுவின் மூலம் நடந்த போர் அமைதி உடன்படிக்கைக் காலம்தான் புலிகளுக்கு இப்படி ஒரு வீழ்ச்சியைத் தந்துவிட்டது என்று சொன்னார். கிட்டத்தட்ட 4 வருடங்கள் போரில்லாமல் பழகிவிட்டவர்கள் மீண்டும் போருக்குத் தயாராக இருக்கவில்லை. காட்டிலும் மேட்டிலும் திரிந்தவர்களுக்கு போர் என்பது எளிமையான விஷயமாக இருந்தது. அது மாறி, இனி போர் செய்ய இயலாது என்னும் நிலைமைக்குச் சென்றதும், பலர் சரணடையத் தொடங்கியதும் பெரிய இழப்பு என்றார். கருணாவை விட்டிருக்கக்கூடாது என்றார். அதுவும் பெரிய பலவீனம் என்றார். கிழக்கு பகுதியில் கருணா பொருட்படுத்தத்தக்க ஒரு பெரிய பிரிவை தன் வசம் வைத்திருந்தார் என்றார்.
அமைதி ஒப்பந்தம் இருந்த காலத்தில், இயக்கத்தின் வசம் இருந்த தமிழர் பகுதிகளுக்குள் சரக்குகள் செல்ல, இயக்கம் வரி விதித்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தரை வழியாகச் செல்ல இன்று ஓர் இரவு போதும். யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையத்தில் இப்போதெல்லாம் கொழும்பு கொழும்பு என்று பஸ்ஸில் ஏறச் சொல்லிக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது நிலைமையே வேறு. சரக்கு வண்டிகளுக்கு, ராணுவத்துக்கு ஒரு வரி, இயக்கத்துக்கு ஒரு வரி என இரு முனை வரி கட்டவேண்டும். ஒரு சரக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர 4 நாள்கள் ஆகும். 15 நாள் ஆனதெல்லாம் உண்டு. அப்படி வரும் பணம் மூலமும், வெளிநாட்டிலிருந்து வரும் உதவிப் பணம் மூலமும் இயக்கத்துக்கு பெரிய அளவில் பணம் சேர்ந்தது. கடைசி சண்டையின்போது அந்தப் பணத்தை ஆளாளுக்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு செல் பட்டு அந்தப் பணம் அப்படியே தீ பிடித்து எரிந்ததைப் பார்த்ததாகச் சொன்னார்.
தமிழ் மக்களின் இன்னல்களுக்குக் காரணம் இயக்கமா, ராணுவமா எனச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் பட்ட கஷ்டம் யாரும் பட்டிருக்கமுடியாது. இது மட்டும் உண்மை. இந்தியா எங்களை கைவிட்டுவிட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களைப் பற்றி நினைப்பே இல்லை என்றார். இன்னொரு முதியவர், இந்திரா காந்தி இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது என்றார்.
நான் மேலே சொன்னவை எல்லாம், இரண்டு மூன்று மனிதர்களின் கருத்துகள். அவர்கள் யாருமே புலி/ராணுவ/இந்திய வெறுப்பு/ஆதரவு மனநிலையில் இருந்து பேசவில்லை என்பது என் அவதானிப்பு. ஆனால், இலங்கையில் வாழ்ந்த, இலங்கையின் அரசியல் பற்றிய தொடர் அவதானிப்பில் இருப்பவர்கள் வேறு மாதிரி இதனை எதிர்கொள்ளலலாம். அதற்கான அத்தனை நியாயங்களும் இருக்கின்றன. நான் கேட்டவரையில் என் நினைவில் உள்ளதைப் பகிர்ந்திருக்கிறேன். என் அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாக எதையும் திரித்து எழுதவில்லை என்பதை மட்டும் படிப்பவர்கள் நம்பினால் போதுமானது. என்னுடன் வந்த ஐவருமோ அல்லது ஐவரில் இருவரோ இதனை நான் கேட்கும்போது கூட இருந்தார்கள் என்பது முக்கியமானது.