Tag Archive for உணவு

சில உணவனுபவங்கள்

* முதன்முதலில் அந்த உணவின் பெயரைக் கேள்விப்பட்டபோது ச்சை என்றிருந்தது. புழுக்கு. இன்னைக்கு எங்காத்துல புழுக்காக்கும் என்று கேட்டபோது, காதில் சரியாகத்தான் விழுந்ததா என்றிருந்தது. எல்கேஏ மலம் ரேஞ்சுக்கு அந்த இருபது வயதில் திரும்ப திரும்பக் கேட்டேன். சிரிப்பு ஒரு பக்கம், அருவருப்பு ஒரு பக்கம். பாலக்காட்டு பிராமணர்களின் உணவு போல. அதைக் கொண்டு வந்து அந்த நண்பர் தந்தபோது அதைத் தொடவே இல்லை. அடுத்த முறை பெயரை மாற்றிச் சொல்லிக் கொடுத்தார். உண்ட பின்பு சொன்னார், அதுதான் புழுக்கு என்று.

* கடந்த வாரம் அப்பாவின் திதியின்போது மடிப்பாக்கம் நவபிருந்தாவன மடத்துக்குச் சென்றிருந்தோம். அங்கே நிவேதனம் வித்தியாசமாகவும் சுவையானதாகவும் இருந்தது. மக்காச்சோளம், மாதுளம் பழம், தேங்காய், ஜீனி கலந்த பிரசாதம். அவர்கள் பரிமாறும்போது அசுவாரஸ்யமாகக் கொஞ்சம் போதும் என்று சொல்லிவிட்டேன். சுவைத்தால் அட்டகாசமாக இருந்தது. மீண்டும் கேட்கவும் முடியவில்லை. மறுநாளே வீட்டில் செய்து உண்டோம்.

* சீராளன் கறி என்றொரு நண்பர் சொன்னார். என்னது அது என்று கேட்டபோது, அதன் கதையைச் சொன்னார். வெள்ளாளர்களின் சிறப்புக் கறி போல. அதன் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டதும் அந்தப் பெயரை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. பிள்ளைக் கறி கேட்ட நினைவில் அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல. புழுக்கு ச்சை என்றிருந்தது என்றால், சீராளன் கறி என்ற பெயர் பதற வைத்துவிட்டது. இப்போதும்.

* எத்தனையோ ஊறுகாய்கள் கடைகளில் கிடைக்கும். ஆனால் எதுவுமே எனக்குப் பிடித்ததில்லை. அந்த கம்பெனி பெட்டர், இது பெட்டர் என்பார்கள். அதிலிருக்கும் வினிகர் மனம் எனக்குச் சுத்தமாக ஆகாது. வினிகர் இல்லாத ஊறுகாய்கள் கடைகளில் கிடைக்காது. திருநெல்வேலியில் குரு ஊறுகாய் என்று ஒன்று உண்டு. அதில் கடாரங்காய் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய் அட்டகாசமாக இருக்கும். இதே கம்பெனியின் மற்ற ஊறுகாய்கள் அத்தனை சுவையாக இருக்காது. இந்த இரண்டு மட்டும் நன்றாக இருக்கும். இந்த ஊறுகாய் சென்னையில் கிடைப்பதில்லை. மதுரை, திருச்சியில் கிடைக்குமா என்றும் தெரியவில்லை. திருநெல்வேலியிலிருந்து யாராவது வாங்கி வந்தால்தான் உண்டு.

* சென்னையில் மாரிஸ் ஹோட்டல் என்று ஒன்று உண்டு. இந்தக் கடையைப் போல் காய்கறி பரிமாறி நான் இதுவரை பார்த்ததில்லை. எப்போதும் நான்கு காய்கறிகள் உண்டு. அதனுடன் வெங்காய சம்பலும் தனியாகத் தருவார்கள். சில சமயம் கீரைக் கூட்டும் இருக்கும். தமிழ்நாடு முழுக்க எந்தக் கடையிலும் இந்தக் கடை போலப் பரிமாறி நான் பார்த்ததில்லை. முதல்முறை வைக்கும்போதே நிறைய வைப்பார்கள். நிறைய என்றால் நிறைய. இன்றும் சென்னையில் பல கடைகளில் ஸ்பூனில் பரிமாறுவார்கள். சரவண பவன் பார்சலில் காய்கறி எல்லாம் ஸ்பூன் அளவுக்குத்தான் இருக்கும். அதிகம் காய்கறி சாப்பிடுபவர்களுக்கு அது உத்திரிணி அளவுக்கே தெரியும். மாரிஸ் கடையில் அப்படியெல்லாம் இல்லை. இரண்டாவது முறை கேட்டால் முதல்முறையைவிட அதிகம் பரிமாறுவார்கள். பேலியோ பற்றித் தெரிந்துகொண்டு அதிகம் காய் உண்ண ஆரம்பித்தபின்பு ஒவ்வொரு முறை கடைக்குச் செல்லும்போதும் பொரியல் கூட்டு கூடுதலாகக் கேட்க அவமானமாக இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் அவர்களும் சளைக்காமல் ஒரு சொட்டு மட்டுமே பரிமாறுவார்கள். ஆனால் சாதம் மட்டும் கொட்டுவார்கள். எனக்குத் தெரிந்து இத்தனை விதமான காய்கறிகளை இந்த அளவுக்குப் பரிமாறும் ஒரே கடை சென்னையின் மாரிஸ் கடைதான். ராயப்பேட்டையில் விஐபி கடை என்று ஒன்று. ஒப்பீட்டளவில் இங்கேயும் காய்கறி நிறையவே பரிமாறுவார்கள். ஆனால் சுவையிலும் அளவிலும் மாரிஸுக்குப் பக்கத்தில்கூட வரமுடியாது. மாரிஸின் சுவை அதீத சுவையல்ல. எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுக்காத மாதிரியான சுவை. நினைக்கும்போதே சென்று உண்ண ஆசையைத் தரும் இடம் மாரிஸ்.

Share