Tag Archive for இலக்கியவாதி

Exiled from Ayodhya

ராமன் வனவாசம் போன வழி – இந்த நூல் சீர்சேந்து முகோபாபாத்யாய எழுதிய நூல். இந்த நூலைப் பற்றி நான்கு வரிகளாவது எழுதாவிட்டால் ராமபாவம் என்னைச் சும்மாவிடாது.

சீர்சேந்து முகோபாத்யாயாவுக்கு ராமாயணம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லை. அல்லது வம்படியாகத் தவறாகப் புரிந்துகொள்ளும் தீவிர இலக்கியவாதியாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ராமன் வனவாசம் போன வழியைத் தேடி அவர் போவது எல்லாம் பிரமாதம்தான். உண்மையில் இது ஒரு மனநிலை. இதைச் செய்ய ஆழமான பற்றுடன் கூடிய முற்றான விலகலும் வேண்டும். இலக்கியவாதிகளுக்கே இது சாத்தியம்.

முதலில் அயோத்திக்குச் செல்லும் சீர்சேந்துவுக்கு எல்லாமே எரிச்சலாகத்தான் இருக்கிறது. பக்திப் பயணத்தைத் தன் தீவிர இலக்கிய அறிவால் அளக்க நினைப்பவர்களுக்கு இப்படித்தான் அமையும். அயோத்தி/காசியின் அறைகள், தெரு, நீர் எல்லாமே மாசடைந்திருக்க, தெருக்களில் நிலவும் ராம கோஷம் எல்லாமே எரிச்சலாகவே இருக்கிறது. ஆனாலும் மானுட நம்பிக்கை இவருக்கு இருக்கிறது. மனிதர்கள் இவரைக் கைவிடவில்லை. எல்லா மனிதர்களும் எப்படியோ உதவுகிறார்கள். இவரது பயணம் பல சுவாரஸ்யங்களுடன் தொடர்கிறது.

செல்லுமிடமெல்லாம் எப்படியோ உணவு — பணம் கொடுத்தோ இலவசமாகவோ — கிடைத்துவிடுவது இன்றுவரை இந்தியாவின் பாரம்பரியம். யாரோ எப்படியோ எங்கோ ஏனோ நமக்கு உதவுவார்கள். அவர்களைக் கடவுள் என்றாலும் சரி, மனிதன் என்றாலும் சரி. இது அனைவருக்கும் நடக்கும். (எனக்கும் நடந்திருக்கிறது.)

நூல் முழுக்க உள்ள பிரச்சினை, இவர் ராமன் சீதையின் அண்ணன் என்று தீவிரமாக நம்புகிறார். லக்ஷ்மணன் சீதையின் காதலன் என்றும் நம்புகிறார். இந்தப் பைத்தியக்காரத்தனமே பிரச்சினை. இந்தப் பைத்தியக்காரத்தனத்தின் மூலம், இலக்கியவாதியின் மூளை சிந்திக்கும் விதம்.

எத்தனையோ விதங்களில் ராமாயணம் வாய்மொழியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் எங்கேயும் ராமன் சீதைக்கு அண்ணன் என்று சொல்லப்படவில்லை. (புத்தக ஜாதகக் கதைகளில் சொல்லப்பட்டிருப்பதாக ஜடாயு சொல்லும் வீடியோ.)

சீர்சேந்துவின் ஊரைச் சேர்ந்த சுகுமார் சென் என்ற ஓர் எழுத்தாளர் எங்கோ ஒரு குறிப்பில் ‘ராமன் சீதைக்குத் தங்கை, தங்கையை மணந்துகொண்டார்’ என்று கிறுக்கி வைக்க, இந்த சீர்சேந்து அதைப் பிடித்துக்கொண்டு விட்டார். இதற்கு சுகுமார் சென் ஓர் ஆதாரத்தைத் தர, அந்த ஆதாரத்தையே புத்தகத்தில் ஆதாரமாகக் கொடுத்து, அதை வைத்து இன்னும் பல கிறுக்குத்தனங்களை சீர்சேந்து சேர்த்துக்கொண்டு விட்டார். அதிலும் குறிப்பாக இது ஆரியர்களின் வழக்கமல்ல, இந்தியர்களின் வழக்கம் என்று அவர் சொல்வது!

அவர் கொடுத்திருக்கும் ஆதாரம் என்ன?

//ரிக் வேதப் பாடல் ஒன்றில்(10-3-3) சொல்லப்படும் விஷயங்கள், ராமனுக்கும் சீதைக்கு இருப்பதாக மரபாகச் சொல்லப்படும் உறவுக்கு மாறாக உள்ளன. ராம்காதார் என்ற தனது நீண்ட கட்டுரையில் இந்த வேதப் பாடலை மேற்கோள் காட்டும் முனைவர் சுகுமார் சென்1, இதை இப்படி மொழிபெயர்க்கிறார்: பத்ரனும் (தாசர அஸ்வின்/ராமன்), பத்ராவும்(உஷை/சீதை) அருகருகே நடந்து செல்கிறார்கள்: அவனது சகோதரி(உஷை/சீதை)யின் பின்னால் அவளது காதலன்(நசத்ய அஸ்வின்/லட்சுமணன்) நடக்கிறான். அக்னி தண்மையாகச் சுடர்விட்டுப் பெருக்கி ராமனுக்குப் பிரியாவிடை கொடுக்கிறான்.//

//ஆனால் சந்தேகவாதிகளுக்கும் குறைவில்லை; அவர்கள் ராமன் ஒரு ஆரியனல்ல என்று அடித்துச் சொல்கிறார்கள். அவன் கருமை நிறத்தவன்; மேலும் தனது தங்கையான சீதையைத் திருமணமும் செய்துகொள்கிறான். இது ஆரியரல்லாத சமூகத்தின் வழக்கம்.//

அந்த ரிக் பாடல் சொல்வதென்ன?

//He comes auspicious, attended by the auspicious; then like a gallant he approaches his ‘sister’ (the Dawn). Agni, spreading everywhere with bright, knowing rays, overcomes the dark night with his shining beams.”//

வழக்கம் போல உருவமாகச் சொல்லப்படுவதை, ராமனும் சீதையும் அண்ணன் தங்கை, திருமணம் செய்துகொண்டார்கள், லக்ஷ்மணன் சீதை மேல் காதல் கொண்டான் என்றெல்லாம் உளறித் தள்ளிவிட்டார். நம்ம ஊர் வம்புப் பிரசாரம் போல அந்த ஊர் வம்புப் பிரசாகர் போல.

அதாவது ஆயிரம் ராமாயணங்கள் ராமனை சீதையின் கணவன் என்று சொன்னாலும்,எங்கேயாவது ஒரே ஒரு ராமாயணம் மாற்றிச் சொல்ல, அதைப் பிடித்துக்கொண்டு, மற்ற ஆயிரத்தையும் மறுக்கும் மனநிலைக்குப் பெயர்தான், இலக்கியவாதிகளின் மனநிலை!

இத்துடன் நிற்கவில்லை. எல்லாவற்றிலும் ஒரு குதர்க்கப் பார்வை.

லக்ஷ்மணனுடன் சீர்சேந்துவின் சந்தேகப் பார்வை நிற்கவில்லை. பரதனுக்கும் தொடர்கிறது. பரதன் ராமனிடம் இருந்து பாதுகையைக் கேட்டது, ராமன் அந்த வெயில் காலத்தில், கல்லிலும் முள்ளிலும் கஷ்டப்பட்டு நடக்கவேண்டும் என்பதற்காக என்பது இவரது கண்டுபிடிப்பு. இது உள்ளூற ராமனுக்கும் தெரியுமாம். ஏனென்றால், பரதனுக்கு மணிமுடி மேல் பேராசை, ஆனால் அது ராமனுக்குத் தரப்பட்டதால், இப்படிப் பாதுகை கேட்டு ஒரு பழிவாங்கல் என்பது சீர்சேந்துவின் இலக்கியத் திறனாய்வு.

//“பரதன் பாதுகையைத் தவிர வேறெதையும் கேட்கவில்லை. புத்திசாலி. ராமனிடமிருந்து பாதுகையை வாங்கிச் சென்றுவிட்டால் ராமன் இந்த இடத்தில் பெரும் கஷ்டத்துக்கு உள்ளாவான். ராமனின் உயிர்கூட போய்விடலாம். ஹா ஹா ஹா. இந்தப் பார்வையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” “என்ன சொல்ல? அது உண்மையாகக்கூட இருக்கலாம்! அரசியல் என்றால் அப்படித்தானே இருக்கும், சரிதானே?”//

//அரியணையைத் துறந்து வனவாசம் போவேன் என்பதில் ராமன் உறுதியாக இருந்ததற்கு தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்திருக்க வேண்டியதில்லை. நற்சிந்தனை கொண்ட அந்த இளைஞன், கைகேயியின் பேராசையையும் அரியணைமேல் பரதனுக்கிருந்த ரகசிய ஆசையையும் உள்ளூர உணர்ந்தே இந்த சிறுமையான பதவிமோகச் சண்டையிலிருந்து தூர விலகி நிற்க முடிவுசெய்தான்.//

தொடரும் இவரது பார்வை பற்றிச் சில வரிகள் இன்னும்.

//ஆனால் அது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது. பிணத்தைத் தூக்கிச் சென்றவர்கள் சன்னியாசிகள்; இறந்தவரும் சன்னியாசிதான், அவரின் தலைமுதல் கால்வரை வெள்ளைத் துணியால் மூடியிருந்தது. அவரது ஆண்குறி மட்டும் ஓர் ஓட்டை வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. சன்னியாசிகள் வெட்கம் மானம் பார்ப்பதில்லை; இறந்த பிறகு சொல்லவே வேண்டாம். ஆனாலும் இறந்துபோன சன்னியாசியின் ஆணுறுப்பு ஆன்டெனாவைப் போல எதற்காக மேலே தூக்கி இருக்கிறது? அவரது இறுதி யாத்திரையின்போது இது சொல்லும் செய்திதான் என்ன?//

எத்தனை முறை படித்தும் இதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்ன விதமான பார்வை இது?

தேநீரை மாட்டு மூத்திரத்தைவிட மோசமாக இருப்பது என்பது, ஹிந்தி மொழி குறித்த கருத்து போன்ற இன்னும் சில அபிப்பிராயங்களும் சீர்சேந்துவுக்கு இருக்கின்றன. ராமனைப் பற்றி வரும்போது மூளையால் சிந்திப்பதாக நினைத்துக்கொள்ளும் சீர்சேந்து, மொழி என்று வரவும் எப்படி யோசிக்கிறார் என்று பாருங்கள்.

//எனக்கு இந்தி கிட்டத்தட்டப் புரிந்துக்கொள்ளப் போதுமான அளவுக்கு வசப்பட்டிருந்தது. அது எளிமையான மொழியும்கூட. இங்கே ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தி இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற சிக்கலான விவாதத்துக்குள் நான் இறங்கவில்லை. ஆனால், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மக்களோடு உரையாடுவதற்கு அது ஓர் எளிய சாதனமாக இருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும். சிலருக்கு இந்தி மொழியோடு பிரச்சினை இருக்கலாம்; இருக்கவும் செய்கிறது. ஆனால் இதைப் போல விரைவாகக் கற்றுக் கொள்ளக்கூடியதும் கூலிக்காரர் முதல் பெரிய ஆளுமைகள் வரை புரிந்துகொள்ளக்கூடியதுமான வேறு இந்திய மொழி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் இந்தியை வெறுக்கிறார்கள் என்றும் அங்கே எல்லோருக்கும் ஆங்கிலம் புரியும் என்றும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் இது உண்மையல்ல என்பது அங்கே போனபோதுதான் தெரிந்தது. கன்னியாகுமரியிலும் சரி ராமேஸ்வரத்திலும் சரி – கர்நாடகத்திலும்தான் – பேச முடியாமல்போகும் மௌனப் புயல் அபாயத்திலிருந்து என்னைக் காப்பாற்றியது இந்திதான். ஆங்கிலமல்ல. இந்திக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று என்னை விமர்சிக்கக் கூடும்; நான் அனுபவித்துத் தெரிந்துகொண்ட உண்மையை மறைப்பது அவ்வளவு உசிதமல்ல என்பது என் எண்ணம். என்னை விடுங்கள், சுவாமி விவேகானந்தரே இந்திக்குத் தேசிய மொழி அந்தஸ்தை அளித்திருக்கிறார். ‘தேசிய மொழி’ என்ற வார்த்தையில் அபாயகரமான அர்த்தங்கள் தொனிப்பதால் நான் அப்படிச் சொல்லாமல், இந்தி எளிதாக பலருக்கும் புரிவதால் இந்தியாவின் பெரும்பகுதியிலும் பேச்சுத் தொடர்புக்கு ஏற்ற மொழியாக இருக்கிறது என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். அந்த மொழி மட்டும் தெரிந்திராவிட்டால் அயோத்தி முதல் சித்திரக்கூடம் வரையிலான எனது குறும்பயணத்தில் என்னால் எதையும் புரிந்துகொண்டிருக்க முடியாது.//

இத்தனையையும் மீறி இந்தப் புத்தகம் ஒன்றைச் சாதித்திருக்கிறது. அது முக்கியமானது. எந்த ஒன்று நம்மை இணைக்கிறது என்று பாரம்பரியவாதிகள் சொல்கிறார்களோ அதை சீர்சேந்து போன்ற முற்போக்காளர்களும் ஒப்புகொள்ளும்போது, அது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

கடும் முன்முடிவுடன் ராமனை அணுகும் சீர்சேந்து, அயோத்தியின் கோசங்களால் எரிச்சலடையும் சீர்சேந்து, ஒரு கட்டத்தில் ராமபக்தியில் தன்னை இழக்கிறார். ஏனென்றால் ராம பக்தி இயல்பானது. சீர்சேந்துவைப் போல அது காரணங்கள் கொண்டும் காரியங்கள் கொண்டும் உலகை அளப்பதல்ல. அது உள்ளுணர்வோடும் காலம்காலமாக நம்மோடு பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நம் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்தது. காசியும் அயோத்தியும் நம் நாட்டின் இரு பக்திக் கண்கள். அங்கே உங்கள் கண்ணில் படும் மாசுகளை மீறி, அவலங்களை மீறி, ராம பக்தியும் சிவ பக்தியும் உங்களைத் தூக்கிச் செல்லும். நீங்கள் அதற்கு ஒப்புக்கொடுத்தே ஆகவேண்டும்.

அயோத்தியும் காசியும் புனித நகரங்கள். சரயுவும் கங்கையும் இருக்கும் வரை, உங்கள் அகந்தை கொண்ட கால்கள் அங்கே பட்டு அந்த நீரில் முங்கி எழும்போது, இயல்பான இந்திய பக்தி உங்களை முழுக்க நனைத்திருக்கும். இதை ஒப்புக்கொள்ள ஓர் இந்திய இதயம் வேண்டும், அவ்வளவுதான். அது சீர்சேந்துவுக்கு இருந்திருக்கிறது. இதைப் பாராட்டவேண்டும். இதனாலேயே இந்தப் புத்தகம் முக்கியமான பதிவாகவும் மாறுகிறது.

//பக்தி தொற்றுவியாதி போலிருக்கிறது. எனக்கு அன்றுவரையிலும் ராமனிடம் பெரிய ஈடுபாடு இருக்கவில்லை; அதிலும் குறிப்பாக, அவன் வாலியைக் கொன்றதும் சீதையை வெளியேற்றியதும், தொட்டதற்கெல்லாம் சிணுங்கியதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், “ராமனையும் அவனது ஆராவாரக் கும்பலையும் நான் வெறுக்கிறேன்” என்று சொன்ன மைக்கேல் மதுசூதன தத்தைப் போல எனக்கு அவன்மீது அவ்வளவு வெறுப்புக் கிடையாது. வங்காளிகள் பலரைப் போல, நானும் அவன்மீது ஈடுபாடு இல்லாமல்தான் இருந்தேன்; ஆனால், அயோத்தியில் நான் கேட்ட லட்சக்கணக்கான பக்திப் பரவசக் குரல்கள் என்னை மாற்றிவிட்டன. எனக்குள் என்னையறியாமலேயே ராமன்மீதான மோகத்தின் விதை இடப்பட்டிருக்க வேண்டும். முரட்டு பக்தனான இந்த பில்லோடு சில மணிநேரம் கழித்ததில் அது முளை விட்டிருக்கிறது//

மொழிபெயர்ப்பு மிகக் கச்சிதம். அதைத் தனியே குறிப்பிடவேண்டும்.

புத்தகத்தை வாங்கும் லின்க் www.SwasamBooks.com

Share