கொக்கு பறக்குதடி வெள்ளைக் கொக்கு பறக்குதடி என்றொரு பாடல். வெள்ளையர்களின் கட்டுப்பாட்டை மீறி, அதே சமயம் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி, சுதந்திரக் கனலை மக்கள் மத்தியில் ஊட்டும்படியாக விஸ்வநாத தாஸ் பாடிய பாடல் இது. தடையை மீறவும் வேண்டும், ஆனால் அது அவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் படியும் இருக்கக்கூடாது.
இதை எடப்பாடியின் அதிமுக அரசு எப்படிக் கடைப்பிடிக்கிறது என்று பாருங்கள். தமிழக அரசின் சாதனைகளை (!) விளக்கும் செய்திப்படங்கள் திரையரங்கில் காட்டப்படும். சென்ற வாரம் பார்த்தது – சிரிப்பை வரவழைத்தது. மெட்ரோ ரயில் சேவைகளை எப்படி ஜெயலலிதா தமிழகத்துக்குத் தந்தார், அதை எப்படி எடப்பாடி பழனிசாமி விரிவுபடுத்தினார் என்பதை விளக்கும் செய்திமடல் அது. ஆலந்தூர் முன்னே ஒரு பெண் ஆட்டோ கிடைக்காமல் தவிக்கிறார். இன்னொரு பையன் இண்டர்வியூ செல்ல கால்டாக்ஸி கிடைக்காமல் தவிக்கிறார். அங்கே தத்வமஸி என்னும் நடமாடும் சர்பத் கடை நடத்துபவர், ஏன் இப்படி தவிக்கிறீர்கள், மெட்ரோ பயன்படுத்துங்கள் என்று மெட்ரோவின் அருமை பெருமைகளைச் சொல்லி வழி அனுப்பு வைக்கிறார். பக்காவாக நெல்லைத் தமிழ் பேசும் நடிகர் இவர். ஏன் நெல்லைத் தமிழ் பேசுகிறார் என்பதை க்ளைமாக்ஸில் பார்க்கலாம். ஆட்டோவும் கால்டாக்ஸியும் கிடைக்காத இருவரும் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார்கள். இறங்கும் இடத்தில் தெரியாமல் ஒருவர் மீது மோதுகிறார்கள். அவரைப் பார்த்தால், ஆலந்தூரில் கடை நடத்திய அதே மனிதர். இருவரும் ஆச்சரியத்துடன் ‘நீங்க எப்படி இங்க’ என்கிறார்கள். உடனே அவர் சிரித்துக்கொண்டே, ‘ஆலந்தூரில் இருப்பது என் தம்பி, நான் அண்ணன்லா’ என்கிறார்.
டிவிஸ்ட் இங்கேதான். கேமராவைப் பார்த்து அவர் சொல்கிறார், “ஆமா, நாங்க ரெட்டையிலா.” நாங்க ரெட்டை இலை என்று கேட்கும்படியாக அவர் இந்த வசனத்தைச் சொல்கிறார்.
பின்குறிப்பு: இந்தத் தண்டத்துக்கு விஸ்வநாத தாஸ் போன்ற சாதனையாளர்களையெல்லாம் கோட் செய்ததற்கு மன்னித்துவிடவும்.