Tag Archive for ஆத்மாநாம்

மோகனரங்கன் கவிதைகள் குறித்து பெருமாள் முருகன் – ஆத்மாநாம் விருது

மோகன ரங்கனின் கவிதையை ஒட்டி பெருமாள் முருகன் ஆற்றிய உரையைக் கேட்டேன். (https://www.youtube.com/watch?v=UwkLYoE1P3U) மிக தட்டையான எவ்வித ஆழமும் அற்ற ஓர் உரை. பழங்காலக் கவிதைகளுக்குப் பொருள் சொல்லுவதோடு அதன் அழகு முடிந்துவிடுகிறது என்ற சொன்ன பெருமாள் முருகன், நவீன கவிதைகளுக்கு இப்பொருள்கூறல் முறை தேவை என்கிறார். சொல்லிவிட்டு, இப்படிப் பொருள் சொல்லுவதால் அக்கவிதை சீரழிகிறது என்பதைத் தான் ஏற்கவில்லை என்கிறார். ஆனால் உண்மையில் இவர் பொருள் சொல்லி மோகன ரங்கனின் மூன்று கவிதைகள் சீரழிக்கப்பட்டன. மிக எளிதான கவிதைகள், படித்தவுடன் நம் மனத்தில் விரியவேண்டிய காட்சிகளை, அக மனக் கேள்விகளை ஒருவர் ரசிப்பதற்காக எழுதப்படும் கவிதைகளை வார்த்தைகளைக் கொண்டு, சங்க காலக் கவிதைகளை விளக்குவது போல விளக்கினால் என்ன ஆகும் என்பதற்கு பெருமாள் முருகனின் பேச்சு ஓர் உதாரணம்.
 
எந்த ஒரு மேலதிக விவரத்தையோ விளக்கத்தையோ அகமனம் செல்லக்கூடிய புதிய வழிகளையோ மனம் யோசிக்காத தர்க்கங்களையோ இவர் பேச்சு உருவாக்கவே இல்லை. நமக்கு என்ன புரிந்ததோ அதையே இவரும் சொல்கிறார். நமக்கு என்ன புரியவில்லையோ அதை ‘இதைப் பற்றி யோசிக்கவேண்டும்’ என்ற ரீதியில் சொல்லிவிடுகிறார். இவரால் கவிதைகளில் எந்த ஒரு பாய்ச்சலையும் நிகழ்த்தமுடியவில்லை. சங்ககாலக் கவிதைகள் குறித்து பெருமாள் முருகனுக்கு இருக்கும் அறிவு ஒரு பலம் என்றால் இன்னொரு வகையில் பெரிய தடை. அந்தத் தடையை அவரால் தாண்டவே முடியாது.
 
முதல் கவிதைக்குப் பத்து நிமிடம் பேசிவிட்டு, அது எழுத்துப் பிழை என்று முடித்தது ஒரு கொடுமை. இதைச் சொல்லவா இந்த மேடை? அதையும் இத்தனை விளக்கிச் சொல்லி அந்தப் பிழையைச் சொல்ல அவசியம் என்ன? அதில், பிரம்மராஜனும் முன்னுரையில் இதே கவிதையைக் குறிப்பிட்டுள்ளார் என்றும் சொல்கிறார். இதில் ஒரு சந்தோஷ போல! மீண்டும் இதே கவிதையை வார்த்தை வார்த்தையாகப் பீராய்கிறார். இத்தனைக்கும் படித்தவுடன் சட்டென விளங்கும் எளிய கவிதை அது. மயிலே உன் அழகை உனக்கு விவரிக்கிறேன் என்று சொல்லி ஒவ்வொரு இறகாகப் பிய்த்து மயிலிடமே காண்பிப்பது எத்தனை கொடூரம்! அதிலும் பெயரழிந்த என்ற வார்த்தைக்கு இவர் சொன்ன விளக்கத்தைக் கேட்டபோது, பத்தாம் வகுப்பு பள்ளி பென்ச்சில் உறக்க உச்சத்தில் தமிழாசிரியரைக் கொடூரமாகப் பார்த்துக்கொண்டிருந்த நினைவு வந்தது. தமிழ்க் கவிதைகளைக் கொன்றொழிக்க தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களுமே போதும்.
 
பெய்தோய்ந்த என்ற வார்த்தையைப் பிடித்துக்கொண்டு என்னவெல்லாமோ சொல்லி இதைப் பற்றி இன்னும் யோசிக்கலாம் என்கிறார். ஒட்டுமொத்த எல்லாக் கவிதைகளையுமே இன்னும் யோசிக்கலாம் என்பதுதான் உண்மையான திறனாய்வு. பெருமாள் முருகன் நாவல் கூட எழுதிக்கொள்ளட்டும், நவீன கவிதைகளை வார்த்தைகளாகப் பிரித்துப் பொருள் சொல்லும் கொடுமை மட்டும் வேண்டாம்.
 
கவிஞன் ஒவ்வொரு வார்த்தையை ஓர் அடியில் நிறுத்துவதும் அடுத்த அடியில் தொடங்குவதும் ஒரு அவசியம் கருதியே என்கிறார். இது என்ன புதிய விஷயமா? உண்மையில் எல்லா சமயங்களிலும் இது உண்மை அல்ல! அதே சமயம் இது யாருக்கும் தெரியாததும் அல்ல.
 
சங்க காலக் கவிதைகளைப் பற்றிக் கடைசி சில நிமிடங்களில் பெருமாள் முருகன் பேசுவதுதான் நன்றாக இருந்தது. அவர் அதைப் பற்றி ‘பேச ஒன்றும் இல்லை, காரணம், புரியாத வார்த்தைகள் புரிந்தால் போதும், நேரடியானவை’ என்கிறார். ஆனால் அதுதான் உண்மையில் இவருக்கு நன்றாக வருகிறது. அதையே இவர் தொடர்ந்து செய்யலாம்.
 
பெருமாள் முருகனின் காணொளியைக் காணப் பரிந்துரைத்த நண்பர் அடுத்த ஒரு வாரத்துக்கு என் கண்ணில் படாமல் இருப்பது நல்லது என்று அவருடைய கட்டம் சொல்கிறது. எல்லாவற்றையும் என் வீட்டுக்கு வந்து கொடுத்துத் திட்ட வைக்கும் ஷ்ருதி டிவி வாழ்க.
 
பிகு: மலையாளம் கவிஞர் அனிதா தம்பியின் பேச்சை அரைமணி நேரம் கேட்டேன். (https://www.youtube.com/watch?v=ozkRIY78zmQ) நல்ல விரிவான ஆழமான உரை. முழுமையாகக் கேட்கவேண்டும். ஆத்மா நாமின் தாய்மொழி கன்னடம், இருந்தும் தமிழில் கவிதை எழுதினார் என்ற, வழக்கம்போன்ற ஜல்லியை இவரும் செய்தார். தமிழர்களே இதைச் செய்யும்போது இவரைப் பற்றிச் சொன்ன இருக்கிறது. ஆத்மாநாம் தமிழரா கன்னடரா என்று தெரிந்துகொண்டால்தான் இதைப் பற்றிச் சொல்லமுடியும். ரஜினி கன்னடர், தமிழில் நடித்துப் புகழ் பெற்றார் என்பதற்கும், நாகேஷ் தாய்மொழி கன்னடம், தமிழில் நடித்துப் புகழ்பெற்றார் என்பதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமானது.
Share