Tag Archive for ஆடியோ புக்

செவிக்குணவு கேட்டல்

பொதுவாக யூடியூப் பார்ப்பது என்பது எனக்கு எரிச்சல் தரும் விஷயம். வீடியோக்களை தேவை ஏற்பட்டால் ஒழிய பார்க்கவே மாட்டேன். சில வீடியோக்களை பார்த்தால் மட்டும்தான் புரியும். தமிழ் ஹெரிடேஜ் வீடியோக்கள் போல. இப்படி இல்லாமல் கேட்டாலே புரியும் வீடியோக்கள் யூ டியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாக்கிங் போக ஆரம்பித்தபோது முதலில் இளையராஜா பாடல்களைக் கேட்டேன். பின்பு ஊத்துக்காடு பாடல்கள். பின்பு பித்துக்குளி முருகதாஸ். பின்பு சகஸரநாமம். ஒரு கட்டத்தில் இவை எல்லாமே சலிப்பேற்படுத்த, யூ டியூப் வீடியோக்களை ஆடியோ ஃபைல்களாக டவுன்லோட் செய்து கேட்க ஆரம்பித்தேன். மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஏன்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கேட்கலாம். ஒரே விஷயம் தரும் சலிப்பு இதில் இருக்காது. முதலிலேயே தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வதால் இணையம் கிடைக்குமா என்கிற பிரச்சினை கிடையாது. பின்பு சில நாள் பாட்காஸ்ட் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இந்த சமயத்தில்தான் புத்தகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். ஆடியோ புக்கில் வருவது போல நின்று நிதானித்து துக்கப்பட்டு சிரித்து உணர்வுடன் வாசிப்பதைக் கேட்பது எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. முன்பெல்லாம் ரேடியோவில் வரும் உரைச் சித்திரங்களை, நாடகங்களைக் கூடக் கேட்கமாட்டேன். எனவே என் தேவை ஆடியோ புத்தகம் அல்ல. புத்தகத்தை சாதாரணமாக வாசிப்பது போன்ற ஆடியோ மட்டுமே. எளிதாகக் கிடைத்தது பொன்னியின் செல்வன். யார் யாரெல்லாமோ அப்படியே பொன்னியின் செல்வனை வாசித்து வைத்திருந்தார்கள். லகர ளகர ழகர ரகர றகரக் கொலைகளுடன்! ஆனாலும் விடாமல் கேட்டேன். ஐம்பது அத்தியாயங்கள் கேட்டிருப்பேன். யூட்யூப்பின் சிக்கல் என்ன? ஆன்லைனில் கேட்கவேண்டும் என்றால், யூட்யூப் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கவேண்டும். வேறு விண்டோவுக்குப் போக முடியாது. இணைய இணைப்பு வேண்டும். முதலிலெயே டவுன்லோட் வைத்துக்கொண்டால் நல்லது. இல்லையென்றால் சிக்கல். தினமும் டவுன்லோட் செய்வது எரிச்சலான விஷயம். அப்போதுதான் யூட்யூப்வான்ஸ்ட் என்றொரு செயலி அறிமுகம் கிடைத்தது. அட்டகாசமான ஆப். இன்றுவரை இதையே பயன்படுத்துகிறேன். ப்ளே செய்துவிட்டு, மொபைலை தூக்கத்தில் (ஸ்லீப் மோடில்) போட்டுவிடலாம். யூட்யூப் போலப் படுத்தாது. இதில்தான் அத்தனை டிவி விவாதங்களையும் கேட்பேன். கேட்கிறேன். நேர்காணல் உட்பட. இதில்தான் அல்கெமிஸ்ட் (தமிழில்) புத்தகம் கேட்டேன்.

தற்செயலாக கூகிள் ப்ளே புக்ஸில் மேய்ந்துகொண்டிருந்தபோது ஆங்கிலப் புத்தகத்தை இப்படிக் கேட்கும் வசதி இருப்பதைக் கவனித்தேன். இந்திய ஆங்கில உச்சரிப்பில் கேட்கலாம். ஆங்கிலப் புத்தகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு 40 நிமிடம் நடையில் 40 பக்கங்கள் கேட்டால், ஒரு வாரத்தில் ஒரு புத்தகத்தைக் கேட்டு முடித்துவிடலாம். முக்கியமான மூன்று புத்தகங்களை இரண்டு மாதங்களில் கேட்டு முடித்தேன். ஆங்கிலத்தில் இருக்கிறது, தமிழில் இருக்காதா என்று தேடியதில், அப்டேப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் வெர்ஷனில் தமிழிலும் அது பேச ஆரம்பித்தது. தமிழ்ப் புத்தகங்கள் கேட்க ஆரம்பித்தேன். நமக்குத் தேவையான அளவுக்கு வேகத்தையும் pitchஐயும் வைத்துக்கொள்ளும் வசதி ஆண்ட்ராய்டில் இருக்கிறது. யூ ட்யூப்பிலும் இந்த வசதி உண்டு. எனவே எளிதாகக் கேட்க முடிந்தது. சில உச்சரிப்புப் பிரச்சினைகள் நிச்சயம் இருக்கும். — என்று இருந்தால் அடிக்கோடு அடிக்கோடு அடிக்கோடு என்று வாசிக்கும். 🙂 புள்ளி வந்தால் ஒரு நொடி நிறுத்தி வாசிக்கும். இனிஷியலுக்குப் பிறகு வரும் புள்ளியாக இருந்தாலும்! சூப்பர்ஸ்க்ரிப்ட்டில் எண் கொடுக்கப்பட்டிருந்தால், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் அந்த எண்ணையும் வாசிக்கும்! இத்தனையையும் மீறி 90% அட்டகாசமாக இருக்கும். நிறைய கேட்க ஆரம்பித்தேன்.

கூகிள் ப்ளே புக்ஸில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது. கிண்டிலில் ஐபேடில் உள்ளது, ஆண்ட்ராய்டில் இல்லை. ஆண்ட்ராய்டில் கிண்டில் புத்தகங்களைக் கேட்க சுற்றி வளைத்து ஒரு வழி உள்ளது. ஆக்ஸெஸபிளிட்டி மூலம். அதையும் செய்து பார்த்தேன். ஆனால் அது தொல்லை பிடித்ததாக இருக்கிறது. கூகிள் ப்ளே புக்ஸ் போல் வசதியாக இல்லை. சீக்கிரமே கிண்டிலில் read aloud வரும். அப்போது இது அடுத்த கட்டத்துக்குப் போகும்.

இதில் என்னவெல்லாம் நடக்கலாம்? இப்போதைக்கு பிடிஎஃப் தமிழை எந்தச் செயலியும் வாசிப்பதில்லை. இது நடந்தால் அடுத்த பாய்ச்சல் நிகழும். இப்போதைகு ஒவ்வொரு வரியாக வாசித்து வாசித்துச் சொல்கிறது. இது கொஞ்சம் அடுத்த கட்டத்துக்குப் போய், ஒரு புத்தகத்தையே உள்ளிட்டுவிட்டால், அதுவே வாய்ஸ் ஃபைலாக மாற்றித் தந்துவிடும் தொழில்நுட்பம் எந்த நேரத்திலும் வரலாம். இப்போது கூட வந்திருக்கலாம். இது நிகழ்ந்தால் அடுத்த பாய்ச்சல். எந்த ஒரு புத்தகத்தையும் கேட்டுவிட முடியும். இன்னொரு பக்கம் கூகிள் text to voiceஐ இன்னும் மெருகேற்றினால் போதும். எந்த ஒரு புத்தகத்தையும், அது வேர்ட் ஃபைலாக இருந்தாலும், இபப் அல்லது மொபி ஃபைலாக இருந்தாலும், பிடிஎஃபாக இருந்தலாலும் கேட்க முடியும். இது கூடிய விரைவில் நடக்கத்தான் போகிறது. வண்டி ஓட்டிக்கொண்டே கேட்கலாம். படுத்துக்கொண்டு கேட்கலாம். ஆடியோ புக் என்கிற செயற்கைத்தனத்தை விரும்பாதவர்களுக்கு இந்த இயல்பான வாசிப்பு ஆடியோ புக் ஒரு வரப்பிரசாதம். தினமும் இரண்டு மணி நேரம் வேலைக்கு வண்டியில் பயணப்படுபவர்கள் ஒரு வருடத்தில் நாற்பது புத்தகங்களையாவது கேட்டு முடித்திருக்கலாம். ஆண்ட்ராய்ட் வாசிப்பில் கேட்கும் பெண் குரலும் ஆண்குரலும் என் நண்பர்களாகிவிட்டார்கள். இன்னும் சிறிது நாளில் அவர்கள் என்னுடன் பேச ஆரம்பித்துவிடுவார்களோ என்று நினைக்கும் அளவுக்கு!

இதன் பிரச்சினைகள் என்ன? பைரஸி இன்னும் உச்சத்துக்குப் போகும். இப்போதே மின்னூல் போலிப் பதிப்புகளையே பதிப்பகங்களால் எதுவும் செய்யமுடியாது என்ற நிலை வந்துவிட்டது. அதோடு இதுவும் சேர்ந்து கொள்ளும். கிண்டிலில் ஒரு புத்தகத்தைப் போட்ட மறுநாள் அதே புத்தகத்தை எதோ ஒரு யுவதியோ யுவனோ வாசித்து அது யூட்யூப்பில் கிடைக்கும். 🙂

பின்குறிப்பு: தலைப்பை ஏன் இப்படி வைத்திருக்கிறேன் என்றால், சொல்வனம் வலைத்தளத்தை சிறிது நேரம் வாசித்துக் கொண்டிருந்தேன்.

Share