Tag Archive for அந்திமழை

MGR-A-Hindu

எம்ஜியார் என்கிற ஹிந்து, தாடகமலர் பதிப்பகம், விலை ரூ 150

ம.வெங்கடேசனின் சமீபத்தைய புத்தகம் ‘எம்ஜியார் என்கிற ஹிந்து.’ எம்ஜியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகம் முனைந்ததை ஒட்டி ஏற்பட்ட ஆய்வில் இப்புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் ம.வெங்கடேசன். சில புத்தகங்கள் உணர்வுபூர்வமாக இருக்கும். சில புத்தகங்கள் வெறும் தகவல்களாக இருக்கும். இப்புத்தகம், ம.வெங்கடேசனின் மற்ற புத்தகங்களான ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’, ‘தலித்துகளுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி’ போன்ற புத்தகங்களைப் போலவே, மிகவும் விவரமாக தரவுகளுடன் எழுதப்பட்ட புத்தகம். இத்தரவுகளின் முக்கியத்துவம் என்னவென்றால், இன்றைய சூழலில், திராவிடக் கருத்தாங்கள் ஹிந்து ஆதரவுச் செய்திகளை முடக்க நினைக்கும் நிலையில், அக்கருத்துகளை ஒருவர் பேசுவதே ஆச்சரியத்துக்குரிய ஒன்றாகிவிடுகிறது. அதை முழுக்க கையில் எடுத்துக்கொண்டு அதற்கான தரவுகளைத் தருவதில் ம.வெங்கடேசன் முக்கியமானவர். எந்த அளவுக்கு என்றால், எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்துக் கதறும் அளவுக்கு. ஹிந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயர் மட்டுமே வெளியான சூழலில் அப்புத்தகத்துக்கு பெரிய விமர்சனத்தையே எழுதி திக்குமுக்காட வைத்தவர்கள் எதிர்த்தரப்புக்காரர்கள். அத்தரப்பை இன்னும் ஒரு முறை பதில்சொல்லமுடியாக்கேள்விக்குள் வைத்திருக்கிறார் ம.வெங்கடேசன்.

எம்ஜியார் ஏன் ஹிந்து என்பதை அவரது பேட்டிகள், அவரைப் பற்றிப் பிறர் சொல்லும் கருத்துகள் மூலம் நிறுவுகிறார் ம.வெங்கடேசன். அத்தோடு எப்படி திராவிடர் கழகம் வரலாற்றின் பக்கங்களில் எம்ஜியாரை திட்டித் தீர்த்தது என்றும் அவர் எப்படி ஹிந்து ஆதரவாளராக இருக்கிறார் எனக் கட்டம் கட்டியது என்பதையும் ஆதாரத்துடன் பதிவு செய்கிறார். இன்று எம்ஜியாரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகத்துக்கு என்ன தகுதி உள்ளது என்பதுதான் புத்தகத்தின் ஒட்டுமொத்த கருத்துமே. கூடவே எப்படி ஹிந்து ஆதரவாளர்கள் அன்று எம்ஜியாருடன் நின்றார்கள் என்பதையும் எம்ஜியார் அவர்களுடன் எப்படி இணைந்து சென்றார் என்பதையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

பல அரிய தகவல்கள் இப்புத்தகம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன.

சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் முதலில் நடிக்க இருந்தவர் எம்ஜியார், (பின்பு சிவாஜி நடிக்கிறார்), எம்ஜியாரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட எம்.ஆர்.ராதாவின் கடிதம், எம்ஜியார் தனிக்கட்சி துவங்கியபோது எம்ஜியாருக்கு அறிவுரை என்று ஈவெரா எழுதியதில் தனக்கு எம்ஜியாரைத் தெரியாது என்று சொன்னதன் பின்னணியில் உள்ள பொய், எம்ஜியாரை நம்மவர் அல்ல என்று ஈவெரா சொன்னது, எம்ஜியார் ஆட்சியில் தமிழனுக்கு வாய்ப்பு இல்லை என்று வீரமணி சொன்னது (ஆனால் கருணாநிதி ஆட்சியில் தெலுங்கர்கள் இடம் என்ன என்பதைப் பற்றிச் சொல்லாமல் விட்டது!), பிராமணர்களை மட்டும் ஒதுக்கும் கட்சி அல்ல அதிமுக என்று எம்ஜியார் சொன்னது எனப் பலப்பல தகவல்கள். இத்தகவல்களுக்குப் பின்னர் இன்னும் சூடுபிடிக்கிறது புத்தகம்.

ஈவெராவைப் பொறுப்புள்ளவராகக் கருதவில்லை என்று எம்ஜியார் சொல்வது, இந்து மதத்தைத் தாக்கிப் பேசுபவர்களுக்குப் பிற மதத்தைக் குறை கூற துணிவு இருக்கிறதா என்று எம்ஜியார் பேசுவது, மதமாற்றம் குறித்த எம்ஜியாரின் விரிவான கருத்துகள், மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி ஆர் எஸ் எஸ் எம்ஜியாருக்குச் சொல்லும் பதில்கள், இந்து முன்னணி சொல்லும் யோசனைகளை முன்னிட்டு எம்ஜியார் தரும் அரசாணைகள், இந்து மதம் பற்றி எம்ஜியாரின் கட்டுரை – இவையெல்லாம் நிச்சயம் படிக்க வேண்டியவை. குறிப்பாகச் சொல்லிச் செல்வது, பின்னாளில் எனக்கும் மற்றவர்களுக்கும் உதவும் என்பதால்தான். புத்தகம் முழுக்கவே இப்படியான குறிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

‘ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவே போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும்’ என்று கிருபானந்த வாரியார் பேசுவதைத் தொடர்ந்து, திக, திமுக மற்றும் எம்ஜியார் ரசிகர்ளால் தாக்கப்படுகிறார். பதறிப் போகும் எம்ஜியார் இதை எப்படிக் கையாள்கிறார் என்பது சுவாரசியமாக உள்ளது. பொன்மனச் செம்மல் என்ற பெயரை கிருபாந்தனந்த வாரியார் மூலம் பெற்றுக்கொள்கிறார் எம்ஜியார் (இதைச் சொல்வது மபொசி), எம்ஜியாரே நிரந்தர முதல்வர் என்று கிருபானந்த வாரியார் சொல்வது எனப் போகின்றன நிகழ்வுகள்.

காஞ்சிபுரத்தில் ஈவெரா சிலை வைப்பதற்கு அனுமதி மறுத்த எம்ஜியாருக்கும் கருணாநிதிக்கும் நடந்த விவாதத்தில் எம்ஜியார் சொல்லி இருப்பவை, அவர் எத்தனை தூரம் தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தார் என்பதைச் சொல்கிறது. ஸ்ரீரங்கத்தில் கோவிலின் முன் ஈவெரா சிலையை வைத்தவர்களுக்கு எம்ஜியாரின் பதில் மிகவும் தேவையான ஒன்று. வரலாற்றில் திமுகவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும்போது சோ, வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் ஏன் திமுகவை அந்த அளவுக்கு எதிர்த்தார்கள் என்பது மீண்டும் மீண்டும் உறைக்கிறது. அரசியலின் பின்னாளைய எல்லாத் தாழ்வுகளுக்கும் திகவும் திமுகவுமே காரணமாக அமைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

எம்ஜியார் அல்ல, எம் ஜீயர் என்று ஒரு ஜீயர் சொல்வதை இன்றைய நிலையில் ஒரு திடுக்-குடன் வாசித்தேன் என்றாலும், அப்படிச் சொல்ல நேர்ந்ததன் (ஸ்ரீ ரங்கம் கோபுரம் கட்டுவது தொடர்பான) பின்னணியும் அவற்றை முறியடிக்க எம்ஜியார் செய்த உதவிகளும் புரிகின்றன. ஏன் சினிமாவில் கோவில் தொடர்பான காட்சிகளில் நடிப்பதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அப்படி ஒரு கொள்கையே இல்லையே என்கிறார் எம்ஜியார். மருதமலை கோவிலுக்கு விளக்கேற்றி வைத்தேனே என்றும் சொல்கிறார். இப்படியாகப் பல தகவல்களை விவரித்து எம்ஜியார் தொடக்கம் தொட்டே ஆன்மிகவாதியாகவும், தேசியவாதியாகவுமே இருந்திருக்கிறார் என்று நிரூபிக்கிறார் ம.வெங்கடேசன்.

கேபி சுந்தராம்பாள் எம்ஜியாருக்கு நெற்றியில் திலகமிடுகிறார், ஆனால் கருணாநிதிக்கு இடுவதில்லை என்ற நுணுக்கமான செய்திகளையெல்லாம் ஆதாரமாகக் காட்டுகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. உழைப்புடன் தீவிரமான யோசனையும் இருந்தால் மட்டுமே இப்படியாகப் பல தகவல்களைக் கோர்க்கமுடியும். அதை அநாயசமாகச் செய்திருக்கிறார் ம.வெங்கடேசன்.

அட்டகாசமான சுவாரசியமான தவறவிடக்கூடாத புத்தகம்.

நன்றி: அந்திமழை பத்திரிகை

Share