Tag Archive for வைகோ

ஈழம் அமையும் – புத்தக விமர்சனம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஈழம் அமையும்’ புத்தகத்தை வாசித்தேன். சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகமாகவே இதை நினைக்கிறேன். இதிலுள்ள அரசியல் என் நிலைப்பாடுகளுக்கு எல்லா வகையிலும் எதிரானதுதான் என்றாலும், இது எழுதப்பட்டிருக்கும் விதம் இந்நூலின் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது.

cover_104771
ஈழம் அமையும், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம்
அச்சுப் புத்தகம் ரூ 250, மின் புத்தகம் ரூ 100
அச்சுப்புத்தகத்தை வாங்க: NHM site | Flipkart | Amazon
மின்புத்தகத்தை வாங்க: DailyHunt (NewsHunt)

ஈழம் அமையும் என்ற தலைப்பிலேயே நாம் எத்தகைய நிலைப்பாட்டுள்ள நூலை வாசிக்கப்போகிறோம் என்பதைப் புரிந்துகொண்டுவிடலாம். எனவே மிக எளிதான முன் தயாரிப்புகளுடன் இந்நூலை அணுகமுடிகிறது. ஆனால் ‘ஈழம் அமையும்’ என்று தலைப்பிருந்தாலும், இந்நூல் 99% பேசுவது எப்படி விடுதலைப்புலிகளும் அப்பாவி ஈழத்தமிழ் பொதுமக்களும் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பதையே. ஈழம் எப்படி அமையும் என்பதற்கு இந்நூல் அரசியல் ரீதியாகவோ செயல்பாட்டு ரீதியாகவோ எவ்வித தீர்வையும் சொல்லவில்லை. இந்நூலாசிரியர் சொல்லியிருக்கும் தீர்வு, இந்நூலின் கனத்துடன் ஒப்பிடுகையில் இதை வாசிக்கும், இக்கொள்கையையொத்த மனமுடையவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும். ஆம், அரவிந்தர் அருளில் ஒருநாள் ஈழம் அமையும் என்கிறார்.

ஒரு தமிழ்நாட்டுத் தமிழனாக உண்மையில் தனி ஈழம் அமைகிறதா இல்லையா என்பதில் எனக்கு எவ்வித தீவிரக் கருத்தும் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் உடல்சார்ந்தோ சுதந்திரம் சார்ந்தோ நான் எந்தவொரு இன்னலையும் அனுபவிக்கவில்லை. மிகச் சாதாரண ஒரு சுயநலமியாகவும் நான் இருக்கலாம். ஆனால் அங்கே நடக்கும் இனப்படுகொலை நிச்சயம் மனத்தை உலுக்கியது என்பதில் மாற்றமில்லை. ஒருவகையில் இப்பார்வை இந்தியாவின் பார்வைதான். என் பார்வை இந்தியாவின் பார்வையாகத்தான் இருக்க முடியும். என் போலவே பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களும் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். மிகக் குறைவானவர்களே உணர்ச்சிபொங்க இந்த அரசியலை அணுகுகிறார்கள் என்பது என் எண்ணம்.

இதில் மிக முக்கியமான விஷயம், விடுதலைப் புலிகளையும் அப்பாவி ஈழத் தமிழர்களையும் பிரித்துக்கொள்வது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், எனவே அவர்கள் அழித்தொழிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்களை சாக்காக வைத்து பொதுமக்களைக் கொல்வது என்பது ஏற்புடையதல்ல. இங்கேதான் பெரிய அரசியலை இருபக்கமும் நாம் பார்க்கலாம். ஈழத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பிரித்துக்கொள்ளாதவாறு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்களை ஈழத்தமிழர்களின் எதிரிகளாகச் சித்தரிப்பார்கள். இந்த சித்தரிப்பு ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்பதுதான் இன்றைய நிலை.

இப்புத்தகம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் விடுதலைப்புலிகளையும் ஈழப் பொதுமக்களையும் எவ்விதத்திலும் பிரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. எங்கெல்லாம் விடுதலைப்புலிகள் பற்றிய குறிப்புகள் வருகின்றனவோ அதை ஒட்டியே ஈழத்தமிழர்கள் பற்றிய குறிப்புகள் மிகக் கவனமாகச் சொல்லப்படுகின்றன. எவ்வித அரசியலும் இன்றிப் இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் அவர்களறியாமலேயே இதில் விழுந்துவிடுவார்கள்.

இப்புத்தகம் முன்வைக்க வரும் மிகமுக்கியமான ஒரு விஷயம், விடுதலைப்புலிகளின் அழித்தொழிப்புக்கு, எனவே ஈழத்தமிழர்களின் ஒழிப்புக்கு மிக முக்கியக் காரணம் இந்தியாதான் என்பது. தொடக்கம் முதல் புத்தகத்தின் இறுதிவரை இந்திய வெறுப்பு இலங்கையின் சிங்கள பேரினவாத அரசின் மீதான வெறுப்புக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக ஆசிரியரின் கொள்கைக்கு வலுவூட்டும் ஆதாரங்களுடன் அடுக்கப்பட்டுள்ளது. அத்தனை ஆதாரங்களின் அடிப்படையும் ஒன்றுதான். புவிசார்நலனுக்காக இப்போரை இந்தியா நடத்தியது என்பதுதான் அது. இந்தியாவுக்குப் போட்டியாக சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இப்போருக்கு ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக உதவின என்றும் சொல்லப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்த உலகங்களின் முக்கிய நாடுகளும் விடுதலைப்புலிகளை எனவே ஈழத்தமிழர்களை ஒழித்துக்கட்டினார்கள் என்கிறார் ஆசிரியர் அய்யநாதன்.

மறந்தும்கூட ஒரு வார்த்தைகூட விடுதலைப்புலிகளின் மீதான விமர்சனத்தை வைக்கவில்லை. விடுதலைப்புலிகள் சமாதானத்துக்குத் தயாராக இருந்தார்கள் என்பதை மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் பல்வேறு ஆதாரங்களுடன் சொல்லும்போது, விடுதலைப்புலிகள் காந்திய இயக்கம்தானோ, நமக்குத்தான் உண்மை புரியாமல் போனதோ என்றும் குழப்பமே ஏற்பட்டுவிடுகிறது. அதிலும் விடுதலைப்புலிகள் சுனாமியின்போது எப்படி சிங்களவர்களுக்கும் உதவினார்கள் என்று மறுபடி மறுபடி சொல்லும்போது, இது ஒன்றைத்தவிர விடுதலைப்புலிகள் சிங்களவர்களுக்கு எப்போதும் உதவியதில்லையோ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

இந்தியாவின் பிரதமர்களின் இந்திரா காந்தி மட்டுமே தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக உண்மையாக நடந்துகொண்டார் என்று சொல்லும் இந்நூல், இந்தியாவின் மற்ற எல்லா பிரதமர்களையும் ஒரே தட்டில் வைக்கிறது – வாஜ்பாய் உட்பட. இன்று ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில் பேசிய வைகோ இக்கருத்தை மறுத்து வாஜ்பாய்க்கே தெரியாமல் அதிகாரிகளின் லாபியால்தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலை இந்திய அரசால் அச்சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்றார். இந்திரா காந்தியின் ஈழப்பாசத்துக்குக் காரணம் கூட, இலங்கை அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததுதான் என்றும் அய்யநாதன் இந்நூலில் சொல்கிறார்.

இந்நூலின் முக்கியத்துவம் என்பது – மிக வரிசையாக அத்தனை நிகழ்வுகளும் ஆதாரங்களுடன் அடுக்கப்பட்டுள்ளன. மிகத் தெளிவான எழுத்துநடை. ஆதாரங்களுக்கு இடையேயான புள்ளிகள் மிகத் தெளிவான தர்க்கத்தால் இணைக்கப்பட்டுள்ளன. தன் கொள்கை நிலைப்பாட்டில் இருந்துகொண்டு எப்படி ஒரு சிறந்த புத்தகத்தை எழுதவேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு கையேடு. அதே சமயம் இந்நூல் சறுக்கும் இடங்களைப் பார்க்கலாம்.

முதல் குறை என்பது, கூறியதைப் பலமுறை மீண்டும் மீண்டும் கூறுவது. ஒருகட்டத்தில் சலிப்பேற்பட்டுவிடுகிறது.

இன்னொருகுறை, அய்யநாதனின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிர்நிலைப்பாட்டுடையவர்களுக்கு இந்நூல் எப்படி உதவும் என்பது. இதை மிகக் குழப்பான ஒரு மொழியில், புத்தகம் படிக்காதவர்களுக்குப் புரியாத வகையில், ஜென்ராம் இன்று ‘ஈழம் அமையும்’ புத்தக வெளியீட்டில் குறிப்பிட்டார். இந்நூலை இக்கொள்கையை ஏற்காதவர்களும் கொண்டாடமுடியும் என்பதுதான் அவர் சொல்ல வந்தது. அதை என் உதாரணம் மூலமே விளக்குகிறேன்.

விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டியவர்களே என்பதே என் நிலைப்பாடு. அதை இந்தியா செய்து முடித்தது என்றால் அதை நான் இந்தியாவின், காங்கிரஸின், அதற்கு உதவிய எதிர்க்கட்சிகளின், அண்டைநாடுகளின் சாதனையாகவே பார்ப்பேன். இந்நூலே அதற்கான தரவாக அமையும். இதைத்தான் ஜென்ராம் சொல்லவந்தார் என்று நினைக்கிறேன். அப்படித்தான் இந்நூல் உள்ளது. விடுதலைப்புலிகள் ஒழிக்கப்படும்போது பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்பதற்கான உறுதியை இந்திய அரசு பெறவில்லை, அப்படிக் கேட்டுப் பெறும் வகையில் இந்திய அரசு இல்லை அல்லது அதை முக்கியமாக இந்திய அரசு நினைக்கவில்லை, அல்லது ஈழத்தமிழ்ப்பொதுமக்கள் ஒழிந்தாலும் பரவாயில்லை புலிகள் ஒழியட்டும் என்று இந்திய அரசு நினைத்திருக்கலாம் என்பதில் எது ஒன்று உண்மையென்றாலும் அது இந்தியாவின் பக்கம் நிகழ்ந்த பெரிய சறுக்கல்தான். அதுவும் மீண்டும் சரிசெய்யப்பட இயலாத ஒரு தோல்வி. ஒருவகையில் யோசித்துப் பார்த்தால் இத்தகைய ஒரு பயங்கரவாத ஒழிப்பில் இப்படி நடப்பதுதான் உலகம் முழுக்க நடந்த வரலாறுகளில் இருந்து நாம் தெரிந்துகொள்வது. இப்படிச் சொல்லி எவ்வகையிலும் நான் இதை நியாயப்படுத்தவில்லை என்பதை உறுதியாகச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இப்படித்தான் நடக்கிறது. இந்திய அமைதிப்படையின் மீதான குற்றச்சாட்டுகளிலும் நாம் இதைப் பார்க்கலாம். இதைவிட மிக முக்கியமான எடுத்துக்காட்டாகச் சொல்லவேண்டுமென்றால் – விடுதலைப்புலிகளின் செயல்பாட்டிலேயே நாம் பார்க்கலாம். அவர்கள் எத்தனை பேரை எதற்காகக் கொன்றார்கள் என்று யோசித்துப் பார்த்தால் புரியும். சிறுவர்களை, தமிழ் முஸ்லிம்களை, சக இயக்கத்தவர்களைக் கொன்றார்கள். அதற்கான நியாயங்கள் மெல்ல அத்தரப்பிலிருந்து உருவாகிவரும். இதுவே மிகப்பெரிய பரப்பில் ராணுவத்தரப்பிலும் நடந்துவிடுவது கொடுமைதான்.

இந்நூலின் இன்னொரு சறுக்கல் – இறுதி அத்தியாயங்களில் அய்யநாதன் சொல்லும் ஆதாரமற்ற வம்புகள் பற்றிது. ராஜிவ் காந்தி கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றும், அவரைக் கொல்வதற்கான காரணம் எதுவும் விடுதலைப்புலிகளுக்கு இல்லை என்றும், சர்வதேச சதியில் ராஜிவை ஒழிக்க விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் ஜெயின் கமிஷனை சுட்டிக்காட்டி அய்யநாதன் சொல்கிறார். (புத்தகத்திலிருந்து: ராஜிவ் காந்தியை படுகொலை செய்யச் சர்வதேச அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது; அத்திட்டம் தீட்டியவர்களே ராஜிவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்என்கிற உண்மைகள் எல்லாம் மத்திய அரசு அமைத்த நீதிபதி மிலாப் சந்த் ஜெயின் விசாரணை ஆணையத்தில் வெளிவந்தது.) ஆயிரத்தோராவது முறை இந்த வம்பை நாம் படிக்கிறோம். விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்ற ஒருதரப்பிலிருந்து வேறுபட்ட இன்னொரு புலிஆதரவு தரப்பு இது. புலிகள்தான் கொன்றார்கள், ஆனால் சதி அவர்கள் செய்யவில்லை என்பது. அய்யநாதன் ஒருபடி மேலேபோய், புலிகள் கொன்றிருக்க வாய்ப்பில்லையோ என்ற சந்தேகத்துடன் நிச்சயமாக சதியை அவர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்கிறார். கருமைக்கும் வெண்மைக்குமிடையேதான் எத்தனை நிறங்கள். சிபிஐ ஏன் சதிக்கான காரணத்தைக் கண்டறியவில்லை என்பதைப் பெரிய விஷயமாக முன்வைக்கிறார் அய்யநாதன்.

இந்திராகாந்தி கொலையில் உள்ள மர்மங்கள், அதில் சோனியாவின் பங்கு என்ன (தாக்கர் ஆணையத்தை முன்வைத்து சொல்கிறார் ஆசிரியர்), நரசிம்மராவ் சந்திராசாமி பங்கு என்ன, லக்குபாய் பதக்கிடம் சந்திராசாமி சொன்னது என்ன, சுப்ரமணியம் சுவாமி திருச்சி வேலுச்சாமியின் கேள்விகளுக்கு எப்படி உளறினார், எப்படி நடுங்கினார் என்றெல்லாம் திண்ணைப் பேச்சுகளில் அலைபாய்கிறது இப்புத்தகம். சுப்ரமணியம் சுவாமிக்கு கொலையில் பங்கிருக்கிறது என்றால் அதே சுப்ரமணியம் சுவாமி சோனியாவுக்குப் பங்கிருப்பதாகச் சொல்கிறாரே, சோனியாவும் மௌனமாக இருக்கிறாரே என்ற கேள்விக்கு ‘அது புரியாத ஒரு புதிர்’ என்று ஓரிடத்தில் நழுவும் அய்யநாதன், இன்னொரு இடத்தில் இப்படிச் சொல்கிறார்: இந்திரா காந்தி படுகொலையில் சோனியாவின் பங்கு பற்றிய உண்மைகளை இந்திய மக்கள் அறியாதிருக்கலாம், ஆனால், இந்திரா காந்தியைச் சதி செய்து வீழ்த்திய அந்த சக்திகளுக்கு தெரியாமல் இருக்குமா? அதனால்தான், சந்திராசாமி, சுப்ரமணியம் சுவாமி ஆகியோரின் முகத்திரைகள் விசாரணை ஆணையங்களில் கிழித்தெறியப்பட்ட பின்னரும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் சோனியா காந்திக்கு இல்லாமல் போனது. இல்லையென்றால், சோனியாவை இன்றுவரை சுப்ரமணியம் சுவாமி மிரட்டிக்கொண்டிருக்கிறாரே, என்ன காரணம்? அதன் பின்னணி என்ன?” இவ்வாறாக ஒரு பட்டியலை இட்டுவிட்டு, சோனியா தன் கணவர் ராஜிவின் கொலைக்காக விடுதலைப்புலிகளை ஒழிக்கவில்லை, தன் மீதான பழியை மறைக்கவே விடுதலைப்புலிகளை ஒழிக்கும் இலங்கையின் போருக்கு உதவியுள்ளார் என்று முடிக்கிறார் அய்யநாதன்.

இதைவிட இன்னொரு வம்பு என்னவென்றால், சிவராசன் எப்போதோ புலிகள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் இவர்களையெல்லாம் வழிநடத்துவதெல்லாம் சந்திராசாமியும் சுப்ரமணியம் சுவாமியும்தான் என்று பெங்களூர் ரங்கநாத் (ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர், சிவராசன், சுபா உள்ளிட்டவர்களுக்கு பெங்களூருவில் தங்குவதற்கு வீட்டை ஏற்பாடு செய்தவர்) சொன்னதையும் இந்நூலில் காணலாம்! ராஜிவ் கொலையில் சுப்ரமணியம் சுவாமியைப் பற்றி திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளதையும், ரகோத்தமன் அவரது ‘ராஜிவ்கொலை – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தில் மரகதம் சந்திரசேகர் பற்றியும் மறைக்கப்பட்ட வீடியோ பற்றியெல்லாம் கூறும் அய்யநாதன், திமுகவின் ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதைப் பற்றியும்  வைகோ ஏன் சாட்சியாக சேர்க்கப்பட்டார், ஏன் ரகோத்தமனால் விசாரிக்கப்படவில்லை, சிவராசனுக்கு உதவியது சீனிவாசய்யா என்ற நபர் வைகோவின் சகோதர் ரவிச்சந்திரனாக இருக்கலாம் என்றெல்லாம் ரகோத்தமன் சொல்லியிருப்பதை எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை ஒழிக்க ராஜபக்ஷே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கருணாநிதியும் உதவினார் என்று பல இடங்களில் பதிவு செய்கிறார். அதாவது கருணாநிதி மேற்கொண்ட திடீர் உண்ணாவிரதம் முன்னரே திட்டமிடப்பட்டது என்றும் அதை தில்லி வட்டாரங்கள் அறிந்திருந்தன என்றும் சொல்கிறார். 2ஜி வழக்கின் கோப்புகளைக் காட்டி கருணாநிதியை எம்.கே.நாராயணன் மிரட்டினார் என்றும் சொல்கிறார்.

இந்நூலின் மிக மோசமான அத்தியாயம், கேரளா மாஃபியா என்று எழுதப்பட்டிருக்கும் அத்தியாயமே. உண்மையில் இந்திய அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயலாற்றிய பலரில் முக்கியமான மலையாளிகளைப் பொறுக்கியெடுத்து (எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், டி.கே.ஏ.நாயர், சதீஷ் நம்பியார், விஜய் நம்பியார், நிருபமா மேனன் ராவ்) கேரள மாஃபியாவே விடுதலைப்புலிகளின் எனவே ஈழத்தமிழர்களின் இனஒழிப்புக்கு காரணம் என்கிறார். ஏன் ‘கேரளா மாஃபியா’ ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள் என்பதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து அய்யநாதன் சொல்கிறார் பாருங்கள்! இந்நூலை ஒட்டுமொத்தமாகத் தகர்க்கும் அத்தியாயம் அது. ஹனி டிராப்பிங் என்பதை வைத்து ஒரு மலையாளியை விடுதலைப்புலிகள் மாட்டிவிட்துதான் ‘கேரள மாஃபியா’வின் ஒட்டுமொத்த வெறுப்புக்கு காரணமாம்! முக்கியமான புத்தகம் கிசுகிசு கட்டுரைக்கு இணையாக இறங்கிவிடும் இடம் இது. உண்மையில் அங்கே கேரளாவைச் சேர்ந்தவர்கள் இல்லாமல் வேறு யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செயல்பட்டிருப்பார்கள். 2-10-15 அன்று நடந்த ‘ஈழம் அமையும்’ புத்தக வெளியீட்டில் ‘கேரள மாஃபியா’வை மறுத்த ஒரே ஜீவன் ஜென்ராம் மட்டுமே. மிக மோசமான வன்மத்தை வெளிப்படுத்தும் இப்புத்தகத்தின் ஒரு மிகப்பெரிய கறை என்றே சொல்லவேண்டும். மிகத்தெளிவாக இந்திய வெறுப்பு, விடுதலைப்புலி ஆதரவு என்ற மடையை தமிழ்த்தேசியத்தின்பால் திருப்பும் உத்தி இது என்றுதான் தோன்றுகிறது.

புத்தகத்தின் முதல் பகுதி மிக நேர்த்தியான (கூறியது கூறல் ரொம்பவே அதிகம் என்றாலும்) ஆய்வுநூல் போன்று தோற்றம் கொள்ள, பிற்பகுதி வெற்று வம்புகளில் உழன்றுவிட்டது. இதைத்தான் ஜென்ராம் (ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில்) நாசூக்காக பத்திரிகையாளர் அய்யநாதன் என்றும் அரசியல்வாதி அய்யநாதன் என்றும் பிரித்துக்கூறினார். கூறிவிட்டு, ஆனாலும் பத்திரிகையாளர் அய்யநாதனே முழுக்க வெளிப்பட்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டார். சபை நாகரிகம் கருதி இருக்கலாம் என எடுத்துக்கொண்டேன்.

இந்நூலின் கடைசி அத்தியாயமே மிக முக்கியமானது. பலருக்கு அதிர்ச்சிகரமானது. அதில் நாம் புரிந்துகொள்ள பல விஷயங்கள் உள்ளன. அரவிந்தரின் அருளால் ஈழம் அமையும் என்கிறார் அய்யநாதன். இதை வைகோ (ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில்) மிக நாசூக்காகக் குறிப்பிட்டு, ஆங்கிலத்தில் ஹிந்தியில் மொழிபெயர்க்கும்போது கொஞ்சம் பார்த்து செய்ங்க என்று கேட்டுக்கொண்டார். அரவிந்தரின் அருளில் ஈழம் அமையும் என்றால் அத்தனை பிரச்சினை எல்லாருக்கும். விடுதலை பத்திரிகையில் இந்நூலைக் கைகழுவியே விட்டார்கள். ஈவெரா வகுத்துக்கொடுத்த பாதையில் எதையும் ஒற்றைவரியில்தான் இவர்களால் புரிந்துகொள்ளமுடியும் போல. நூல் முழுக்க மாங்குமாங்கென ஒருவர் தொகுத்து ஒரு தரப்பை முன்வைத்திருக்கிறார். கடைசியில் அவரது நம்பிக்கையின்பாற்பட்ட ஒன்றைச் சொல்கிறார். உடனே நூலை நிகாகரிக்கிறார்கள். ‘அரவிந்தரின் அருளில் அமையும் என்றால் அது இஸ்லாமிய கிறித்துவ நாடாக இருக்க வாய்ப்பில்லை, ஹிந்து நாடாக இருந்துவிடுமோ’ என்று பயந்து இந்நூலை நிராகரிக்கிறார்களோ என்னவோ யார் கண்டது.

Share