Tag Archive for வெட்டி

ஓம் சாந்தி ஓம்

சுருக்கமாகப் படிக்க விரும்புகிறவர்கள் மஞ்சளடிக்கப்பட்ட பகுதிகளைப் படித்தால் போதும்.

இப்படி ஒரு தளம் இருக்கிறது என்பதே இப்போதுதான் நினைவுக்கு வந்தது. கொஞ்ச நாள் எழுதாமல் இருக்கலாம் என்று முடிவெடுத்துப் படிக்க ஆரம்பித்ததில், எழுதவே எரிச்சல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் தந்த பழக்கத்தில் யாராவது மூன்றாவது வரியை எழுதினாலே ஏன் இத்தனை இழுவையாக நீளமாக எழுதுகிறார்கள் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதுவே புத்தகமாகப் படிக்கும்போது ஒன்றும் தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் செய்துவைத்த இன்னொரு விஷயம் உடனடி அறச்சீற்றம். இப்போது நினைத்துப் பார்த்தால் இந்த அறச்சீற்றங்களுக்கெல்லாம் எதாவது பொருளிருக்கிறதா என்றே தெரியவில்லை. நாமும் அரசியல் சமுதாயம் தொடர்பான ஒரு நிகழ்வுக்கு நம் உடனடி அறச்சீற்றத்தைப் பதிந்து வைத்தோம் என்பதைத் தவிர வேறு என்ன வகையிலும் இது எதையும் சாதிக்கப்போவதில்லை என்னும் கருத்து உறுதிப்படுகிறது. பதினைந்து நிமிடப் புகழ் என்று சுஜாதா சொன்னபோது அன்று சுருக்கென்றிருந்தது. இப்போது சுஜாதா மீது கடுப்பாக இருக்கிறது, 15 நிமிடம் அதிகம் சார்.

தொடர்ந்து சில வருடங்களாக அவ்வப்போது சில குழுக்களில் இருந்திருக்கிறேன். அங்கே எழுதுவதும் படிப்பதும் இன்னொரு அடிக்டானது. நான் இருந்தவை எல்லாமே ஹிந்துத்துவம் தொடர்பான சிறிய அரட்டைக் குழுக்கள். என் வாழ்க்கையில் இது போன்ற ஆக்கபூர்வமான குழுமங்களை நான் படித்ததே இல்லை. எத்தனை எத்தனை கருத்துகள். எல்லாக் குழுமங்களுக்கும் போல இக்குழுமங்களுக்கும் வீழ்ச்சி வந்தது. தொடக்கத்தில் கருத்தை அறிதல் என்பது தொடங்கி பின்பு அது நட்பாகி பின்பு நீ அப்படிப் பேசலாமா என்றும் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை என்பதிலும் முடிந்தது. என்னதான் குழும நட்பென்றாலும் எல்லாமே முடிவில் முகமிலி நட்பே என்பதை இக்குழுமங்களும் உறுதி செய்தன. ஆனாலும் இக்குழுமங்கள் எனக்குத் தனிப்பட்ட அளவில் செய்த சாதனைகள் அதிகம். அதற்காக மரத்தடி போல ராகாகி போல அங்கிருக்கும் நண்பர்கள் மெல்ல மறைந்து குழுமப் பெயர் மட்டும் முன்வருவதுபோல இக்குழுமப் பெயர்களும் முன்வந்துவிட்டன.

ஏப்ரல் முதல் நெருக்கத் தொடங்கிய வேலைகளுக்கு மத்தியில் நான் உருப்படியாகச் செய்தது புத்தகங்கள் படிப்பதையே. டயல் ஃபார் புக்ஸ் எனக்குப் படிக்க புத்தகங்களை அள்ளித் தந்தது. 🙂 படிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதக்கூடாது என்றும் ஒரு முடிவெடுத்தேன். படிக்கும்போதே இதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்ன எழுதப்போகிறோம் என்னும் டிவிட்டர் ஃபேஸ்புக் ப்ளாக்கிய வியாதியில் இருந்து மீள்வது முக்கியமானதாகப் பட்டதால் இம்முடிவு. நல்ல பலன் தந்தது. புத்தக ரசனை என்பதே முக்கியம் என்ற உள்ளுணர்வு மீண்டு வந்தது. இப்படி எத்தனையோ மாற்றங்கள்.

மீண்டும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். இன்னும் எழுதுவேன் போல. எதையும் இன்னும் வெளியிடவில்லை. இந்த தளத்தில் வாரம் ஒன்றாவது எதாவது எழுதலாம் என்ற நினைவு. இப்படி ஒரு தளம் வைத்துக்கொண்டு எதுவும் எழுதாமல் இருப்பதும் குற்ற உணர்ச்சியாக உள்ளது. ஒவ்வொன்றிலிருந்தும் வெளிவருதல் முக்கியமாகப் பட்டுவிடுகிறது. ராஜாவின் பாடல்கள் சிடியை தேடித் தேடி வாங்கியதிலிருந்து வெளிவந்ததுதான் தொடக்கம். உலகத் திரைப்படங்களுக்கு அடிக்ட் ஆனபோது அவற்றைப் பார்ப்பதையே 2 வருடங்களுக்கு முன்னால் நிப்பாட்டினேன். பெரிய அளவில் பர்ஸ் தப்பித்தது. பின்பு மலையாளப் படங்கள் வெறி. வெறி என்றாலும் நல்ல மலையாளப் படங்களே. இதில் கொஞ்சம் அடக்கி வாசித்ததால் பர்ஸ் ஓரளவு தப்பித்தது. யூ டியூபின் இலவசப் பணியும் மகத்தானதே. நேர்மை அறச்சீற்ற கனவாண்கள் என்னை மன்னிக்க.

சொல்வனத்தில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த கவிஞானசூனியங்களின் புலம்பல்கள் இணையம் முழுக்க பிரசித்தமாக இருப்பதால் இது பற்றி நான் தனியே சொல்லவேண்டியதில்லை. சொல்லவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுமட்டுமே, கவிஞானசூனியங்கள் ஒருவேளை சரியாகவும் இருக்கலாம்.

புலம்பல்கள் தொடரும்.

கடவுளின் உரையாடல்

பனி விழும் இரவல்ல
வேர்வையின் துளிகள்
உடலெங்கும் பூத்திருக்க
அறையெங்கும் வீசிக்கிடக்கும்
நாற்றத்துக்குள்ளிருந்து
கடவுள் என்பவன் பேசிய குரலது
எப்போதோ அறிந்திருந்த மொழியென
ஒரு யோசனை
எப்போதும் புரிந்திராத மொழியென
ஒரு திடுக்கிடல்
சிதறி விழும்
எவர்சில்வர் டம்ப்ளர்கள்
எழுப்பும் ஒலியென ஒரு மயக்கம்
குழந்தையின் வீறிடல் என்ற உறுதி
இரண்டாம் சாமத்தில்
விடாது குரலெழுப்பும் சேவலும் சேர்ந்தபோது
வேலுடன் சேவலுடன் கொடியுடன்
ஆழ்நிலை மயக்க உலகில்
கடவுள் தெளிவாகப் பேசினான்
என் குற்றங்களைப் பட்டியலிட்டான்
நான் புரண்டு புரண்டு படுத்தேன்
காதுக்கருகில் வந்து அவன் சொல்லிக்கொண்டே போன
முடிவற்ற பட்டியலில்
அச்ச வேர்வைகள் பெருக பெருக
அவனுக்குக் களியாட்டம்
சைகையில் அவனை அடக்கமுடியவில்லை
மிரட்டலுக்கும் மசியவில்லை
மெல்ல விசும்பலும்
பிறகு கதறலுமென
காற்றில் வீசப்பட்ட என்னுடலில்
ஊழித் தாண்டவம்
காறித் துப்பினேன்
அதையும் குற்றப் பட்டியலாக்கினான் அவன்
ஒரே ஒரு கேள்வி கேட்க மன்றாடினேன்
காலில் விழுந்து புரண்டழுததும்
மெல்லப் புன்னகைத்தான்
நீயெல்லாம் கடவுளா என்றேன்
விடியத் தொடங்கியது வானம்.

தனிமையின் மொழி

ஓவியம் என்றேன்
காற்றில் எழுதுகிறாயா என்றான்
நிழல்!
நீரின் பரப்பிலா?
தேவதை வருவாள்!
வேசியைச் சொல்கிறாயா?
நற்சொல் சொல் என்றால்
கெட்ட வார்த்தை வருமோ என்றொரு அச்சம்
கேள்வி ஏதுமின்றி
மௌனம் காத்தேன்
எதாவது பேசேன் என்றான்
மீண்டும் எதாவது பேசேன்
மீண்டும் மீண்டும்
காமம் பின்காத்திருக்க
காதலொடு பெண்ணிடம்
ஓர் ஆண் கொள்ளும் அதே கெஞ்சல்
நானேதான் எனச் சொல்லிவிடுவானோ என்று
நீ யார் எனக் கேட்கவே இல்லை.

உலகம் அமிழும் ஓவியம்

புறாக்கூண்டுக்குள் இருந்து
புறாவை விரட்டிவிட்டு
கழுகை அடைத்து வைக்கும்
மனநிலையை எப்படி எதிர்கொள்வது
மண்ணுள்ளிப் பாம்புக்காக
கோடாரியைத் தேடியலையும்
ஒரு சித்திரத்தை
காகிதத்தில் வரைந்து
மெல்ல மெல்ல உயிர் பெருக்க
காகிதம் அமிழ்ந்து
அறை மூழ்கி
ஊர் தாண்டி
உலகம் அடங்காமல்
வெளியில் திமிறியபோது
தன்னை அவ்வோவியம்
தழுவிக்கொள்ள
சிறகை அடித்தபடி
பறக்காமல் நிலைபெற்றுவிட்ட
இன்னொரு ஓவியமாகக்
காத்துக் கிடக்கிறது
விரட்டிவிடப்பட்ட புறா.

ஹரன்பிரசன்னா

Share