Tag Archive for வீடு

டூ லெட்: வாடகை உலகம்

செழியனின் திரைப்படம். எவ்வித அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாமல் இயல்பான மொழியில் பிரச்சினையை மட்டும் பேசும் செறிவான ஒரு திரைப்படம். சென்னைக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பாலானவர்கள் இப்படத்தில் வரும் பெரும்பாலான நிகழ்வுகளையோ அல்லது எல்லாவற்றையுமோ எதிர்கொண்டிருப்பார்கள். இப்படத்தில் வரும் பல காட்சிகள் என் வீட்டிலேயே எனக்குத் தனிப்பட்டு நிகழ்ந்தவை. இப்படி ஒவ்வொருவரும் தன்னுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையிலான திரைப்படம் டூ லெட். படத்தின் தொடக்கத்தில் இப்படம் இதுவரை திரையிடப்பட்டிருக்கும் உலகத் திரைப்பட விழாக்களின் பட்டியலைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. தமிழில் அரிதிலும் அரிதாக வெளிவரும் மாற்றுத் திரைப்பட முயற்சிகளை நாம் ஆதரிக்கவேண்டியது அவசியம். அப்படி ஒரு திரைப்படம் டூ லெட். ஒளிப்பதிவாளர் / இயக்குநர் செழியனுக்கு வாழ்த்துகள்.

வீடு கட்டுதல் பற்றிய பிரச்சினைகளை யதார்த்தமாக ஆழமாக முன்வைத்த திரைப்படம் வீடு. தமிழின் மிகச் சிறந்த படங்களில் முதன்மையானது இது. மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸின் வீடு கட்டும் கனவை இனி இப்படத்தின் சாயல் இல்லாமல் எடுக்கமுடியாது என்னும் அளவுக்குப் பேசிய படம். அந்த முதியவர் ஒரு குடையைத் தொலைத்துவிடும்போது, இந்த வீடு கட்டமுடியாமல் போனால் அவருக்கு என்ன ஆகும் என்ற கேள்வி பூதாகரமாக எழுவது. ஒரு வீட்டைக் கட்டுவதில்/வாங்குவதில் அது நிறைவடையும் வரை ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. வாங்கிய பின்னரும்கூட!

சென்னையில் வீடு வாடகைக்கு இருப்பது போன்ற பிரச்சினை இன்னொன்றில்லை. நீங்கள் மிடில் கிளாஸாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், வீட்டுக்காரர் தரும் விநோதமான தொல்லைகள் உங்களைத் துரத்தி அடிக்கும். இங்கே மிக முக்கியமாகச் சொல்லவேண்டியது, இந்த வீட்டுக்காரர்கள் யாருமே மோசமானவர்கள் இல்லை என்பதைத்தான். எல்லோரும் நல்லவர்களே. ஆனால் இப்படி இருக்கும்படியாகத்தான் ஆகிவிடுகிறது. ஏனென்றால் குடித்தனக்காரரும் நம்மில் ஒருவரே. யாரும் புனிதரல்ல.

நான் வீடு வாடகைக்கு இருந்த இடங்களில் பெரிய பிரச்சினைகள் இருந்ததில்லை. ஆனால் சிறிய சிறிய சீண்டல்கள் இல்லாமல் இருந்ததுமில்லை. என் திருமணத்தின்போது ஏற்கெனவே திருமணமான பெண் என் மனைவியிடம் சொன்னது காதில் விழுந்தது, ‘கல்யாணம் ஆயிடுச்சுன்னா வெக்கம் மானம் சூடு சுரணை எதுவும் ஒரு பெண்ணுக்கு இருக்கக்கூடாது’ என்று. இன்றளவும் என் காதில் ஒலிக்கும் ஞானத்தின் குரல் இது. வாடகைக்கு வீடு எடுத்து வசிக்க வந்துவிட்டாலும் இப்படித்தான். இவற்றில் எதாவது ஒன்று எதாவது ஒரு சமயத்தில் இருந்துவிட்டாலும் நீங்கள் வீட்டை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டி இருக்கும்.

வீடு மாற்றும்போதெல்லாம் ஏன் இப்படி அலைகிறோம் என்ற பதிலில்லாக் கேள்வி எரிச்சலைத் தரும். இந்த எரிச்சல் மிகும்போதெல்லாம் இதைப் பற்றி எழுத நினைப்பேன். வீட்டு உரிமையாளர் படித்துவிட்டுத் தவறாக நினைப்பாரோ என்றொரு மிடில்கிளாஸ் எண்ணம் எழுந்துவரும். ஒருதடவை எழுதியே தீருவது என்று முடிவெடுத்த நாளில், பிரபு காளிதாஸ் (புகைப்படக் கலைஞர்) ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். என்னை அசைத்துப் பார்த்த பதிவுகளில் ஒன்று அது. நான் எழுத நினைத்தவற்றையும், அதைவிடப் பல விஷயங்களையும் எழுதி இருந்தார் அவர். அன்று நான் எழுத நினைத்த அனைத்தும் உறைந்து நின்றது. நான் எழுதவில்லை. (அந்தப் பதிவின் லின்க் கிடைத்தால் சேர்க்கிறேன்.) அவர் எழுதி 4 வருடங்கள் கூட இருக்கலாம் என நினைக்கிறேன்.

அதற்குப் பிறகும் வீடு மாற்றவேண்டிய தேவைகள் தினம் தினம் வந்துகொண்டே இருந்தன. அப்போதெல்லாம் ஒரு வேகம் எழும். அப்படி ஒரு வேகத்தில் இன்னொருமுறை ஒரு பதிவு எழுத நினைத்தபோது, ஆண்டவன் கட்டளை திரைப்படம் வெளியானது. வீடு வாடகைக்கு எடுக்கும் காட்சிகள் இருபது நிமிடங்களே வந்தாலும் மிகப்பெரிய பிரச்சினையை நகைச்சுவையாகக் கையாண்டதில் அசந்துபோய்விட்டேன். நாம் எழுதினாலும் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியதால் மீண்டும் எழுதுவதைக் கைவிட்டேன்.

இதற்கிடையில் இனி வீடு வாடகைக்குப் பார்த்து அலையவேண்டியதில்லை என்ற ஒரு தருணத்தில் டூ லெட் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் வரும் பல சம்பவங்களை நான் அனுபவித்திருக்கிறேன். மிக முக்கியமாக இரண்டு விஷயங்கள். இவற்றை ஒவ்வொருவரும் அனுபவித்திருப்பார்கள். வீடு முழுக்க கிறுக்கி வைக்கும் குழந்தை. வீட்டு உரிமையாளர் அதைப் பார்க்கும் பார்வை. அட்வான்ஸ் தொகையில் கழித்துவிடுவாரோ என்கிற பதைபதைப்பு. இவற்றை வைத்து ஒரு சிறுகதையையும் நான் எழுதினேன். நான் எழுதிய கதைகளில் மிக மெலிதான கதை கொண்ட எளிய கதை இதுவே. சொந்த வீட்டுக்குப் போனாலும் நாம் குழந்தைகளைக் கிறுக்க விடமாட்டோம் என்பது இதன் மறுபக்கம்.

இன்னொரு சம்பவம், படபடவெனப் போய் வீட்டு உரிமையாளருடன் சண்டை போட எழும் வேகம். ஒருநாளும் இது நடக்காது. அப்படி நடக்கப்போகும் அந்த நொடியில் வீட்டு உரிமையாளர் வீட்டில் இருக்கமாட்டார். ‘வீட்டைக் காலி பண்ணிக்கிறேன்’ என்று கோபத்துடன் வீட்டு உரிமையாளரிடம் நான் சொல்லப் போனபோது வீட்டு உரிமையாளர் வீட்டில் இல்லை. அதற்கு பிறகு 2 வருடம் அதே வீட்டில் இருந்தேன்! மானம் சூடு சுரணையெல்லாம் இங்கே செல்லுபடியாகாது.

இந்தப் படம் கணக்கில் எடுக்காத, எனக்கு நிகழ்ந்த சம்பவம், ஒரு வீட்டின் உரிமையாளர் என் கண்முன்னே, அவர் குடி வைத்திருக்கும் குடித்தனக்காரரிடம் கேட்ட கேள்விதான், “ஏன் மாடில நைட்ல கட்டில் சத்தம் அத்தனை கேக்குது?” பெரிய நடுக்கும் ஏற்பட்டது எனக்கு. அவர்கள் புதிதாகத் திருமணம் ஆனவர்கள். கட்டில் சத்தம் கேட்டது இரவில் அவர்கள் கட்டிலை வேறு எதற்காகவோ அங்கும் இங்கும் நகட்டியதால்தான். ஆனால் கேள்வியின் குவிப்பு வேறொன்றில் இருந்தது. அப்படியே அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

இன்னொரு வீட்டின் உரிமையாளர் என்னிடம் மிக சீரியஸாகவே சொன்னார், ‘பக்கத்து வீட்டுக்காரங்க கூட நாங்க பேச மாட்டோம், நீங்களும் பேசிக்கவேண்டாம்’ என்று.

மீண்டும் சொல்லவேண்டியது, இவர்கள் அத்தனை பேருமே நல்லவர்கள் என்பதைத்தான். அனைத்து நல்லது கெட்டதுகளிலும் துணை நின்றிருக்கிறார்கள். உதவி இருக்கிறார்கள். பரஸ்பரம் உதவிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் கூடவே இருக்கிறது.

டூ லெட் படம் இந்த இரண்டாவது கோணத்தைக் கைக்கொள்ளத் தவறிவிட்டது. வீட்டு உரிமையாளர்களின் கோர முகத்தை மட்டுமே காட்டுகிறது. இதில் தவறில்லை. ஆனால் ஒரு மாற்றுத் திரைப்படம் இதையும் கொஞ்சம் முன்னிறுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜனும் (கவிஞர் விக்கிரமாதித்யனின் மகன்) நடிகை ஷீலாவும் ஆச்சரியப்படுத்துகிறார்கள். இப்படி ஒரு இயல்பான நடிப்பை அபூர்வமாகவே பார்க்கமுடியும். இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். சந்தோஷ் நேரில் சின்ன பையன் போல இருக்கிறார். கண்டுபிடிக்கவே முடியவில்லை. படத்தில் அசாத்தியமான மாற்றம்.

படத்தில் பல நுணுக்கமான சித்திரிப்புகள் உள்ளன. முதல் காட்சியில் நாயகனும் நாயகியும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது வீட்டில் சிதறிக் கிடக்கும் பொருள்கள் ஓர் உதாரணம். ஒரு வீடு இயல்பில் அப்படித்தான் இருக்கும். ரிமோட்டைக் கொண்டு டிவியை அணைக்கும்போது அதைத் தட்டிக்கொள்வது இன்னொரு உதாரணம். கிரைண்டரை இருக்கும் இடத்தில் வைத்து அரைப்பது இன்னுமொரு உதாரணம். சில நுணுக்கச் சித்திரிப்புகளில் கருத்தரசியலும் உள்ளது. மலையாளிகளுக்கும் கன்னடர்களுக்கும் சேட்டுகளுக்கும் சொந்த வீடு இருக்கிறது, ஆனால் திரைப்படத் துறையில் இருக்கும் தமிழனுக்கு வாடகைக்குக் கூட வீடு கிடைப்பதில்லை என்ற ஒன்றை நான் கவனித்தேன். நான் இதை ஏற்கவில்லை. வீட்டுச் சொந்தக்காரர்கள் எச்சாதி என்றாலும் அவர்கள் ஒரே சாதிதான். வீட்டு வாடகைக்காரர்களுக்கும் இது பொருந்தும்!

இன்றளவும் வீடு வாடகைக்குக் கிடைப்பதில் பெரிய அளவு தாக்கம் செலுத்துவது பொருளாதார ரீதியான வேறுபாடே. 2007ல் பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் பெருகியதால் இப்படி ஆனது என்ற கருத்தை ஓரளவுக்கு மட்டுமே ஏற்கமுடியும், முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாது. இந்தக் காரணத்தைச் சொல்லாமலேயே கூட இப்படம் முழுமை பெறுகிறது என்னும் நிலையில் இதைத் தவிர்த்திருக்கலாம். முஸ்லீமா என்ற கேள்வி ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. அது முஸ்லீமா என்றுதான் வாயசைப்பில் தெரிகிறது. ஒரு பிராமணர் கேட்கும் கேள்வி சட்டெனப் புரியவில்லை. பிராமணர்களா என்று கேட்டாரா அல்லது வெஜிடேரியனா என்று கேட்டாரா என்பது தெரியவில்லை.

படம் முழுக்க கிறித்துவச் சித்திரிப்புகள் வருகின்றன. ஆனால் வேற்று மதங்களைக் கிண்டல் செய்வதில்லை. ஆனால், இதிலும் ஒரு நடப்பு அரசியல் இருக்கிறது. படத்தின் பாதியில்தான் அது எனக்குப் புரிந்தது. படத்தின் நாயகனும் நாயகியும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் நாயகன் ஹிந்து என்பதுவும் எனக்குப் பாதியில்தான் தெரிந்தது. நாயகி மாதாவைக் கும்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். மகனுக்கும் தொட்டுக் கும்பிட்டு வைக்கிறாள். மகன் பெயர் சித்தார்த். நாயகன் கருப்புச் சட்டைக்காரன். ஈவெராயிஸ்ட் என்ற அளவுக்குக் காட்டவில்லை என்றாலும், அவர் எந்த மதக் கடவுளையும் கும்பிடுவதில்லை. வீட்டில் மாதாவின் உருவம் தவிர எதுவும் என் கண்ணில் படவில்லை. வீடு பார்க்கப் போகும்போது வ.உ.சி. படம் போட்ட காலண்டரைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளர் பிள்ளைமார் என்று தெரிந்துகொண்டு, வீடு வாடகைக்குக் கேட்பவரும் பிள்ளைமார்தான் என்று சொல்கிறார்கள். பிள்ளைமார் ம்யூட் செய்யப்படவில்லை என்பது ஆறுதல்.

இப்படம் கவனத்தில் கொள்ளாதவை என்று இரண்டு முக்கிய விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். வீடு மாற்றுவது என்பதும் வாடகை வீட்டில் இருக்கும்போது எதிர்கொள்ளும் அவமானங்கள் என்பதும் நிச்சயம் எரிச்சலானவையே. ஆனால் அதற்காக எந்த ஒரு வீட்டு வாடகையாளரும் வீட்டு உரிமையாளரின் முன்னே அடிமை போல் நிற்பதில்லை. இங்கே இந்தப் பெண் ஏன் கூனிக் குறுகி ஒவ்வொரு காட்சியிலும் அப்படி நிற்கிறார் என்பது புரியவில்லை. தினம் தினம் அழுவதில்லை. ஏன் இங்கே அந்தப் பெண் கிட்டத்தட்ட எப்போதும் அழுதவண்ணம் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. வீடு மாறுவது என்று முடிவாகிவிட்டால் வீட்டு வாடகைக்காரருக்குச் சட்டென ஒரு தைரியமும் எதிர்ப்புணர்வும் திமிரும் வந்துவிடும். அதை இப்பெண்ணிடம் கடைசிவரை எதிர்பார்த்து ஏமாந்தேன். இரண்டாவது, அந்த ஊரை விட்டே போகலாம் என்று முடிவெடுப்பதற்கு முன்பாக, பொதுவாக எல்லோரும் எடுக்கும் இன்னொரு முடிவு, ஏன் இத்தனை பணம் கட்டிப் பையனைப் படிக்க வைக்கவேண்டும், அரசுப் பள்ளியில் சேர்க்கலாமே என்பது. இதைக் கோடிட்டாவது காட்டி இருக்கலாம். பொதுவாகவே வீடு வாடகை ஒரு சுமையாவது, நம் குழந்தைகளுக்கு நாம் தர விரும்பும் சிறந்த கல்வியின் மூலமாகவே. எனவே வீட்டு வாடகையும் குழந்தைகளின் கல்வியும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதான்.

எனக்குள்ள இன்னொரு பிரச்சினை, இத்திரைப்படம் குறித்தானதல்ல, பொதுவானது, மாற்றுத் திரைப்படங்கள் ஏன் இன்றும் இருபது வருடங்களுக்கு முன்பான படங்கள் போலவே நகர்கின்றன என்பதுதான். படம் மெல்ல நகர்வதைச் சொல்லவில்லை. காட்சி ரீதியாகச் சொல்கிறேன். விளக்கமாக எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. சொல்லும் மொழியில் வீடு திரைப்படம் போன்றே இத்திரைப்படமும் இருக்கிறது. சமீபத்தில் வந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் இப்படித்தான் இருந்தது. இவற்றை மீறிய ஒரு மொழி சாத்தியமில்லையா? அல்லது இதுபோன்ற கதைகளுக்கு இப்படி உறைந்து நகரும் புகைப்படக் காட்சிகள்தான் சரியானவையா?

இப்படத்தின் மிகப்பெரிய பலம், நம் வீட்டுக்குள் நிகழ்வதைப் போன்ற காட்சியமைப்புகளும் ஒளிப்பதிவும் நடிகர்களின் நடிப்பும். இதற்காகவும் மிக முக்கியமான ஒரு பிரச்சினையை எவ்வித அலைபாய்தலுமின்றிக் கையாண்டதற்காகவும் நிச்சயம் பார்க்கலாம்.

நன்றி: https://oreindianews.com/?p=3421

Share