குரங்கு பொம்மை – பார்க்கலாம். பொறுமையுடன். பாரதிராஜா வெகு யதார்த்தம். விதார்த் வழக்கம்போல பலவீனம். க்ளைமாக்ஸ் அவசியமற்ற இழுவை மற்றும் கொடூரம். சாதாரண கார் ஓட்டுநர்கூட கொலை செய்வார், கை கால் வெட்டுவார் என்பதெல்லாம் அராஜகமான சிந்தனை. யதார்த்தமும் இன்றி, அதற்காக முற்றிலும் வணிகத் தன்மையும் இன்றிச் செல்கிறது படம். பதற வைக்கவேண்டிய க்ளைமாக்ஸ் தராத பதற்றத்தைத் தந்த காட்சி – ஒரு சிறுமி தன் தந்தைக்கு பதிலாக தானே ஒருவரைக் கயிற்றால் அடித்துக்கொண்டே இருப்பது.
-oOo-
காஸி அட்டாக் ஹிந்திப் படம் பார்த்தேன். நல்ல முயற்சி. கடைசி காட்சிகளில் கொஞ்சம் இழுவை, புல்லரிப்பு, வீடியோ கேம் விளையாட்டுகள் போன்ற காட்சிகள் எல்லாம் கலந்து இருந்தாலும், பார்க்கலாம். ‘எல்லையில் வீரர்கள்’ (என்னைப் போன்ற) உணர்வாளர்கள் கை கால் மயிர்களை வழித்துவிட்டுப் பார்ப்பது நலம். இல்லையென்றால் மயிர்க்கூச்செரிந்துகொண்டே இருக்கும். இப்படியும் படம் எடுத்ததற்காகவே பாராட்டலாம்.
இதில் இரண்டு சந்தேகங்கள். தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.
1. நீர் மூழ்கிக் கப்பலின் கேப்டன் கப்பலுக்குள்ளேயே பணியின் போது இறந்துவிட்டால், அப்படியே கடலில் விட்டுவிடுவார்களா?
2. படம் முடிந்து இறுதியில் உண்மைகளைப் பட்டியல் இடும்போது, பாகிஸ்தான் தனது கடற்கண்ணிவெடி (கடற்கன்னி அல்ல!) வெடித்துதான் தன் நீர்மூழ்கிக்கப்பல் காஸி அழிந்ததாகச் சொன்னது என்று காண்பிக்கிறார்கள். இதைப் பற்றிய மேலதிக இந்திய பாகிஸ்தான்சார் தகவல்கள் உண்டா?
-oOo-
விவேகம் பார்த்தேன். ஒரு மணி நேரம் எப்படியோ தாங்கிக் கொண்டேன். அதற்குமேல் மிடில. சமீபத்தில் பார்த்த மிகப் பெரிய மொக்கைகளில் சத்ரியனுக்கு அதீத செலவுடன் சவால் விட்டு நிற்கிறது விவேகம். நல்ல பிரம்மாண்டமான கொடுமை. அஜித் ரஜிகர்களுக்குப் பிடிக்கும் என்ற விமர்சனம் இனி வந்தால் பம்மிவிட முடிவெடுத்திருக்கிறேன். அஜித் ரசிகர்கள் இப்பாவியை மன்னித்துவிடுங்கள்.
இடைவேளையில் ஒரு சொறிக் காக்கா பிரமாண்டமாக வருகிறது. அது ஃபீனிக்ஸாம். செம மாஸ்.
எனக்குப் பிடித்த அழகான காஜோலை அஞ்சலிதேவி ரேஞ்சுக்கு காண்பித்த இயக்குநரை எத்தனை திட்டினாலும் தகும்.
-oOo-
ஜாலி எல் எல் பி2 படம் பார்த்தேன். முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பரபரவென்று இருந்தது. நல்ல டிராமா. முன்னா பாய் எம்பிபிஎஸ் வகையறா படம். ஹிந்தியில் இது போன்ற படங்களில் மாஸ்டர் பண்ணிவிட்டார்கள் போல. சில இடங்களில் அதீத நாடகத்தன்மையை ரசிக்க முடியுமானால் உங்களுக்கும் பிடிக்கலாம்.
-oOo-