Tag Archive for விநோதக் கனவுகள்

விநோதக் கனவுகள்

சில விநோதமான கனவுகள் வந்தபடி இருக்கின்றன. ஏன் வருகின்றன என்பதை யூகிக்கக் கூட முடியவில்லை. பல கனவுகள் காலை எழுந்ததும் மறந்துவிடுகின்றன. அந்தக் கனவு நிகழும்போது மறுநாள் எழுந்ததும் அனைவரிடமும் சொல்லவேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் மறுநாள் கனவோ அல்லது நான் அப்படி நினைத்ததோ எதுவுமே ஞாபகம் இருக்காது. ஏதோ ஒரு சமயத்தில் ஒரு மின்னலைப் போல அக்கனவு நினைவுக்கு வரும். நாளாவட்டத்தில் அதுவும் மறந்து போகும்.

இனி இப்படி வரும் கனவுகளைப் பற்றிக் குறித்து வைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது. உண்மையாக வரும் கனவுகளை மட்டுமே குறிக்கப் போகிறேன். என் ஆசைகளை, கற்பனைகளை அல்ல! அடுத்த இருபது வருடங்களில் என்ன என்ன கனவுகள் வருகின்றன என்று பார்க்கலாம்.

நேற்று ஒரு கனவு. (இதை எழுதும்போது அதுவும் சட்டென மறந்துவிட்டது. பக்கென்று ஆகிவிட்டது. ஒருவழியாக அதைக் கண்டடைந்தேன்.) என் அம்மாவின் புத்தகம் ஒன்றை நான் பதிப்பித்திருக்கிறேன். அந்தப் புத்தகம் வெளிவந்து ஒரு வார காலம் ஆகியும் அது என் கைக்கு வரவில்லை. என் அம்மாவுக்குக் கோபம். புத்தகம் வந்து ஒரு வாரம் ஆகியும் கூட அதை என் கண்ல கூட காமிக்க மாட்டியா என்கிறார். உடனே நான் எங்கள் சேல்ஸ் டீமுக்கு போன் செய்கிறேன். எங்கம்மா எழுதின புத்தகத்தைக் கொடுத்து விடுங்க என்கிறேன். இவ்வளவுதான் நினைவிருக்கிறது. இதிலிருக்கும் ஆச்சரியங்கள் என்ன? என் அம்மா ஸ்ரீராமஜெயம் எழுதவே திணறுவார். அவர் ஏன் புத்தகம் எழுத வேண்டும்? அம்மா இறந்து 5 வருடங்கள் ஓடி ஏன் இப்படி ஒரு கனவு? அதைவிட ஆச்சரியம், புத்தகத்தின் பெயர் கொடுங்கோளூர் என்று ஆரம்பிக்கிறது. இந்த வார்த்தை கூட என் அம்மாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் கனவு கண்டது நாந்தானே!

முந்தாநாள் ஒரு கனவு. ஒரு ஊர். நடுவில் தங்கக் கோபுரம். எந்தத் தெருவில் சென்றாலும் அந்தக் கோபுரத்தைப் பார்க்கலாம். அப்போது அந்தத் தெருவில் ஒரு வீட்டில் இருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. அசந்து போய் கேட்கிறேன். இளையராஜாவின் இசையில் உருவான பாடல். பாடியது புஷ்பவனம் குப்புசாமி. இந்தப் பாடலைப் பற்றி ஏன் யாரும் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள் என்று எரிச்சலாகிறேன். இப்போதுதான் உங்களிடம் சொல்கிறேன்!

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கனவு. மறைந்து போன ஒருவர் என் கனவில் வந்து சோகமாகவும் பின்பு அதிர்ச்சியாகவும் பேசிக்கொண்டிருந்தார். இதை மறக்க நினைக்கிறேன் என்பதால் மேற்கொண்டு எழுதப் போவதில்லை.

என் அம்மாவின் மறைவை அடுத்த ஆறு மாதங்களில் தினம் தினம் அம்மாவின் கனவுதான். அதில் ஒரு கனவு வித்தியாசமானது. நானும் அம்மாவும் கல்லுப்பட்டியில் இருக்கிறோம். அங்கே ஊர்ச்சாத்திரை. நான் சின்ன பையனாக இருக்கிறேன். சாத்திரையில் திரை கட்டிப் படம் போடுகிறார்கள். நான் படம் பார்த்தே ஆகவேண்டும் என்கிறேன். கோவிலுக்குப் போகணும் என்கிறார் அம்மா. திடீரென்று அங்கே சாப்பாடு போடுகிறார்கள். நான் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரைக்கு முன்னால் படம் பார்க்க உட்கார, எழுத்து ஓடுகிறது. படம் பெயர் மூவர்! (இப்படி ஒரு படம் வந்ததாகக் கூட தெரியவில்லை!) ஒன்னு படம் பாரு, இல்லைன்னா சாப்பிடப் போ என்று யாரோ சொல்ல, என் அம்மா கோபமாகி, சின்ன பையன் படம் பாத்துக்கிட்டே சாப்பிட்டா என்ன என்று அவர்களைத் திட்டிவிட்டு, என்னை அழைத்துக்கொண்டு கோபமாக நடக்கிறார். கட் செய்தால், நெல்லையப்பர் கோவிலின் வளாகத்தில் நடந்து வருகிறோம். நான் அதே சின்னப் பையன். ஆனால் அம்மா அவர் சாகும் தறுவாயில் இருந்த தோற்றம். வெளிறிய உள்பாவாடையை நெஞ்சுக்கு மேல் ஏற்றிக்கட்டி நடக்க முடியாமல் நடக்கிறார். படம் பாத்துட்டு வந்துருக்கலாம் என்கிறேன் நான். அம்மா முச்சு வாங்க நடந்து வந்து, பிரகாரத்தில் இருக்கும் படிகளில் இறங்கச் சிரமப்பட்டு அங்கே இருக்கும் கைப்பிடிச் சறுக்கில் சறுக்கியபடி வருகிறார். நான் அம்மா என்னாச்சு உனக்கு என்று அலறுகிறேன். இக்கனவு வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.

இனி இது போன்ற கனவுகள் அடிக்கடி வரலாம். என்னைத் தூங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Share