Tag Archive for வந்தே மாதரம்

மலர்மன்னன் – சில நினைவுகள்

மலர்மன்னன் இறந்துபோவதற்கு இரண்டு நாள்கள் முன்புதான் என்னிடம் பேசியிருந்தார். அவர் எழுதி, திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டிருந்த வந்தேமாதரம் நூல்களை விற்பது தொடர்பாகவும் அதை மார்கெட் செய்வது தொடர்பாகவும். இரண்டு நாளில் அவரது மரணச் செய்தி வந்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, மலர்மன்னன் என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய, அவருடன் பழக்கமெல்லாம் இருந்ததில்லை. இப்போதும்கூட மலர்மன்னனுடன் நெருங்கிப் பழகியவன் என்றெல்லாம் சொல்லமுடியாது. சில வருடங்களுக்கு முன்பு ஹிந்துத்துவ நண்பர்கள் என்னிடம் சொன்ன மலர்மன்னனாகத்தான் அவர் எனக்கு பெயரளவில் அறிமுகமானார். அவரைப் பற்றிய எனது மனப்பதிவு அவர் கடும் பிராமண சாதிய ஆதரவாளர் என்பதே. அதே மனப்பதிவோடுதான் அவர் எழுதிய புத்தகங்களை நான் வாசித்தேன். அதே தீர்மானத்தோடுதான் அவர் எழுதிய புத்தகங்களையும் புரிந்துகொண்டேன். நான் எழுதிய புத்தக விமர்சனம் கூட அதே நிலைப்பாட்டில்தான் இருந்தது. அதைத் சரியாகப் புரிந்துகொண்ட மலர்மன்னன் அதற்கு ஒரு பதிலும் எழுதியிருந்தார்.

நான் மலர்மன்னனை முதலில் சந்தித்தது, எனி இந்தியன் பதிப்பகம் சார்பாக கலந்துகொண்ட சென்னை புத்தகக் கண்காட்சியில். உண்மையில் அவரை அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை. கையில் ஒரு புத்தகத்துடன் அதை விற்பனைக்கு வைக்கமுடியுமா என்று கேட்டு வந்தார். நான் எனி இந்தியன் உரிமையாளர்களிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னேன். அவரே கோபால் ராஜாராமுடன் பேசுவதாகச் சொன்னார். அவர் சென்ற பிறகு, எனக்கு அருகில் இருந்த விருட்சம் அழகியசிங்கர், அவர் யாரென்று தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன். அவர்தான் மலர்மன்னன், கோபால் ராஜாராமுக்கெல்லாம் தெரியும், முன்பு கால் என்று பத்திரிகை நடத்தியிருக்கிறார், தற்போது முண்டா பழங்குடியினர் பற்றி அவர் எழுதியிருக்கும் கண் விழித்த கானகம் என்னும் நாவலை விற்க உங்களிடம் கேட்கிறார் என்றார். நாவலுக்கு பெயர் கண் விழித்த கானகமா, எப்படிங்க யார் வாங்குவா என்றேன். இப்படித்தான் முதன்முதலில் மலர்மன்னனை அறிந்துகொண்டேன். (இன்னும் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. இனி படிப்பேன்.)

அடுத்த அறிமுகம் – காலச்சுவடு நடத்திய கூட்டம் ஒன்றில், அவர் தனது கருத்துகளைக் கடுமையாக முன்வைத்தபோதுதான். ஃபிலிம் சேம்பர் அரங்கில் நடந்த கூட்டத்தில், சல்மா பங்குபெற்ற மேடை ஒன்றில், வழக்கம்போல மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து இயக்கங்களுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. (இதைத் தவறு என்று சொல்லவில்லை, என் கருத்தாக மட்டும் சொல்கிறேன்.) பின் வரிசையில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த பிராவஹன் அக்கருத்துக்களை மிகக் கடுமையாக எதிர்த்தார். எழுந்து நின்று சத்தம் போட்டார். அதைவிட உரத்தகுரலில் முதல் வரிசையில் இருந்து ஒரு குரல் வந்தது. அது மலர்மன்னனின் குரல். கண்ணன் மேடையேறி என்னென்னவோ சமாதானங்கள் சொல்லிப் பார்த்தார். ஆனால் மலர்மன்னனும் பிரவாஹனும் ஓயவே இல்லை. எனவே அம்மேடை பாதியில் நிறுத்தப்பட்டது. அம்மேடையில் கிருஷ்ண ஆனந்தும் இருந்ததாக நினைவு. இதைப் பற்றி அடுத்த காலச்சுவடு இதழில் சல்மா, கண்ணன், மலர்மன்னன், பிரவாஹன் எல்லாருமே எழுதியிருந்தார்கள் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் மலர்மன்னன் வெண்ணிற பைஜாமாவில் வருவது வழக்கம்.

அதற்குப் பின்பு மலர்மன்னனைப் பற்றி நான் கேள்விப்பட்டவை எல்லாம் நல்லதாக இல்லை என்பதே உண்மை. அவையெல்லாம் உண்மையா புரட்டா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அதை எனக்குச் சொன்ன நண்பர்கள் நிச்சயம் பொய் சொல்பவர்களோ புரட்டாளர்கலோ அல்ல என்பது உறுதி. அதுமட்டுமல்லாமல், அவர்களே மலர்மன்னன் மேல் மிகுந்த மரியாதை உடையவர்களாகத்தான் இருந்தார்கள், அத்தனைக்குப் பிறகும்.

இந்த அடிப்படையில்தான், கிழக்கு வெளியிட்ட திமுக உருவானது ஏன் என்ற, மலர்மன்னன் எழுதிய நூலை வாசித்தேன். இத்தனை மனச்சாய்வுக்குப் பிறகும், அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. திமுகவை எதிர்க்க, மலர்மன்னனின் சாய்வு மிகச் சரியாகப் பொருந்திப் போய்விட்டதும், அதோடு என் அரசியல் சாய்பு பொருந்திப் போய்விட்டதும் காரணம் என யூகிக்கிறேன். அதைவிட எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மலர்மன்னனின் எழுத்து நடை. மிகத் தெளிவானது, குழப்பமில்லாதது. சில இடங்களில் நக்கலுடன் கூடியதும்கூட. இது அவரது புத்தகத்தை மிக விரைவாக வாசிக்க வைத்தது. மலர்மன்னனின் புத்தகங்களெல்லாம் விற்பனை ஆகுமா என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. ஆனால் அவரது புத்தகம் ஓரளவு நன்றாகவே விற்பனை ஆனது, ஆகிக்கொண்டிருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது.

காந்தியைப் பற்றிய தீவிர ஹிந்துவின் பார்வையாக (நான் அதை ஹிந்துத்துவாவின் பார்வை என ஏற்கவில்லை) மலர்மன்னன் எழுதிய கட்டுரைகள், அதன் சாய்வை மையமாக வைத்தே மிக முக்கியமானவையாகின்றன. நவகாளி பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட மலர்மன்னின் கட்டுரை மிக அசத்தலாக இருந்தது. இதை அப்போதே பலருடன் பகிர்ந்துகொண்டேன்.  அதேபோல் காந்தியையும் கோட்சேவைப் பற்றிய பதிவும் முக்கியமானது. (இதை இன்று தேடியபோது டோண்டுவின் பதிவில் கிடைத்தது. டோண்டுவுடன் எனக்குப் பழக்கமில்லை. ஒன்றிரண்டு முறை ஹாய் சொல்லியிருக்கிறேன். அவரும் மறைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.)  மலர்மன்னன் காந்தியை மோகன் தாஸ் என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார். இன்றைய ஹிந்து இஸ்லாம் பிரச்சினைக்கு காந்தியே காரணம் என்று நம்பியிருக்கவேண்டும்.

இப்படி மலர்மன்னன் பற்றிய என் புரிதல் இருந்த நேரத்தில், மலர்மன்னனின் ஆர்ய சமாஜம் கிழக்கு வெளியீடாக வெளிவந்தது. மலர்மன்னனுக்காகவே அந்த நூலை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அதற்கு ஒரு மதிப்புரை போல ஒன்றை எழுதினேன். மலர்மன்னன் அதற்குப் பதில் எழுதியிருந்தார். வழக்கம்போல என் பார்வை, மலர்மன்னன் ஒரு பிராமண ஆதரவாளர் என்பதை மையமிட்டதாக இருந்தது. அதை அவர் ஏற்கவில்லை.

இந்நிலையில் திராவிட இயக்க நூற்றாண்டு வந்தது. இதை ஒட்டி மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் கொண்டு வர கிழக்கு பதிப்பகம் முடிவு செய்திருந்தது. ஒரு புத்தகம் ஒரு தலித்தின் பார்வையில் இருந்து, இன்னொரு புத்தகம் ஒரு திமுக ஆதரவாளரிடமிருந்து. இன்னொரு புத்தகம் ஹிந்துத்துவப் பார்வையிலிருந்து. ஹிந்துத்துவப் பார்வையில் இருந்து வரவேண்டிய புத்தகத்தை மலர்மன்னன் எழுதினால் நன்றாக இருக்கும் என்று பத்ரியிடம் சொன்னேன். எனது தனிப்பட்ட ஆசை, அது பிராமணப் பார்வையிலிருந்தும் வரவேண்டும் என்பதே. ஆனால் இதை நான் மலர்மன்னனிடம் சொல்லவில்லை. மலர்மன்னனுடன் பணி புரிவதில் சில சிக்கல்கள் உண்டு என்பதே ஒரு பொதுக்கருத்தாக இருந்தது. அதைமீறி அவர் அப்புத்தகத்தை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அவருடன் பேசுவது, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதை நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். அப்போதுதான் அவரிடம் நான் தனிப்பட்டமுறையில் முதன்முறையாகப் பேசினேன்.

நான் அவர் புத்தகங்களுக்கு எழுதிய விமர்சனங்களை நினைவு கூர்ந்தார். நம்ம, நாம என்றே பேசினார். ஒரு ஜி வட்டம் உருவாகிவிட்டதை உணர்ந்தேன். அவர் எழுதி ஏற்கெனவே வெளிவந்த திமுக உருவானது ஏன் புத்தக எடிட்டிங்கில் அவருக்கு சில மனக்குறைகள் இருந்தன. அவற்றைச் சொன்னார். இம்முறை அப்படி நேராமல் பார்த்துக்கொள்ளலாம் என்றேன். இந்தப் புத்தகம் குறித்து பத்ரியைச் சந்தித்துப் பேச வந்தார்.

அவர் பத்ரியைச் சந்திக்கவந்தபோது அது மலர்மன்னன்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்த தாடி மட்டும் இல்லை என்றால் நிச்சயம் குழம்பியிருப்பேன். வெறும் காவி வேட்டி மட்டுமே கட்டியிருந்தார். மேலே ஒரு காவித் துண்டு. என்ன ஜி இப்படி என்றேன். எல்லாத்தையும் விட்டாச்சு, சந்நியாசம் வாங்கிட்டேன், உங்களுக்குத் தெரியாதா என்றார். கையில் இருந்த வாட்ச்சைக் காட்டி, ஒரு நண்பர் அன்பா கொடுத்தார்ன்றதால இதை கட்டிக்கிட்டு இருக்கேன், சந்நியாசிக்கு எதுக்கு வாட்ச் சென்றார். திராவிட இயக்கத்தை எக்ஸ்போஸ் செய்யணும் ஜி என்றேன். அப்படி முன்முடிவோடல்லாம் எழுதவேண்டியதில்லை என்றார். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. எனக்கு இருந்த பயம், மற்ற பார்வைகளில் இருந்து வெளிவரும் புத்தகங்கள் மிகவும் சரியான பார்வையோடு இருந்து, ஹிந்துத்துவக் கண்ணோட்டத்தில் வரும் மலர்மன்னனின் புத்தகமும் திராவிட இயக்கத்துக்கு ஏதோ ஒரு வகையில் ஆதரவு அளித்துவிட்டால் என்னாவது என்பதுதான். மலர்மன்னனின் அந்த பதில் எனக்கு அப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்துவிட்டது. என்ன என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் முதல் மீட்டிங்கிலேயே முடிவுசெய்துவிட்டார். இரண்டே நாள்களில் வேலையையும் ஆரம்பித்துவிட்டார்.

அதற்குப் பின்பு அவர் என்னிடம் தனியாகப் பேசியபோது என் பயம் முற்றிலும் அகன்றது என்றே சொல்லவேண்டும். திராவிட இயக்கமே ஒரு ஃபேக் என்றார். புத்தகம் பெயரே இப்படி வெச்சிரலாம் ஜி என்றேன். சிரித்துக்கொண்டார். என்ன பிரசன்னா, புத்தகம் வந்தா கடுமையா எதிர்ப்பாங்களா என்றார். எதுத்தா அதுக்கும் பதில் எழுதிடலாம் என்றார். என்ன என்ன எதிர்ப்புகள் வருமோ அதற்கெல்லாம் இப்போதே சேர்த்து புத்தகத்தில் எழுதிடுங்க ஜி என்றேன். ஓ அப்படி சொல்றீங்களா என்றார்.

முதல் அத்தியாத்தை எனக்கும் பத்ரிக்கும் அனுப்பினார். அடுத்தடுத்து அத்தியாயங்கள் வந்துகொண்டே இருந்தன. ஐந்து அத்தியாயங்கள் வரை படித்துக் கருத்துச் சொன்னேன். பின்னர் படிக்கவில்லை. விட்டுவிட்டேன். புத்தகமாக வந்ததும் படித்துக்கொள்கிறேன் ஜி என்றேன். நீங்க படிச்சு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் என்றார். என்னால் படிக்க முடியாமலேயே போனது. சோம்பேறித்தனமன்றி வேறு காரணங்கள் இல்லை. ஸாரி மலர்மன்னன் ஜி. 🙁

திராவிட இயக்கத்தை ஒட்டி கிழக்கு கொண்டு வர நினைத்த புத்தகங்களில் வெளிவந்தது இந்த ஒரே ஒரு புத்தகம் மட்டுமே. மற்ற புத்தகங்களை எழுத ஒப்புக்கொண்டவர்கள் அல்லது அதைப் பற்றிப் பேசியவர்கள் யாருமே அதை முழுமூச்சாகக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு புத்தகமாக வெளிவருவதன் அவசியம் பற்றியோ, அது தரப்போகும் நீண்ட காலத் தாக்கம் பற்றியோ தெளிவாகப் புரிந்துகொண்டவர் மலர்மன்னன் மட்டுமே.

அந்தப் புத்தகம் எழுதுவதற்குப் பல புத்தகங்களின் நகல்கள் வேண்டுமென்று மலர்மன்னன் கேட்டார். பெரும்பாலான புத்தகங்களைத் தந்துதவியவர் ம.வெங்கடேசன். அரிதான புத்தகங்களெல்லாம் வெங்கடேசனிடமிருந்தன. வெங்கடேசன் ஒரு புத்தகக் களஞ்சியம். வெங்கடேசன் பற்றி ஒரே ஒருமுறை மலர்மன்னனிடம் சொன்னேன். வெங்கடேசனைத் தெரியும் என்றார். மலர்மன்னனின் நன்றிக்குறிப்பில் வெங்கடேசன் பெயரைச் சேர்க்கச் சொல்லவேண்டும் என நினைத்துக்கொண்டேன். புத்தகம் வெளிவரும்போது சொல்லிக்கொள்ளலாம் என்று அப்போதைக்கு அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் புத்தகம் வெளிவரும்போது வெங்கடேசன் பெயரைச் சேர்க்கச் சொல்லமுடியாமல் போய்விட்டது. மலர்மன்னனே சேர்த்திருக்கவேண்டும் என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் நான் வாங்கித் தந்த பெரும்பாலான புத்தகங்கள் வெங்கடேசன் தந்தவை என்று மலர்மன்னனுக்குத் தெரியாது. புத்தகம் வெளிவந்ததும் இது பற்றிச் சொன்னேன். அப்படியா, நீங்க மொதல்லயே சொல்லிருக்கலாமே என்றார். ஆமா ஜி, என் தப்புதான் என்றேன். இப்ப என்ன பண்றது என்றார். அடுத்த பதிப்பில் சேர்க்கலாம் என்றேன். சரி என்றார். வெங்கடேசனுக்கு இது எதுவுமே தெரியாது. தன் பெயர் வரவேண்டும் என்றெல்லாம் நினைக்கக்கூடிய மனிதர் அல்ல வெங்கடேசன். ஆனால் எனக்குத்தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது. குற்ற உணர்ச்சியுடனேதான் வெங்கடேசனுக்கு திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் புத்தகத்தை அனுப்பி வைத்தேன். அதிலும் மலர்மன்னன் இறந்த செய்திகேட்டபோது மிகவும் நொந்துபோய்விட்டேன். 🙁

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் என்ற பெயரைவிட திராவிட இயக்கம் பொய்யும் புரட்டும் என்ற ரேஞ்சுக்குத்தான் பெயர் வைக்க மலர்மன்னன் விரும்பினார். பத்ரி அதை ஏற்கவில்லை என நினைக்கிறேன். நான் ஏற்கவில்லை என்றும் அவரிடம் சொன்னேன். புனைவும் உண்மையும்னா கொஞ்சம் மெல்ல தடவிக்கொடுக்கிற மாதிரி இருக்காது என்று கேட்டார். அதெல்லாம் சரியா வரும் ஜி என்றார். பத்ரியிடம் முடிவை விட்டுவிட்டார். கடந்த முறை இருந்த கசப்பனுவங்கள் எல்லாம் அவருக்கு மறைந்திருந்தது. மிக எளிமையான மனிதராக, ஒரு எடிட்டிங்கின் தேவையெல்லாம் புரிந்து நடந்துகொண்டார். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. காந்தியைப் பற்றி அவர் புத்தகம் எழுதினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன். அது நடக்காமல் போய்விட்டது.

சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வந்திருந்தார். அவரது வந்தே மாதரம் புத்தகத்தையும் விற்பனைக்கு வைத்திருந்தோம். ரொம்ப நன்றி பிரசன்னா என்றார். நான் விற்பனையில் படு மும்மரமாக இருந்தேன். அவர் சொல்வதையெல்லாம் மனதால் வாங்கிக்கொள்ளாமல் சரி சரி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். என்ன என்னவோ சொன்னார். அவருடன் வந்திருந்த ஒரு சகோதரியை அறிமுகப்படுத்தினார். அவரைப் பற்றியும் என்னவோ சொன்னார். என்னவென்று இப்போது நினைவுக்கு வரவில்லை. யாரோ ஓர் இசை ஆளுமையின் பேத்தி என்ற நினைவு. அந்தப் பெண்மணி, மலர்மன்னனின் ஆதரவில்தான் தன் வாழ்க்கையே நடக்கிறது என்றும், மலர்மன்னன் அடைக்கலம் தந்தார் என்றும் சொன்னார். அடைக்கலம் என்ற வார்த்தையைக் கடுமையாக மறுத்தார் மலர்மன்னன். எனக்கு நீ உதவி செய்றம்மா என்று அவர் சொல்ல, அதை அவர் மறுக்க, அவர்கள் இருவரும் அங்கேயே விவாதிக்கத் தொடங்கினார்கள். 

இறந்து போவதற்கு இரண்டு தினங்கள் முன்பு பேசும்போது, நான் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் புத்தகத்தைப் படித்துவிட்டேனா எனக் கேட்டார். படிச்சுக்கிட்டே இருக்கேன் என்றேன். எதாவது விமர்சனம் வந்தா சொல்லுங்க என்றார். புத்தகம் பற்றி அவருக்கு வரும் விமர்சனங்களையெல்லாம் எங்களுக்கு அனுப்பி வைப்பார். அவர் எழுத்து புத்தகமாக வருவதில் பெரிய ஆர்வம் அவருக்கு இருந்தது. 

மோடியின் குஜராத் புத்தகத்தைக் கொடுக்க கடந்த வாரம் பிஜேபியின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே செயல்வீரர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. மோடியின் குஜராத் புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றி பொன் ராதாகிருஷ்ணன் சொன்னார். அப்போது அங்கே இருந்த இல. கணேசன், ‘கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இன்னொரு முக்கியமான புத்தகம் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும். நான் படித்துவிட்டேன். நம் பார்வையில் அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை எழுதியவர் மலர்மன்னன். அந்தப் புத்தகத்தையும் அனைவரும் படிக்கவேண்டும்’ என்றார். இதைப் பற்றி மலர்மன்னனிடம் சொல்ல நினைத்திருந்தேன். அதற்குள் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

மலர்மன்னனின் இழப்பு ஹிந்த்துத்துவ நோக்கில் பெரிய இழப்பு. அவர் பிராமணவாதி என்பது என் முன்முடிவு. அவரோட பேசிய (பழகிய அல்ல) நாள்களில், அந்த முன்முடிவு தவறு என்று சொல்லும்படியாக எதுவும் நடந்துவிடவில்லை. அதேபோல் அது சரியானது என்னும்படியாகவும் எதுவும் நடந்துவிடவில்லை என்பதே அதைவிட முக்கியமானது. ஆனால் சந்தேகமே இல்லாமல் நல்ல ஹிந்துத்துவவாதி. ஒரு சாதியவாதி எப்படி நல்ல ஹிந்துத்துவவாதியாக இருக்கமுடியும் என்ற குழப்பங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவருக்குள் அந்த முரண் இருக்கவே இல்லை. ஒருவேளை என் முன்முடிவு தவறாகவும், அவர் சாதியவாதியாக இல்லாத ஒரு நிஜ ஹிந்துவாக இருந்திருக்கக்கூடும். எப்படி இருந்தாலும், என் கருத்துகளை என் கருத்துகள் என்று மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஜி என்று அவரை விளிக்கும் ஒரு மனிதரை அவர் உடனே விரும்பினார். அவர் ஹிந்துக்களின் மீதும் ஹிந்துத்துவத்தின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார். கிறித்துவ மதமாற்றமும், இஸ்லாமிய பயங்கரவாதமும் அவருக்கு இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கின. சித்தர்களைப் பற்றிய பெரிய ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தது. அவர் வீட்டருகில் இருக்கும் ஒரு சித்தரின் சமாதிக்கு என்னை வருமாறு அழைத்திருக்கிறார். ஒரு நல்ல மனிதர். அவரது இழப்பு ஈடு செய்யமுடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

Share