இ புத்தகமும் அச்சுப் புத்தகமும் – ஆறு மனமே ஆறு
அனைவருக்கும் ஒரு தன்னிலை விளக்கம். இதை எழுதுவதன் ஒரே நோக்கம், இன்றைய நிலையில் கிண்டிலில் வரும் இபுத்தகங்களின் விற்பனை எந்த அளவுக்கு உள்ளது என்பதைச் சொல்ல மட்டுமே. மற்றபடி எந்த வித வம்பு வழக்குகளிலும் சிக்கிக் கொள்ளும் ஆர்வமில்லை. ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தை, அது அச்சுப் புத்தகமாக இருந்தாலும் இபுத்தகமாக இருந்தாலும், தானே வெளியிட்டுக்கொள்ளும் அவரது உரிமையை ஆர்வத்தை அவருக்குக் கிடைக்கும் அதிக லாபத்தை (ஒருவேளை கிடைத்தால்) நான் அதை நிச்சயம் மதிக்கிறேன். அதற்காக மகிழ்கிறேன்.
இன்னொரு விளக்கம் – இக்கட்டுரையின் நோக்கம் எழுத்தாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும்தானே ஒழிய, அவர்களது உரிமையிலோ ஆர்வத்திலோ தலையிட அல்ல. முழுமையான ஒரு புரிதல் ஒருவேளை எழுத்தாளர்களை விரைந்து கூடச் செயல்படச் சொல்லலாம்.
கடைசி விளக்கம் – ஒரு வாசகராக ஐ லவ் கிண்டில். இ புத்தகங்களே படிக்க இலகுவானவை. என் கருத்தில் மாற்றமில்லை. இக்கட்டுரை மின் புத்தக வாசகர்களுக்கானது அல்ல. விற்பனையாளர்களுக்கானது.
இனி…
நான் ஒரு சாதாரண எழுத்தாளன். உண்மையில் எழுத்தாளன் கூட அல்ல. எழுதுபவன். இதுதான் சரி. எழுத்தாளன் என்பது ஒரு நினைப்பு. அதுவே ஒரு மனிதனை எழுத்தாளனாக்குகிறது. எனக்கு அப்படி ஒரு நினைப்பு இல்லை. ஆகவே நான் எழுத்தாளனாக முடியாது. எழுதித் தொலைப்பால் புத்தகம் போட்டிருக்கிறேன். அச்சுப் புத்தகமும் மின்னூலும். கிண்டிலிலும் கிடைக்கிறது. எப்போதாவது திடீரென ஒன்றிரண்டு விற்கும்.
இன்னொரு உதாரணம் வேண்டும். நம் நண்பர் கிருஷ்ண பிரபுவை எடுத்துக் கொள்ளலாம். அவர் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்று வைத்துக்கொள்ளுங்கள். (மன்னிச்சூ கிபி.) இலக்கியவாதியின் ஆழமும் சுஜாதாவின் பிரபலமும் உள்ளவர் எனக் கொள்ளுங்கள். இவரது புத்தகம் வெளியாவது அச்சிலும் மின்னூலிலும் முக்கியம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இனி சில விஷயங்களைப் பார்க்கலாம்.
என் புத்தகம் வெளியிட ஒரு பதிப்பகம் தேவையில்லை. ஏனென்றால் என் புத்தகம் விற்பதே சொற்பமாகத்தான். உண்மையில் ஒரு பதிப்பகம் அதிலும் பிரபலமான பதிப்பகம் என் நூலை வெளியிடுமானால் நிச்சயம் கூடுதலாக விற்கும். 200% அதிக விற்பனை நடக்கலாம். இந்த சதவீதக் கணக்கு நம்மைக் குழப்பக் கூடியது. நானாக அச்சிடும் என் புத்தகம் 10 விற்கும் என்றால் ஒரு பதிப்பகம் அச்சிடும்போது அது 30 விற்கும். 200% அதிக விற்பனை! எனவே ஒரு பதிப்பகம் என் புத்தகத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் ஒன்றுதான். இதே கதைதான் இ புத்தகத்துக்கும். அதனால் ஒரு பதிப்பகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு நானே 50 புத்தகங்கள் அச்சடித்து நானே கிண்டிலில் விற்றுக்கொள்ளலாம். எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் எனக்கு லாபமும் இல்லை என்பதும் இன்னும் கொஞ்சம் யோசித்தால் முதலீட்டுப் பணம் வகையில் சின்ன நஷ்டமும், என் நேரத்தை நான் செலவழித்த வகையில் அதிகம் நஷ்டமும் கூட இருக்கலாம் என்பது புரியும். அனுபவத்தில் சொல்கிறேன். இதில் முக்கியமான விஷயம், நான் தினம் தினம் எழுதிக் குவிப்பவன் அல்ல. என் எழுத்து எப்போது வரும் என்று என் வாசகர்கள் காத்திருக்கவில்லை. நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று தேடிச் சென்று வாங்குபவர்கள் கிடையாது. எனவே எல்லா வேலையையும் விட்டுவிட்டு இதையே என்னால் முழுமையாகச் செய்யமுடியும். செய்தாலும் ஒரு மாதத்துக்கு எனக்கு அதிக பட்சம் 200 ரூ வரலாம். ஆம், இரு நூறு ரூபாய்தான். இதையே என்னைவிடப் பெரிய எழுத்தாளர், என்னைவிட அதிகம் மார்க்கெட்டிங்கில் உழைப்பவர் என்றால் மாதம் 400 ரூ வரலாம். ஆனால் இதே வேலையாக இருக்கவேண்டும். விடாமல் என் புத்தகத்தை வாங்குங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இதெல்லாம் இல்லையென்றால் அந்த 200 ரூபாயும் வராது. ஒரு மாதம் போராடி 3000 ரூ ராயல்டி பெற்றுக் காட்டினால் அடுத்த மாதமும் அதே பணம் வரும் என்பது நிச்சயமில்லை. நிச்சயமில்லை என்ன, சத்தியமாக வராது!
இப்போது கிருஷ்ண பிரபுக்கு வருவோம். அவர் சூப்பர் ஸ்டார். தினமும் எழுதிக் குவிப்பவர். ஆழமாக விரிவாக. அவர் ஒரு விஷயத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள பலர் காத்திருக்கிறார்கள். பெரிய கூட்டம் ஒன்று அவரை விடாமல் பின்தொடர்கிறது. என்று வைத்துக்கொள்வோம். ஒரு புத்தகம் வெளியானால் அச்சுப் புத்தகமென்றால் 1000 பிரதிகள் உடனே உறுதியாக விற்கும். அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எந்த மூலையில் யார் அவரது புத்தகத்தை ஆர்வமாக வாங்குவார்கள் என்று நமக்குத் தெரியாது. எப்படி வாங்குவார்கள் என்பதும் தெரியாது. தேடி வந்து வாங்குபவர்கள் ஒரு பக்கம் என்றால், கிருஷ்ண பிரபுவின் பெயர் கண்ணில் பட்டதும் அப்புத்தகத்தை வாங்கும் கூட்டம் இன்னொரு பக்கம். அதாவது அவர்கள் கண்ணில் பட்டால் அவரது புத்தகத்தை வாங்கிவிடுவார்கள். இப்படி ஒரு நிலையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.
இங்கேதான் ஒரு பதிப்பகம் உங்களுக்குத் தேவையாகிறது. உங்களால் செய்யமுடியாததைப் பதிப்பகம் செய்யும். உங்கள் புத்தகத்தை தமிழ்நாடெங்கும் கொண்டு போய்ச் சேர்க்கும். நீங்கள் தினம் தினம் எழுதவேண்டிய தேவை இருப்பதால் எந்தப் புத்தகத்தை எங்கே லே அவுட் செய்வது, எங்கே அச்சிடுவது, எங்கே விற்பது, எப்படிப் பணம் வாங்குவது, பணம் திரும்ப வருமா, எங்கே ஸ்டாக் வைப்பது, எப்படி ரீ ப்ரிண்ட் செல்வது, யாரை வைத்து ப்ரூஃப் கரெக்ஷன் போடுவது என்றெல்லாம் அல்லாட வேண்டியதில்லை. ஏனென்றால் இவையெல்லாம் எதோ ஒரு நிலையில் நீங்களே அறியாத வண்ணம் உங்களது எழுத்தைப் பாதிக்கும். இதை நீங்கள் வாதிடலாம். ஆனால் நான் நிச்சயம் சொல்கிறேன், இது உங்கள் எழுத்தைப் பாதித்தே தீரும். எனவே இச்சிடுக்குகளில் இருந்து நீங்கள் ஒதுங்கியே நிற்பது நல்லது. ஒரு பதிப்பகம் ராயல்டி தரவில்லை என்றால் மட்டுமே நீங்கள் அடுத்து என்ன என்று யோசிக்கவேண்டும். இல்லையென்றால் அப்பதிப்பகத்துடனேயே அல்லது சில பதிப்பகங்களுடனேயே நீங்கள் இருப்பதுதான் உங்களது நட்சத்திர அந்தஸ்துக்கு நல்லது.
இ புத்தகத்தை மட்டும் எழுத்தாளர்களே வெளியிட்டுக் கொள்வதும் இதே விஷயத்தைப் பொருத்ததுதான். நீங்கள் எழுதித் தள்ளும்போது அதை இ புத்தகமாக்குவது என்பது இன்னொரு வேலை. அதற்கும் ப்ரூஃப் ரீடிங் வேண்டும். அதை இ புத்தகமாக மாற்றவேண்டும். அல்லது வேர்ட் ஃபைலில் சரியாக லே அவுட் செய்யவேண்டும். அதற்கு ஒரு ஆள் வேண்டும். நீங்களே செய்தால் உங்கள் எழுத்து பாதிக்கப்படும். நீங்கள் 100 புத்தகம் எழுதி அதைப் பதிப்பகம் எடிட் செய்திருக்கும். அந்த எடிட் செய்த ஃபைலும் நீங்கள் தந்திருந்த திருத்தங்களும் வேர்ட் ஃபைலில் இருக்காது. உங்களுக்கு மறந்திருக்கலாம். அல்லது நீங்கள் கையில் எழுதி அதைப் பதிப்பகம் தட்டச்சிட்டிருக்கும். இப்படி ஆயிரம் விஷயங்கள் உள்ளன.
இன்றைய நிலையில் அமேஸான் என்பது உங்களுக்கு எந்த விதப் பணத்தையும் கொட்டிக் கொடுக்கப் போவதில்லை. என்னைப் போன்ற துக்கடா எழுத்தாளர்களுக்கு மாதம் 500 ரூ வந்தால் ஆஹோ ஒஹோ என்போம். ஆனால் நம் கிருஷ்ண பிரபு போன்ற நட்சத்திரர்களுக்கு மாதம் 1000 ரூ என்பது ஒன்றுமே அல்ல. ஏனென்றால் இன்றைய நிலையில் விற்பனை அவ்வளவுதான் நடக்கிறது. ஒரு பதிப்பகம் 100 புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தால், இ புத்தக விற்பனை மட்டும் அதிக பட்சம் மாதம் 20,000 ரூபாய்க்கு நடக்கலாம். (குத்து மதிப்பாக.) அதில் 15000 ரூ ஏதேனும் 10 புத்தகங்களில் நடந்த விற்பனை மூலம் கிடைத்திருக்கும். மீதி 5000 ரூ விற்பனை என்பது 90 புத்தகங்களில் நடந்திருக்கும். அந்த 90 புத்தகங்களில் ஒரு புத்தகம் நீங்கள் எழுதியதாக இருந்தால், உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று யோசியுங்கள். அச்சுப் புத்தகத்தைக் கைவிட்டுவிட்டு இந்த தொன்னூறுக்குள் ஒன்றாவதன் பலன் என்று சிந்தியுங்கள்.
என்னதான் நட்சத்திர எழுத்தாளராக இருந்தாலும், அவரது அனைத்துப் புத்தகங்களும் ஒரே போல் விற்காது. அதுவும் தமிழில் – சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தக விற்பனை பற்றி எழுதுவதையெல்லாம் படித்திருந்தாலே விளங்கும் நாம் வாசிப்பிலும் புத்தகம் வாங்குவதிலும் என்ன நிலையில் இருக்கிறோம் என. எனவே அவரது 80% புத்தகங்கள் குறைவான விற்பனையையே ஈட்டித் தரும். 80-20 விதி கொஞ்சம் அங்குமிங்கும் ஊசலிட்டாலும் பொருந்தி வருவதைப் பார்க்கலாம். இந்நிலையில் இ புத்தகம் தரும் விற்பனை என்பது நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்காது.
அப்படியானால் ஏன் ஒரு பதிப்பகம் இ புத்தகத்தை விற்பதையும் தானே செய்ய நினைக்கவேண்டும்? ஏனென்றால் அவர்கள் ஒரு புத்தகத்தின் எல்லா வேலைகளையும் அவர்களே செய்கிறார்கள். அச்சுப் புத்தகத்துக்கு முதலீடு செய்கிறார்கள். கரெக்ஷன் போட்டு இறுதி வடிவத்தைத் தயாராக வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து இ புத்தகம் செய்வது எளிது. அதற்கென ஒரு குழு இருக்கும். இ புத்தக விற்பனை மூலம் வரும் சிறிய தொகை ஒருவேளை பதிப்பகத்துக்கு உதவலாம். இதைத் தாண்டி வேறு காரணங்கள் இல்லை. என் கணிப்பில் ஒரு பதிப்பகம் இ புத்தகம் வேண்டாம் என்று சொல்வது எழுத்தாளர்களுக்கான தொல்லையே அன்றி வேறில்லை.
இப்போது என்னைப் போன்ற சிறு எழுத்தாளர்கள், இ புத்தக விற்பனையில் நிறையப் பணம் கிடைக்கும் என்று நம்பி, அச்சுப் புத்தகம் பதிப்பிட்டு ராயல்டி தரும் பதிப்பகத்தையும் விட்டுவிட்டு வந்தால், அது அவருக்குப் பெரிய அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கும். அதிலும் தீவிர இலக்கியவாதிகள் செய்யக்கூடாத தவறு இது. அச்சுப் புத்தக ராயல்டியும் குறைவாகத்தானே வருகிறது எனலாம். குறைந்த பட்சம் அச்சுப் புத்தகங்கள் உங்கள் வாசகர்கள் கண்ணிலாவது படும். இ புத்தகங்கள் இன்றைய நிலையில் யாரிடம் சென்று சேர்கிறது என்பதைச் சொல்லவே முடியாது. இதுதான் நிலவரம்.
நாளை இ புத்தகங்கள் பெரிய அளவில் வளரலாம். அப்போதும் அது அச்சுப் புத்தகத்தை இல்லாமல் ஆக்காது. இப்போது உலக அளவில் இ புத்தகங்கள் பெரிய அளவில் அச்சுப் புத்தகங்களைத் தகர்த்துவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். இ புத்தகங்கள் அச்சுப் புத்தகங்களைத் தாண்டி வளர்ந்தாலும், அச்சுப் புத்தகமே வேண்டாம் என்னும் பதிப்பாளர் மட்டுமே இ புத்தகத்தைத் தானே பதிப்பித்துக் கொள்ள முடிவெடுப்பது நல்லது. இல்லையென்றால் பதிப்பாளருடனே இருப்பதுதான் புத்திசாலித்தனமானது.
எந்நிலையிலும் அச்சுப் புத்தகங்கள் அவசியம் என்பதை மனத்தில் வையுங்கள். அச்சுப் புத்தகத்தையும் நாமே அச்சிட்டு விற்கலாம் என்பது மிகத் தீவிரமான ஒரு முடிவு. அதை ஜஸ்ட் லைக் தட் எடுக்காதீர்கள். ஒரு பதிப்பகம் நடத்தி புத்தக விற்பனை செய்து அதிகம் முதலீடு செய்து புத்தகத்தை அச்சில் வைத்திருந்து அனைத்துப் புத்தகக் கண்காட்சிகளிலும் புத்தகங்களைக் கிடைக்கச் செய்வது சுலபமான காரியமல்ல.
இ புத்தகங்களில் 35% ராயல்டி, 70% ராயல்டி என்பதெல்லாம் ஒரு கணக்குதான். இவையெல்லாம் லட்சக்கணக்கில் விற்பனையாகும் புத்தகங்களுக்கு மட்டுமே ஒரு வேறுபாட்டைத் தரும். இதிலும் 35% ராயல்டி என்றால் இ புத்தகம் கிடைக்கும் நாடுகள் மற்றும் 70% ராயல்டி என்றால் புத்தகம் கிடைக்கும் நாடுகள் என்ற வேறுபாடுகளெல்லாம் உள்ளன என்று நினைக்கிறேன்.
சரியாக அமேஸான் ராயல்டி தந்துவிடும் என்பது உண்மைதான். இதுதான் வலுவான வசீகரமான காரணம். தனக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை மட்டும் ஓர் எழுத்தாளன் யோசித்தால், இதில் உள்ள வசீகரத்தைக் கண்டு ஏமாறமாட்டார். அச்சுப் புத்தகமும் இ புத்தகமும் பதிப்பகம் விற்று, அதற்கான பணத்தையும் பதிப்பகம் தருமானால் – கொஞ்சம் முன்ன பின்ன என்றாலும்!- அதில் வரும் ஒட்டுமொத்தப் பணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். அதிலும் ஒரு ஸ்டார் எழுத்தாளர் செய்யக்கூடாத தவறு – பதிப்பகம் ஆரம்பிப்பதும் இ புத்தகத்தைத் தானே போடுவதும்.
ஒட்டுமொத்தமாக இப்படி வரையறுக்கிறேன்.
* எழுத்தாளர்கள் வேலை எழுதுவது. முதன்மையானதும் கடைசியானதும் இதுதான். அடுத்த வேலை, ராயல்டி ஒழுங்காக வருகிறதா என்பதைக் கண்காணிப்பது.
* எப்படி விற்றாலும் உங்கள் புத்தகம் 100 தான் விற்கும் என்றால், நீங்களே பதிப்பகம் தொடங்கி நடத்தி விற்றுக் கொள்ளலாம்.
* நீங்கள் ஒரு நட்சத்திர எழுத்தாளர் என்று நீங்கள் நம்பினால் பதிப்பகம் நடத்தும் தவறை மறந்தும் செய்யாதீர்கள். அதே சமயம் ஒரு பதிப்பகத்திலிருந்து ராயல்டி ஒழுங்காக வருகிறதா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். அதைப் போலவே உங்கள் புத்தகம் தொடர்ந்து அச்சில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
* பதிப்பகம் ஒழுங்காகப் பணம் தரவில்லை என்பதால் பதிப்பகம் ஆரம்பிப்பதாக இருந்தால் சரிதான். ஆனால் அது அத்தனை சுலபமானதில்லை என்பதையும், வேறொரு பதிப்பகம் நிச்சயம் ஒழுங்காகப் பணம் தரும் என்று வாய்ப்பு இருந்தால் அதை அணுகுவதே மேலானது என்பதையும் எப்போதும் மனத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
* இ புத்தக விறபனையை நீங்களே செய்து கொள்வது – உங்கள் புத்தகம் எப்படியும் 100 தான் விற்கும் என்றால் நல்லதுதான். ஆனால் உங்கள் புத்தகம் அச்சுப் புத்தகத்தில் 1000 பிரதிகள் விற்கும் வாய்ப்பு இருக்குமானால், அந்தப் பதிப்பகமே இ புத்தக உரிமையையும் கேட்குமானால் அவர்களிடமே இபுத்தக உரிமையையும் தருவதுதான் நல்லது. ஏனென்றால் இன்றைய நிலையில் அச்சுப்புத்தகத்தின் ரீச்சே முக்கியமானது.
* அச்சுப் புத்தகம் 100தான் விற்கும் என்றாலும் இன்னொரு பதிப்பகம் அதைப் பதிப்பிக்குமானால் அது இன்னமும் நல்லதுதான். அதே பதிப்பகம் இ புத்தகத்தையும் வெளியிட விரும்பினால் அப்பதிப்பகத்திடமே இ புத்தக உரிமையையும் தந்துவிடுவது நல்லது. ராயல்டி வருவதை மட்டும் உறுதி செய்துகொள்ளுங்கள். ராயல்டி வராத பட்சத்தில் நீங்கள் உங்கள் சொந்த முயற்சிக்குப் போவது சரியானது.
* உங்கள் புத்தகத்தை எந்தப் பதிப்பகமும் அச்சிடவில்லை என்றால், இ புத்தக மற்றும் அச்சுப் புத்தகத்தை நீங்கள் செய்துகொள்வதைப் புரிந்துகொள்ளலாம்.
* ஒரு பெரிய பதிப்பகம் இ புத்தக உரிமையைக் கோருவதில் எந்தப் பிழையும் இல்லை. அப்பதிப்பகத்தின் அச்சுப் புத்தக ரீச் உங்களுக்குத் தேவை என்றால் இதற்குச் சம்மதிக்கவும். இல்லையென்றால் விலகிவிடவும். கிருஷ்ண பிரபு மற்றும் நான் உதாரணம் இங்கே பொருந்தலாம். என்னைப் போன்ற எழுத்தாளர் விலகலாம். நஷ்டமில்லை. ஆனால் நட்சத்திர எழுத்தாளர் விலகக்கூடாது. நஷ்டம் அதிகம் உண்டாகும்.
* அமேஸானில் இன்றைய நிலையில் நட்சத்திர எழுத்தாளர்களைத் தவிர வேறு யாருக்கும் பெரிய அளவில் பணம் வராது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். நட்சத்திர எழுத்தாளர்களுக்கும்கூட அச்சுப் புத்தகத்தில் இருந்து வரும் பணத்துக்கும் அமேஸான் பணத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கலாம் என்று யூகித்துக்கொள்ளுங்கள்.
* நாளை இந்நிலைமை மாறும் என்பது நிச்சயமான உண்மை. ஆனால் – நாளை என்றால் எப்போது என்பதிலும் மாறும் என்றால் எந்த அளவு என்பதிலும் வரையறுக்கமுடியாத நிலை உள்ளது. என் கணிப்பில் அடுத்த பத்து வருடத்தில் அச்சுப் புத்தக விற்பனையில் பாதியை மட்டுமே இ புத்தகம் எட்டி இருக்கும். அச்சுப் புத்தகத்தின் ஒட்டுமொத்த விற்பனைச் சரிவு இன்னொரு பக்கம் இருக்கும். இ புத்தக விற்பனையின் அதிகரிப்பு இன்னொரு பக்கம் இருக்கும். இருந்தாலும் பத்து வருடம் கழித்தும் அச்சுப் புத்தக விற்பனையில் பாதி அளவே இ புத்தக விற்பனை இருக்கும். வேறேதேனும் டெக்னிகல் புரட்சி நடக்காத வரையில் இதுவே நடக்க அதிக வாய்ப்புள்ளது. கிண்டில் கருவி இலவசம், இணையம் இலவசம் என்ற நிலையெல்லாம் வந்தால் கொஞ்சம் மாற்றம் இருக்கும். இ புத்தக விற்பனையும் அச்சுப் புத்தக விற்பனையும் ஒரே அளவில் இருக்கலாம். அதுவும் பத்து வருடங்களுக்குப் பிறகுதான்.
நாளை நம் புத்தகங்கள் இ புத்தகமாக இருப்பது முக்கியமானது. அதற்காக ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தை இ புத்தகமாக வெளியிடவேண்டியதும் அவசியமானது. அதை ஒரு பதிப்பகம் செய்யாதபோது மட்டும் செய்தால் போதும்.
நாளையை நம்பி இன்றை விட்டுவிடாதீர்கள்.
சில பின்குறிப்புகள்:
01. நான் கிழக்கு பதிப்பகத்தில் இருக்கிறேன். இப்பதிவு என் தனிப்பட்ட பதிவு. கிழக்கு பதிப்பகத்துக்கும் இப்பதிவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
02. நான் எந்த எழுத்தாளரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. எழுத்தாளர்களின் புத்தகம் கிடைப்பது மட்டுமே வாசகனாக என் ஆசை. அதைத் தாண்டி வாசகனாக எனக்கு எத் தேவையும் இல்லை.
03. யார் கருத்தையும் தகர்க்கும் எண்ணம் சிறிதும் இல்லை. என் கருத்து முழுக்கத் தவறென்று நீங்கள் சொன்னாலும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இதை ஒரு பதிவு என்று படித்து, அதில் ஏதேனும் யோசித்து, உங்கள் முடிவுப்படி நடந்தால், நல்லது. அதுதான் நோக்கமும் கூட. நன்றி. சுபம்.
04. எனக்குத் தமிழ் படிக்க வராது என்பதால், இதில் வரும் பின்னூட்டங்களுக்கு, கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போகும் வருத்தம்தான் என்னை வாட்டுகிறது.