Tag Archive for மேற்கு வங்கம் கலவரம்

மணிப்பூர்ப் பிரச்சினை

மணிப்பூரில் நடந்திருப்பது அராஜகம். கொடுமை. மாநில மத்திய அரசுகள் இக்கொடுமைக்கான சரியான நியாயத்தையும் தீர்வையும் கொடூரங்களைச் செய்தவர்களுக்குச் சரியான தண்டனையையும் வழங்கவேண்டும்.

இக்கொடுமையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஹிந்து ஹிந்துத்துவ இஸ்லாமிய கிறித்துவ இன்னும் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்.

இந்தியா முழுக்கப் பற்றி எரியும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதையே மத்திய அரசு முதன்மை நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

மணிப்பூர் பிரச்சினை உலகளாவிய பிரச்சினையாகிறது. ஆனால் இதே போன்ற கொடூரங்கள் சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நிகழ்ந்தபோது அது ஹிந்துத்துவவாதிகளுக்கு நிகழ்ந்த பிரச்சினையாக மட்டும் தேங்கிப் போனது. இன்று சங்கிகள் வாயில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு அன்று வாயில் என்ன இருந்தது என்பதே பதில்.

இந்த மணிப்பூர்ப் பிரச்சினையில் மட்டும் வாய் திறக்கும் போலி முற்போக்காளர்கள், இன்று மணிப்பூர்ப் பிரச்சினையை மதத்துக்காக, கட்சிக்காக அமைதியாகக் கடந்து போகிறவர்களைப் போலவே, மனிதர்களே அல்ல.

29-5-2021 அன்று ஒரு ஸூம் கலந்துரையாடலுக்காக நான் எழுதி வைத்துக்கொண்ட குறிப்புகள் – மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து. இது பேசுவதற்காக எழுதிய குறிப்புகள் என்பதால், கட்டுரை போல இல்லாமல், தொடர்பற்று இருக்கும். நேரமிருப்பவர்கள் வாசியுங்கள். ஏன் மணிப்பூர்க் கலவரம் முக்கியம், ஏன் மேற்கு வங்கக் கலவரம் முக்கியமல்ல என்பதுவிளங்கலாம். எல்லாக் கலவரங்களுமே அராஜகமானவையே. அமைதியான இந்தியாவுக்கு எதிரானவையே. ஒன்றைக் கண்டித்து இன்னொன்றைக் கடந்து செல்பவர்களுக்குப் பேச வாயே வரக் கூடாது.

உண்மையாகவும் நியாயமாகவும் இருக்கவேண்டிய இந்தியா தன் பலத்தை இழந்து நிற்கும்படி நீங்களும் உங்களைப் போன்றவர்களும் செய்திருக்கிறீர்கள். யாராவது நியாயமாக இருக்க நினைத்தால் அவர்கள் மதச்சார்பானவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரம் தொடர்பாக ஜக்மோகன் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி உள்ளது.

அரசியல் அதிகாரம் கைமாறும்போது ஆள்பவர்கள் நியாய உணர்வுடன் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு மேற்குவங்கம் ஒரு உதாரணம்.

அரசியல் அதிகாரம் மமதையாகவும் வெறியாகவும் மாறும்போது எப்படி நடக்கும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

மூலகாரணம் என்ன?

தொடர்ந்து பழக்கப்படுத்தப்படுவது. இதை சிஸ்டம் என்று சொல்லலாம். சிஸ்டத்தை மாற்றுவது மிகவும் கடினமானது. முப்பது ஆண்டுகாலம் தொடர்ந்து மார்க்ஸியத்தின் பிடியில் மேற்கு வங்கம் இருந்தபோதும் அங்கே இப்படி தொடர்ந்து அரசியல்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. வரலாறு காணாத படுகொலைகள். ஆனால் அவை எல்லாம் இங்கே ஊடகங்களில் மறைக்கப்பட்டன. மார்க்ஸியம் மங்கிப் போய் மம்தாவின் அரசியல் அங்கே மேல் எழுந்தபோதும் இதே கலவரங்கள் மார்க்ஸியர்களால் முன்வைக்கப்பட்டன. இன்று மம்தா அரசு பாஜகவுக்கு அதைச் செய்கிறது.

அதுமட்டுமல்ல. 1960லும் இதே போன்ற கலவரங்கள் நிகழ்ந்தன. இன்றைய கலவரத்துக்கான விதை முன்பு பல காலங்களில் விதைக்கப்பட்டிருக்கிறது.

1967ல் முதன்முதலாக கம்யூனிஸம் அங்கே ஆட்சியைப் பிடித்தது. அதுவரை இருந்த காங்கிரஸ் தன் பிடியை இழந்தது. அப்போதும் இதே போன்ற கலவரங்கள் அங்கே நிகழ்ந்தன. கிராமம் குறி வைத்துத் தாக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகளால் அன்று கொல்லப்பட்டார்கள்.

இதற்கு இன்னொரு காரணம், மார்க்ஸிய புரட்சியாளர்களின் வேர்கள் நக்ஸல்பாரி இயக்கத்தினரிடம் இருந்து வந்ததுதான்.

1972 மற்றும் 77ல் காங்கிரஸ் வந்தபோது இடதுசாரியினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

1977ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சி 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டது. ஜோதி பாசுவின் ஆட்சியின் போது கொல்லப்பட்ட நிலமற்ற 11 முஸ்லிம்களின் கதி இந்தியாவையே உலுக்கியது. பின்பு நந்திகிராமில் நடைபெற்ற காங்கிரஸ் மார்க்ஸிஸ்ட் மோதல், இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

இன்று நடந்திருக்கும் படுகொலைகளுக்கும் மேலே சொன்ன கொலைகளுக்கும் ஒரே வேர்தான். அதிகார மமதை. நக்சல் வேர்.

வாக்களிக்கப் போகும்போது கூட மக்கள் அங்கே துப்பாக்கிளால் மிரட்டப்படுவார்கள். பயந்து போய் வாக்களிக்காமல் இருக்கும் மக்கள் அநேகம். மார்க்ஸிய ஆட்சியிலும் பின்னர் மம்தாவின் ஆட்சியிலும் இது நடந்தது.

இன்று பாஜக அங்கே பெற்றிருக்கும் கவனமும், வென்றிருக்கும் இடங்களும் மம்தாவின் கட்சியினருக்கு பெரிய எரிச்சலை தந்திருக்கிறது.

ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தைக்கு மட்டுமே என்று அவர்கள் இன்று நிரூபித்திருக்கிறார்கள்.

பாஜக ஆதரவாளர்களின் படுகொலை, பெண்கள் மானபங்கம் என்று, ஒரு இன அழிப்பின்போது என்னவெல்லாம் நடக்குமோ அதையெல்லாம், இன்று நாம் மேற்கு வங்கத்தில் பார்த்திருக்கிறோம்.

பாஜக ஆளும் மாநிலத்தில், யாரோ ஒருவர், பெயற்ற ஒருவர், மாட்டுக்கறி விவகாரத்தில் எதாவது சொன்னாலோ செய்தாலோ, அது இந்தியா முழுக்க செய்தியாக்கப்படும். தொடர்ந்து விவாதிக்கப்படும். ஆனால் மேற்கு வங்கமே பற்றி எரிந்தபோது, யாரும் இதைப் பற்றி விவாதிக்கவில்லை.

மக்கள் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களை தாங்களே வந்து பொது வெளியில் சொன்னதால்தான் இத்தனையாவது நமக்குத் தெரிந்தது. இல்லாவிட்டால்?

பொது ஊடகம் ஒன்று இல்லாதபோது இவர்கள் எப்படி செய்திகளை வடிகட்டி மக்களுக்கு அளித்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இவர்கள் சொன்னதுதான் செய்தி.

இதில் எத்தனை பேர் பயந்து போய் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் இருந்தார்கள் என்பதும் தெரியாது.

டிவிட்டரில் போய் தேடிப் பார்த்தால், நம்மை உறைய வைக்கும் அளவுக்குச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டில் இதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

கிராமப் பஞ்சாயத்தின் பாஜக தலைவர், உப தலைவர்களைக் குறி வைத்துத் தாக்கி இருக்கிறார்கள். அனுப்ராத்தா மோண்டல் என்னும் த்ரிணாமூல் காங்கிரஸ் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்தான் அடித்தார் என்று சொல்லி, அடிபட்டவரின் படத்தையும் போட்டிருக்கிறார்கள்.

ஆர்ட்டிகிள் 355 என்ன சொல்கிறது? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது என்று சொல்கிறது.

கவர்னர் ஜக்தீப் தங்கர் ஒரு பேட்டியில் சொல்கிறார். மேற்கு வங்கத்தில் நடந்த தாக்குதல், இதற்கு முன் நடக்காத ஒன்று. ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால். யாரை கொல்ல வேண்டும் என்று குறி வைத்து கொன்றிருக்கிறார்கள். வீட்டை சூறையாடி இருக்கிறார்கள். இதற்கு அரசு இயந்திரத்தின் உதவியும் இருந்திருக்கிறது. அவர்கள் கண்டும் காணாமலும் இருந்திருக்கிறார்கள். இப்படி மோசமான ஒரு நிலைமை வரும் என கனவிலும் நினைக்கவில்லை. நாங்கள் மதத்தைக் கூட மாற்றிக் கொள்கிறோம், எங்களை விட்டுவிடுங்கள் என்று மக்கள் கெஞ்சுகிறார்கள். சட்டத்தின் மாட்சியே குலைக்கப்பட்டிருக்கிறது.

ஏன் ஆளுங்கட்சியே இதைச் செய்யவேண்டும்? கவர்னர் சொல்கிறார்: ஆளும்கட்சிக்கு எதிராக வாக்களிக்கத் தயாரானவர்களுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக. ஜனநாயகத்துக்கு நேர்ந்த அசிங்கம் இது. மம்தா பானர்ஜி மக்களின் கதறலைக் கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால் கவர்னரைக் குற்றம் சொல்கிறார் மம்தா. கவர்னர் சொன்ன ஒரே பதில், ‘என் கண்ணெதிரே என் மாநிலத்து மக்கள் இப்படி சாகும்போது என்னால் சும்மா இருக்கமுடியாது’. ஒரு கவர்னர் சொன்னது இது. யோசித்துப் பாருங்கள். ஜக்மோகன் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தின் அடிநாதமும் இதுதான்.

இந்த வன்முறையில் மம்தா பானர்ஜியின் பங்கு குறித்து தனிப்பட்ட ஆணையம் ஒன்று விசாரிக்கவேண்டும் என்று ஒரு ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மக்கள் தங்களுக்கு நேர்ந்த வன்முறை குறித்து தெரிவிக்க ஒரு இமெயில் ஐடி உருவாக்கி அதை பொதுவில் பகிர உயர்நீதிமன்றம் காவல் துறைக்கு ஆணையிட்டிருக்கிறது. (25-மே-2021)

உச்சந்தீமன்ற நீதிபதி என்.வி.ரமனாவுக்கு 2093 பெண் வழக்கறிஞர்கள் கையெழுத்து இட்டு ஒரு மனு அளித்திருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் குலைந்து போய்விட்டது என்று அறிவிக்குமாறு அந்த மனுவில் சொல்லி இருக்கிறார்கள். போலிஸ் கலவரக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு இந்த வன்முறைகளை நிகழ்த்தியது என்று அதில் சொல்லி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த தொலைக்காட்சியாவது இதைப் பற்றிப் பேசியதா?

கவனர் ஜக்தீப் தங்கர் சொன்ன ஒரு வரி மிக முக்கியமானது: ‘உங்கள் ஒரு ஓட்டு உங்கள் மரணத்தை உறுதி செய்யுமானால், அங்கே ஜனநாயகம் செத்துவிட்டது என்றே அர்த்தம்!’ எத்தனை உண்மையான வரி? இந்த ஒரு வரி ஒட்டுமொத்த மேற்கு வங்கத்தின் பிரச்சினையையும் சொல்லிவிட்டது அல்லவா?

கமிஷ்னரிடம் கவர்னர் சட்டம் ஒழுங்கு பற்றி கேட்ட அறிக்கையை மம்தா அனுப்பவேண்டாம் என்று சொன்னதாக கமிஷ்னரே கவர்னரிடம் சொல்லி இருக்கிறார்.

இதனால்தான் கவர்னர் மம்தாவின் பதவி ஏற்பின்போதே இதைப் பற்றிக் கடுமையாகப் பேசினார். இது மரபுக்கு எதிரானது என்று ஆரம்பித்தார்கள். உண்மையில், கவர்னர் விரும்பினால் பேசலாம் என்று சொன்னதே மம்தாதான். அதைப் பயன்படுத்திக்கொண்ட கவர்னர் சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசி, மக்கள் நலனுக்காக, நாம் கட்சி அரசியலைத் தாண்டி சிந்திக்கவேண்டும் என்று சொன்னார். ஆனால், இதை திட்டமிட்டுச் செய்த அரசியல்வாதிகளுக்கு இது ஏன் புரியப் போகிறது.

இத்தனை நிகழும்போது, மத்திய அரசின் பங்கு என்ன?

பாஜக கட்சி மேற்கு வங்கத்தில் பெரும்பான்மை பெறுவோம் என்று சொல்லி போட்டி இட்டார்கள். ஆனால் 80க்கும் குறைவான இடங்களில் வென்றார்கள். தேர்தல் நடக்கும்போது மம்தாவின் த்ருணாமுள் தோற்றுவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்குள் விதைக்கப்பட்டது. ஆனால் அசுர வெற்றி பெறவும், வெற்றி மமதையும் தோற்றுவிடுவோமோ என்ற அச்சமும் இந்த வன்முறைக்கு வித்திட்டுவிட்டது. இது நாளையும் நடக்கலாம். எங்கும் நடக்கலாம்.

மத்திய அரசு, இந்தக் கலவரக் காரர்களை நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை தரவேண்டும், இன்றில்லாவிட்டாலும் நாளையாவது இதைச் செய்யவேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி என்பதை நிலைகொள்ள செய்யவேண்டும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, பதட்டம் மிகுந்த இடங்களில் துணை ராணுவப் படைகளைக் குவிக்கவேண்டும். தேவைப்பட்டால், கவர்னரே நேரடியாக தன் கட்டுப்பாட்டுக்குள் மாநிலத்தை எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும்.

கலவரங்கள் கட்டுப்படாதவரை யாரையும் முதல்வர் பதவி ஏற்க அழைக்கக்கூடாது.

ஐந்து மாநிலங்களில் ஒரே நாளில் முடிவுகள் வருவதால், துணை ராணுவப்படையைக் கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் இருந்தால், அதையும் யோசித்துச் செயல்படவேண்டும்.

இன்னொரு தேர்தலில், இன்னொரு ஓட்டு ஒரு மரணத்தைக் கொண்டு வருமானால், அது எந்த ஒரு மத்திய அரசுக்கும் அவமானமே.

தமிழ்நாட்டுக்கு இதில் கிடைக்கும் செய்தி என்ன? தமிழ்நாட்டில் இந்தியா முழுமைக்கும் நடக்கும் செய்திகள் பரப்பப்படுவதே இல்லை. எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. இதை உடைப்பதை பாஜக முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொலைக்காட்சியையும் இதைப்பற்றி விவாதிக்குமாறு நிர்ப்பந்திக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களது ஊடகங்களில் கலந்துகொள்ள மாட்டோம் என்று சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் இது போன்ற வன்முறைகள் நிகழாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை மோதியின் மத்திய அரசு கண்டறிந்தே ஆகவேண்டும்.

***

Share