Tag Archive for மெர்சல்

மெர்ஸல் – விஜய்யின் அரசியல் ஆசை

மெர்ஸல் – படம் எப்படி எனத் தெரிந்துகொண்டே முதல்நாளே சென்றுவிட்டு இதெல்லாம் தேவையா என்ற சீனியர் சிட்டிசன்கள் விலகி நிற்கவும்.
 
விஜய் அழகாக இருக்கிறார். அவ்வளவுதான். அழகாக மட்டும் இருக்கிறார். நடிக்க வரவில்லை. ஏனென்றால் நடிக்க ஒன்றுமில்லை. நன்றாக டான்ஸ் ஆடி அழகாக இருந்தும் அஜீத்தின் படங்கள் போன்ற மொக்கை ஒன்றைத்தான் தரமுடியும் என்றால் அஜீத்தைப் போலவே சித்தப்பா தோற்றத்தில் இருக்கலாம்.
 
படம் முழுக்க ‘புதுமைகள்.’ நயவஞ்சகம், ஏமாற்றம், மூன்று வேடங்கள் என ஹாலிவுட்டும் இதுவரை காணாத புதுமைகள். முக்கியமான காட்சிகளில் கூட மாயம் செய்து தப்பிக்கும் புதுமையெல்லாம் புதுமைக்கும் புதுமை. உச்சம். இயக்குநரின் அறிவுத் திறமைக்கும் கதை நேர்மைக்கும் இவையெல்லாம் சான்றுகள். குழந்தைச் சாவு, அம்மாவின் தற்கொலை, மருத்துவத் துறையின் சீரழிவு, மனைவியின் கொலை, அப்பா விஜய்யின் கொலை புதுசு புதுசாக யோசித்துச் செதுக்கி இருக்கிறார்கள்.
 
கொஞ்சமாவது தென்றல் வீசிய காட்சிகள், காஜலும் சமந்தாவும் வரும் காட்சிகள். மற்றபடி ஒரு காட்சிகூட விறுவிறுப்புடன் அமைந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்திருக்கிறார் இயக்குநர். சாதாரண சாதனை அல்ல இது.
 
வடிவேலு ஐயோ பாவம். தன்னம்பிக்கை குன்றி என்னவோ விதூஷனங்கள் செய்து பார்த்துத் தோற்கிறார்.
நித்யா மேனன் சீக்கிரம் செத்தால் பரவாயில்லை என்ற அளவில் நடித்தார். முதல் படத்திலேயே நன்றாக நடித்தால் அது ஓவர் ஆக்டிங்கில்தான் முடியும் என்று முன்பே தெரிந்ததுதான். சீக்கிரம் விஜய்க்கு அம்மாவாக நடிப்பார் என்று நினைக்கிறேன். அப்போதும் ஓவர் ஆக்ட் செய்வார்.
 
இங்க இருக்கிறது மாறன், அங்க இருக்கிறதுதான் வெற்றி என்ற காட்சியும், டாக்டர்னா அடிக்கத் தெரியாதா என்ற காட்சியும் ‘புல்லரிக்க’ வைக்கின்றன. யாரும் இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்கமாட்டார்கள் என்று இயக்குநர் நம்பியது, இயக்குநர் எத்தனை குழந்தை உள்ளம் படைத்தவர் என்பதைக் காண்பிக்கிறது.
 
மருத்துவத் துறையின் மீதிருக்கும் மக்களின் பயத்தை ஒட்டுமொத்தமாக மருத்துவத் துறையே மோசம் என்று காட்டி இருக்கிறார்கள். இந்த வகையில் படு நெகடிவ்வான படம் இது. பூசி மெழுக ஒரு வசனம் வேறு உண்டு.
 
எப்போதாவது மட்டுமே இசை அமைப்பதால் ஹிட்டை மட்டுமே தரும் ஏ.ஆர்.ரஹ்மான் பரிதாபம். இரண்டு டப்பாங்கூத்துகளும் மொக்கை என்றாலும் இரண்டு காதல் பாடல்களும் இனிமைதான். அதிலும் சம்ந்தாவுடனான பாடலை பாதிதான் வைத்திருக்கிறார்கள். படத்தில் இந்த நல்ல பாடல் மட்டும்தான் போரடிக்கிறது என்று எப்படி கண்டுபிடித்து அட்லீ அதை வெட்டினார் என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை.
 
திரைப்படமே கொடுமை என்றால், ஃப்ளாஷ் பேக் காட்சியாவது காப்பாற்றும் என்று நம்பி இருந்தேன். ஃப்ளாஷ்பேக் இன்னுமொரு கொடுமை. அதில் விஜய்க்கு நடிக்கவே வரவில்லை. அட்லீக்கு கிராமத்து வாசனையையெல்லாம் படத்தில் வைத்துப் பார்க்க நேர்ந்தது நாம் செய்த பாவபலன்.
 
என்னவோ ஸ்டைலாக கும்பிடுவதாக நினைத்துக்கொண்டு கையை ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு விஜய் கும்பிடுவது எல்லாம் காமெடியாக இருக்கிறது. அரசியல் ஆசை உள்ளே இருந்தால் திறமையான நடிகருக்குக் கூட இப்படித்தான் நிகழும் என்பதற்கு விஜய் ஒரு உதாரணம். நல்ல நடிகர் இப்படிப் படுகுழியில் விழுவதை, கொஞ்சம் சுதாரித்துக்கொண்டால் தப்பிக்கலாம். இல்லையென்றால், மோடி எதிர்ப்பு – தமிழன் குரல் என்று எங்கேயாவது கொண்டு போய்விடும் அரசியல் உலகம்.
 
அரசியல் நுழைவுக்கான ஆசையை வெளிப்படையாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய். அது அவரது சுதந்திரம், உரிமை. தனக்கு தளபதி என்று பதவி உயர்வு அளித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே நிஜ அரசியலில் இங்கே இன்னொரு தளபதி தேவுடு காத்துக் கிடக்கிறார். ஜெயலலிதா இருந்த வரை, தன் படம் வருமா வராதா என்று காத்துக் கிடந்த விஜய், ஸ்டாலினிடமும் அப்படிக் கிடக்கவேண்டும் போல. ஜெயலலிதா இருந்தவரை வால் சுருட்டிக் கிடந்த விஜய் இந்தப் படத்தில் மெல்ல அரசியல் வாலை நீட்டி இருக்கிறார். ஆனால் சாமர்த்தியமாக மத்திய அரசின் பக்கம் (ஜி எஸ் டி வந்தே ரெண்டு மாசம்தானய்யா ஆவுது?!) போய்விட்டார். தன்னை எம்ஜியாருடன் ஒப்பிட்டு வசனங்கள் வருமாறு பார்த்துக்கொண்டிருக்கிறார். தன்னை இன்னொரு எம்ஜியார் என்று முன்வைக்கிறார், வெளிப்படையாகவே. திறமை உள்ள ஒரு நடிகரின் சீரழிவு இப்படத்தில் தொடங்கவேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால் அதை யாராலும் மாற்றமுடியாது. இப்படி அரசியல் ஆசையுடன் படங்கள் நடித்துக்கொண்டிருந்தால் பலரின் (நான் உட்பட) குட்புக்கில் இடம்பெற்றிருக்கும் விஜய்யின் இடம் பறிபோகும். இதை அவர் உணர்வது அவருக்கு நல்லது.
Share