Tag Archive for மெகா சீரியல்

சன் டிவியும் சனிக்கிழமையும்

சன் டிவியிடம் தோற்றுவிட்டேன். கையேந்தி மடிப்பிச்சைதான் கேட்கவேண்டியிருக்கிறது. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும்தான் நிம்மதியாக இருந்தோம். கடந்த இரண்டு நாள்களாக நிம்மதியில் விழுந்தது இடி. இனி சனி அன்றும் மெகா தொடர்கள் உண்டாம். ஒவ்வொரு சீரியலிலும் நடிகர்கள் வந்து, நாங்க சனிக்கிழமையும் வருவோமே பெப்பே என்கிறார்கள். மிரண்டு போயிருக்கிறேன்.

இருப்பது சிங்கிள் பெட்ரூம் வீட்டில். எனவே மெகா தொடர்கள் பார்ப்பவர்கள் பார்க்கட்டும் என்று வேறு எங்கும் செல்லவும் முடியாது. என் அம்மாவை அடக்கி வைக்கவும் முடியாது. ’காசு கொடுத்துதான் எங்கயும் போகமுடியாது. வீட்ல நேரம் போகப் பார்க்கறதும் ஒனக்கு பொறுக்கலையா?’

என் மாமாவுக்கு காது கேக்காது. எனவே அவர் வீட்டில் அவர் மெகா சீரியல் பார்க்கும்போது டிவி சத்தத்தை மினிம் 70ல் வைத்துத்தான் கேட்பார். அந்தத் தெருவே ம்யூட் செய்துவிட்டு இந்த வசனத்தைக் கேட்டுக்கொண்டே அவரவர்கள் வீட்டில் அதே சீரியலைப் பார்க்கலாம். 

இதிலெல்லாம் இருந்து விடுபடுவது சனிக்கிழமைகளில்தான். அதற்கும் உலை வைக்கிறார்கள் சன் டிவிக்காரர்கள். தயவுசெய்து இந்தக் கொலை முயற்சியை உடனே கைவிடுங்கள். இது நல்லதல்ல. ப்ளீஸ். இதற்குமேல் அழுதுடுவேன்.

Share