Tag Archive for மாதவன்

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு

இப்போதுதான் ராக்கெட்ரி திரைப்படம் பார்க்க முடிந்தது. Ready to fire புத்தகத்தை முன்பே படித்துவிட்டிருந்ததால், படமாகப் பார்க்கும்போது எப்படி இருக்குமோ என்கிற தயக்கம் இருந்தது. புத்தகம் முழுக்க பாதி நம்பி நாராயணன் மீது போடப்பட்ட வழக்கு பற்றியது என்றால், மீதி இஸ்ரோவின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றியது. எனவே ஒரு திரைப்படமாக இதை இந்தியாவில் எடுப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்தான். ஏற்கெனவே பல பயோபிக்சர்கள் தந்த கொடூரமான அனுபவமும் மனதில் ஓடியவண்ணம் இருந்தது.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், மாதவன் டீசண்டான ஒரு படத்தைத் தந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இத்தனை டெக்னிகல் சவால்கள் உள்ள ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்ததே ஆச்சரியம்தான். இந்தியாவின் பெருமைக்குரிய விஞ்ஞானி சாதனையாளரா தேசத் துரோகியா என்னும் ஒற்றை வரி சுவாரஸ்யமானதுதான். ஆனால் மாதவன் அதை மட்டும் படமாகச் செய்யவில்லை. எப்படி நம்பி நாராயணன் தன் புத்தகத்தை ஒரு விரிவான களமாகக் கொண்டாரோ அதே போல மாதவனும் தன் திரைக்களத்தை விரிவாக அமைத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் நம்பி நாராயணன் வழக்கு பற்றிய விஷயங்கள் மிகக் குறைவாகவே வருகின்றன.

நம்பி நாராயணன் உலகம் முழுக்கச் சுற்றி இந்தியாவின் இஸ்ரோவுக்கு வளர்ச்சியைக் கொண்டு வரப் பாடுபடும் காட்சிகள் அனைத்தும் மிக நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன. நாம் காண்பது ஆங்கிலத் திரைப்படமோ என்னும் மயக்கம் வருமளவுக்குக் காட்சிகளின் தரம் உள்ளது. இதெல்லாம் எத்தனை பேருக்குப் புரியும், வணிக ரீதியாகப் படம் எப்படிப் போகும் என்றெல்லாம் மாதவன் அலட்டிக்கொண்டது போலவே தெரியவில்லை.

உலகத் திரைப்படங்களுக்கு உரிய ஒரு பொதுமொழி, பொறுமை. இந்தப் படமும் அதே பாதையில் மிகப் பொறுமையாக ஒவ்வொன்றையும் விவரிக்கிறது. ஃப்ரான்ஸ், ரஷ்யா தொடர்பான காட்சிகளின் விரிவும், வசனங்களின் ஆழமும் பிரமிப்பைத் தருகின்றன. இயக்கத்துக்காக மட்டுமின்றி வசனத்துக்காகவும் மாதவன் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். வளவள வசனங்கள் இன்றி, சுருக்கமாக, தீர்க்கமாக வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

மாதவன், சிம்ரன் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். இது ஒரு விஷயமே அல்ல என்னுமளவுக்கு, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். மேல்நாட்டு நடிகர்களில் இருந்து உள்ளூர் நடிகர்கள் வரை இதைச் சாத்திருக்கிறார்கள். இயக்குநர் மாதவனாக இந்தப் படத்தை அவர் தூக்கி நிறுத்தியது, இந்த நடிகர்களின் நடிப்பின் மூலமாகவே நிகழ்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

புத்தகத்துக்கும் திரைமொழிக்கும் உள்ள வேறுபாடுகள் தெரிந்தவையே. ஆனாலும் மாதவன் இன்னும் சில விஷயங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். இன்னும் சில விஷயங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கலாம். புத்தகத்தில் மிக ஆழமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் இங்கே விரைவான தொனியில் சொல்லப்படுகின்றன. குறிப்பாக உன்னி விஷயம். (புத்தகத்தில் பாலகிருஷ்ண பிள்ளை.) பாலகிருஷ்ணன் நம்பி நாராயணனை அறைந்ததாக எனக்கு நினைவில்லை. அந்தப் புனைவுச் சுதந்திரத்தை மாதவன் எடுத்துக்கொள்ளலாம்தான். ஆனால் ரத்தமும் சதையுமாக நம்பி நாராயணன் நம்முன் இருக்கும்போது ஏனோ நெருடுகிறது. உன்னி தொடர்பான காட்சிகள் புத்தகத்தில் நெடுக சொல்லப்படும்போது, அவர் மகன் இறந்து போயும் அவனிடம் மறைக்கப்பட்ட செய்தி ஒரு தாக்கத்தைக் கொண்டு வந்தது. திரைப்படத்தில் அதைச் சில நிமிடங்களில் சொல்லவேண்டிய கட்டாயம். எனவே அதன் தாக்கமும் குறைவாகவே உள்ளது. அதுவே உன்னி கைதுசெய்யப்பட்ட நம்பியைக் காணும் காட்சி வலுவாக வந்திருக்கிறது. காரணம், இரு காட்சிகளுக்கும் இடைப்பட்ட காலம்தான்.

இந்த உன்னி காட்சியையும், தொடக்க சில நிமிடங்களையும் விட்டுவிட்டால், படம் முழுக்க அறிவியல் திரைப்படம்தான் என்றே சொல்லிவிடலாம். வழக்கு ரீதியான விஷயங்கள் எல்லாம் ஒரு சீரியலைப் போல ஒரே டேக்கில் சொல்லி முடிக்கப்பட்டு விடுகின்றன. ஒரு நீதிமன்றக் காட்சி வந்தது போலக் கூட நினைவில்லை.

தமிழ்நாட்டில் இஸ்ரோவுக்கு இடம் கேட்கும்போது குடித்துவிட்டு வந்த திமுக மந்திரியைப் பற்றிய காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. படத்துக்கு அது தேவையில்லை என்று மாதவன் நினைத்திருந்தால், அதுவும் சரிதான். ஆனால் அதை வைத்திருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. 🙂

மாதவன் தவறவிட்ட அற்புதமான ஒரு விஷயம், உனக்குத் தெரிந்த முஸ்லிம் ஒருவன் பெயரைச் சொல் என்று போலிஸ் நம்பி நாராயணனை வற்புறுத்தும்போது அவர் சொல்லும் பெயர் ‘அப்துல் கலாம்’. இந்தக் காட்சி சினிமா ரீதியாகவே நன்றாக இருந்திருக்கும். மாதவன் இதையும் வைக்கவில்லை. ஒருவேளை ஒரு திரைப்படமாகப் பார்க்கும்போது நம்பி நாராயணனின் குத்தலான விளையாட்டைச் சிலர் புரிந்துகொள்ளாமல் போகக் கூடும் என்று மாதவன் நினைத்திருக்கலாம் என்று யூகிக்கிறேன்.

ஒரு சினிமாவுக்கே உரியவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பதால், ஆங்காங்கே தெரியும் சில நாடகத்தனமான காட்சிகளையும் தாண்டி, இத்திரைப்படம் மிக முக்கியமானது. பயோ பிக்சரில் இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறோம் என்று பெருமைப்படலாம்.

முதல் திரைப்படத்திலேயே இத்தனை பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கும் மாதவனை வாழ்த்துவோம். ஹே ராம் போன்ற ஒன் முவீ வொண்டராகத் தேங்கிவிடாமல் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களைத் தர மாதவனுக்கு வாழ்த்துகள்.

Share