Tag Archive for போட்டோகிராஃபி

போட்டோகிராஃபி – ஹிந்தித் திரைப்படம்

டிஃபன் பாக்ஸ் (படம் பெயர் லஞ்ச் பாக்ஸ், நாங்கள் கிண்டலாக அதை அன்று அப்படிச் சொன்னோம்) படம் பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. நினைவிருக்கிறது என்றால், வாழ்க்கையில் மறக்காது. குஜராத்தில் இரவுக் காட்சிக்கு அழைத்துச் சென்ற பிரதீப்பையும் கூட வந்த நண்பர்களையும் மருதனையும் அந்த இரவு முழுக்க சுற்றியதையும் நிச்சயம் வாழ்நாளில் மறக்கமுடியாது. படம் மெல்ல மெல்ல நகர்ந்தது. முக்கியமான படம்தான், ஆனால் அப்போதைய எங்கள் கொண்டாட்ட சூழலுக்கு ஒட்டவில்லை. ஆனாலும் பார்த்தோம். சிரித்தோம். கலைந்தோம்.

அந்த இயக்குநரின் இரண்டாவது படம் போட்டோகிராஃப். அதே போன்று மெல்ல நகரும் படம். அதேபோன்று நம்பமுடியாத ஒரு சின்ன கதைத் தொடக்கம். அதை நம்பினால் படம் பிடிக்கும். இல்லையென்றால் இதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்பதற்குள்ளேயே நாம் அலைந்துகொண்டிருப்போம். லஞ்ச்பாக்ஸில் ரொம்ப அலைந்தேன். போட்டோகிராஃபில் அத்தனை இல்லை என்றாலும், நம்பமுடியாத ஒரு கதைக்கருதான்.

ஏன் இந்தக் கதைக்கு ஒரு ஹீரோ முஸ்லிமாக இருக்கிறான்? ஏன் ஒரு ஹிந்துப்பெண்ணை இப்படி விழுந்து விழுந்து ஆனால் வெளியே தெரியாமல் மெல்ல மெல்ல அழுத்தமாகத் துரத்துகிறான்? தற்செயலா? படம் தற்செயல் என்றே சொல்கிறது. ஆனால் என்னால்தான் அந்த யோசனைகளில் இருந்து வெளியேற முடியவில்லை. அந்தப் பெண் எதனால் கோபமே இல்லாமல் இவன் பின்னால் வருகிறாள்? கோபம் இல்லை என்பதுகூடப் போகட்டும். புரிதலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் ஏன் ஒத்துழைக்கிறாள்? இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் படிப்பென்ன, அந்தஸ்து என்ன? சரி, இவனிடம் எதைப் பார்த்து மயங்குகிறாள்? சிஏ இண்டர் படிக்க இருக்கும் டாப்பர் பெண்ணுக்கு மயங்க கிடைக்காத வேறு வாய்ப்புகளா இல்லை? ஆண்களா இல்லை? ஆனால் இவனிடம் மயங்குகிறாள். இதை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஒரு கவிதை காத்திருக்கிறது.

நவாஸுதீன் சித்திக் ஒரு ஏழை முஸ்லிம். அவன் தன் பாட்டிக்காக ஒரு பொய் சொல்கிறான். அப்படியானால் எப்படிப்பட்ட பெண் தனக்குக் கிடைத்திருக்கிறாள் என்று சொல்வான்? ஒரு தற்செயல்தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? எந்தத் தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சென்று நடிக்கக் கேட்கிறான்? எதுவுமே ஒட்டவில்லை. மாற்றுத் திரைப்படம் என்பதால் இதை ஏற்றுக்கொண்டு அனுபவத்துக்குள் போ என்கிறார்கள். அந்த அனுபவம் உண்மையில் அட்டகாசமாகவே வந்துள்ளது. பல நுணுக்கமான காட்சிகள். ஆனால் அதன் அடிப்படைதான் நம்பமுடியாததாக இருக்கிறது.

இவர்கள் இருவரும் காதலித்துவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் பார்த்த முதல் படமாக இதுவே இருக்கும் என நினைக்கிறேன். ஒரு திறந்த முடிவுன் விட்டு வைக்கிறார்கள். அவள் கட்டவுட்டில் இருப்பது தன் படம் இல்லை என்பதைத் தொட்டு, அவனை ஏற்கிறாள் என்றும் சிலர் கொள்ளலாம். ஆனால் அதன் பின்பு வரும் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கில் பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்ற கிளிஷே சினிமா காட்சியின் விளக்கத்துடன் யதார்த்தமாக அவர்கள் பிரிகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரியாக வருகிறது.

லஞ்ச் பாக்ஸ் படத்திலும் சரி, இப்படத்திலும் சரி, மிகக் குறிப்பாக ஈர்த்தது, ஒலிப்பதிவின் துல்லியம். அத்தனை அட்டகாசம்.

இன்னும் ஏன் இத்தனை மெல்லமாகப் படம் எடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவள் யோசிக்கிறாள் என்றால் யோசித்துக்கொண்டே இருக்கிறாள். நடந்து வருகிறாள் என்றால் நடந்துகொண்டே இருக்கிறாள். கடைசியில் கேம்ப கோலா ஃபார்முலாவைச் சொல்லும் ஒரு கிழவர் கதவைத் திறந்தபோது அவருக்கும் நவாஸுதீன் சித்திக்குக்கும் இடையே பத்தடிதான் இருக்கும் என்றாலும், ஐயோ இவர் நடந்து வர 10 நிமிடம் ஆகுமே என்று மனம் அரற்றியது. சட்டென ஒரு எடிட்டிங்கில் அடுத்த காட்சிக்குப் போனபோது அப்பாடி என்றிருந்தது என்றால் அடி எத்தனை பலம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

மெல்ல நகரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படத்தில் ஒரு நவீனத்தன்மை கூடுதலாகத்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தனை மெல்ல நகரும் படம், மிக அழுத்தமான கதையொன்றைச் சுற்றாத வரையில், எனக்குத் தாங்காது என்பது மீண்டும் ஒருமுறை எனக்குப் புரிந்தது.

Share