ஒருவர் போய்ச் சேர்ந்துவிட்டால் அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புகளை எழுதுவது மரபு. 80களின் குழந்தைகளுக்கு தியேட்டர்களும் இப்படியே. கூடவே பழகிய மனிதர்களைவிட ஒரு படி ஒட்டுதல் கூடுதலாக இருக்கும். ஒரு படம் பெயர் வந்ததும் சட்டென எந்த தியேட்டரில் பார்த்தோம் என்பதுதான் நினைவுக்கு வரும். இன்றும் சிவாஜி கணேசனின் எந்தப் படம் எந்த தியேட்டரில் வந்தது என்பதைத் தூக்கத்தில் கூடச் சரியாகச் சொல்பவர்கள் உண்டு.
பேட்டையில் இருக்கும் மீனாட்சி தியேட்டர் – நான் இதில் படமே பார்த்ததில்லை என்றாலும் ஒரு ஒட்டுதல். இரண்டு காரணங்கள். ஒன்று, இந்த தியேட்டரின் சொந்தக்காரரான செட்டியார் வீட்டில்தான் என் அப்பா கணக்கு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது நான் பிறந்திருக்கவே இல்லை, அல்லது ரொம்பவும் குழந்தை. ஆனால் மீனாட்சி தியேட்டரின் செட்டியார் பெயர் என் வீட்டில் அடிபடாத நாளே இல்லை. இந்தத் தியேட்டரில் படம் பார்க்க இலவசம் என்றொரு வாய்ப்பும் முன்பு இருந்ததாக அம்மா சொல்லும்போது பொறாமையாக இருக்கும்.
திருநெல்வேலியில் நாங்கள் இருந்த வீட்டின் முன்னே ஒரு தட்டியில் விளம்பரம் வைப்பார்கள். திரைப்பட விளம்பரம். அப்படி விளம்பரம் வைக்கப்படும் வீட்டுக்கும் இலவச பாஸ் உண்டு. நான் விவரம் தெரிந்து படம் பார்க்க ஆரம்பிப்பதற்குள் இந்த பாஸும் இல்லாமல் போய்விட்டது. மொத்தத்தில் இலவச சினிமா பார்க்கவே முடியவில்லை.
இருந்தாலும் இந்த மீனாட்சி தியேட்டர் பெயர் மட்டும் செட்டியாரின் பெயருடன் சேர்ந்து என் மனதில் ஒட்டிக்கொண்டது. எங்கயோ பேட்டைல இருக்காம் என்று நினைத்துக்கொள்வேன். மதிதா ஹிந்துக் கல்லூரியில் வேதியியல் இளங்கலையில் சேர்ந்தேன். மூன்று வருடம் தினமும் இந்த தியேட்டரைப் பார்த்துக்கொண்டேதான் சைக்கிளை மிதிப்பேன். எல்லாம் இழந்து நிற்கும் ஒரு வெற்றுத் தேர் போல தியேட்டர் மெல்ல என்னைக் கடந்து போகும். அப்பா வேலை செய்த செட்டியாரின் தியேட்டர் என்ற எண்ணம், அந்த தியேட்டர் வருவதற்கு முன்பே என்னுள் அனிச்சையாக எட்டிப் பார்க்கத் துவங்கிவிடும்.
கல்லூரியில் ஸ்ட்ரைக் அடித்துவிட்டுப் படம் பார்க்க டவுன் அல்லது ஜங்ஷனுக்கு ஓடுவோம். இதைக் கூடச் செய்யாமல் கல்லூரி எதற்கு? ஆனால் ஸ்ட்ரைக் முடிந்து தியேட்டருக்குள் போவதற்குள் நேரமாகிவிடும். மீனாட்சி தியேட்டரிலோ மாலை மற்றும் இரவுக் காட்சிகள் மட்டுமே. அப்போதே, அதாவது நான் கல்லூரி படிக்கும்போதே தியேட்டர் நலிந்துவிட்டது. செட்டியார் வீட்டில் நடந்த ஒரு வழக்கில் இந்த தியேட்டர் யாருக்கு என்பதில் நிலவிய சட்ட ரீதியான சிக்கலே காரணம் என்று சொல்லிக்கொண்டார்கள். உண்மையா என்று தெரியாது.
மதிதா ஹிந்துக் கல்லூரியில் வேறு ஊர்களில் இருந்து படிக்க வருபவர்கள் அதிகம். பல நாள்களில் கல்லூரி மதியம் 1 மணிக்கே முடிந்துவிடும். ஆனால் அவர்களது ரயில் மாலைதான் இருக்கும். அந்த நேரம் வரை இருக்கும் ஒரே பொழுதுபோக்கு, திரைப்படம். ஆனால் படம் பார்க்க டவுனுக்கோ ஜங்ஷனுக்கோ போகவேண்டும். மீண்டும் தன் சொந்த ஊருக்குச் செல்ல, இந்த மீனாட்சி தியேட்டரைக் கடந்து, கல்லூரியைக் கடந்துதான் வரவேண்டி இருக்கும். ஏன் இந்த இரட்டை அலைச்சல்?
எங்கள் நண்பர்களுடன் பேசி ஒரு முடிவெடுத்து, சிலர் மீனாட்சி தியேட்டருக்குப் போய் பேசினார்கள். நாங்கள் சொல்லும் நாள்களில் படம் போட முடியுமா என்று கேட்டார்கள். மாலைக் காட்சி என்ன படம் ஓடுகிறதோ அதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டார்கள். போய்விட்டு வந்த மாணவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று ஆர்வமாகக் காத்திருந்தேன். ‘தாயளி, காலேஜுக்கு வந்தா படிங்கல, படமா கேக்கு’ என்று சொன்னதாகச் சொன்னார்கள். அங்க ப்ரொஜெக்டர் ஓட்றவன் கூட காரி துப்புதாம்ல என்று அனைவரும் சிரித்துவிட்டு மீண்டும் டவுனுக்கும் ஜங்க்ஷனுக்கும் படம் பார்க்கப் போகத் துவங்கினோம். கடைசி வரை மீனாட்சி தியேட்டரில் படமே பார்க்கவில்லை.
கல்லூரியில் ஃபேர்வெல் தினத்துக்கு முதல் நாள் இரவெல்லாம் நாங்கள் ஆறு பேர் பேட்டையில் கல்லூரியில் தொடங்கி டவுன் வரை எங்கள் வேதியியல் பிரிவுக்கான சுவரொட்டியை ஒட்டினோம். அப்போது மீனாட்சி தியேட்டர் முன்பாக நின்றுகொண்டு நடு இரவில் அதைப் பார்த்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. எத்தனையோ தியேட்டர்கள், திருநெல்வேலிக்காரர்கள் கொண்டாடிய தியேட்டர்கள் மறைந்து கொண்டே இருக்கின்றன. இதோ இன்னும் ஒன்று. மனம் வலித்துப் பழகியும் விட்டது. எந்த ஒரு கஷ்டத்தையும் சமூகம் ஊடகம் ஒரு நொடியில் மாற்றிக் கொள்ளவும் பழக்கிவிட்டுவிட்டது.
மீனாட்சிக்கு அஞ்சலி. ஓம் ஷாந்தி. 🙂